பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை 'முட்டாள்தனமானவை' என மக்ரோங் விமர்சித்தது ஏன்?

பிரான்ஸ் கலவரம் குறித்து டிரம்ப் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கூறிய  கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் விவரித்துள்ளார்
படக்குறிப்பு, பிரான்ஸ் கலவரம் குறித்து டிரம்ப் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் விவரித்துள்ளார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்கள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" மற்றும் "முட்டாள்தனமானவை" என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் குறிப்பிட்டார்.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளும் அடங்கும்.

பிரான்ஸில் நடந்த வன்முறைகளுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்று தலைவர்கள் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எதிர்கொள்கிறது.

இதற்கிடையில், சனிக்கிழமை போராட்டங்கள் வன்முறையாக மாறியதிலிருந்து பிரான்ஸில் நடந்த வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

"பிரான்ஸின் நிலைமையைப் பாருங்கள்" என்று வாக்காளர்களிடம் டிரம்ப் எச்சரித்தார்.

வன்முறைக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், "விரைவில் பாரிஸ் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும்" என்றும் கூறினார்.

கடந்த வாரம் பாரிஸில் பல இடங்களில் வன்முறையும் தீவைப்புச் சம்பவங்களும் நடந்தன. இந்தப் புகைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி எடுக்கப்பட்டது.
படக்குறிப்பு, கடந்த வாரம் பாரிஸில் பல இடங்களில் வன்முறையும் தீவைப்புச் சம்பவங்களும் நடந்தன. இந்தப் புகைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி எடுக்கப்பட்டது.

மக்ரோங் சொன்னது என்ன?

பிரான்ஸில் நடந்த கலவரங்களை வெளிநாடுகள் தூண்டியதற்கான ஆதாரம் இல்லை என்று புதன்கிழமை தெரிவித்த மக்ரோங், கலவரங்களுக்குப் பிறகு அவை தொடர்பான தகவல்கள் வெளிநாடுகளில் திரித்துப் பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கத்தார் பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்ரோங், "போராட்டங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இதனால், பல வெளிநாட்டுத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத, முட்டாள்தனமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்" என்றார்.

"பிரான்ஸில் நடக்காத சம்பவங்களை நடந்தது போலக் காட்டும் ஏஐ படங்களைப் பார்த்துள்ளோம். புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியவாதிகள் பெரும் கூட்டமாக வந்து பிரான்ஸைத் தாக்கியதாகச் சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பொய்யான தகவல்" என்று மக்ரோங் தெரிவித்தார்.

"இந்தப் பிராந்தியத்திலும் அட்லான்டிக் பெருங்கடலுக்கு அப்பாலும் உள்ள தலைவர்கள், தங்கள் அரசியல் பிரசாரங்களுக்காக எங்களைப் பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்.

இந்த வார இறுதியில் பிரான்ஸில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில், மக்ரோங் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்பைக் குறிப்பிடுகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, "அவரும், மற்றவர்களும்" என்று மக்ரோங் பதிலளித்தார்.

"இந்தப் பிராந்தியத்திலும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சில தலைவர்கள், குறிப்பிட்ட குழுக்கள் திட்டமிட்டுப் பரப்பும் தவறான தகவல்களை உண்மை என நம்பிப் பகிர்கின்றனர்" என்று தோஹாவில் மக்ரோங் கூறினார்.

"தங்களின் அரசியல் பிரசாரத்திற்காக அவர்கள் எங்களது நாட்டைப் பயன்படுத்துகிறார்கள். இது எங்களுக்குத் தேவையில்லை. ஏற்கெனவே நாங்கள் பல பிரச்னைகளைச் சமாளித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் "தீவிர இஸ்லாமியவாதத்தால்" தாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பிரான்ஸில் போராட்டங்கள் நடைபெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களே முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டை ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

பிரான்ஸில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
படக்குறிப்பு, பிரான்ஸில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்

பிரான்ஸில் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன?

மக்ரோனுக்குப் பிறகு பிரான்ஸின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவரது அரசு போராடி வருகிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த பெரும் கலவரங்களின்போது நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக பிரான்ஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக நடந்த பெரும் போராட்டங்கள் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தன. ஆனால், பின்னர் அவை பரவலான வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களாக மாறின.

பாரிஸ், மார்செய், லியோன் மற்றும் லிமோஜ் நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. லிமோஜ் நகரில் நகராட்சி கட்டடம் தீவைக்கப்பட்டதில் அதன் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது. மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்தால், வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பாரிஸின் முக்கியப் பகுதிகளில் அனுமதியின்றி பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசே அரண்மனை, நாடாளுமன்றத்தின் இரு அவைகள், லூவர் அருங்காட்சியகம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலமான ஷாம்ஸ்-எலிசே சாலை ஆகியவை அடங்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு