சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க புதிய குழு: நீதிமன்றம் முன்வைத்த 3 கேள்வி - பதில்கள்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நிர்வாகத்தை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து, அக்டோபர் 30-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொது தீட்சிதர்கள் வசம் கோவில் ஒப்படைக்கப்பட்டதில் இருந்தே முறையாக நிர்வகிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு தொடர்பாக சட்டரீதியாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக, பிபிசி தமிழிடம் பேசிய தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

'முறைகேடுகள் அடிப்படையில் தீட்சிதர்களிடம் இருந்து கோவில் நிர்வாகத்தைப் பறிப்பது இதுவே முதல்முறை' என்கிறார், சைவ சமய அறிஞர் சத்தியவேல் முருகனார்.

வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்ன?

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவில், சைவத் தலங்களில் முக்கியமான கோவிலாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கோவில் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்ட கோவிலாக இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகப் பார்க்கப்பட்டுள்ளது.

பிச்சாவரம் சோழர்களின் கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் இருந்ததாகக் கூறப்பட்டாலும் தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்களே கோவிலைப் பல காலமாக கட்டுப்படுத்தி வந்துள்ளனர்.

1926-ஆம் ஆண்டு மெட்ராஸ் இந்துசமய அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை ஏற்பதற்கு அன்றைய சென்னை மாகாண அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இதனை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வகையில், கடந்த நூறு ஆண்டுகளாக தீட்சிதர்களும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே நிர்வாகத்தைக் கைப்பற்றுவது தொடர்பான மோதல் இருந்து வந்துள்ளது.

கனகசபை சர்ச்சை... அரசாணை

இந்தநிலையில், நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது ஏறி கடவுளை வழிபடுவது தொடர்பான சர்ச்சைகள் கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கின.

கடலூரை சேர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி கனகசபையின் மீது ஏறி தேவாரம் பாட முயன்றதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆணையர் அனுமதியளித்தும் சர்ச்சைகள் நீடித்தன.

கடந்த 2022-ஆம் ஆண்டு கனகசபையில் ஏறி ஜெயசீலா என்ற பெண்மணி வழிபாடு நடத்த முயன்றார். அவரை வழிபாடு நடத்தவிடாமல் தீட்சிதர்கள் முற்றுகையிட்டனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சிவனடியார்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 'கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்தலாம்' எனக் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் அரசாணை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டது.

இந்த அரசாணை தங்களுடைய பாரம்பரிய நிர்வாக உரிமையில் தலையிடுவதாகக் கூறி பொது தீட்சிதர்கள் எதிர்த்தனர். 'இது பக்தர்களின் வழிபாட்டு உரிமை. அதைத் தீட்சிதர்கள் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முடியாது' என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கனகசபை தரிசன அரசாணையை எதிர்த்து வழக்குகளும், கோவிலின் பழமையான கட்டுமானங்கள், சொத்துகள் மற்றும் வருமானக் கணக்குகள் தொடர்பான மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

'முறையாக நிர்வகிக்கவில்லை' - நீதிபதிகள்

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 30) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், '2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் பொது தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், கோவிலை அவர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

'கடந்த 12 ஆண்டுகளாக கோவிலுக்குக் கிடைத்த வருமானம் குறித்து முழுமையான மற்றும் உண்மையான கணக்குகளை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவில் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாக பொது தீட்சிதர்களும் இந்து சமய அறநிலையத்துறையும் தாக்கல் செய்த கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தின்கீழ் கோவிலின் பழமையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கோவில் சொத்துகள் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உரிமைகளை மீறுவதற்கான அனுமதிச் சீட்டு அல்ல'

'கோவிலில் சிற்பங்களுக்கும் சுவரோவியங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. கோவிலின் தொன்மையான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை சேதப்படுத்திக் கட்டுமானம் மேற்கொண்டது தொடர்பாக பொது தீட்சிதர்கள் தரப்பில் ஏற்கும்படியான விளக்கம் அளிக்கப்படவில்லை' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்கும் உரிமை பொது தீட்சிதர்களுக்கு இருப்பதாக, 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிமன்றம், 'அந்த உரிமை மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான அனுமதிச் சீட்டு அல்ல' எனக் கூறியது.

'மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகள் மீறப்படும்போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்போதும் அரசு நிர்வாகம் தலையிடுவதைத் தடுக்க முடியாது' எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தீட்சிதர்கள் முன்வைத்த வாதம் என்ன?

வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி பொது தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் தரப்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கனகசபையில் இடவசதி குறைவாக இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன" எனக் கூறியிருந்தார்.

இதனைத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது தீட்சிதர்கள் செயலாளர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை" எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்ட பிறகே பக்தர்கள் கணிசமான அளவு அனுமதிக்கப்பட்டதாக பக்தர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தீட்சிதர்கள் தரப்பில் மறுத்தாலும் கூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டனர்.

'5 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமனம்'

கோவிலுக்குள் இருக்கும் உணவருந்தும் கூடத்தை தீட்சிதர்களின் குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதிப்பது பொதுக் கோவிலுக்குள் வணிகரீதியான செயல்பாடுகளை மேற்கொண்டு உணவுக்கூடமாக மாற்றுவது போன்ற செயல்கள், கோவில் சொத்துகளை பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள தோல்வியைக் காட்டுவதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

'இத்தகைய தவறான நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வதற்கு நீதிமன்றத்தின் தலையீடு அவசியம்' எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

'நடராஜர் கோவிலில் பூஜைகள், திருவிழாக்கள் போன்றவற்றை நடத்துவது மதம் சார்ந்த உரிமையாக உள்ளது. ஆனால் கோவில் சொத்துகள், வருமானம், கட்டுமானங்கள் போன்ற நிர்வாக நடவடிக்கைகள் அவற்றில் இருந்து வேறுபட்டவை' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொது தீட்சிதர்கள் மேற்கொண்டு வரும் மத சம்பிரதாயங்களுக்குத் தொடர்பில்லாத நிர்வாக நடவடிக்கைகளை தகுதியான, சுதந்திரமான அமைப்பு கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

"'கோவிலின் நிர்வாகக் குறைபாடுகள்" சரிசெய்யப்படும் வரை அதன் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதற்கு குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் இணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமாரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ராஜேந்திரன் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது தீட்சிதர்கள் செயலாளர் மற்றும் அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

'பூஜை நடத்தும் உரிமை தீட்சிதர்களுக்கே'

கனகசபையில் தரிசனம் செய்வது தொடர்பாக தீர்ப்பில் கூறியுள்ள நீதிமன்றம், 'கனகசபையில் ஏறி நடராஜரையும் சிவகாமி அம்மனையும் தரிசனம் செய்வதற்கு அனைத்து பக்தர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

கனகசபையில் ஏறி வழிபாடு நடத்துவது தொடர்பாக பொது தீட்சிதர்களுடன் ஆலோசித்து கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய நிர்வாகக் குழு மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'அப்போது பாடல்களைப் பாடுவதற்கு பக்தர்கள் விரும்பினால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கனகசபைக்கு கீழே நின்று அனுமதிக்கலாம்' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "கோவிலில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு பாரம்பரிய சின்னங்கள் ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தினசரி பூஜை, திருவிழாக்களை நடத்தும் உரிமை பொது தீட்சிதர்களுக்கே உள்ளது தொடரும் எனவும் கோவிலில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளுக்கு மாறாகச் செயல்படாமல் பூஜை மற்றும் திருவிழாக்களை நடத்துவது அவர்களுக்கு உரிய தனிப்பட்ட உரிமை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கோவில் நிர்வாகத்தில் முறைகேடு இருப்பதால் அரசு தலையிடலாம் எனக் கூறியுள்ள நீதிபதிகள், ''அதைக் காரணமாக வைத்துக்கொண்டு நிரந்தரமாக அரசின் மேற்பார்வையில் வைத்திருக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டம் மதப் பிரிவினருக்கு வழங்கியுள்ள நிர்வாக உரிமைக்கு எதிரானது'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றம் முன்வைத்த 3 கேள்வி-பதில்கள்

வழக்கில் மூன்று கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

முதலாவது, தமிழ்நாடு அரசு கனகசபை தரிசனத்தை அனுமதித்து பிறப்பித்த அரசாணை, பொது தீட்சிதர்களின் அரசியலமைப்பு உரிமையை மீறுவதற்காக பிறப்பிக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பி, 'இல்லை' எனப் பதில் அளித்துள்ளது.

அடுத்து, 'பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் கோவிலின் பழமையான கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' எனப் பதில் அளித்துள்ளது.

மூன்றாவதாக, 'கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கு கணக்குகள் பராமரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'இல்லை' எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்று கோவிலின் பமையான பெருமையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு தொடர்பாக பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்டரீதியாக சில ஆலோசனைகளைப் பெற வேண்டியுள்ளது. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஊடகங்களிடம் கருத்து கூற விரும்பவில்லை," என்று மட்டும் பதில் அளித்தார்.

'வேறு ஒருவர் நிர்வாகம் செய்ய முடியாது' - டி.ஆர்.ரமேஷ்

வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவருமான டி.ஆர்.ரமேஷிடம் பிபிசி தமிழ் பேசியது.

"என்னைப் பொறுத்தவரையில் 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாக தற்போதைய தீர்ப்பு உள்ளது. அதன்படி, தீட்சிதர்கள் தனி மதப்பிரிவினர் (Denomination) வரிசையில் வருகின்றனர். அவர்களின் கோவிலை அரசோ, வேறு ஒருவரோ நிர்வாகம் செய்ய முடியாது," என்கிறார் டி.ஆர்.ரமேஷ்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் பொது தீட்சிதர்களின் நிர்வாக செயல்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, "நிர்வாகத்தில் என்ன தவறுகள் நடந்தன எனச் சொல்லப்படவில்லை. பழமையான கோவிலில் புதிய கட்டுமானங்களை செய்துள்ளனர் எனக் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது" என்கிறார்.

''அரசின் பாரம்பரிய சின்ன ஆணையம் கூறும் திருத்தங்களை செய்ய உள்ளதாக தீட்சிதர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தற்போது அமைக்கப்பட்ட குழுவில் தொல்லியல் நிபுணர்கள் ஒருவரும் இல்லை" எனக் கூறுகிறார்.

"கோவிலில் கடவுளுக்கு முன்பாக உள்ள இடம் அர்த்த மண்டபம் எனப்படுகிறது. இங்கு எல்லோரும் சென்று வழிபடுவது பெரும்பாலான கோவில்களில் இல்லை" எனக் கூறுகிறார் டி.ஆர்.ரமேஷ்.

"சிதம்பரத்தில் மட்டும் கனகசபையின் மீது யார் வேண்டுமானாலும் ஏறி தரிசனம் செய்யலாம் என அரசாணை வெளியிடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை," என அவர் கூறுகிறார்.

'இதுவே முதல்முறை' - சத்தியவேல் முருகனார்

இதற்கு மாற்றான கருத்தை முன்வைக்கிறார் சைவ சமய அறிஞர் சத்தியவேல் முருகனார். சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பாக கடந்த காலங்களில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார்.

"நீதிமன்ற தீர்ப்பில் தீட்சிதர்களின் முறைகேடுகளைப் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. பழமையான கோவிலில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது. ஆனால், இவர்கள் கட்டடங்களைக் கட்டியுள்ளது தெளிவாக தெரிந்துவிட்டது," என்கிறார்.

"முறைகேட்டுக்காகவே தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதுவரை யாரும் இந்த விவகாரத்தைக் கண்டுகொண்டது இல்லை," எனவும் அவர் தெரிவித்தார்.

தீட்சிதர்கள் தொடர்பாக நீண்டகாலம் நீடிக்கும் விவகாரம் முடிவுக்கு வருவதற்கு இந்தத் தீர்ப்பு உதாரணமாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார், சத்தியவேல் முருகனார்.

"தங்களை தனிப் பிரிவினர் என தீட்சிதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளுக்கு கோவில் எப்போது வந்தது என்பது குறித்து எந்த ஆதாரங்களும் வழக்கின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டதில்லை" என்கிறார் அவர்.

"உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதைப் பொறுத்தே இதன் அடுத்தகட்டம் அமையும்" எனக் கூறுகிறார் சத்தியவேல் முருகனார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு