இதய அடைப்பு வந்தாலே ஸ்டென்ட் வைப்பது கட்டாயமா? மருத்துவர் விளக்கம்
இரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்படும் அனைவருக்கும் உடனடியாக 'ஸ்டென்ட்' வைப்பது அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அறிகுறிகள் ஏதுமின்றி லேசான அடைப்புகள் உள்ளவர்கள் அல்லது சிறிய இரத்த நாளங்களில் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்துகளின் மூலமே சிகிச்சை அளிக்க முடியும்.
அரசு மருத்துவரும் இதயவியல் துறையின் மூத்த பேராசிரியருமான ஜஸ்டின் பால், "ஒருவருக்கு தீவிர பாதிப்பு இருக்கும்போது, கண்டிப்பாக ஸ்டன்ட் பொருத்தப்படும். அவர் உயிர் பிழைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள், அவருக்கு இருக்கும் வலி உள்ளிட்ட அறிகுறிகள் குறைய சாத்தியக் கூறுகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்" என்றார்.
மருந்துகள் எடுத்தும் அறிகுறிகள் தொடர்ந்தாலோ, இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டாலோ ஆஞ்சியோபிளாஸ்டி பரிசீலிக்கப்படலாம்.
அடைப்பு இருப்பது மட்டும் ஏன் ஸ்டன்ட் தேவை என்பதைக் குறிக்காது?
ஒருவருக்கு அடைப்பு இருப்பதாலேயே ஸ்டன்ட் பொருத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்கிறார் அரசு மருத்துவரும் இதயவியல் மூத்த பேராசிரியருமான ஜஸ்டின் பால்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரிந்தாலும், மருத்துவர் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் தேட வேண்டும்:
- அடைப்பு எவ்வளவு தீவிரமானது?
- அது உண்மையில் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறதா?
- நோயாளிக்கு அறிகுறிகளை ஏற்படுத்துகிறதா?
இதய தசைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை உருவாக்குகிறதா?
"இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்த்த பிறகே ஸ்டென்ட் தேவைதானா என்பதை முடிவு செய்ய முடியும். அடைப்பு எந்த இடத்தில் உள்ளது, பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் உயிரோட்டமுள்ள தசைகள் எங்கு எவ்வளவு உள்ளன, ஸ்டன்ட் பொருத்துவதால் நோயாளிக்கு உண்மையிலேயே ஏதாவது முன்னேற்றம் இருக்குமா என்று ஆராய்ந்துதான் ஸ்டன்ட் பொருத்த வேண்டும்" என்கிறார் மருத்துவர் ஜஸ்டின் பால்.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இதயவியல் மருத்துவர் முத்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "எப்படி முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை உடனே சரி செய்ய வேண்டுமோ, அதே போல இதயத்துக்கு ரத்த ஓட்டம் வழங்கும் முக்கிய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்டன்ட் பொருத்துவது நோயாளியின் நிலையைப் பொருத்து அவசியமாகும். ஆனால் ரத்த நாளங்களின் இறுதி பகுதிகளில் அடைப்பு இருந்தாலோ, பிரதான ரத்த நாளங்கள் அல்லாமல் பிறவற்றில் இருந்தாலோ ஸ்டன்ட் பொருத்தும் அவசியம் பெரும்பாலும் இருக்காது. அவற்றை மருந்துகள் மூலமே சமாளிக்க முடியும்" என்கிறார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



