டார்க் வெப்பில் கசிந்த எஸ்பிஐ தரவுகள்: வாடிக்கையாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்-இல் கசிந்துள்ளன.
இந்த தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது.
டார்க் வெப்-இல் கசிந்த தரவுகளில், 3,897 வாடிக்கையாளர்களின் பதிவுகளில் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் (பிஐஐ) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று வங்கி கூறியுள்ளது. பிஐஐ என்பது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் அல்லது வங்கியின் சிஐஎஃப் எண் போன்ற விவரங்களைக் குறிக்கும்.
தரவுகள் அம்பலமாகியிருப்பது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் மோசடிக்கு ஆளாக நேரிடலாம் என்றும் மும்பை பங்குச்சந்தையில் (பிஎஸ்இ) தாக்கல் செய்த அறிக்கையில் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தை சமாளிக்கவும், அதன் பாதிப்பைக் குறைக்கவும் உரிய நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாக வங்கி கூறியுள்ளது. இந்த நிகழ்வால் வங்கியின் வணிக செயல்பாடுகள், நிதி நிலைமை அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் கூற்றுப்படி, அதன் முக்கிய செயல்பாடுகள் எந்த இடையூறுமின்றி வழக்கம் போல் தொடர்கின்றன.
டார்க் வெப்-இல் உள்ள சுமார் 3.75 லட்சம் பதிவுகளில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், மக்களின் அடையாளம் தொடர்பான தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட 3,897 பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
எந்த வகையான தரவுகள் கசிந்துள்ளன?

பட மூலாதாரம், Getty Images
டார்க் வெப்-இல் கசிந்த வாடிக்கையாளர் தரவுகளில் அவர்களின் பெயர், பாலினம், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் வீட்டு முகவரி ஆகியவை அடங்கும் என்று வங்கி கூறியுள்ளது. இந்தப் பதிவுகளில் வங்கியின் கிளை மற்றும் வாடிக்கையாளர் தகவல் கோப்பு (சிஐஎஃப்) தொடர்பான அடையாள எண்கள், லீட் ஐடிக்கள் (தனித்துவ அடையாள எண்கள்), கடன் மற்றும் லீட் பதிவுகள் தொடர்பான மெட்டாடேட்டா ஆகியவையும் அடங்கும்.
டார்க் வெப்-இல் தரவுகள் கிடைக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து, தங்களின் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை வழங்கும் நுண்ணறிவு சேவை வழங்குநர், பாதுகாப்பு இணைய முகமை மற்றும் சர்ட்-இன் (CERT-In) ஆகியவற்றிடமிருந்து அக்டோபர் 16ஆம் தேதியன்று எச்சரிக்கைகள் வந்ததாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இந்த இணைய பாதுகாப்புச் சம்பவத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக சர்ட்-இன் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையும் வங்கி நியமித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளனவா?

பட மூலாதாரம், Getty Images
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவதும், வங்கி கணக்குகளை அணுகுவதும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு விஷயங்களாகும். டார்க் வெப்-இல் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் தங்களை வங்கி ஊழியர்களாகக் காட்டிக்கொண்டு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று சைபர் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் வாடிக்கையாளரின் பிரச்னையைத் தீர்ப்பதாகக் கூறி, அவர்களின் ரகசியத் தகவல்களைப் பகிரச் சொல்லலாம். சொல்லப்போனால், பெயர், முகவரி, கடன் தொடர்பான தகவல் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளரை அழைத்தால், பேசுபவர் வங்கி ஊழியராகத் தான் இருப்பார் என அவர்கள் நம்ப வாய்ப்புள்ளது.
3,897 வாடிக்கையாளர்களின் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் அர்த்தம், வங்கி கணக்குகளை யாரோ சட்டவிரோதமாக அணுகிவிட்டார்கள் என்பதல்ல. டார்க் வெப்-இல் காணப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் அது எங்கிருந்து கசிந்திருக்கலாம் என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது விசாரித்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அதேசமயம் தங்களது வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக எண்ணி அச்சப்படக் கூடாது.
மோசடிக்காரர்கள் என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், Getty Images
வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களின் அடிப்படையில், மோசடிக்காரர்கள் அவர்களிடம் மேலும் பல தகவல்களைக் கேட்கலாம். அங்கீகாரம் (authentication), கேஒய்சி அப்டேட் அல்லது கடன் ஒப்புதல் என்ற சாக்கில், கடவுச்சொற்கள் மற்றும் பிற ரகசிய தகவல்களை அவர்கள் கேட்கக்கூடும்.
கடன் குறித்த தகவலைப் பெற்றவுடன், உண்மையான விண்ணப்பத்தைக் குறிப்பிட்டு வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற அவர்கள் முயற்சி செய்யலாம். பின்னர், செயல்பாட்டுக் கட்டணம் அல்லது பிற கட்டணங்கள் என்ற பெயரில் அவர்கள் பணத்தைக் கோரலாம்.
வாடிக்கையாளர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யவோ அல்லது மற்ற மோசடி முயற்சிகளிலோ தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த முடியும்.
இந்தத் தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளால் வழக்கமான போலி அழைப்புகளை விட மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகத் தோன்றும் குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இருப்பினும், தரவு கசிவு என்பது வாடிக்கையாளர்களின் கடவுச்சொற்கள், பின்கள் (PINs - ரகசிய அடையாள எண்கள்) அல்லது வங்கி கணக்குகள் அணுகப்பட்டுவிட்டன என்பதை குறிக்க வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தங்களது ஓடிபி, பின் மற்றும் கடவுச்சொற்களைப் பகிரக்கூடாது, மேலும் சந்தேகத்துக்குரிய தொலைபேசி அழைப்புகள் அல்லது இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
இது போன்ற மோசடிகளைத் தவிர்க்க இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அதன்படி:
- ஓடிபி, பின் (PIN) அல்லது கடவுச்சொல்லை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- எந்தவொரு பரிவர்த்தனை நடந்தாலும் உடனடி அறிவிப்பைப் பெற, எம்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் எச்சரிக்கைகளை எனேபிள் செய்து வைத்திருக்கவும்.
- உங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் பரிவர்த்தனை நடந்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்.
- எப்போதும் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ தளம், செயலி மற்றும் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை வழிகளை மட்டுமே பயன்படுத்தவும்.
- முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.
- உங்கள் கடன் கணக்கைத் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.
- கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்காணியுங்கள்.
- ஏதேனும் மோசடி நடந்தால், இந்திய அரசின் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930-ஐ அழைக்கவும்.
இந்தியாவில் வங்கி மோசடி எவ்வளவு அதிகரித்துள்ளது?

பட மூலாதாரம், Getty Images
'பயோகேட்ச்' என்பது மோசடிகளைக் கண்டறிய 'பிஹேவியரல் பயோமெட்ரிக்ஸ்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்னணி இணையப் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடி தடுப்பு தளமாகும்.
விசைப்பலகை தட்டச்சு செய்யும் வேகம், மவுஸ் அசைவுகள் மற்றும் திரையைத் தொடும் முறைகளை பகுப்பாய்வு செய்து மோசடியைக் கண்டறிவது இதில் அடங்கும்.
இந்தியாவில் வங்கி மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதாக பயோகேட்ச் கூறுகிறது. 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. தாமதமாகப் புகாரளிப்பதன் காரணமாக, உண்மையான நிலவரத்தை முன்வைப்பது கடினமாகிறது என அது கூறியுள்ளது.
புகாரளிப்பதில் ஏற்படும் தாமதத்தால், இந்தியாவில் மோசடியின் உண்மையான அளவைக் கண்டறிவது பல ஆண்டுகளுக்கு கடினமாக இருக்கலாம்.
இந்தியாவில் மிகவும் பொதுவாக நடைபெறும் மோசடியான 'டிஜிட்டல் அரெஸ்ட்' ஊழல்கள் மூலம் சுமார் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த மோசடிகளில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுடன் தொடர்புடையவை.
மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை டெபாசிட் செய்ய அல்லது வேறு இடத்துக்கு மாற்றப் பயன்படுத்தப்படும் கணக்குகளை (இவை மியூல் கணக்குகள் என அழைக்கப்படுகின்றன) கண்டறிவதில் இந்திய வங்கிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு விதியின்படி சந்தேகதுக்குரிய மியூல் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டியிருப்பதால், இந்த விதிமுறை இதற்குச் சவாலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































