செவ்வாய் கிரக நிலவில் வெறும் 10 கிராம் துகள்களை எடுத்துவர ஜப்பான் திட்டம் - என்ன கிடைக்கும்?

செவ்வாய் கிரகத்தின் பெரிய நிலவான ஃபோபோஸை நோக்கி இந்த விண்கலம் செல்கிறது.
படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் பெரிய நிலவான ஃபோபோஸை நோக்கி இந்த விண்கலம் செல்கிறது.
    • எழுதியவர், ரெபேக்கா மோரெல்
    • எழுதியவர், அலிசன் பிரான்சிஸ்
    • எழுதியவர், கெவின் சர்ச்
    • பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பூமியின் நிலவைப் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் செவ்வாய் கிரகத்தின் நிலவைப் பற்றி நாம் அதிகம் கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை.

ஜப்பானில் இருந்து செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸை நோக்கி ஒரு விண்கலம் ஏவப்பட்டுள்ளது. அங்கு சென்று, அதன் மேற்பரப்பில் உள்ள தூசு மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது இந்த விண்கலத்தின் நோக்கம்.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், செவ்வாய் கிரகம் அல்லது அதன் துணைக்கோள்களில் இருந்து மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, இங்குள்ள ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

இந்த விண்கலம் 2027 ஆகஸ்ட் மாதம் போபோஸைச் சென்றடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பானிய விண்வெளி முகமையால் வழிநடத்தப்படும் செவ்வாய் நிலவுகள் ஆராய்ச்சி திட்டம் (எம்எம்எக்ஸ்) அந்தக் கிரகத்தின் நிலவுகள் எப்படி உருவாகின என்கிற மர்மத்தைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாரா ரஸ்ஸல் இந்தத் திட்டத்தின் மாதிரி ஆய்வுக்கான துணை அதிகாரியாகவும் உள்ளார்.

"போபோஸுக்குச் சென்று, அங்கிருந்து சிறிதளவு மாதிரியைப் பூமிக்குக் கொண்டுவந்த வெற்றிகரமான விண்வெளித் திட்டம் இதுவரை இல்லை. இது மிகவும் லட்சியமான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான திட்டம் என்று நான் கருதுகிறேன்" என்கிறார் சாரா ரஸ்ஸல்.

செவ்வாய் கிரகத்தின் நிலவின் ஒரு பகுதியை பூமிக்கு எடுத்து வர விஞ்ஞானிகள் திட்டம்

சூரிய குடும்பத்தின் உள்பகுதியில் மூன்று நிலவுகள் உள்ளன. பூமியின் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிய ஃபோபோஸ் மற்றும் டெய்மோஸ் ஆகிய இரு நிலவுகள் உள்ளன.

இவை இரண்டுமே மிகச் சிறியவை. ஃபோபோஸ் சுமார் 20 கி.மீ (12 மைல்) குறுக்களவைக் கொண்டுள்ளது, மேலும் டெய்மோஸ் சுமார் 10 கி.மீ (6 மைல்) குறுக்களவைக் கொண்டுள்ளது. அவை ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டுள்ளன. பார்ப்பதற்கு ஏதோ விண்வெளி உருளைக்கிழங்குகள் போலத் தோன்றுகின்றன.

எம்எம்எக்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அருகே நெருங்கிறபோது டெய்மோஸை ஆய்வு செய்கிறது. அதன்பிறகு ஃபோபோஸ் மீது கவனம் செலுத்தும்.

அதன் நிலப்பரப்பை ஆராய்வதற்காக ஒரு சிறிய ரோவரை அங்கு இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது எளிதான காரியமாக இருக்காது.

இவ்வளவு சிறிய நிலவில் இதுவரை யாரும் ரோவரைத் தரையிறக்கியது இல்லை என்று சாரா ரஸ்ஸல் கூறுகிறார்.

இது தொடர்பாக மேலும் விளக்கிப் பேசிய அவர், "நிலவுக்கும் அதன் சொந்த ஈர்ப்பு விசை அதிகமாக இல்லை. ஆனால் அதைவிட அதிகமான ஈர்ப்பு விசை கொண்ட இன்னொரு பிரமாண்ட கிரகத்துக்கு அருகில் அது அமைந்திருக்கிறது. இது அதன் நிலப்பரப்பில் ரோவரைக் கொண்டு செல்வதை மேலும் கடினமாக்குகிறது." என்றார்.

செவ்வாய் கிரகம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலவுகளைப் பெற்றது. ஆனால் அவை எவ்வாறு உருவாயின என்பது யாருக்கும் தெரியவில்லை.
படக்குறிப்பு, செவ்வாய் கிரகம் சுமார் 4.5 பில்லியன் (450 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலவுகளைப் பெற்றது. ஆனால் அவை எவ்வாறு உருவாயின என்பது யாருக்கும் தெரியவில்லை.

ரோவர் ஒரு தரையிறங்கும் இடத்தைக் கண்டறியும். அதன் மூலம் பின்னர் எம்எம்எக்ஸ் விண்கலம்கூட ஃபோபோஸில் தரையிறங்க முடியும்.

மேற்பரப்பை அடைந்ததும், அது ஒரு ரோபோ கை மற்றும் இரண்டு மாதிரி சேகரிப்புக் கருவிகளை விரிவுபடுத்தி, நிலவின் துகள்களை சேகரிக்கும்.

இந்தப்பொருள் ஒரு சிறிய காப்ஸ்யூலில் அடைக்கப்பட்டு, 2031-ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பி, தெற்கு ஆஸ்திரேலியாவின் வூமேரா பாலைவனத்தில் தரையிறங்கும்.

திரும்பி வரப்போகும் பொருளின் அளவு மிகச் சிறியது - வெறும் 10 கிராம் மட்டுமே.

"அது உண்மையில் மிகச் சிறிய அளவு," என்கிறார் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ரிசா அவ்டெல்லிடு. இவர் ஜப்பான் குழுவுடன் பணியாற்றுகிறார்.

அவரது கூற்றுப்படி, தனித்தனி துகள்கள் மீதும் கூட பல ஆய்வுகளை நம்மால் மேற்கொள்ள முடியும்.

"நீங்கள் அறிவியல் ஆய்வை மேற்கொள்ள மேற்பரப்பில் இருந்து கிலோ கணக்கில் பொருட்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில்லை. அதனால் ஒவ்வொரு கிராமமும் மதிப்புமிக்கது தான்'', என்று அவர் தெரிவித்தார்.

அந்த விண்கலம் ஃபோபோஸின் மேற்பரப்பிலிருந்து 10 கிராம் நிலவுத் தூசியைச் சேகரிக்கும்.
படக்குறிப்பு, அந்த விண்கலம் ஃபோபோஸின் மேற்பரப்பிலிருந்து 10 கிராம் நிலவுத் தூசியைச் சேகரிக்கும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செவ்வாயின் நிலவுகள் எங்கிருந்து வந்தன என்கிற புதிருக்கு இந்த மாதிரிகள் விடையளிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன.

விண்கல் ஒன்று செவ்வாயின் தொடக்க காலத்தின் அதன்மீது மோதி அந்த சிதைவுகளில் இருந்து ஃபோபோஸ் மற்றும் டெய்மோஸ் உருவாகியிருக்க வேண்டும்.

அல்லது இந்த நிலவுகள் சூரியக் குடும்பத்தின் வெளிப்பகுதியில் சுற்றித்திரிந்த விண்கற்களாக இருக்க வேண்டும். அவை செவ்வாய் கிரகத்தின் ஈரப்பு விசையால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும்

"நமக்கு மாதிரிகள் கிடைக்கின்றபோது நாம் அதன் வேதியியல் மற்றும் தாது உள்ளடக்கம் வரை ஆழமாக ஆராய முடியும். இந்த இரண்டு கருத்தாக்கங்களும் மிகவும் மாறுபட்ட முடிவுகளைத் தரும்," என்கிறார் சாரா ரஸ்ஸல்.

தொடர்ந்து பேசிய அவர்,"அவை இந்த பிரமாண்ட மோதலினால் உருவானதா அல்லது ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட விண்கற்களாக என்பது உடனடியாகத் தெரிந்துவிடும். எனவே நம்மால் விரைவாக அதனைக் கண்டுபிடித்துவிட முடியும்." என்றார்.

அவை தங்கள் ஆய்வகங்களுக்குத் திரும்பும்போது கூடுதல் பலன் ஏதேனும் கிடைக்கலாம் என்றும் அந்த குழுவினர் நம்புகின்றனர்.

"மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஃபோபோஸ் செவ்வாயின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. அதனால் செவ்வாயின் மேற்பரப்பில் எந்த தாக்கம் இருந்தாலும் சிறு துகள்கள் ஃபோபோஸிலும் விதைக்கப்பட்டிருக்கலாம்," என்று கூறுகிறார் சாரா ரஸ்ஸல்.

மேலும் அவர், "நமக்கு கிடைக்கும் மாதிரியில் செவ்வாய் கிரகத்தின் துகள்களும் இருக்கலாம். எனவே அது செவ்வாயின் கட்டமைப்பு மற்றும் வரலாறு பற்றிய நேரடியான தகவல்களை வழங்கலாம்." என்றார்.

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த விண்கற்கள் அரிதானவை. இதில் ஒன்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த விண்கற்கள் அரிதானவை. இதில் ஒன்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பொருட்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது, விண்வெளி விஞ்ஞானிகளின் நீண்டகால லட்சியமாக இருந்து வருகிறது.

2021-ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் 'பெர்சிவரன்ஸ்' ரோவர், அங்குள்ள மாதிரிகளை கவனமாகச் சேகரித்து, அவற்றை கொள்கலன்களில் அடைத்து வைத்து வருகிறது.

இந்த கொள்கலன்களைப் பெற்று பூமிக்குக் கொண்டு வருவதற்காக இருந்த 'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' என்கிற நாசா/ஐரோப்பிய விண்வெளி முகமையின் இரண்டாவது திட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதியுதவி ரத்து செய்யப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

சீனா செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கும் தனது சொந்தத் திட்டத்தைத் திட்டமிட்டு வருகிறது. இது 2028-இல் ஏவப்பட உள்ளது. 2031-இல் செவ்வாய் கிரகப் பொருட்களைப் பூமிக்குக் கொண்டுவர இந்தத் திட்டம் முயற்சிக்கும்.

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த விண்கற்கள் வடிவில், அந்தக் கிரகத்தின் சில துண்டுகள் ஏற்கெனவே பூமியில் நம்மிடம் உள்ளன.

இவை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்கற்கள் மோதியதால் சிதறி, இறுதியில் பூமியை நோக்கி வீசப்பட்ட செவ்வாய் கிரகத்தின் துண்டுகளாகும்.

செவ்வாய் விண்கற்கள் மிகவும் அரிதானவை. நமது கிரகத்தில் விழும் மற்ற அனைத்து விண்கற்களைப் போல செவ்வாய் கிரகத்தின் விண்கற்களும் பூமிக்கு வந்தவுடன் காற்று, தூசி, நிலம் மற்றும் நீரில் கலந்து மாசடைகின்றன.

செவ்வாய் கிரகம் மற்றும் அதன் நிலவுகளிலிருந்து நேரடியாக ஒரு மாதிரியைப் பெறுவதற்கு விஞ்ஞானிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில், அத்தகைய மாதிரி மிகவும் தூய்மையான நிலையில் இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு