புகைப்படத்தில் உங்கள் முகம் பார்த்தே நோயின் தீவிரம், ஆயுளை கூறும் 'செயற்கை நுண்ணறிவு'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
- பதவி, டிஜிட்டல் சுகாதாரப் பிரிவு ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
நோயாளி ஒருவரின் புகைப்படத்தைக் கொண்டு, அவருடைய நோய் பாதிப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான ஆரோக்கியமான மனிதர்களின் முகங்கள் மற்றும் 35,000 புற்றுநோயாளிகளின் புகைப்படங்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். கண்களுக்கு அருகில் உள்ள முக அமைப்புகளை நுட்பமாக ஆராய்வதன் மூலம், நோயாளியின் ஆயுளை இந்த ஏஐ தொழில்நுட்பம் மதிப்பிடுகிறது.
மருத்துவமனைகளில் உடனடியாகப் பயன்படுத்துவதற்கு இன்னும் பல கட்ட சோதனைகள் தேவைப்பட்டாலும், நோயாளிகளுக்கு ஏற்ற சரியான சிகிச்சைகளை மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்க உதவுவதே தங்களின் முக்கிய நோக்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆரம்பக்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் 'லான்செட் டிஜிட்டல் ஹெல்த்' ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கண்களே காட்டிக் கொடுத்துவிடும்!

பட மூலாதாரம், Mass General Brigham/Lancet Digital Health
நோயாளி ஒருவர் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார் என்பதைக் கணிப்பதற்கு, அவருடைய முகத்தில் உள்ள கண்களுக்குக் கீழான பகுதி மற்றும் மூக்கின் பாலத்தைச் சுற்றியுள்ள அமைப்புகளே மிக முக்கியமானவை என்று 'ஃபேஸ்-சர்வைவல்' என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சுட்டிக்காட்டுகிறது.
நோயின் தாக்கம் எந்த அளவில் இருந்தாலும் புற்றுநோய் எலும்புகள் அல்லது மூளை வரை பரவியிருந்தாலும் கூட வெவ்வேறு வகையான அனைத்துப் புற்றுநோய்களுக்கும் இந்த மதிப்பீடு பொருந்துகிறது.
அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான புற்றுநோயாளிகள் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்; சில குழந்தைகளும் 90 வயதைக் கடந்த முதியவர்களும் இதில் அடங்குவர்.
நோயாளி எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார், அவருடைய எதிர்கால ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க மருத்துவர்கள் ஏற்கனவே விரிவான சோதனைகளையும் பரிசோதனைகளையும் செய்து வருகின்றனர்.
காப்புரிமை கோரப்பட்டுள்ள இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவி, மருத்துவர்களின் இந்தப் பணிக்கு உதவி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதே தவிர, அவர்களை முழுமையாக பதிலீடு செய்வதற்காக அல்ல.
இது குறித்து பாஸ்டனில் உள்ள 'மாஸ் ஜெனரல் பிரிகாம்' அமைப்பைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் டாக்டர் ரேமண்ட் மேக் கூறுகையில், "கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லது பிற தீவிர மருத்துவ சிகிச்சைகளை பரிந்துரைப்பதற்கு முன், நோயாளியின் உடல்திறன் மற்றும் பலவீனத்தை சரியாகக் கணிக்க மருத்துவர்களுக்கு மேம்பட்ட வழிமுறைகள் தேவைப்படுகின்றன."
"முகப் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் தகவல்களை மிகவும் துல்லியமாகவும், சீராகவும், பரவலாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் மாற்றி, தனிநபர் சார்ந்த மருத்துவ முடிவுகளை எடுக்க உதவுவதே எங்களின் முக்கிய நோக்கம்" என்று விளக்கினார்.
இளமையான தோற்றமா?
ஒருவரின் பிறந்தநாளின் அடிப்படையிலான வயதை விட, அவர் தோற்றத்தில் எவ்வளவு வயதானவராகத் தெரிகிறார் என்ற உயிரியல் வயதைக் கணிக்கும் ஏஐ கருவி ஒன்றையும் டாக்டர் மேக் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
மூக்கிற்குக் கீழேயும் வாய்க்கு அருகிலும் உள்ள சருமப் பகுதிகள், நெற்றி (சுருக்கக் கோடுகள்), கண்களின் ஓரங்களில் வரும் சுருக்கங்கள் மற்றும் கன்னங்கள் ஆகியவை நாம் எவ்வளவு வேகமாக வயதாகிறோம் என்பதைக் காட்டும் சிறந்த குறிகாட்டிகள் என்று 'ஃபேஸ்-ஏஜ்' கருவி சுட்டிக்காட்டுகிறது.
அதிக அளவில் மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற சில வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள் இந்த முப்படைதல் விரைவுபடுத்தக்கூடும்.
கோணம் , வெளிச்சம், முக பாவனைகள் மற்றும் ஒப்பனை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நிஜ உலகில் எடுக்கப்பட்ட பொதுவான புகைப்படங்களில் இந்தக் கருவி "ஆச்சரியப்படத்தக்க வகையில் சீராக" இயங்கியதாக டாக்டர் மேக் கூறுகிறார்.
"மூக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு மட்டுமே ஒரு சிறிய மாற்றம் கவனிக்கப்பட்டது; மற்றபடி சோதிக்கப்பட்ட பெரும்பாலான பிளாஸ்டிக் சர்ஜரி நடைமுறைகளிலும் இது சீராகவே இருந்தது" என்று அவர் கூறுகிறார்.
இக்கருவிகள் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைத் தீர்மானிக்க, குறிப்பாக பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த நபர்களின் கூடுதல் தரவுகளும் முகப் புகைப்படங்களும் தேவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இவை இன்னும் தீவிர உருவாக்க கட்டத்திலேயே உள்ளன.
ஆராய்ச்சிக்குழு தனது சொந்த முகப் புகைப்படத்தைப் பதிவேற்றுவதன் மூலம் பொதுமக்கள் இதில் பங்கேற்று, தங்களின் தனிப்பட்ட உயிரியல் வயதுக் கணிப்பைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.
பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் வீடியோ செயலாக்கம் மற்றும் இயந்திரக் கற்றல் நிபுணரான பேராசிரியர் மிரோஸ்லாவ் போபர் கூறுகையில், இக்கருவியால் வயதானதையோ அல்லது காலப்போக்கில் ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்களையோ கணிக்க முடியும் என்ற கூற்றுகள் அனைத்தும் "முதிர்ச்சியற்றவை" என்று தெரிவித்துள்ளார்.
"இது ஒரு நம்பிக்கையளிக்கும் தொடக்கக்கட்ட ஆய்வுச் சான்று ஆனால் இது மருத்துவப் பயன்பாட்டிற்கு இன்னும் தயார் நிலையில் இல்லை" என்று அவர் கூறினார்.
"மருத்துவர்களின் சொந்தக் கணிப்புகளுக்கு எதிராகவும், பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் நோயாளி குழுக்களிடையேயும் இந்தக் கருவியை இன்னும் சோதிக்க வேண்டியுள்ளது."
"ஒரு விளைவைக் கணிப்பதும், அதை விளக்குவதும் ஒன்றல்ல" என்றும் அவர் எச்சரிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























