'ஒவ்வொரு பூக்களுமே' உள்பட பா.விஜய் எழுத்தில் அதிக கவனம் பெற்ற 10 பாடல்கள்

பா.விஜய் பிறந்தநாள் இன்று
படக்குறிப்பு, பா.விஜய் பிறந்தநாள் இன்று
    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கோயம்புத்தூரில் மில் தொழிலாளி வி. பாலகிருஷ்ணன் - ஆசிரியர் சரஸ்வதி தம்பதியின் மகனாக பிறந்து, அங்கேயே படித்தவர் கவிஞர் பா.விஜய். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பயின்று பி.லிட். பட்டமும் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

கல்லூரியில் படிக்கும் போது அவர் எழுதிய 'இந்தச் சிப்பிக்குள்' என்னும் தலைப்பிலான முதல் கவிதைத் தொகுப்பு, சிற்பி, மன்னர்மன்னன் தலைமையில் வெளியானது. தொடர்ந்து சில கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் ஆரம்பத்தில் பாக்யராஜ் நடத்திய பாக்யா பத்திரிகையில் பணியாற்றினார். பாக்யராஜ் இயக்கிய ஞானப்பழம் படத்தின் மூலம், 1996-ஆம் ஆண்டில் அவர் பாடலாசிரியர் ஆனார்.

தேசியவிருது பெற்ற பாடல்

கடந்த 30 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். ஞாபகங்கள், இளைஞன் , ஆருத்ரா, ஸ்ட்ராபெர்ரி, நையப்புடை, தகடு தகடு உள்ளிட்ட படங்களி்ல் கதைநாயனாக அவர் நடித்துள்ளார்.

ஸ்ட்ராபெர்ரி. ஆருத்ரா, அகத்தியா உள்ளிட்ட படங்களை அவர் இயக்கி உள்ளார். சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்திற்காக இவர் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசியவிருது பெற்றது. பல்வேறு கட்டுரை தொகுதிகள், நாவல்கள், நுால்கள் எழுதியுள்ளார்.

பா. விஜய்க்கு 'வித்தகக் கவிஞர்' என்ற பட்டத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி வழங்கினார். பா. விஜயை தனது கலையுலக வாரிசாக அறிவித்தார் கவிஞர் வாலி. இன்று பா.விஜய் பிறந்தநாள்.

பாடகி சித்ரா பெருமிதம்

பா.விஜய்க்கு தேசியவிருது கிடைத்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காக, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசியவிருதும் பெற்றார் சித்ரா.

அந்த பாடல் வரிகள் குறித்து அவர் பேசுகையில் ''இன்றும் பல இடங்களில் அந்த பாடலின் வரிகளை மறக்காமல் வைத்து இருக்கிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அந்த பாடலை ஒலிபரப்புகிறார்கள். அந்த பாடல் அமைந்த விதம், பாடியவர்கள், பாடல் வரிகள் என எல்லாமே பாசிட்டிவ் ஆக அமைந்தது. தோல்வி அடைந்த நாங்கள் இந்த பாடலை கேட்டு அந்த மனநிலை இருந்து மாறினோம். எங்கள் வாழ்க்கை மாறியது என்று என்னிடம் பலர் நேரடியாக சொல்லியிருக்கிறார்கள். அந்த ட்யூன் கொடுத்த பரத்வாஜ், பாடலாசிரியர் பா.விஜய்க்கு நன்றி. முதலில் இந்த பாடல் ரிக்கார்ட்டிங் முடித்துவிட்டோம். பின்னர் மீண்டும் என்னை அழைத்து சில வரிகளை பாட வைத்தார் சேரன். அந்த தன்னம்பிக்கை வரிகள் விருதுகளை பெற்றுக்கொடுத்தது' என்றார். .

ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல்
படக்குறிப்பு, ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலின் ஒரு காட்சி

வாலி சொன்ன விளக்கம்

ஒவ்வொரு பூக்களுமே என்பதே இலக்கணப் பிழையுள்ள ஒரு வரி தான். அதில் ஒவ்வொரு என்பது ஒருமை, அதன் தொடர்ச்சியாக வரும் வார்த்தையும் ஒருமையில் தான் இருக்க வேண்டும். ஆனால் பூக்களுமே என்று பன்மையில் எழுதி இருப்பார் பா.விஜய். இலக்கணப் படி பார்த்தால் ஒவ்வொரு பூவுமே என்று தான் எழுதியிருக்க வேண்டும்.

இப்படி அவர் இலக்கணப் பிழையோடு எழுதியும் அப்பாடலுக்கு தேசிய விருது கிடைத்ததாக அந்த சமயத்தில் விமர்சனங்கள் வர, தனது சிஷ்யன் பா.விஜய்க்காக பரிந்து பேசியிருக்கிறார் கவிஞர் வாலி. "சில சமயங்களில் சந்தம், பாடலின் அமைப்புக்கு ஏற்ப இலங்கணங்கள் மீறப்படலாம். அதற்கு இடமுண்டு. ஆயிரம் நிலவே வா என எழுதியிருக்கிறோம். அது சரி என்றால், இதுவும் சரிதான்" என்று அவர் சொல்லியிருக்கிறார்.

"50 பல்லவிகள் கேட்டாலும் கொடுப்பார்"

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பா.விஜயிடம் 10 ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவரும், பாடலாசிரியருமான பா.மீனாட்சிசுந்தரம் பிபிசி தமிழிடம் கூறுகையில், "அவரிடம் இருந்த காலம் பொற்காலம். அவர் பாடலாசிரியர், கட்டுரை எழுதுபவர், நடிகர், இயக்குநர் என பிஸியாக இருப்பார். ஆனாலும், நேரத்தை பக்காவாக திட்டமிட்டு செயல்படுவார். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள லைப்ரரிக்கு போய் படிப்பார். பின்னர் வீட்டிலேயே ஒரு நுாலகம் வைத்துக்கொண்டார். அங்கே இருந்து படிப்பது, எழுதுவது அவருக்கு பிடிக்கும். தினமும் அங்கே காலையில் சில மணி நேரம் செலவிடுவார்.

ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜிடம் அவர் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவம். ஒரு பல்லவியில் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். சில முறை 50 பல்லவிகள் கூட போகும். அதற்கு சளைக்காமல் எழுதி கொடுப்பார். கருணாநிதி வசனத்தில் நடித்தார். அப்போதும் பல பத்திரிகைகளுக்கு ஆர்வமாக கட்டுரை எழுதி வந்தார். வரலாற்று தகவல்கள் அடிப்படையில் வரிகளை எழுதுவதிலும், தன்னம்பிக்கை கருத்துகளை வெளிப்படுத்துவதிலும் ஆர்வம் அதிகம். அதுதான் , ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு தேசியவிருதாக வந்தது. எழுத்து பணியை நிராகரிக்கமாட்டார். கவிஞர் வாலியிடம் இவரை ஏன் உங்கள் வாரிசாக அறிவித்தீர்கள் என நான் ஒருமுறை கேட்டதற்கு , எந்த சினிமா பின்புலம் இல்லாமல் வந்த படிப்பாளி, நல்ல அறிவாளி என்று கூறினார்." என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இளையராஜா, "ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி பல இசையமைப்பாளர்களுடன் பா.விஜய் பணியாற்றியிருக்கிறார். யுவன்சங்கர்ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைந்து அதிக பாடல்களை தந்து இருக்கிறார்" என்றார்.

ஒவ்வொரு பூக்களுமே, அப்படிப் போடு உள்பட பா. விஜய் எழுத்தில் கவனம் பெற்ற 10 பாடல்கள்
படக்குறிப்பு, பா.விஜயுடன் பா.மீனாட்சிசுந்தரம்

பா.விஜய் எழுதிய பாடல்களில் தனக்கு பிடித்த பாடல்கள் மற்றும் அந்த பாடல்களின் சிறப்பு குறித்து பிபிசி தமிழிடம் பாடலாசிரியர் பா.மீனாட்சி சுந்தரம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அஜித் நடித்த ஜி படத்தில் வரும் டிங்டாங் கோயில் மணி பாடலை காதலின் கொண்டாட்டம் நிறைந்த ஜென் மொழியாக பிடிக்கும். அர்ஜூன் நடித்த வேதம் படத்தில் வரும் ஹேய் மீனலோச்சினி பாடலை திருமண பந்தத்தின் ஆழம் நிறைந்த வரிகளுக்காக பிடிக்கும்.

பில்லா படத்தில் வரும் சேவற்கொடி பறக்குதடா பாடலை முப்பாட்டன் முருகன் பெருமைக்காக பலமுறை ரசித்த்து இருக்கிறேன். தவசியில் வரும் தந்தன தந்தன தை மாதசம் பாடலில் இசையை இனிதாக்கும் அழுத்தமான வரிகள் இருக்கும்" என்றார்.

"சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் இன்னும் என்ன தோழா வரிகளில் தன்னம்பிக்கையையும் ஈழப் பேராட்டத்தின் வலியையும் ஒரே புள்ளியில் கோர்த்த அவரின் மொழி ஆளுமையை மறக்க முடியாது. நேர்கொண்ட பார்வையில் அகலாதே ஆயுளின் அந்திவரை பாடலில் காதலை நிரப்பும் வரிகள் இருக்கும்.

வெற்றிக்கொடி கட்டு படத்தில் வரும் துள்ளல் பாடலான கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு பாடலை யாருக்குதான் பிடிக்காது. நிறத்தில் உயர்வுதாழ்வு கிடையாது என கருப்பை கொண்டாடிய பாடல் அது. கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் இடம் பெற்ற பூவாசம் புறப்படும் பெண்ணே பாடல் ஓவியம் போல் அணுக்கம் மிகுந்தது வரிகளை கொண்டது. எந்திரன் படத்தில் வரும் கிளிமாஞ்சாரோ பாடலில் சங்க மொழிக்கு இணையான காதல் குறும்புகளை பா.விஜய் அடுக்கி இருப்பார். இந்தியன்-2 படத்தில் வரும் பாரா பாரா என்ற பாடல் புறநானூறும் நுண்திறன்மிகு எழுச்சியும் கலந்த வரிகளில் இருக்கும்." என்றார் மீனாட்சி சுந்தரம்.

பா. விஜய் பாடல்களில் தத்துவம், வீரம் நட்பு, துள்ளல், என பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் தன்னம்பிக்கை மற்றும் காதலுக்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் இருப்பதை உணர முடிவும். பா. விஜய் பாடல்களில் பிரபலமான 10 காதல் பாடல்களின் தொகுப்பு இதோ.

1) அப்படிப் போடு போடு போடு

விஜய் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.
படக்குறிப்பு, விஜய் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.

கில்லி படத்தில் வித்யாசாகர் இசையில் பா.விஜய் எழுதிய காதல் துள்ளல் பாடல். அனுராதா ஸ்ரீராம், கே.கே இணைந்து பாட, விஜய், திரிஷா ஆடினார்கள்.

அந்த பாடல் வந்தபோதும், படம் வெளியான போதும், ஏன் 20 ஆண்டுகளுக்குபின் கில்லி ரீ ரிலீஸ் ஆனபோதும் கூட தியேட்டரே இந்த பாடலுக்கு ஆடியது.

2) முதலாம் சந்திப்பில்

முதலாம் சந்திப்பில்…

நான் அறிமுகம் ஆனேனே…

இரண்டாம் சந்திப்பில்…

என் இதயம் கொடுத்தேனே… மூன்றாம் சந்திப்பில்…

முகத்தை மறைத்தேன்…

நான்காம் சந்திப்பில்…

நகத்தை கடித்தேன் என உன்னிக்கிருஷ்ணன் - ஸ்வர்ணலதா பாடும் இந்த பாடல் சார்லிசாப்ளின் படத்தில் இடம் பெற்றது.

பரணி இசையமைக்க, பிரபுதேவாவும் காயத்ரி ரகுராமும் நடனம் ஆடியிருப்பார்கள்

3) ஏ அசைந்தாடும் காற்றுக்கும்...

குணால், மோனல் நடிப்பில் உருவான பார்வை ஒன்றே போதுமே படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.
படக்குறிப்பு, குணால், மோனல் நடிப்பில் உருவான பார்வை ஒன்றே போதுமே படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.

பார்வை ஒன்றே போதும் படத்தில் மறைந்த குணால், மோனல் நடனம் ஆடிய பாடல். உன்னிகிருஷ்ணனும், எஸ்.ஜானகியும் உருகி பாடியிருப்பார்கள்.

இதில் நடித்த குணால், மோனல், பாடிய எஸ்.ஜானகி மறைந்துவிட்டார்கள். பலரின் மனதிற்குள் மறையாமல் நெருக்கமாய் இருக்கின்ற இந்த பாடல்வரிகள்.

4. ஏன் எனக்கு மயக்கம்… ஏன் எனக்கு நடுக்கம்…

நான் அவனில்லை படத்திற்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் இடம் பெற்ற பாடல். ஜீவன், சினேகாவின் உணர்வுப்பூர்மமான அசைவுகள், பா விஜய் அழகான வரிகள் பாடலை வெற்றி அடைய வைத்தன.

ஜெயதேவ், சங்கீதா கிக் குரல் இந்த பாடலுக்கு இன்னும் உயிர் கொடுத்தது.

5)மதுரைக்கு போகாதடி...

ஏ.ஆர்.ரகுமான் இசையில் அழகிய தமிழ்மகன் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

மதுரைக்கு போகாதடி.......

அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்

தஞ்சாவூர் போகாதடி.......

தலை ஆட்டாம பொம்மை நிக்கும்

தூத்துக்குடி போனா

சில கப்பல் கரை தட்டும்

கொடைக்கானல் போனா

அங்க மேகம் உன்னை சுத்தும்

என உவமைகளில் பின்னி இருப்பார் பா.விஜய். பென்னிதயாள், அர்ஜித், தர்ஷனா பாடியிருந்த இந்த பாடலுக்கு விஜய், ஸ்ரேயா நடனம் ஆடியிருந்தனர்.

6) இச்சுத்தா இச்சுத்தா...

மாதவன், மீராஜாஸ்மின் நடிப்பில் உருவான ரன் படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.
படக்குறிப்பு, மாதவன், மீராஜாஸ்மின் நடிப்பில் உருவான ரன் படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.

மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படத்தில் இடம் பெற்ற அழகான காதல் பாடல். வித்யாசாகர் இசையமைத்து இருந்தார்.

திட்டம் போட்டு திருடிய கொள்ளகாரா

வெட்க பட வைய்க்கிறியே வெள்ளைக்காரா

என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா

என் உள்மனச

கடையுற கடையுற கடையுற மோர் மத்தா...

என வார்த்தைகளில் விளையாடியிருந்தார் பா.விஜய்.

7) ஒரு கூடை சன் லைட்...

ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் இடம் பெற்ற பாடல்.

ஒரு கூடை சன்லைட்

ஒரு கூடை மூன்லைட்

ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் ஒயிட்

என அதை பாடல் வரிகளில் ஆங்கிலத்தை கலந்து எழுதியிருந்தார் பா.விஜய்.

8) ஹசிலி ஃபிசிலி....

சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான ஆதவன் படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.
படக்குறிப்பு, சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான ஆதவன் படத்தில் பா விஜய் எழுதிய பாடல்.

ஹசிலி ஃபிசிலி என் ரசமலி…

உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி…

என் இளமையும் இளமையும் பனித்துளி…

குதுகலி…

என்கிற இந்த பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா, நயன்தாரா நடித்த ஆதவன் படத்தில் இடம் பெற்றது.

அஞ்சனா அஞ்சனா…

கொஞ்சினால் தேன்தானா…

என் கனா… ஹோ… என் கனா…

என்றுமே நீதானா நீதானா…

என்ற வரிகள் பலரால் திரும்ப, திரும்ப பாடப்பட்டன.

9) சுவாசமே சுவாசமே

கமல்ஹாசன் நடிப்பில் தெனாலியில் இடம் பெற்ற பாடல். ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.பி.பியும், சாதனா சர்க்கமும் குழைந்து பாடி, வேறு அனுபவத்தை கொடுத்துஇருப்பார்கள்.

ஜன்னல் காற்றாகி வா…

ஜரிகைப் பூவாகி வா…

மின்னல் மழையாகி வா…

உயிரின் மூச்சாகி வா...

என பா.விஜயும் தனது வார்த்தைகளில் விளையாடியிருப்பார்.

10) இமையே இமையே

ராஜாராணி படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான மெலோடியான காதல் பாடல்.

ஜி.வி.பிரகாசும், சக்திஸ்ரீகோபாலனும் பாடியிருப்பார்கள். ஆர்யா, நயன்தாராவின் உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்பு பலரின் மனதை தொட்டது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு