கனமழையில் மரங்கள் விழுவது ஏன்? சாலையோரம் எந்த மரங்களை வளர்க்கலாம்? 5 முக்கிய விஷயங்கள்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சாலையோரம் வளர்க்கப்படும் மரங்கள், மழைக்காலங்களில் கீழே விழுந்து பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது. மரங்களின் வேர்கள் வளர்வதற்கு இடமில்லாமல் கான்கிரீட் தளங்கள் அமைப்பதும், கட்டுமானப் பணிகளின்போது வேர்கள் சேதமடைவதும் இதற்குக் காரணங்களாக உள்ளன என்கின்றனர் வனமரபியல் விஞ்ஞானிகள்.

சாலையோரங்களில் நமது மண்ணின் மரங்களை வளர்ப்பது நல்லது என்பதுடன், அவை வளர்வதற்கேற்ற இடத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்கின்றனர் நிபுணர்கள். சாலையோரங்களில் கான்கிரீட் தளங்களை அமைப்பதற்குப் பதிலாக மழைநீர் கீழே இறங்கும் வகையிலான தளங்களை அமைக்கலாம் என்கின்றனர் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள்.

எந்தெந்த மரங்களை வளர்க்கலாம், அவை விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு.

1. கனமழையில் மரங்கள் விழுவது ஏன்?

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமாகும் போதும், புயல், மழை ஏற்படும் போதும் சாலையோர மரங்கள் விழுந்து பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கேரள மாநிலம் பீச்சியில் உள்ள கேரள வனஆராய்ச்சி நிறுவனத்தின் (KSCSTE-KFRI) இயக்குநர் கண்ணன் சி.எஸ். வாரியர், தமிழக நகர்ப்புறங்களில் சாலையோரங்களில் அதிகளவில் அந்நிய மரங்கள் வளர்க்கப்படுவதாக கூறினார்.

''நகரங்களில் குல்மோகர் எனப்படும் மேஃபிளவர், ரெயின் ட்ரீ எனப்படும் தூங்குமூஞ்சி மரம் ஆகியவை அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் வேகமாக வளரும்'' என்றார் அவர்.

''வெயில் காலத்தில் இலை உதிர்ந்து, கிளைகள் காய்ந்து விழுந்து கொண்டேயிருக்கும். மழை, காற்றின் போதும் அவை எளிதாக முறிந்துவிடும். நகரங்களில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் இத்தகைய மரங்கள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார் விஞ்ஞானி கண்ணன்.

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும் கோவை வனமரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தின் (IFGTB) மூத்த விஞ்ஞானி ராஜசேகரன், ''தமிழகத்தில் முன்பு சாலையோரங்களில் பெருமளவில் நிழல் தரக்கூடிய ஆலமரம், அரசமரம், புங்கன், வேம்பு, கடம்பு போன்ற மரங்களைத்தான் வைத்து வளர்த்துள்ளனர். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அந்நிய மரங்கள்தான் அதிகமாக சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றன'' என்றார்.

அந்நிய மரங்கள் வேகமாக வளர்ந்து நிழல் தருவதுடன், சிவப்பு, மஞ்சள் என அழகான பூக்களுடன் இருப்பதாகக் கூறுகிறார் சூழல் ஆர்வலரும், 'கிரீன்கேர்' அமைப்பின் நிர்வாகியுமான சையது. சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் மேஃபிளவர், தூங்குவாகை, இயல்வாகை ஆகிய மரங்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அதேநேரத்தில், பெருமழைக் காலங்களில் புங்கன், ஆலமரம், அரசமரம் போன்றவையும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மரங்களின் இனம் மட்டுமின்றி, அவை வளர்க்கப்படும் இடம், வேர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, கிளைகளை வெட்டும் முறை ஆகியவையும் மரங்கள் விழுவதற்குக் காரணமாக இருக்கலாம். எந்த வகை மரமாக இருந்தாலும் அதன் தற்போதைய நிலையை மதிப்பிடுவதும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

2. மண்ணின் மரங்கள் எங்கே வளர்க்கப்படுகின்றன?

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் மண்ணின் மரங்களே வளர்க்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களில் அந்நிய மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுவதாகவும் தகவல் பகிர்கிறார் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளரும், கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவின் ஆலோசகருமான மனுநீதி.

பிபிசியிடம் பேசிய அவர், ''இப்போதும் கூட, மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் புங்கன், வேம்பு, பூவரசு, கடம்பு போன்ற மண்ணின் மரங்கள்தான் அதிகமாக நடப்படுகின்றன. நகர்ப்புறங்களுக்குள்தான் அழகுக்காக வளர்க்கப்படும் அந்நிய மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. '' என்றார்.

கான்கிரீட் தளங்களால் ஏற்படும் பாதிப்பு

சாலையோரங்களில் கான்கிரீட் தளங்கள் அதிகமாக இருப்பதால், அங்குள்ள மரங்களுக்கு போதியளவு தண்ணீரே கிடைப்பதில்லை என்கிறார் விஞ்ஞானி ராஜசேகரன்.

பிபிசியிடம் பேசிய அவர், ''ஒரு மரத்தின் பலமே அதன் வேர்கள்தான். பொதுவாக தண்ணீரைத் தேடியே வேர்கள் படரும். வேர்களுக்குள் ஆக்சிஜன், தண்ணீர் தேவை. மரம் இருக்கும் பகுதியில் மண் சுற்றிலும் இருந்தால் மழைத்தண்ணீர் கீழே செல்லும். வேர்களுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்கும்'' என்றார்.

மரங்களைச் சுற்றிலும் மழைநீர் இறங்கும் வகையில் மண் இருக்க வேண்டுமென்பதுடன், கட்டுமானப் பணிகளின்போது வேர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதும் அவசியம் என்கிறார் ராஜசேகரன்.

''அதேபோன்று சாலையோரங்களில் கட்டடத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மரங்களின் கிளைகளை அதிகம் வெட்டி விடுகின்றனர். சாலைப்பகுதியில் மட்டும் கிளைகளை அதிகமாக வளரவிடுவதால் மரம் சமநிலையை இழந்து, பெருமழையின்போதும், பலமான காற்று அடிக்கும்போதும் எடை அதிகமாக இருக்கும் பக்கமாகச் சாய்ந்து விடுகிறது'' என்றார் ராஜசேகரன்.

'மரங்களுக்கு மறுவாழ்வு' என்ற திட்டத்தில் மண்ணின் மரங்களை மறுநடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சையது, சாலை விரிவாக்கம், பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களை மறுநடவு செய்து வருகிறார். கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இப்பணியைச் செய்ததுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அரசுத்துறைகளுடன் இணைந்து மரங்களை மறுநடவு செய்துள்ளார். இவருடைய உதவியுடன் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள், மீண்டும் பசுமையாக வளர்ந்துள்ளதற்கான புகைப்படம், காணொளி உள்ளிட்ட ஆதார ஆவணங்களையும் அவர் பிபிசியிடம் பகிர்ந்தார்.

''நகரங்களில் சாலையோரங்களில் அந்நிய மரங்கள், மண்ணின் மரங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் கட்டுமானப் பணிகளுக்காக அவற்றின் வேர்களைத் துண்டித்து விடுகின்றனர். அதனால் அவை பலம் இழந்து விழுந்து விடுகின்றன'' என்றார் சையது.

3. கட்டடங்களுக்கு அருகில் எத்தகைய மரங்களை வளர்க்கலாம்?

நகர்ப்புறங்களில் வீடுகள், கட்டடங்கள் அருகருகில் கட்டப்படுவதால் பெரிய மரங்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவுள்ளதாகக் கூறுகிறார் கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து சிவில் இன்ஜினியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர் ராமலிங்கம்.

பிபிசியிடம் பேசிய அவர், ''பெரிய அளவில் பரந்து விரிந்து வளரும் ஆலமரம், அரசமரம் ஆகிய மரங்களை யாரும் வீடுகள் மற்றும் வீதியோரங்களில் நடுவதில்லை. அவற்றின் வேர்கள் பெரியளவில் கட்டடங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது முக்கியக் காரணம்'' என்றார்.

''அதேநேரத்தில் மரங்கள் உள்ள பகுதியைத்தான் மக்கள் அதிகம் விரும்புவதால் வீடுகளுக்கு சற்று தள்ளி சில மரங்களை வளர்க்க ஆலோசனை தருகிறோம். அது வீட்டிற்கு காற்றோட்டத்தைத் தருவதுடன், வெப்பத்தைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் வேப்பமரம் வைப்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்'' என்றார் ராமலிங்கம்.

4. மரங்கள் விழுவதைத் தடுப்பது எப்படி?

சாலையோரங்களில் வளர்க்கப்படும் மரங்கள் வேரோடு சாய்வதைத் தடுப்பதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய ராஜசேகரன், ''நகரங்களில் மரத்தைச் சுற்றிலும் இடைவெளியின்றி கான்கிரீட் தளத்தைக் கட்டி விடுகின்றனர். மரத்தைச் சுற்றிலும் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்கு எந்த கான்கிரீட் தளத்தையும் அமைக்கக்கூடாது. சாலைகளில் பாயும் மழைநீர் மரத்தையொட்டி மண்ணில் இறங்க வழிவகுக்க வேண்டும்'' என்றார்.

ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளரும், கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவின் ஆலோசகருமான மனுநீதி, சாலையோரம் மற்றும் வீடுகளின் முன்பாக முற்றிலுமாக கான்கிரீட் தளமாகப் போடாமல், மழைநீர் மண்ணுக்குள் செல்லும் வகையிலான 'பேவர்ஸ் பிளாக்' தளங்கள் அமைக்கலாம் என்கிறார். இத்தகைய தளங்களில் கற்களுக்கு இடையிலான இடைவெளியும், கீழுள்ள அடித்தளமும் தண்ணீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

5. சாலையோரம் வளர்ப்பதற்கேற்ற மண்ணின் மரங்கள்

சாலையோரங்களிலும், வீடுகளுக்கு அருகிலும் எத்தகைய மரங்களை வளர்க்கலாம் என்பது பற்றி விளக்கிய கண்ணன் சி.எஸ். வாரியர், நாவல் மரம், வேம்பு, புங்கன் , நீர் மருது, சரக்கொன்றை, பூவரசு, மகிழம், புளியமரம், புரசு, கடம்பு உள்ளிட்ட மண்ணின் மரங்களைப் பரிந்துரைக்கிறார்.

நாவல் மரம் நல்ல காற்று, நிழல் தரும். அதன் பழங்களை உண்பதற்கு நிறைய பறவைகள் வரும். அதனால் சூழல் பாதுகாப்பிலும் இந்த மரம் பங்களிக்கிறது.

புங்கன் மரம் வறட்சியிலும் தாங்கி நிற்கும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. கோடை, குளிர் காலம் எல்லாக் காலங்களிலும் பசுமையாக இருக்கும்.

வேம்பு நல்ல நிழலுடன் குளிர்ச்சியான காற்றையும் தரக்கூடியது. வீட்டிற்கு அருகிலும், சாலையோரங்களிலும் அக்காலத்தில் வேம்பு மரம் வைக்கப்பட காரணம், அது ஏற்படுத்தும் குளிர்ச்சிதான்.

தென் கேரளத்திலும், தமிழகத்தில் டெல்டா பகுதிகளிலும் பூவரசு மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. கேரளத்தில் இந்த மரத்தை வீட்டிற்கான கதவு, ஜன்னல், பர்னிச்சர் செய்வதற்குப் பயன்படுத்துவதாக விஞ்ஞானி கண்ணன் கூறுகிறார்.

மஞ்சக்கடம்பு மரத்தையும் சாலையோரம் வளர்க்கலாம் என்கிறார் கண்ணன். கோடை காலத்தில் மஞ்சள் நிறத்தில் இவற்றின் பூக்கள் மிக அழகாக இருக்கும். அதேபோன்று அரசமரம், ஆலமரம் போன்றவற்றை நகரங்களில் உள்ள பூங்காக்கள், மக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்களில் வளர்க்கலாம் என்பது விஞ்ஞானிகள் தரும் ஆலோசனையாகவுள்ளது.

எந்த மரத்தை வளர்ப்பதென்பது இடவசதி, கட்டடங்களுக்கான தூரம், மரத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டும். மரங்களின் வேர்கள், கிளைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்து, தேவையான பராமரிப்பை மேற்கொள்வதும் முக்கியமானது. சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மரங்களின் வேர்கள் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கவும், வேர்கள் வளர்வதற்குப் போதிய மண் இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.

பலமான காற்று, பெருமழையின்போது எந்த மரத்தின் கீழும் நிற்பதைத் தவிர்ப்பது அவசியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு