நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓராசிரியர் பள்ளிகள் - தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?
- எழுதியவர், பவன் காந்த் திகவள்ளி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஆந்திர பிரதேசத்தின் தொலைதூர பழங்குடிக் கிராமம் ஒன்றில் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 41 குழந்தைகளுக்கான ஒரே ஆசிரியராக உள்ளார். ஆனால் அவரது பொறுப்புகள் கற்பித்தலுடன் மட்டுமே நின்றுவிடவில்லை.
"பள்ளிப் பராமரிப்பு, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மதிய உணவுத் திட்ட மேலாண்மை போன்ற நிர்வாகப் பணிகளையும் நான் கவனிக்கிறேன். மாணவர்களுக்கு கற்பிக்கப் போதுமான நேரமே கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கும் விஷயத்தில் முழுமையாக நியாயம் செய்ய முடியாமல் உள்ளது" என்று ரமேஷ் பிபிசி தெலுங்குவிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகத் தனது பெயரை வெளியிட வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டதால் இந்தக் கட்டுரையில் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சரியாகக் கற்பிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் ஏமாற்ற உணர்வும், அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான அச்சமும், இந்தியாவின் ஓராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களிடையே பொதுவாகக் காணப்பட்டது.
கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் பிளஸ் அமைப்பு (UDISE+) 2025-26 அறிக்கையின்படி, நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மாநிலங்களிலேயே, 16,000-க்கும் அதிகமான ஓராசிரியர் பள்ளிகளுடன் ஆந்திர பிரதேசம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
UDISE+ தரவுகள், 2022-23 முதல் இந்தியாவில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதைக் காட்டுகின்றன. இந்தக் காலகட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை 1.18 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் இருந்து சுமார் 1.01 லட்சமாகக் குறைந்துள்ளது.
ஆனால், இதை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதுவதில் நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
"இந்தக் குறையும் போக்கு, பள்ளிகள் மேம்பட்ட வசதிகளுடனும் போதுமான ஆசிரியர்களுடனும் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதைக் காட்டாது. முக்கியமாக, அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படுவதாலோ அல்லது மூடப்படுவதாலோ இந்த நிலை ஏற்பட்டுள்ளது," என்று இந்தியாவின் கல்வி உரிமையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் குடிமை அமைப்புகள் மற்றும் அடித்தள அமைப்புகளின் கூட்டமைப்பான கல்வி உரிமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மித்ரா ரஞ்சன் கூறுகிறார்.
தான் கற்பிக்கும் ஐந்து வகுப்புகளுக்கும் தினமும் தலா நான்கு பாடவேளைகள் இருக்க வேண்டும் என்று ரமேஷ் கூறுகிறார். "அதாவது, ஒரு நாளில் சுமார் 20 பாடவேளைகள் இருக்க வேண்டும். ஆனால் மொத்தமாக ஐந்து அல்லது ஆறு பாடவேளைகளுக்கு மேல் எங்களால் நடத்த முடியவில்லை."
இருப்பினும், பாடவேளைகள் குறைவாக இருப்பது பணிச்சுமை குறைவாக இருப்பதைக் குறிக்காது. நிர்வாகப் பணிகள் தொடர்ந்து இருப்பதால், ரமேஷ் போன்ற ஆசிரியர்கள் எப்போதும் பணியில் மூழ்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஜார்க்கண்டின் லாதேஹார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியரான ஷ்யாம்தேவ் ஓராவோனும் இதேபோன்ற சூழ்நிலையை விவரிக்கிறார். லாதேஹாரில் உள்ள ஒரு பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 111 மாணவர்களுக்கு அவர்தான் ஒரே ஆசிரியர்.
"பள்ளியை நிர்வகித்தும் பாடம் நடத்தியும் கொண்டிருக்கும் ஒரே ஆசிரியராக இருப்பதால், எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் விடுப்பு எடுக்க முடியாது. பல மாணவர்கள் என்னைச் சார்ந்து இருக்கிறார்கள். நான் நோய்வாய்ப்பட்டாலும், எப்படி விடுப்பு எடுக்க முடியும்?" என்று ஷ்யாம்தேவ் பிபிசி ஹிந்திக்கு தெரிவித்தார்.
இந்தியாவில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில், ஆந்திர பிரதேசத்திற்கு அடுத்ததாக ஜார்க்கண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் 4.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்கின்றனர். UDISE+ அறிக்கைப்படி, ஜார்க்கண்டில் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் இதேபோன்ற இக்கட்டான நிலையை விவரிக்கிறார்.
"பல ஆண்டுகளாக நான் தனியாகவே பள்ளியை நடத்தி வருகிறேன். நிர்வாகப் பணிகளையும், சில நேரங்களில் தேர்தல் தொடர்பான பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாமல் கற்பித்தல் மற்றும் கல்வியின் தரத்தைப் பாதிக்கிறது," என்கிறார் அவர்.
UDISE+ அறிக்கையின்படி, ராஜஸ்தானில் உள்ள 7,200 ஓராசிரியர் பள்ளிகளில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் தனிமை குறித்துப் புகார் தெரிவித்தார். "தொலைதூர பகுதிகளில், ஒரு கோப்பைத் தேநீரைக் கூட யாருடனாவது பகிர்ந்து குடிக்க ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம். ஒரே ஆசிரியராக இருக்கும் பள்ளியில் வேலை செய்வதைவிட எங்களுக்குப் பெரிய தண்டனை எதுவும் இல்லை," என்று அந்த ஆசிரியர் கூறினார்.
பிபிசியிடம் பேசிய ஆந்திர பிரதேச பள்ளிக் கல்வி ஆணையர் தமீம் அன்சாரியா, ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகுந்த பணிச்சுமையை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்டார்.
"ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கிடைக்கும் பின்னூட்டங்கள் மூலம், நாங்கள் கல்விசாராத பணிச்சுமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு சுமையாக உள்ளது என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது குறித்து அன்சாரியா கூறுகையில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார்.
"ஆசிரியர் பணியாளர்களில் உள்ள பற்றாக்குறைகளை அடையாளம் கண்டுள்ளோம். காலிப் பணியிடங்கள் பல கட்டங்களாக நிரப்பப்படும். சமீபத்தில் சுமார் 16,000 ஆசிரியர்கள் [2025 அக்டோபரில்] நியமிக்கப்பட்டுள்ளனர். இது மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க உதவும்," என்று அவர் கூறினார்.
ஆனால், ஆசிரியர்கள் மீதுள்ள பணிச்சுமை மட்டுமே முழு பிரச்னையை வெளிப்படுத்துவதில்லை. ஓராசிரியர் பள்ளிகளின் இன்னும் கவலைக்கிடமான அம்சம் என்னவெனில், அவை பெரும்பாலும் சமூக ரீதியாக பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
"ஓராசிரியர் பள்ளிகள், கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள், பழங்குடியினர் பகுதிகள் மற்றும் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் அளவுக்கு அதிகமாகக் குவிந்துள்ளன," என்று யுனிசெஃப் இந்தியாவின் கல்வித் துறை தலைவர் சாத்னா பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த அம்சம், அரசாங்கத்தின் தீவிர அக்கறை பற்றாக்குறையையும், அதன் நிர்வாகத்தில் நிலவும் "பாகுபாடான அணுகுமுறையையும்" பிரதிபலிப்பதாக வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஜான் ட்ரேஸ் கூறுகிறார்.
"பல ஆசிரியர்கள் தலித் மற்றும் பழங்குடியினர் சமூகங்களுக்குச் சென்று கற்பிக்கத் தயக்கம் காட்டுவதாக," என்று ட்ரேஸ் கூறினார். "எனவே, இந்தியாவிலுள்ள ஓராசிரியர் பள்ளிகளின் கடுமையான தாக்கத்தை சமூகரீதியாகப் பின்தங்கிய பிரிவினரும், தொலைதூர பழங்குடியினர் சமூகங்களும் அதிகமாக சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்கிறார் அவர்.
தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பணியாற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலரான சன்னக்கி முன்னா, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வித் தேர்வுகள் எவ்வளவு குறைவாக உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.
"ஆந்திர பிரதேசத்தின் துறைமுக நகரமான மச்சிலிபட்டினத்தில், மீனவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஒரே ஆசிரியரால் நடத்தப்படும் பள்ளியைச் சார்ந்திருக்கின்றனர். அதேபோல, ராஜமுந்திரி அருகே கோதாவரி நதியின் தீவுப் பகுதிகளிலும், திருப்பதி அருகிலுள்ள ஸ்ரீகாளஹஸ்தியிலும், தலித் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஓராசிரியர் பள்ளிகளைத் தவிர வேறு மாற்று வாய்ப்புகள் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
"சமூக ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் என்பதற்காகப் பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வர விரும்பாததையோ அல்லது அவர்களுக்கு கற்பிக்கத் தயக்கம் காட்டுவதையோ நான் பார்த்திருக்கிறேன். இது தெளிவான பாகுபாடாகக் கருதப்பட வேண்டும்," என்று சன்னக்கி முன்னா பிபிசியிடம் தெரிவித்தார்.
பழங்குடியினர் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, பள்ளிகளை அணுகுவதில் உள்ள சிரமம் இந்தப் பிரச்னையை மேலும் மோசமாக்குவதாக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நகர்ப்புறக் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கலாம். ஆனால் தொலைதூர பழங்குடியினர் பகுதிகளில் அந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. இது பள்ளிகளின் புவியியல் அமைவிடத்தின் அடிப்படையில் உருவாகும் மற்றொரு வகை பாகுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.
சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் விரும்பவில்லை என்ற தகவல் அரசாங்கத்திடம் இல்லை என்று தமீம் அன்சாரியா தெரிவித்தார்.
"ஆனால் நடைமுறையில் அத்தகைய நிலைமை இருப்பதாகத் தெரிய வந்தால், அதை நிச்சயமாக ஆய்வு செய்து, பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவோம்," என்று அவர் கூறினார்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரே ஆசிரியருடன் செயல்பட்டு வரும் நிலையில், அதிக அளவில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.
நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அரசு, ஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களைப் பணியமர்த்துவதும் மாநில அரசுகளின் பொறுப்பு எனத் தொடர்ந்து கூறி வந்துள்ளது. இருப்பினும், நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஓர் அறிக்கை, நாடு முழுவதும் சுமார் 9.83 லட்சம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை 2025 ஆகஸ்டில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கல்வி உரிமை மன்றத்தின் மித்ரா ரஞ்சன், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.
"தொடர்புடைய மாநில அரசுகள் இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
தற்போதைய சூழலில், இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்னும் தனி ஒருவராகவே கற்பித்தலையும் பிற பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
தனது பள்ளிக்குத் திரும்பிய ரமேஷ், தன்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவது எது என்பதை விளக்குகிறார்.
"ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், அழகான புன்னகையுடன் குழந்தைகள் வகுப்பறைகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்காக, எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும்கூட, பள்ளிக்கு வராமல் ஒரு நாளைக்கூட தவறவிடாமல் இருக்க முயல்கிறேன்," என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?
UDISE+ தரவுகளின்படி, தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2022-23ஆம் கல்வியாண்டில் 2,788ஆக இருந்த ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 2,758ஆக சற்று குறைந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2024-25ஆம் கல்வியாண்டில் இதுவே 3,671ஆகவும், 2025-26ஆம் கல்வியாண்டில் 3,957ஆகவும் அதிகரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு