இந்திய பயணத்தில் பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ அக்டோபர் 19 முதல் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை மும்பை வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ அக்டோபர் 19 முதல் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.

செவ்வாய்க்கிழமை மும்பையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அவர் சந்தித்தார்.

இந்தப் பயணத்தின்போது மார்கோ ரூபியோ சில ஊடகங்களுக்கும் நேர்காணல் அளித்தார். அப்போது முக்கியமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு நெருக்கமடைந்துள்ளது. இதுகுறித்தும் இந்திய ஊடகவியலாளர்கள் ரூபியோவிடம் கேள்வி எழுப்பினர்.

சிஎன்என் நியூஸ்18 செய்தி நிறுவனத்தின் ராகுல் ஜோஷி, மார்கோ ரூபியோவிடம், "பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து மற்றொரு கேள்வி. 2025-ஆம் ஆண்டு செனட்டராக இருந்தபோது, இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஊக்குவித்தால் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உதவியைக் குறைப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துவேன் என்று கூறியிருந்தீர்கள். உங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இந்தக் கொள்கையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?" என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ரூபியோ, "உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் அதை நாங்கள் எதிர்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் அளிக்கும் அனைவரையும், அனைத்து நாடுகளையும் எதிர்க்கிறோம்" என்றார்.

"நான் இப்போது செனட்டர் அல்ல; வெளியுறவுத் துறை செயலாளராக இருக்கிறேன். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு உள்ளது. இதற்காகப் பல்வேறு நாடுகளுடனான உறவுகளைப் பேண வேண்டியுள்ளது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ள நாடுகளுடனும் உறவுகளைப் பராமரிக்க வேண்டியிருக்கிறது.

பாகிஸ்தான் அத்தகைய நாடுகளில் ஒன்று. அதனுடனான உறவை நாம் தொடர்ந்து பேண வேண்டும். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. மேலும், அதன் புவியியல் அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையையும் தொடர்பையும் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்தியா இரான் உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளைப் பேணுகிறது. அந்நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து வருகிறது என ரூபியோ கூறினார்.

அதேபோல, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தான் முக்கியமான நாடு என்பதை மார்கோ ரூபியோ தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப அந்நாட்டுடன் உறவைத் தொடரும் என்பதையும் அவர் உணர்த்தியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ அக்டோபர் 19 முதல் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
படக்குறிப்பு, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இரானுடனான இந்தியாவின் உறவை ஒப்பிடுவது எந்த அளவுக்குப் பொருத்தமானது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், அமெரிக்கா–பாகிஸ்தான் உறவை இந்தியா–இரான் உறவுடன் ஒப்பிடுவது சரியல்ல கூறியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர், "அமெரிக்கா–பாகிஸ்தான் உறவையும் இந்தியா–இரான் உறவையும் ஒப்பிடுவது உண்மைகளின் அடிப்படையில் பொருந்தாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இரான், எங்களின் 'நேட்டோ அல்லாத முக்கியக் கூட்டாளி' நாடு அல்ல. பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்காக நாங்கள் இரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை. ஆனால், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களையும் ஏஎம்ஆர்ஏஏஎம் ஏவுகணைகளையும் வழங்கியுள்ளது. இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் இந்தியாவுக்குப் பங்கு இருந்ததில்லை. ஆனால், பாகிஸ்தான் விவகாரத்தில் நிலைமை அப்படியல்ல. பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக உருவெடுக்க அமெரிக்கா அனுமதித்தது" என்று கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகப் பயன்படுத்தி வந்த நீண்ட வரலாறு பாகிஸ்தானுக்கு இருப்பதை அமெரிக்கா அறியும். ஒசாமா பின் லேடனுக்குப் பாகிஸ்தான் பல ஆண்டுகள் அடைக்கலம் அளித்தது. தாலிபனுக்கு ஆதரவாகவும் அந்நாடு இருந்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாறாக, இரானைப் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்து, அந்நாட்டின் மீது விரிவான தடைகளை விதித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் சிபல் கூறினார்.

"தற்போது, சாபஹார் துறைமுகத் திட்டத்தில் இந்தியாவின் பங்கேற்புக்கும் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும் குவாதர் துறைமுகத்தையும் அமெரிக்கா எதிர்ப்பதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ அக்டோபர் 19 முதல் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
படக்குறிப்பு, அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மற்றும் ந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்

ரூபியோவின் கருத்துகள் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை நிபுணர் ஜாஹித் மஹ்மூத் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாகிஸ்தானைப் புறக்கணிக்கவோ, அச்சுறுத்தவோ, தனிமைப்படுத்தவோ முடியாது. பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பாகிஸ்தானை ராஜ்ஜிய ரீதியில் தனிமைப்படுத்திவிட்டதாகவும் இந்தியா தனது உள்நாட்டு மக்களிடம் கூறிக்கொள்ளலாம். ஆனால், பிரசாரத்தால் புவிசார் அரசியல் யதார்த்தங்களை மாற்ற முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியா தனது மேலாதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும். இரு நாடுகளும் அமைதியாக இணைந்து வாழ்வது சலுகையல்ல; அவசியம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்ததற்கான காரணத்தை விளக்கிய ரூபியோ, "முதலாவதாக, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடும் அதுதான். அமெரிக்காவின் வலுவான புவிசார் அரசியல் கூட்டாளியாகவும் இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு நாம் மிகக் குறைவாகவே பயணம் மேற்கொள்கிறோம் என்று நினைக்கிறேன். உண்மையில், நாம் இங்கு அடிக்கடி வர வேண்டும்" என்று கூறினார்.

இருப்பினும், மார்கோ ரூபியோவின் தற்போதைய இந்தியப் பயணத்தின் முக்கிய நோக்கம் எரிசக்திப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால்தான், அவர் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களைத் தனது பயணத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானுடனான உறவு குறித்து ரூபியோ என்ன கூறினார்?

சமீப காலங்களில், குறிப்பாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் தலைவர்கள் மீதும், குறிப்பாக ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் மீதும் டிரம்ப் நிர்வாகத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் மார்கோ ரூபியோவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

1970-களில் அமெரிக்க நிர்வாகம் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்த நிக்சன்–கிஸ்ஸிங்கர் காலத்துக்கு தற்போதைய நிலை திரும்புவதாக இந்தியாவில் சிலர் கருதுவது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோ, "1970-களை இதற்கு உதாரணமாகக் கூற மாட்டேன். ஏனெனில், இன்றைய உலகம் அந்தக் காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அப்போது பனிப்போர் நிலவியது. இப்போது இல்லாத பல சூழல்களும் அப்போது இருந்தன" என்றார்.

"இரண்டாவதாக, உலகின் எந்த நாட்டுடனான எங்கள் உறவும் இந்தியாவுடனான உறவின் இழப்பில் அமைவதில்லை. இந்தியாவுக்கான எனது பயணம், வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு இருக்கும் உறுதிப்பாடு, இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் பணிகள் ஆகியவை இதற்குச் சான்றாக இருக்கும் என நம்புகிறேன்.

"பாகிஸ்தான் எங்களுடன் உறவு கொண்டுள்ள ஒரு நாடு. அந்த உறவை நாம் தொடர்ந்து பேண வேண்டும். எதிர்காலத்தில் மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தடுக்க எங்களால் உதவ முடிந்தால், அது நல்ல விஷயமாக இருக்கும். எங்களுடைய செல்வாக்கை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த முடிந்தால், அது உதவக்கூடும். ஆனால், பாகிஸ்தான் உட்பட உலகின் எந்த நாட்டுடனான எங்கள் உறவும் இந்தியாவுடனான உறவைப் பாதிக்காது என்பதில் இந்தியர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியாவுடனான எங்கள் உறவை இந்தக் கண்ணோட்டத்தில் நாங்கள் அணுகுவதில்லை" என்று ரூபியோ கூறினார்.

இந்தியா மீதான வரி விதிப்புகள் குறித்து அவர் என்ன கூறினார்?

"இந்த வரி விதிப்புகள் எதுவும் இந்தியாவைத் தண்டிப்பதற்காகவோ பாதிப்பதற்காகவோ விதிக்கப்படவில்லை. அவை பரந்த வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். துரதிர்ஷ்டவசமாக, ரஷ்யா– யுக்ரேன் இடையிலான தொடரும் போரும் இந்தக் கொள்கையில் இடம்பெறுகிறது. அந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று ரூபியோ கூறினார்.

அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின்படி, வரி விதிப்பை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், ஆனால் அது இந்தியாவுடனான முக்கியமான உறவைப் பாதிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த வரியை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான தனது அண்மைப் பயணத்துக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்வதை இந்தியா ஒரே நாளில் திடீரென நிறுத்துவது கடினம் என்று மார்கோ ரூபியோ கூறியிருந்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க வழிவகுத்திருக்கக்கூடிய சில தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ அக்டோபர் 19 முதல் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.

ரூபியோவின் இந்தியப் பயணம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதும் எரிசக்தி தொடர்பான விவகாரங்களைப் பேசுவதுமே ரூபியோவின் இந்தியப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று புவிசார் அரசியல் நிபுணர் வெலினா சகரோவா கருதுகிறார்.

"வர்த்தக ஒப்பந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக ரூபியோ கூறுகிறார். இறுதி செய்ய வேண்டிய சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. மாதங்கள் அல்ல, இன்னும் சில வாரங்களிலேயே இந்த ஒப்பந்தம் தயாராகிவிடும் என்று ரூபியோ தெரிவித்துள்ளார்" என வெலினா குறிப்பிட்டுள்ளார்.

"எரிசக்தியைப் பொறுத்தவரை, ரஷ்யாவைத் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து அதிக எண்ணெயை வாங்கி சுத்திகரிக்குமாறு இந்தியாவை ரூபியோ ஊக்குவிக்கிறார். இதில் வெனிசுவேலா கச்சா எண்ணெயும் அடங்கும். இதனால்தான், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அவர் செல்கிறார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா–இந்தியா இடையிலான அரசியல் உறவில் பதற்றம் நிலவும் சூழலில், எரிசக்திப் பாதுகாப்பு, நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மை, வர்த்தக முட்டுக்கட்டைகளைத் தீர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே ரூபியோவின் பயணத்தின் நோக்கம் என்று சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செல்லானி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

" மும்பையையும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகமான ஜாம்நகரையும் ரூபியோ தனது பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ளார். ஜாம்நகரில் அம்பானி குடும்பத்தினர் அவருக்கு விருந்தளிக்க உள்ளனர். ராஜ்ஜிய ரீதியிலான கருத்து வேறுபாடுகளைவிட நடைமுறை ஒத்துழைப்புக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த அணுகுமுறை எரிசக்தி, தனியார் துறை முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும். இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான இருதரப்பு உறவுகளில் ஒத்துழைப்பின் வேகத்தைத் தொடர்ந்து தக்கவைக்கவும் இது உதவும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் ரூபியோ பங்கேற்ற நிகழ்வுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீதும் இடம்பெற்றார்.

இந்தச் சந்திப்பு, உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நடவடிக்கை என்றும், முத்தரப்புக் கூட்டாண்மை வளர்ச்சிக்கும் வளத்துக்கும் புதிய வாயில்களைத் திறக்கும் என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் மும்பையில் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில் அப்துல்லா பின் சயீத் பங்கேற்றார்" என்று அந்த அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உத்திசார் முயற்சிகள் மற்றும் பிராந்திய, சர்வதேச அளவில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு