நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஹாரி புரூக் சாதனை இரட்டை சதம்: இங்கிலாந்து 429 ரன் குவித்தும் இலங்கையிடம் தோல்வி ஏன்?
- எழுதியவர், தினேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 ரன்கள் எடுப்பது ரசிகர்களால் வெற்றிக்கான ஸ்கோராக கருதப்படுகிறது. அதேபோல, இரட்டை சதமடித்தவர் இடம்பெற்ற அணி வெற்றி பெறும் என்பதே வரலாறாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு விஷயங்களும் இங்கிலாந்துக்கு கைகொடுக்கவில்லை.
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்றைய போட்டியில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங் சொர்க்கபுரியாக கருதப்படும் ராவல்பிண்டி மைதானத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்தபடி தொடக்கம் அமையவில்லை.
சரியான டைமிங் இன்றி தொடக்க வீரர் டக்கெட் தடுமாறிய நிலையில், மற்றொரு தொடக்க பேட்டர் பேண்டன் சிறப்பாக விளையாடினார். அவருடைய சில ஷாட்கள் முன்னாள் வீரர் ஜேசன் ராயை ஞாபகப்படுத்தின. கேப்டன் ஹாரி புரூக் களம் புகுந்த பிறகு ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. முதல் 24 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், களத்தில் செட்டில் ஆனதும் இலங்கைப் பந்துவீச்சை பதம்பார்க்க ஆரம்பித்தார்.
அதிவேக இரட்டை சதம் விளாசிய ஹாரி புரூக்
இலங்கைப் பந்துவீச்சாளர்களை அநாயசமாக எதிர்கொண்ட புரூக், மைதானத்தின் எல்லாத் திசைகளிலும் ரன்களைக் குவித்தார். 116 பந்துகளில் 202 ரன்கள் குவித்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து வீரரின் முந்தைய அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக இருந்தது.
வெறும் 114 பந்துகளில் இரட்டைச் சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் புரூக் படைத்தார். முன்னதாக, இந்திய கேப்டன் 117 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்ததே ஒருநாள் கிரிக்கெட்டின் அதிவேக இரட்டைச் சதமாக இருந்தது. 100 இல் இருந்து 200 ஐ எட்டுவதற்கு அவர் 39 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இது ஆடவர் கிரிக்கெட்டில் பதிவான 14 ஆவது இரட்டை சதமாகும்.
புரூக்கின் அதிரடிக்கு ஜோ ரூட்டும் டாம் பேண்டனும் துணை நின்றனர். ரூட் 66 பந்துகளில் 69 ரன்களும், பேண்டன் 51 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் வில் ஜாக்ஸ் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் விளாசினார். இதனால், இங்கிலாந்து 429 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது.
இலங்கை அணிக்கு ஏமாற்றமளித்த தொடக்கம்
430 ரன்கள் என்ற இமாலய இலக்கை கண்டு இலங்கை அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோதும் மனம் தளராமல் போராடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
பின்னர், அவிஷ்கா பெர்னாண்டோவும் பவன் ரத்நாயக்காவும் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் அவசரப்படாமல் ரன் சேர்த்ததுடன், கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளையும் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த இந்தக் கூட்டணி, இலங்கைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
83 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த நிலையில் அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரத்நாயகா இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். 106 பந்துகளில் 130 ரன்கள் எடுத்த அவர், இலங்கை அணியை வெற்றி இலக்கை நோக்கி மிடுக்குடன் அழைத்துச் சென்றார்.
நம்பிக்கையுடன் போராடிய ரத்நாயக்கா - ஷனகா ஜோடி
ரத்நாயக்கா ஆட்டமிழந்த பிறகு, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தசுன் ஷனகாவின் தோள்களில் இறங்கியது. வெற்றி மட்டுமே குறி என்று விளையாடிய அவர், 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 97 ரன்கள் குவித்தார். ரத்நாயக்கா, ஷனகா கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 79 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்தது. எந்த இலக்கும் சாத்தியமே என்ற நம்பிக்கையை இந்தக் கூட்டணி இலங்கை ரசிகர்கள் மனதில் விதைத்தது.
ஷனகா ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்துக்கு நம்பிக்கை துளிர்க்க, ஜனித் லியனகே இறுதிக்கட்டத்தில் ஆட்டத்தை மீண்டும் இலங்கைக்கு சாதகமாக திருப்பினார்.
ஜோஷ் டங் வீசிய கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது, இலங்கை ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இலங்கையின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டன. அசிதா பெர்னாண்டோ ஒரு ரன் எடுத்து லியனகேவுக்கு ஸ்ட்ரைக்கை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்த பந்திலேயே லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடித்த லியனகே, இலங்கைக்கு வரலாற்று வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இலங்கை அணி வரலாற்றுச் சாதனை
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அணிகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 438 ரன்களை சேஸ் செய்ததே இதுவரையிலான சாதனையாக உள்ளது.
9 ஓவர்களில் 103 ரன்களை வாரி இறைத்த சாம் கரண், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார். இரட்டை சதம் விளாசிய ஹாரி புரூக்கிற்கு கிடைக்காத ஆட்ட நாயகன் விருது, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற இலங்கையின் ரத்நாயக்காவுக்கு வழங்கப்பட்டது.
ராவல்பிண்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததும், இரவில் நிலவிய பனியின் தாக்கமும் இலங்கைக்கு சாதகமாக அமைந்தன.
93 பவுண்டரிகள், 30 சிக்ஸர்கள்
போட்டிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், வெற்றிக்கு உதவாத இரட்டை சதத்துக்கு மதிப்பில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.
மறுபுறம், இந்த வெற்றி தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
விக்கெட்டுகளை கையில் வைத்து, சரியான பார்ட்னர்ஷிப்புகளை அமைக்க முடிந்தால், எந்தவொரு இலக்கையும் எட்ட முடியும் என்பது நேற்றைய போட்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது. அதேபோல, ஒருநாள் கிரிக்கெட்டில் இனி எந்தவொரு ஸ்கோருமே பாதுகாப்பானது அல்ல என்பதையும் இந்த ஆட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் மொத்தம் 93 பவுண்டரிகள், 30 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 859 ரன்கள் குவிக்கப்பட்டன.
ஒருநாள் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் உண்டா?
ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 2027 உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட் இருப்பதே சந்தேகம்தான் என ஓய்வு பெற்ற இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சச்சின் டெண்டுல்கர் முன்னர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போது நினைவுகூரப்படுகின்றன. ஒவ்வோர் அணியின் 50 ஓவர்களையும் 25 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களாகப் பிரிக்க சச்சின் பரிந்துரைத்திருந்தார். இதன்மூலம், டாஸ், பனியின் தாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் ஓரணியை மட்டும் பாதிப்பதை தடுக்க முடியும் என வாதிட்டார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போது 2 பந்துகள் கொண்டுவரப்பட்டதோ, அப்போதே பந்துவீச்சாளர்களின் வாய்ப்புகள் பறிபோய்விட்டன என்கிறார் கிரிக்கெட் அனாலிஸ்ட் ஷ்யாம்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், " முன்பு டெஸ்டின் சுருக்க வடிவமாக இருந்த ஒருநாள் கிரிக்கெட், இன்று டி20 கிரிக்கெட்டின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமாக மாற்றப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் 270 ரன்கள் இலக்கை எட்டிப் பிடிப்பதே சாதனையாக கருதப்படும். ஆனால், இப்போது 400 ரன்கள் கூட எளிதாக சேஸ் செய்யப்படுகின்றன." என்று தெரிவித்தார்.
"பிட்ச்கள் அனைத்தும் கட்டாந்தரையாக மாற்றப்பட்டுவிட்டன. முன்னர் இன்னிங்ஸின் இறுதிக்கட்டத்தில் பிட்ச்சின் தன்மை மாறும். அப்போது பழைய பந்தில் வேகப்பந்து வீசாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். ஆனால், இன்று 100 ஓவர்களும் சிமெண்ட் தரைப் போலவே உள்ளன. இதனால் பந்து வீச்சாளர்களே இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது." என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு