'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 .

இவர் பாடிய பாடல்களில், பொற்காலம் (1997) திரைப்படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது பெற்றார்.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், சிங்கப்பூர் முன்னாள் அதிபருமான செல்லப்பன் ராமநாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வில் (2016), தேவா இசையில் கிருஷ்ணராஜ் பாடிய 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேவா இசையமைத்து திரையில் வெளியாகாத, 'அதிகாலை சுபவேளை' திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ், 90களில் தேவாவின் இசையில் பாடிய 'வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா', '​காத்தடிக்குது காத்தடிக்குது', 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', போன்ற பாடல்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தள பதிவு மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி இரங்கல்

பாடகர் கிருஷ்ணராஜின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் நாளை (அக்டோபர் 23) நடைபெறவுள்ளது.

பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"இசையமைப்பாளர் தேவா அவர்களின் குழுவில் ஒருவராக பணியாற்றி, அவரால் அறிமுகம் செய்யப்பட்டு புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாள்களில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

பாடகர் கிருஷ்ணராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார், "அவர் பாடி, நான் நடித்த 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' திரைப்படத்தின் 'பாசமுள்ள சூரியனே', 'சிம்மராசி' திரைப்படத்தின் 'தாயே திரிசூலி', 'மூவேந்தர்' திரைப்படத்தின் 'சோக்கு சுந்தரி', 'நட்புக்காக' திரைப்படத்தின் 'கருடா கருடா', 'மீசைக்கார நண்பா' மற்றும் 'பெரிய கவுண்டர் பொண்ணு' திரைப்படத்தின் 'நாலு வார்த்தை பேசலையே' பாடல்கள் மனதிற்கு நெருக்கமானவை." என தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"தனது குரல் வளத்தாலும், உணர்வுப்பூர்வமான பாடல்களாலும் இசை ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும் அவரது மறைவு இசையுலகிற்குப் பேரிழப்பாகும்." என அவர் பதிவிட்டுள்ளார்.

பாடகர் கிருஷ்ணராஜின் பிரபலமான 8 பாடல்கள்

கிருஷ்ணராஜ் பாடிய பெரும்பாலான திரைப்படப் பாடல்கள் தேவா இசையமைத்ததே. அதேசமயம், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், யுவன் ஷங்கர் ராஜா என பிற திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடியுள்ளார்.

சென்னை, அரசு இசைக் கல்லூரியில் (1980-1983) கர்நாடக சங்கீதம் பயின்ற இவர், திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு சேலத்தில் நாடகங்களில் பாடல்களை பாடிவந்தவர்.

இசையமைப்பாளர் ஆர். ராமானுஜத்திடம் சில காலம் உதவியாளராக இருந்த கிருஷ்ணராஜ், 'வானொலி விளம்பரங்களிலும் தான் பாடியுள்ளதாகவும்' ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

பல திரைப்படங்களில் 'டிராக் பாடகர்'-ஆக இவர் பணியாற்றியுள்ளார். 'டிராக் பாடல்' என்பது ஒரு திரைப்படப் பாடல் இறுதி வடிவம் பெறுவதற்கு முன்பான தற்காலிக பாடல்.

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா (காதல் கோட்டை, 1996)

காதல் கோட்டை திரைப்படத்திற்கு முன்பே பல திரைப்பட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியிருந்தாலும், 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்பாடல் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த கிருஷ்ணராஜ், "தேவா இசையில் பல ஆன்மீக பாடல்களை பாடியுள்ளேன். 'காதல் கோட்டை' திரைப்படத்தில் என்னை கண்டிப்பாக பாட வைக்க வேண்டும் என்பதில் இயக்குநர் அகத்தியனும் தேவாவும் உறுதியாக இருந்தனர். 'வெள்ளரிக்கா' பாடலின் மெட்டு, 'தெருக்கூத்து' இசையை ஒத்தது."

"அப்போது தமிழ்நாடு முழுவதும் வானொலிகளில் இந்தப் பாடல் ஒலித்தது. என் குரலை பல தரப்பினரிடமும் அப்பாடல் கொண்டு சேர்த்தது" எனக் கூறியிருந்தார்.

காத்து அடிக்குது..காத்து அடிக்குது (நினைவிருக்கும் வரை, 1999)

தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ் பாடிய மற்றொரு ஹிட் பாடல். பிரபு தேவாவின் நடிப்பு மற்றும் நடனத்தில் இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போதும் 'தேவா ஹிட்ஸ்' பட்டியலில் இப்பாடல் தவறாமல் இடம்பெறும். இசையமைப்பாளர் சபேஷ் உடன் இப்பாடலை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார்.

இதே திரைப்படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய, 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' பாடலும் இன்றுவரை பல இடங்களில் ஒலிக்கிறது. பாடகர் மனோவுடன் இதை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார்.

'தஞ்சாவூர் மண்ணு எடுத்து' (பொற்காலம், 1997)

"தஞ்சாவூர் மண்ணு எடுத்து..நான் பாட வேண்டியது அல்ல. நாட்டுப்புறப் பாடகர் ஒருவரை தான் இயக்குநர் சேரன் முடிவு செய்திருந்தார். ஆனால், படப்பிடிப்பிற்காக ஒரு தற்காலிக ட்ராக்கை நான் பாடியிருந்தேன். அனைவருக்கும் அது பிடித்துப் போக, இயக்குநர் சேரன் தன் முடிவை மாற்றிக்கொண்டார்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் கிருஷ்ணராஜ்.

இப்பாடல், தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், சிங்கப்பூர் முன்னாள் அதிபருமான செல்லப்பன் ராமநாதன் இப்பாடல் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என தன்னிடம் குறிப்பிட்டதாக, இப்பாடலை எழுதிய வைரமுத்து ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

"எஸ்.ஆர். நாதனை சந்தித்தபோது, 'தஞ்சாவூரு மண்ண எடுத்து … எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் பூர்வீகம் தமிழ்நாடு. மூதாதையரின் காலத்தில் இடம்பெயர்ந்தோம். புலம்பெயர்ந்த தமிழன் நான். ஆனால், என் சொந்த ஊர் எது என்று எனக்குத் தெரியாது. இந்தப் பாடலை கேட்கும்போது இந்த பாடலில் உள்ள ஊரில் ஏதாவது ஒரு ஊர் என் பூர்வீகமாக இருக்காதா எனும் ஏக்கம் ஏற்படுகிறது' என்று கூறினார்" என வைரமுத்து தெரிவித்திருந்தார்.

தேவா இசையில் கிருஷ்ணராஜ் பாடிய 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெற்றார் கிருஷ்ணராஜ்.

'நீ பார்த்துட்டு போனாலும்..பாக்காம போனாலும்' (பார்வை ஒன்றே போதுமே, 2001)

குணால், மோனல், கரண் நடித்த 'பார்வை ஒன்றே போதுமே' அதன் பாடல்களுக்காகவே பிரபலமான ஒரு திரைப்படம். 'துளி…துளியாய்', 'திருடிய இதயத்தைத் திருப்பி கொடுத்துவிடு', 'அசைந்தாடும் காற்றுக்கு', 'காதல் பண்ணாதீங்க' என இசையமைப்பாளர் பரணியின் அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இப்போதும் கூட அவை ரசிகர்களால் விரும்பப்படுகின்றன.

இதில் 'காதல் பண்ணாதீங்க', 'நீ பார்த்துட்டு போனாலும்' என இரு ஹிட் பாடல்களை பாடியிருந்தார் கிருஷ்ணராஜ். 'நீ பார்த்துட்டு போனாலும்' பாடலில் ஒரு கதாபாத்திரம் பெண்களை துரத்தி, பின்தொடர்ந்து பாடுவது போல காட்சிகளும், வரிகளும் அமைந்திருந்தன.

"நீ பார்த்துட்டு போனாலும்' பாடல்களுக்காக பல பெண்களிடம் நான் திட்டு வாங்கினேன். ஆனால், பாடலை பாடுவது மட்டும் தான் என் வேலை. அப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது" என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் கிருஷ்ணராஜ்.

'அய்யய்யோ..' (பருத்திவீரன், 2007)

அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த 'பருத்திவீரன்' திரைப்படத்தில், ஸ்ரேயா கோஷல், மாணிக்க விநாயகத்தோடு இணைந்து கிருஷ்ணராஜ் பாடிய இப்பாடல், அவரது வழக்கமான துள்ளல் பாடல்களில் இருந்து வேறுபட்டு ஒலித்தது.

'சண்டாளி உன் பாசத்தால..' என இப்போதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் ஒலிக்கும் இப்பாடல், கிருஷ்ணராஜ் பாடியது எனப் பலருக்கும் தெரியாது.

'ஆம்பளைக்கு பொம்பளைக்கும்…' (கழுகு, 2011)

யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகன் வரிகளில் பாடகர்கள் வேல்முருகன், சத்யனோடு இணைந்து இப்பாடலை மிகவும் ரசித்து, உற்சாகமாக பாடியிருந்தார் கிருஷ்ணராஜ்.

2011 காலகட்டத்தில் பல கல்லூரி காலை நிகழ்வுகளிலும், விழாக்களிலும் இப்பாடல் தவறாமல் ஒலித்தது. பலர் தங்களது 'ரிங்டோனாக' இப்பாடலை வைத்திருந்ததையும் காண முடிந்தது.

முன்னணி நட்சத்திரங்கள் இல்லாத 'கழுகு' திரைப்படத்திற்கு ஒரு அடையாளமாக இப்பாடல் மாறியது.

'மீசக்கார நண்பா' (நட்புக்காக, 1998)

தேவா இசையில், சரத்குமார், சிம்ரன், விஜயகுமார் நடித்த 'நட்புக்காக' திரைப்படத்தில் 'மீசைக்கார நண்பா' பாடலின் இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. பிரதான பாடலை தேவா பாடியிருப்பார்.

திரைப்படத்தின் இறுதியில், இரு முக்கிய கதாபாத்திரங்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் நட்பை எடுத்துரைக்கும் வகையில் பின்னணியில் ஒலிக்கும் 'மீசக்கார நண்பா' என்ற சோகப் பாடலை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார்.

'மீசக்கார நண்பா' பாடலின் இரண்டு வெர்ஷன்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

திரைப்படப் பாடல்கள் தவிர்த்து பல்வேறு ஆன்மீகப் பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார். குறிப்பாக, 'கேளுங்கள் தரப்படும்' என்ற கிறிஸ்துவ பாடல் மிகவும் பிரபலம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு