நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
19ஆம் நூற்றாண்டில் உடை, நடை என ஆண்கள் போலவே வாழ முயன்ற பெண்களின் புகைப்படங்கள்
- எழுதியவர், கேத் பவுண்ட்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த 1800ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் பல பெண்கள் இந்தச் சட்டத்தை மீறியோ, அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்தோ, ஆண்களைப் போல் உடையணியவும், சில நேரங்களில் ஆண்களைப் போலவே வாழவும் முயன்றனர்.
அவர்களின் தனித்துவமான ஆடை அலங்காரத்தையும் துணிச்சலையும் படம்பிடித்துக் காட்டும் 10 புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
பிரெஞ்சு புரட்சியின்போது (1789-1799), பாரிஸை சேர்ந்த பல பெண்கள் ஆண் போராட்டக்காரர்களுடன் இணைந்து தடுப்பு அரண்களில் போராடுவதற்காக கால்சட்டை அணிந்தனர். ஆண்களுக்கு இணையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பெற வேண்டும் என்ற அவர்களின் விருப்பம், பெண்களின் உரிமைகள் குறித்த பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்தப் பிரகடனத்தை எழுதிய ஒலிம்ப் டி கூஜ், 1793ஆம் ஆண்டு "இயற்கைக்கு மாறான" பெண் என்று குற்றம்சாட்டப்பட்டு கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், 1800ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. "பெண்கள் உரிமைகளைக் கோரி, தங்கள் சமூகத்தின் அரசியல் வாழ்க்கையில் பங்கேற்க விரும்பிய காலகட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காகவே" இந்தத் தடை விதிக்கப்பட்டதாக, பாரிஸில் உள்ள பலே கல்லியேராவில் நடைபெறும் 'ஒருவருக்கான சொந்த ஆடை அலமாரி: 19ஆம் நூற்றாண்டில் மாறுபட்ட பெண்மைகள்' (A Wardrobe of One's Own: Dissident Femininities in the 19th Century) என்ற புதிய கண்காட்சியின் கண்காணிப்பாளர் மரின் கிசியல் கூறுகிறார்.
கடந்த 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் பெண்கள், மனைவி மற்றும் தாய் என்ற பாத்திரத்தில் திருப்தியடைந்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டனர். ஓவியர்கள் மற்றும் கவிஞர்களால் போற்றப்படுபவர்களாகவும், பெண்மைக்குரிய ஆடைகளால் அடையாளப்படுத்தப்படுபவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஏராளமான பிரெஞ்சுப் பெண்கள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், பெண்ணியத்தின் முதல் அலை பாரிஸில் வளர்ந்து வந்த லெஸ்பியன் துணைக் கலாசாரத்துடன் இணைந்தபோது இந்த எதிர்ப்பு தீவிரமடைந்தது.
ஆண்களுக்கான ஆடைகளை அணியும் உரிமைக்கான போராட்டம், பெண்கள் உரிமைகள் வரலாற்றில் போதிய கவனம் பெறாத ஓர் அத்தியாயமாக உள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் இது அதிகம் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆண்களுக்கான ஆடைகள் பெண்களுக்கு ஒரு வகையான சுய அதிகார உணர்வை அளித்தன. இதன் மூலம், முன்பு தங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்களில் நுழைவதற்கான தடைகளை அவர்கள் உடைத்தெறிந்தனர். அல்லது தங்களது பாலியல் விருப்பங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முயன்றனர்.
பத்திரிகைகள் அவர்களைக் கேலி செய்தன. அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். மருத்துவத் துறையினரும் அவர்களை "பாலியல் பிறழ்வு கொண்டவர்கள்" என்று கண்டித்தனர். இருப்பினும், பெண்கள் தங்களுக்கான ஆடைத் தேர்வு சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடினர். இந்த வரலாற்றை 10 புகைப்படங்களின் மூலம் இங்கே ஆராய்கிறோம்.
குதிரையில் அமேசான் (1799)
பிரான்ஸில் பெண்களுக்கான ஆண்மைத் தோற்றம் கொண்ட ஆடை அலங்காரம் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டனில் இருந்து அறிமுகமான குதிரையேற்ற உடை (Riding Habit) வடிவில் முதன்முதலில் தோன்றியது.
கிரேக்கப் புராணங்களில் இடம்பெறும் பெண் போர்வீரர்களின் பெயரால், அந்த உடையும் அதை அணிந்த பெண்களும் 'அமேசான்கள்' என்று அழைக்கப்பட்டனர்.
சுறுசுறுப்பும் விளையாட்டுத் திறனும் கொண்ட இந்தப் பெண்கள், மக்களிடையே வியப்பையும் அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.
நூற்றாண்டு செல்லச் செல்ல, அளவெடுத்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டுகளும் கோட்டுகளும் பெண்களின் ஆடை அலங்காரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தன.
யூஜின் டெலாக்ராய்ஸ் வரைந்த, ஆண் வேடமிட்ட ஜார்ஜ் சாண்ட் (1834)
ஆண்களின் ஆடை அலங்காரத்தைப் பெண்களுக்கேற்ற வகையில் மாற்றி அணிவது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கான ஆடைகளை அப்படியே அணிவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பாலினம் சார்ந்த மரபுகளைக் கடைப்பிடிக்காமல், தனக்குப் பிடித்தபடி வாழ்ந்து, காதலித்து வந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜார்ஜ் சாண்டை இந்தக் கட்டுப்பாடுகள் தடுக்கவில்லை. அவர் முன்னோடிப் படைப்பாளியாகவும் விளங்கினார்.
ஜார்ஜ் சாண்டைப் பொறுத்தவரை, ஆண்களுக்கான ஆடைகளை அணிவது பிறரைத் தூண்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயலல்ல; அது அவருக்கு மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது.
"ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த திரையரங்கின் முன்வரிசை இருக்கைகள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்காகவும், பெண்களுக்கான ஆடைகளைவிட ஆண்களுக்கான ஆடைகள் குறைந்த செலவில் கிடைத்ததாலும், சுதந்திரமாக நடமாடவும் செயல்படவும் விரும்பியதாலும் அவர் அவற்றை அணிந்தார்" என்று கண்காட்சியின் கண்காணிப்பாளர் மரின் கிசியல் பிபிசியிடம் கூறுகிறார்.
மேரி-அன்டோனெட் லிக்ஸ், லெப்டினன்ட் (1870/71)
19-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுச் சமூகத்தின் ஆணாதிக்கத் தன்மையைக் கருத்தில் கொண்டால், அக்காலத்தில் பல பெண்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டனர் என்பதை அறிந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கலாம்.
"இதுகுறித்து ஏராளமான பதிவுகளும் புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. இது குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்பதும் நமக்குத் தெரியும்" என்கிறார் கிசியல்.
பெண்கள் முறையான ராணுவத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், ஒழுங்கற்ற தன்னார்வப் படைகளில் அவர்கள் இணைய முடிந்தது.
பிரான்ஸ் - பிரஷ்யா போரின்போது, மேரி-ஆன்டோனெட் லிக்ஸ் அவ்வாறு தன்னார்வப் படையில் இணைந்து, வோஸ்ஜெஸ் பகுதியில் நடைபெற்ற பாதுகாப்புப் போரில் பங்கேற்றார். நாம்படெலிஸ் போரின்போது தனது வீரத்தையும் வெளிப்படுத்தினார்.
ஜேன் டியூலாஃபோய் (சுமார் 1890கள்)
நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆண்களுக்கான ஆடைகளை அணியும் பெண்கள் குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், ஆண்மைத் தோற்றத்துடன் இருந்த லெஸ்பியன் பெண்களே பெரும்பாலான எதிர்ப்புகளையும் விரோதப் போக்கையும் எதிர்கொண்டனர்.
"தங்களது பாலின வெளிப்பாடு மற்றும் பாலியல் விருப்பம் ஆகிய இரண்டின் மூலமும், ஆணாதிக்கம் மற்றும் ஆண்களை மையமாகக் கொண்ட பாலினக் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் இருமடங்கு விலகிச் சென்றனர்" என்று கலை வரலாற்று ஆய்வாளர் லோலா சார்னே பிபிசியிடம் கூறுகிறார்.
செய்தித்தாள்கள் அவர்களைப் பலமுறை கேலிச் சித்திரங்களாகச் சித்தரித்தன. "சமூக விதிமுறைகளை உடைத்து வெளியேறியவர்கள் மீதான ஈர்ப்புக்கும், சமூகக் கட்டுப்பாட்டை ஓரளவாவது தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்களின் எதிர்ப்புணர்வை அடக்க வேண்டிய தேவைக்கும் இடையே ஊசலாடிய பொதுமக்களின் கற்பனையில், அவர்களைப் பலிகடாவாக ஊடகங்கள் உருவாக்கின" என்கிறார் சார்னே.
ஜீன் பெராட் (c1900) எழுதிய பைஸ் டி போலோக்னில் உள்ள சைக்கிள் சாலட்
அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கால்சட்டை அணிவதற்கு எதிரான விதிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், சைக்கிள் ஓட்டுவது மட்டுமே பெண்கள் கால்சட்டை அணிய அனுமதிக்கப்பட்ட ஒரே செயல்பாடாக இருந்தது. பின்னர், குதிரையேற்றத்திற்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தலையிட வேண்டும் என்ற ஆணாதிக்க அதிகார மையத்தின் விருப்பத்திலிருந்து இந்தச் செயல்பாடு கூட தப்பவில்லை. ஆரம்பத்தில் மருத்துவர்கள் இதுகுறித்துக் கவலை தெரிவித்தனர். பின்னர், சைக்கிள் ஓட்டுவது பெண்களின் உடல்நலத்திற்கு நல்லது என்றும், பிரான்ஸ் நாட்டிற்குத் தேவையான வலிமையான தாய்மார்களை உருவாக்கும் என்றும் முடிவுக்கு வந்தனர்.
ஆனால், பெண்களோ சைக்கிள் ஓட்டுவதைச் சுதந்திரத்திற்கான வழியாக மட்டுமே பார்த்தனர். 'பெல் எபோக்' (Belle Époque) காலகட்டத்தில் பெண்களின் விடுதலைக்கான சக்திவாய்ந்த அடையாளமாக சைக்கிள் மாறியது.
ரோசா போனூர் (1899)
இங்கே வலதுபுறம் படத்தில் காணப்படும் கலைஞர் ரோசா போன்ஹூர், பிற காரணங்களுக்காகக் கால்சட்டை அணிய அனுமதி பெற்றதாக அறியப்படும் சில பெண்களில் ஒருவர்.
தனது துணையுடன் பைரனீஸ் மலைப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டபோது, உடல்நலக் காரணங்களுக்காக முதலில் அவருக்குக் கால்சட்டை அணிய அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், விலங்குகள் குறித்த ஓவியங்களை வரைவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள, இறைச்சிக் கூடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அவருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இறுதியில், "இது அவரது பொதுவான அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவரும் அதைச் சற்றே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்" என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேத்தரின் ஹெவிட் கூறுகிறார்.
மதில்டே டி மோர்னி (1890கள்)
பொதுச் சமூகத்தின் மனப்பான்மைகளுக்கு மாறாக , 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸில் லெஸ்பியன் துணைக் கலாசாரம் செழித்து வளர்ந்தது. அதில் முக்கியமானவர்களில் ஒருவர், மிஸ்ஸி என்று நன்கு அறியப்பட்ட மாத்தில்ட் டி மோர்னி.
மோர்னி பிரபுவின் மகளான மிஸ்ஸி, தன்னினச் சேர்க்கையாளர் என்று அறியப்பட்ட மார்க்விஸ் டி பெல்பியூஃப் என்பவருடன் சமூக அந்தஸ்துக்காகப் பெயரளவிலான திருமணத்தில் இணைந்திருந்தார். எனினும், 1903-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
தான் ஒரு லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகக் கொண்டிருந்த மிஸ்ஸி, ஆடம்பரமான ஆண்களுக்கான ஆடை அலங்காரத்தைப் பின்பற்றினார்.
எழுத்தாளர் கோலெட்டுடன் காதல் உறவிலும் இருந்தார். கோலெட் தனது 'தி பியூர் அண்ட் தி இம்பியூர்' (The Pure and the Impure) என்ற நாவலில் மிஸ்ஸியை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார்.
ரொமைன் ப்ரூக்ஸ் சுய உருவப்படம் (1923)
அமெரிக்காவைச் சேர்ந்த செல்வந்தப் பெற்றோரின் மகளான கலைஞர் ரோமைன் புரூக்ஸ், தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் பாரிஸில் கழித்தார். அவரது நீண்டகாலத் துணையான நத்தாலி கிளிஃபோர்ட் பார்னியும் அங்கேயே வசித்து வந்தார்.
குட்டையான சிகையலங்காரத்துடனும் நேர்த்தியாகத் தைக்கப்பட்ட ஆண்களுக்கான ஆடைகளுடனும் காணப்பட்ட புரூக்ஸ், அவரைப் போலவே செல்வந்தர்களாகவும் வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகவும் இருந்த ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் நட்பு வட்டத்தில் பழகி வந்தார்.
அவர்களில் பலரும் கலைப் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் லெஸ்பியன்களாகவும் இருந்தனர்.
1920-களில் அவர் வரைந்த இந்தச் சுய உருவப்படம், அவரது நேர்த்தியான மற்றும் ஆண் - பெண் தன்மைகள் கலந்த ஆடை அலங்காரத்தைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
பெண் தம்பதியினர் (சுமார் 1910)
இருப்பினும், ஆண்களுக்கான ஆடைகளை அணிந்துகொண்ட பெரும்பாலான லெஸ்பியன் பெண்கள் செல்வந்தர்களாகவோ பிரபலமானவர்களாகவோ இருக்கவில்லை.
தங்களது அடையாளத்தை நிலைநாட்ட விரும்பிய சாதாரண பெண்களாகவே அவர்கள் இருந்தனர்.
அவர்கள் விரும்பியபடி எங்கு, எவ்வாறு உடையணிய முடிந்தது என்பது, "அவர்கள் கையாண்ட உத்திகள், பிறரால் ஆண்களாக அடையாளம் காணப்படுவது மற்றும் அவர்களின் சமூகச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து அமைந்தது. ஆவணப் பதிவுகள் இல்லாததால், ஏராளமான சாதாரணப் பெண்கள் குறித்த எந்தத் தகவலும் நமக்குத் தெரியவில்லை. இருப்பினும், புகைப்படங்கள் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன" என்று கிசியல் கூறுகிறார்.
பெண்கள் கால்சட்டை அணிவதற்கான தடையை உள்ளடக்கிய சட்டப்பிரிவு 200 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப் புத்தகங்களில் நீடித்திருந்தது. 2013-ஆம் ஆண்டில்தான் அது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
எனினும், பல ஆண்டு காலங்களாக அந்தச் சட்டம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு வந்தது.
இன்று பாரிஸில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கால்சட்டை அணிவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இயல்பாகக் கருதுகிறார் என்றால், அதற்காக எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் போராடிய அந்தப் பெண்களுக்கு அவர் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு