சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் 'குற்றங்கள்' பற்றித் தெரிந்திருந்தும் வங்கதேசம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்தவர் இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் குறித்து சௌதி அரேபிய அதிகாரிகள் வங்கதேசத் தூதரகத்துக்குத் தெரிவிக்கவில்லை.

இது குறித்து ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவு, வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் அக்டோபர் 18ஆம் தேதி டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சௌதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அடைக்கப்பட்டுள்ள வங்கதேசக் குடிமக்கள் குறித்த தகவல்களைக் கோரி, சௌதி வெளியுறவு அமைச்சகத்திடம் வங்கதேசத் துணைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, செப்டம்பர் 30ஆம் தேதி சௌதி அதிகாரிகள் வழங்கிய பட்டியலில், தூக்கிலிடப்பட்ட இரு வங்கதேசக் குடிமக்களின் பெயர்கள், முகவரிகள், கடவுச்சீட்டு எண்கள், இகாமா எண்கள் (தனித்துவ அடையாள எண்) உள்ளிட்ட விரிவான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகத்துக்கு சௌதி அதிகாரிகள் வழங்கிய பட்டியலில், அந்த இரண்டு வங்கதேசக் குடிமக்கள் மீதான குற்றங்கள் மற்றும் வழக்குகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

பிபிசி வங்காளத்துக்குக் கிடைத்துள்ள அந்தப் பட்டியலில், சௌதி அதிகாரிகள் அவர்கள் மீது 'சைபர் குற்றம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு' ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், "தண்டனை குறித்த எந்தத் தகவலும் இல்லை" என்று ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகம் அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரக வட்டாரங்களின்படி, சௌதி அதிகாரிகளிடமிருந்து சுமார் 2,500 கைதிகள் குறித்த சமீபத்திய பட்டியல் பெறப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் தூக்கிலிடப்பட்ட இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து எதுவும் குறிப்பிடப்படாததால், இந்த விவகாரம் குறித்து அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சௌதி அதிகாரிகள் வழங்கிய பட்டியலில் இரண்டு வங்கதேசக் குடிமக்களின் குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்தக் குற்றங்களுக்கான தண்டனை மரண தண்டனை என்பதை வங்கதேசத் துணைத் தூதரகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் பல்வேறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 'திருமணத்தை மீறிய உறவு' என்ற குற்றச்சாட்டு குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத் துணைத் தூதரகத்துக்குத் தெரிந்திருந்ததால், அவர்கள் உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏனெனில், இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில் திருமணத்தை மீறிய உறவுக்காக மரண தண்டனை விதிக்கப்படலாம்.

வங்கதேசத்தின் முன்னாள் தூதர் நசீம் ஃபெர்தௌஸ் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "இஸ்லாமியச் சட்டம் பின்பற்றப்படும் நாடுகளில், திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்குப் பொதுவாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்; புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்" என்றார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் செய்த குற்றம்

அக்டோபர் 14ஆம் தேதி சௌதி அரேபிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்நாட்டின் உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரு குடிமக்கள் தஸீர்(Ta'zir) முறையின் கீழ் தூக்கிலிடப்பட்டனர்.

இந்தத் தகவல், ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகம் டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மக்கா நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் "ஒழுக்கக்கேடான செயல்களில்" ஈடுபட்டு, அதன் புனிதத்தன்மையை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகத்தின் ஆலோசகர் அனுப்பிய கடிதம், ரியாத்தில் உள்ள வங்கதேசத் தூதரகம், வெளிநாடுவாழ் மக்கள் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஆசியப் பிரிவின் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், கைது செய்யப்பட்ட இரண்டு வங்கதேசக் குடிமக்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கு விவரங்களை ஜெட்டா துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களின் பெயர்கள், அடையாளங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் சௌதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வந்தனர்.

செப்டம்பர் 30ஆம் தேதி சௌதி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பட்டியலில் தான் இந்தத் தகவல்கள் வங்கதேச அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பக் குற்றச்சாட்டின் பேரில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அல்லது ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டு முஹர்ரம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்டா சீர்திருத்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த இடம் குறித்த விவரமும் சௌதி அதிகாரிகள் அனுப்பிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 'திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஈடுபட்டதாகக்' கூறி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அல்லது ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டு முஹர்ரம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண் ஜெட்டா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சௌதி அதிகாரிகள் வழங்கிய பட்டியலில், அவர் "திருமணத்தை மீறிய பாலியல் உறவு" குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவரமும் ஜெட்டா துணைத் தூதரகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு சௌதி அரேபியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அடைக்கப்பட்டுள்ள வங்கதேசக் குடிமக்கள் குறித்த சௌதி அதிகாரிகள் வழங்கிய பட்டியலில், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தண்டனை விவரங்கள் சுருக்கமாக இடம்பெற்றிருந்தபோதிலும், இந்த இரு கைதிகளின் பெயர்களுக்கு எதிராக அவர்களுக்கான தண்டனைகள் குறிப்பிடப்படவில்லை என்றும் ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்த குடிமக்கள் இருவரின் தீர்ப்புகளின் நகல்களையும் வழக்குகள் குறித்த விரிவான தகவல்களையும் பெறுவதற்காக, சௌதி வெளியுறவு அமைச்சகத்தின் மெக்கா கிளைக்கு அதிகாரபூர்வக் குறிப்பு (Note Verbale) அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? - வங்கதேச தூதரகத்தின் விளக்கம்

வங்கதேசக் குடிமக்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை குறித்து சௌதி அதிகாரிகள் தெரிவிக்காதது, அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளாதது உள்ளிட்ட பல காரணங்களை ஜெட்டா துணைத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சௌதி அரேபியாவில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வங்கதேசக் குடிமக்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் குறித்த விவரங்களும் துணைத் தூதரகத்தின் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.

சௌதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள சிறைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 306 வங்கதேசக் குடிமக்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 147 பேருக்குப் பல்வேறு கால அளவுகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் குறைந்தபட்சமாக ஒரு மாதமும், அதிகபட்சமாக 15 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே குற்றத்துக்காக மெக்காவில் தொடரப்பட்ட மூன்று தனித்தனி வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சௌதி அரேபியாவின் குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைகளின்போது, 'மர்கஸுத் தர்ஜமா அல் முவஹ்ஹத்' (Markazut Tarjamah Al Muwahhad) என்ற அமைப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளர் உதவி வழங்கப்படுவதாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதுபோன்ற வழக்குகளில், இந்த நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளரின் நீதித்துறை நடவடிக்கைகளில் பங்கேற்கக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை" என்று வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசக் குடிமக்களின் குடும்பத்தினர், பொதுவாக வங்கதேசத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் மூலமாகவோ, வெளியுறவு அமைச்சகம் அல்லது வெளிநாடுவாழ் மக்கள் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலமாகவோ சட்ட உதவி கோரி விண்ணப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இருப்பினும், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் குடும்பத்தினரிடமிருந்து எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை; அவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் மேற்கொள்ளப்படவில்லை" என்றும் ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த இரு வங்கதேசக் குடிமக்களுக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது குறித்தோ, அந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது குறித்தோ சௌதி அதிகாரிகள் வங்கதேசத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்துக்கு அதிகாரபூர்வமாகவோ அதிகாரபூர்வமற்ற முறையிலோ தகவல் தெரிவிக்கவில்லை என்றும் டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரக வட்டாரங்களின்படி, மரண தண்டனை குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தால், இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்தோ அல்லது மிகுந்த முக்கியத்துவம் அளித்தோ செயல்பட்டிருப்பார்கள்.

செப்டம்பர் 30ஆம் தேதி சௌதி அதிகாரிகள் வழங்கிய பட்டியலின் மூலம், இந்த இரு குடிமக்களும் ஜெட்டா பெண்கள் சிறை மற்றும் ஜெட்டா சீர்திருத்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தகவல் வங்கதேசத் துணைத் தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

"சௌதி அரேபியாவின் சட்ட விவகாரங்களில் அவர்கள் பின்பற்றும் நடைமுறைகளையே பின்பற்றுகிறார்கள். பின்னர், மிக விரிவான ஆவணங்களைப் பெற்று, ஆதாரங்களின் அடிப்படையில் தங்களது சொந்த நீதித்துறை நடைமுறைகளின்கீழ் வழக்குகளைக் கையாளுகிறார்கள்" என ஒரு வட்டாரம் கூறியது.

"இந்த விவகாரத்தில் யாரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதாவது, இங்குள்ள நடைமுறை இப்படித்தான் உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு அமைப்புகள் அல்லது நடைமுறைகள் உள்ளன. அனைத்து ஆவணங்களையும் பெற்று, ஆதாரங்களையும் அல்லது தேவையான அனைத்தையும் பெற்ற பிறகு, அவர்கள் விரும்பும் தண்டனையை விதிக்கிறார்கள்" என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

'குற்றச்சாட்டுகளைப் பார்த்த பிறகு நாம் இன்னும் முனைப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்'

சௌதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் மற்றும் திருமணத்தை மீறிய பாலியல் உறவு ஆகிய குற்றங்களுக்காக வங்கதேசக் குடிமக்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு முன்னுதாரணம் இல்லை என்று ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகம், வெளியுறவு அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பட்டியலில் இடம்பெற்றிருந்த சுமார் 2,500 வங்கதேசக் குடிமக்கள் தொடர்பான குற்ற விவரங்கள், அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 30ஆம் தேதி தெரியவந்திருந்தபோதிலும், ஜெட்டா துணைத் தூதரகம் விரைந்து நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து முன்னாள் தூதரக அதிகாரி நசீம் ஃபெர்தௌஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில், திருமணத்துக்கு வெளியேயான பாலியல் உறவுக்கான தண்டனை மரண தண்டனை தான் என்றும், இதைத் தூதரக அதிகாரிகளும் துணைத் தூதரகங்களில் பணியாற்றுபவர்களும் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், "எனவே, இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்... அதுவும் உடனடியாகத் தீவிரமாகக் கையாள வேண்டும். இந்தச் சட்டங்களை விளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? அவர்களுக்குப் பயிற்சி இல்லையென்றால், இந்த விவகாரங்களை எப்படிக் கையாள்வார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்" என்றார்.

முன்னாள் தூதர் இதுகுறித்து மேலும் கூறுகையில், "உடனடியாகத் தலையிட்டிருக்க வேண்டியதுதான் செய்ய வேண்டிய நடவடிக்கை. ஒருவர் திருமணத்துக்கு வெளியேயான பாலியல் உறவு என்று கூறினால், அதற்கான தண்டனை என்ன என்று கேட்க வேண்டும்.

அப்போது, அதற்கான தண்டனை மரண தண்டனை என்று அவர்கள் கூறியிருப்பார்கள். அது அனைவரும் அறிந்த உண்மை. அந்த நாட்டில் இத்தகைய குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது. எனவே, மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது உடனடியாகத் தெரிந்திருக்கும். அது மரண தண்டனையாக இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றார்.

அதேநேரத்தில், இந்த முழு நடைமுறையிலும் "பல குறைபாடுகள்" இருப்பதாக அவர் கருதுகிறார்.

இத்தகைய நாடுகளில் உள்ள துணைத் தூதரக அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு, அந்தந்த நாட்டின் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சௌதி அரேபியாவில் இணையவழி குற்றம் மற்றும் திருமணத்தை மீறிய உறவுக்கான தண்டனை என்ன?

வங்கதேசக் குடிமக்கள் இருவர் தூக்கிலிடப்பட்டதாக சௌதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌதி அரேபியாவில் குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை ஆய்வு செய்வதன் அடிப்படையில் நீதித்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மஞ்சில் மோர்ஷெட் தெரிவித்தார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், "ஷரியா சட்டத்தின்படி, குறிப்பாக மதம் அனுமதிக்காத விவகாரங்களில், ஆரம்பகட்ட விசாரணையைச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்கிறார்கள். மேல்முறையீட்டுக்குப் பிறகு இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது" என்றார்.

இதற்கு முன்பு, டாக்கா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவில் எட்டு வங்கதேசக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தவிர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"ஹெச்ஆர்பிபி (HRPB) சார்பில் நான் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். பின்னர், வெளியுறவு அமைச்சகம் 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு, அரசு விடுமுறை நாட்களில்கூடத் தூதரகங்கள் ஏற்பாடுகளைச் செய்து, அவர்களுக்கான குருதிப் பணத்தைச் செலுத்தின. இதனால், தூக்கிலிடப்படுவது தவிர்க்கப்பட்டது" என்று மோர்ஷெட் கூறினார்.

அந்த எட்டு பேருக்காகவும் அப்போது அரசு பணம் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்தபோதிலும், இந்த இரு வங்கதேசக் குடிமக்கள் தொடர்பான சம்பவம் குறித்து யாருக்கும் தெரியவில்லை என்று மோர்ஷெட் கூறுகிறார். இந்தச் செய்தி முன்கூட்டியே தெரிந்திருந்தால், வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு