நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
'தோள்பட்டை எலும்பில் துளை'; நியண்டர்தால்கள் முன்பு கருதப்பட்டதை விட அதிக வன்முறை குணம் கொண்டவர்களா? ஆய்வில் புதிய தகவல்
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
75,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நியாண்டர்தால் மனிதன் ஒருவன், கூர்மையாக்கப்பட்ட மர ஈட்டியால் மார்பில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இராக்கிய குர்திஸ்தானில் உள்ள குகை ஒன்றில் அவனது தோள்பட்டை எலும்பில் காணப்பட்ட 15 மி.மீ துளையானது, இத்தகைய ஆயுதம் கொண்டு நடத்தப்பட்ட கொடிய வன்முறையின் முதல் சான்றாக இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
காயத்தின் கோணம் மற்றும் பிற சான்றுகள், ஈட்டி அந்த நபரின் மார்பகத்துக்குள் நுழைந்து அவரது உடலைக் கடந்து சென்றதை ஆய்வாளர்களுக்கு உணர்த்துகின்றன. இது நுரையீரலையும் முக்கிய ரத்த நாளங்களையும் சேதப்படுத்தியிருக்கக்கூடும் என்றும், பின்னர் இடது தோள்பட்டை எலும்பின் வழியாக வெளியேறி கிட்டத்தட்ட மிகச் சரியான வட்ட வடிவிலான துளையை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
நியாண்டர்தால் சமூகங்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமான வன்முறைகளை எதிர்கொண்டன என்பதைச் சுட்டிக்கட்டும் புதிய சான்றுகளின் வரிசையில், இந்த ஆராய்ச்சியின் மூலம் வழங்கப்பட்டுள்ள சான்றும் சமீபத்திய ஒன்றாகும்.
நியாண்டர்தால்கள் என்பவை சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு தனித்துவமான மனித இனமாகும். அவர்கள் ஐரோப்பா மற்றும் மேற்கு, மத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளில் வசித்து வந்தனர்; சில காலங்களில் நமது இனமான ஹோமோ சேப்பியன்களுடன் இணைந்து வாழ்ந்தனர்.
இடது தோள்பட்டை எலும்புடன் சேர்த்து, வலது கை, மூன்று விலா எலும்புகள் மற்றும் சில பற்களும் கண்டெடுக்கப்பட்டன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையைச் சேர்ந்தவரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான எம்மா பொமெராயின் கூற்றுப்படி, தோள்பட்டை எலும்பில் உள்ள இந்தத் துளை மர ஈட்டியால் ஏற்பட்ட "கொல்லும் வகையிலான தனிநபர் வன்முறையின்" மிகப் பழமையான சான்றாக இருக்கக்கூடும்.
"இந்த ஆபத்தான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், இதயத்தை இலக்காகக் கொண்டதாகவும் இருந்திருக்கலாம்" என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
எதிராளியின் தாக்குதலா?
அந்தத் தொல்பொருள் ஆய்வாளர்கள், எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயரைக் கொண்டு அதற்கு 'ஷானிசார் Z' என்று பெயரிட்டனர். 1950களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் குறைந்தது 10 நியாண்டர்தால் மனிதர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொல்பொருள் ஆய்வாளர் பொமெராயின் கூற்றுப்படி, வரலாற்றுக்கு முந்தைய மத்திய கிழக்குப் பகுதியில் கூர்மையாக்கப்பட்ட மர ஈட்டிகள் பயன்படுத்தப்பட்டதற்கான மிக முந்தைய சான்றாக இந்தக் காயம் நம்பப்படுகிறது.
"இது இயற்கையாக ஏற்படும் எலும்பு முறிவு அல்ல, ஏனெனில் இது மிகவும் வட்டமான வடிவத்தில் உள்ளது" என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், தனிநபர் வன்முறைதான் இதற்குக் காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இந்தக் காயம் நண்பர்களின் தவறுதலான தாக்குதலால் அல்லது வேட்டையாடும்போது நடந்த விபத்தால் கூட ஏற்பட்டிருக்கலாம்.
எப்படியிருப்பினும், இந்த ஆய்வில் ஈடுபடாத லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர், பிபிசி செய்தியிடம் கூறுகையில், ஒரு எதிராளியின் தாக்குதலே மிகவும் சாத்தியமான விளக்கமாக இருக்கக்கூடும் என்றார்.
"இது வேட்டையாடும்போது நடந்த விபத்தா அல்லது மனிதர்களுக்கு இடையிலான வன்முறையின் விளைவா என்பதை ஆய்வாளர்கள் இன்னும் தெளிவாகக் கூறவில்லை. இருப்பினும், காயத்தின் இருப்பிடம் மற்றும் அளவைக் கருத்தில் கொள்ளும்போது, வன்முறைக்கு அதிக வாய்ப்புள்ளது என்று நான் கருதுகிறேன் " என்றார் அவர்.
இந்தக் கண்டுபிடிப்பு, அதே குகையில் 1950களில் செய்யப்பட்ட முந்தைய கண்டுபிடிப்பை நினைவூட்டுகிறது.
அந்த எச்சங்கள் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மற்றொரு நியண்டர்தாலுக்குச் சொந்தமானவை. அதன் விலா எலும்புகளில் ஓரளவு ஆறிய காயத்தின் அடையாளங்கள் இருந்தன. கற்கள் முனையிடப்பட்ட ஈட்டியால் இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நியண்டர்தால்கள் வேட்டையாடும்போது கூட்டாளிகளால் காயப்படுத்தப்பட்டார்களா அல்லது எதிராளிகளால் கொல்லப்பட்டார்களா என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது.
எப்படியிருப்பினும், மனிதர்களுக்கு இடையிலான வன்முறை என்பது தற்போதைய அறிவியல் ஒருமித்த கருத்து தெரிவிப்பதை விட மிகவும் பொதுவானதாகவும், பழமையானதாகவும் இருந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றைச் சுட்டிக்காட்டும் சான்றுகளின் எண்ணிக்கையை இவை மேலும் அதிகரிக்கின்றன.
"துரதிர்ஷ்டவசமாக, பெருகிவரும் சான்றுகள் மனித வரலாற்றின் தொன்மைக் காலத்தில் இருந்தே தனிநபர் வன்முறை ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றன என்று நான் நம்புகிறேன்" என்று ஸ்ட்ரிங்கர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
எலும்புக் குழி
இதற்கான முக்கிய சான்றுகளில் ஒன்று, வடக்கு ஸ்பெயினில் உள்ள "சிமா டி லாஸ் உசோர்ஸ்" (Sima de los Huesos - எலும்புக் குழி) எனப்படும் தொல்லியல் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழமையான நியண்டர்தால் மண்டை ஓடுகள் குறித்து 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வாகும்.
சுமார் 4,30,000 ஆண்டுகளுக்கு முன்பே கொடூரமான வன்முறைச் செயல்கள் நடைபெற்றுள்ளதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் 20 நபர்களின் மண்டை ஓடுகளில் 57 காயங்களைக் கண்டறிந்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு உயிருக்கு ஆபத்தான மண்டை ஓட்டு எலும்பு முறிவுகளும், ஆறு பேருக்கு அவர்களின் தலையின் இடது பின்பகுதியில் ஒத்த துளைக் காயங்களும் இருந்தன.
இந்தக் காயங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியான இடத்தில் மீண்டும் மீண்டும் காணப்பட்டதால், இவை விபத்துகளால் ஏற்பட்டவை அல்ல மாறாக திட்டமிட்ட தாக்குதல்களின் விளைவாகவே ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். ஒரு மண்டை ஓட்டில், ஒரே கருவியால் ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடிய இரண்டு காயங்கள் காணப்பட்டன.
'சிமா டி லாஸ் உசோர்ஸ்' தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புகள், இந்தப் பிரிவைச் சேர்ந்த அனைவரும் வழக்கமாகவே வன்முறைப் போக்குடையவர்கள் என்பதை நிரூபிக்கவில்லை; மாறாக, நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவர்களிடையே தொடர்ச்சியான கொலைகள் நிகழ்ந்ததற்கான வலுவான சான்றுகளை அவை வழங்குகின்றன.
பல தசாப்தங்களாக, பல தொல்லியல் ஆய்வாளர்கள் முறையான போர்களின் தொடக்கத்தை விவசாயத்துடன் இணைத்துப் பேசினர்; அதாவது மனிதர்கள் நிரந்தரக் குடியேற்றங்களில் வாழத் தொடங்கி, நிலம், கால்நடைகள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் போட்டியிடத் தொடங்கிய காலகட்டத்துடன் இணைத்தனர்.
இருப்பினும், முந்தைய காலத்து வேட்டைக்காரர்கள் மற்றும் அவர்களை விட முந்தைய மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகள், தனிநபர் கொலைகள் விவசாயம் தோன்றுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே இருந்தன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
தற்போதைய அறிவியல் விவாதமானது, இத்தகைய வன்முறைகளின் இடைவெளி என்னவாக இருந்தது என்பது குறித்தும், எப்போது தனிப்பட்ட தாக்குதல்கள் குழுக்களுக்கிடையேயான முறையான மோதல்களாகவும் போர்களாகவும் மாறின என்பது குறித்தும் சுழன்றுகொண்டிருக்கிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு