'600 செல்போன் எண், சிசிடிவி காட்சிகள்' - செஞ்சியில் காணாமல் போன 6 வயது சிறுமி எங்கே? 8 நாளாகியும் துப்பு கிடைக்காமல் திணறல்

பட மூலாதாரம், Newsclick
விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி காணாமல் போன வழக்கில் எட்டு நாட்கள் கடந்தும் காவல்துறையின் தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
"அன்று (அக்டோபர் 11) இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு என் அருகில் தூங்க வைத்தேன். மறுநாள் காலையில் மகளைக் காணவில்லை" என்கிறார், சிறுமியின் தாய்.
"கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினாலும் இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை" என, பிபிசி தமிழிடம் பேசிய செஞ்சி டி.எஸ்.பி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
மனுவில், '11ஆம் தேதி என் மகளுக்குப் பிறந்தநாள் என்பதால் இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினோம். உறவினர்களுடன் பேசிவிட்டு இரவு சுமார் 11 மணியளவில் உறங்கச் சென்றேன்' எனக் கூறியுள்ளார்.
மறுநாள் காலை சுமார் 6 மணியளவில் எழுந்து பார்த்தபோது, 'எனது மகளைக் காணவில்லை' என சிறுமியின் தாய் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 தனிப்படைகள் அமைப்பு

பட மூலாதாரம், Handout
இதையடுத்து, சிறுமியைத் தேடும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை தீவிர தேடுதல் நடத்தியுள்ளது. சிறுமி காணாமல் போன வீடு, அருகில் உள்ள பகுதிகளில் ஆகியவற்றில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுமி காணாமல் போன பகுதியின் அருகில் காட்டுப் பகுதிகளும் மலைப்பாங்கான இடங்களும் உள்ளன. அப்பகுதி முழுவதும் டிரோன் கேமரா உதவியுடன் காவல்துறை ஆய்வை மேற்கொண்டது.
காவல்துறையினருடன் இணைந்து கிராமத்தில் உள்ள பொதுமக்களும் தேடுதல் பணியில் இறங்கினர். ஆனால், சிறுமி தொடர்பாக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
சிறுமி காணாமல் போன வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மாவட்ட எஸ்.பி மதிவாணன் நேரடியாக களமிறங்கி விசாரணையை துரிதப்படுத்தினார்.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு காணாமல் போன சிறுமியை விரைந்து கண்டுபிடிக்கும் நோக்கில் மாவட்ட எஸ்.பியின் நேரடி மேற்பார்வையில் கூடுதல் எஸ்.பி மற்றும் மூன்று துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அக்டோபர் 19 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்வேறு கோணங்களில் தீவிர புலன் விசாரணை மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 'சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்கிறது காவல்துறை.
'விடிந்தபோது மகளைக் காணவில்லை'
காவல்துறையின் விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய், அக்டோபர் 11 ஆம் தேதி இரவு நடந்த சம்பவங்களை விவரித்தார். அப்போது அவர், " அன்று இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். பிறந்தநாளுக்காக வந்திருந்த உறவினர்களுடன் ஒன்பது மணிவரை பேசிக் கொண்டிருந்தோம்" என்றார்.
"உறவினர்கள் இருக்கும்போதே மகள் உறங்கிவிட்டாள். அவர்கள் சென்ற பிறகு சுமார் 9.30 மணியளவில் தூங்க சென்றேன். என் அருகில் தான் மகள் உறங்கிக் கொண்டிருந்தார்" எனக் கூறுகிறார் சிறுமியின் தாய்.
ஆனால், தனக்கு இரவு 11 மணி வரையில் உறக்கம் வரவில்லை எனக் கூறியுள்ள அவர், "வீட்டின் முன்பக்கம் கதவைத் தாழிடும் வழக்கம் இல்லை. சுமார் 11.45 மணியளவில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொழுது விடிந்தபோது மகளைக் காணவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
'எதுவும் நேர்ந்திருக்காது' - சிறுமியின் தாய்

பட மூலாதாரம், Handout
சிறுமியின் தாயார் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவரது கணவர், ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தம்பதியின் மூத்த மகள் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.
"இவர்களின் வீட்டுக்கு அருகில் காட்டுப் பகுதியாக உள்ளதால் விலங்குகள் நடமாட்டம் காரணமாக ஏதேனும் நடந்திருக்குமா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள தாய், "அவ்வாறு எந்தப் பிரச்னையும் வந்தில்லை. கரும்புத் தோட்டங்களில் பன்றிகளால் தொல்லை ஏற்படும். ஆனால், வீட்டுக்குள் விலங்குகள் எதுவும் வந்ததில்லை" என்கிறார்.
"ஊருக்குள் என் மகள் அனைவரிடமும் இயல்பாகப் பேசுவாள். அங்கன்வாடி, கோவில் ஆகிய பகுதிகளுக்கு தனியாக சென்று வருவாள். அவளுக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. என் மகளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண்மணி ஒருவர், அதிகாலை சுமார் 3 மணியளவில் சிறுமியின் அழுகையைக் கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று சிறுமி தந்தை, தாய், சிறுமியின் பாட்டி உள்பட நான்கு பேர் இருந்துள்ளனர். "அன்று மாட்டின் கொம்பு உடைந்துவிட்டதால் அதற்கு மஞ்சள் பூசிவிட்டு இரவு சுமார் 11.30 மணியளவில் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்தபோது குழந்தையைக் காணவில்லை" எனக் கூறுகிறார், சிறுமியின் தந்தை.
'எதையும் கண்டறிய முடியவில்லை' - குழந்தைகள் நலக் குழு

பட மூலாதாரம், Handout
காவல்துறையுடன் இணைந்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறையும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சிறுமியைத் தேடும் முயற்சி குறித்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இளையராஜாவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"சிறுமி காணாமல் போனதாக செய்தி வெளிவந்தவுடன் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறோம். நாங்கள் விசாரித்த வரையில் எதையும் கண்டறிய முடியவில்லை" எனக் கூறுகிறார்.
"வீட்டில் தனது அருகில் சிறுமி தூங்கியதாக தாய் கூறியுள்ளார். அவரது விளக்கத்தில் போதிய தெளிவு இல்லை என அறிகிறோம். சிறுமி காணாமல் போன வழக்கு என்பதால் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சிறுமி மீட்கப்பட்டால் மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
எட்டு நாட்கள் கடந்த பின்னரும் சிறுமியைக் கண்டறியும் முயற்சிகள் எதுவும் காவல்துறைக்குப் பலன் அளிக்கவில்லை. விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளது.
'600 செல்போன் எண்கள்... சிசிடிவி காட்சிகள்'

பட மூலாதாரம், Handout
'சிறுமியைக் கண்டறிவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக கிடைக்கும் தகவல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது' என்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.
'சிறுமியைத் தேடும் பணியின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட கிராமம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள், மலைப் பகுதிகள், பாறைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் தேடுதல் பணி நடந்து வருகிறது' எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய நபர்கள் குறித்த விவரங்கள் கேசரிக்கப்பட்டு அவர்களின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
'சம்பவ நாளில் அந்த பகுதியில் பதிவான சுமார் 600 செல்போன் எண்கள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே தகவலை பிபிசி தமிழிடம் தெரிவித்த செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜு, "சிறுமி விவகாரத்தில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்" எனக் கூறுகிறார்.
"சிறுமி வெளியில் சென்றிருக்க வாய்ப்புள்ளதா... உள்ளூரிலேயே இருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கிராமங்களில் பெரிதாக சிசிடிவி பொருத்தப்படவில்லை. சுமார் 14 இடங்களில் இருந்து எங்களுக்குக் கிடைத்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
"சிறுமி காணாமல் போன வழக்கில் காவல்துறை இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை" என்கிறார் டி.எஸ்.பி ரமேஷ் ராஜு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























