நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
கரடி, குதிரை, யானை போன்ற விலங்குகளை மனிதர்களால் ஓடி வெல்ல முடியுமா?
- எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கரடியையோ குதிரையையோ ஓட்டப்பந்தயத்தில் உங்களால் வெல்ல முடியுமா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எலியையோ காண்டாமிருகத்தையோ எதிர்கொண்டால் என்ன நடக்கும்? இதற்கான பதில்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் நான் முகாமிட்டிருந்தபோது, ஒரு கருங்கரடி அருகே நடந்து சென்றது. முகாமைச் சுற்றி அது மோப்பம் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, தேவைப்பட்டால் என்னால் அதைவிட வேகமாக ஓடித் தப்பிக்க முடியுமா என்று யோசித்தேன்.
பின்னர் கரடிகளின் ஓடும் வேகம் குறித்து தேடிப் பார்த்தபோது, அதற்கான பதில் தெளிவாகத் தெரிந்தது: நிச்சயமாக முடியாது.
அதுமட்டுமின்றி, ஓடித் தப்பிக்க முயல்வது கரடியைத் துரத்தத் தூண்டக்கூடும் என்பதால், அவ்வாறு செய்வதும் பரிந்துரைக்கப்படுவதில்லை. கருங்கரடிகளால் மணிக்கு 48 கி.மீ. (30 மைல்) வேகத்தில் ஓட முடியும்.
அதன்பிறகு, குறிப்பாக லண்டனில் ஓட்டப் பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம், ஒரு கேள்வி என் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது: எந்தெந்த விலங்குகளை ஓட்டப்பந்தயத்தில் என்னால் வெல்ல முடியும்? குறிப்பாகக் கோபமான ஒரு அணிலை எதிர்கொண்டால் என்ன செய்வது?
விலங்குகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நோவாவால் மட்டுமே நடத்த முடிந்திருக்கும். ஆனால், நூற்றுக்கணக்கான விலங்குகளின் அதிகபட்ச ஓட்ட வேகத்தை விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர். அணில்கள் மட்டுமின்றி, சிலந்திகள், பல்லிகள், கொறித்துண்ணிகள், பறவைகள், பெரிய பாலூட்டிகள் உள்ளிட்ட பல உயிரினங்களின் வேகமும் அளவிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளில் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளன.
அப்படியானால், ஓட்டப்பந்தயத்தில் உங்களுக்கு நெருக்கமான போட்டியாளராக இருக்கக்கூடிய விலங்கு எது? உலகின் அதிவேக மனிதர்களுக்குக் கடும் போட்டி அளிக்கக்கூடியவை எவை?
தசை நிறை
பல பத்தாண்டுகளாக, விலங்குகளின் அதிகபட்ச ஓட்ட வேகத்தை விஞ்ஞானிகள் வெவ்வேறு முறைகளில் அளவிட்டு வந்துள்ளனர்.
அவற்றுள் சில மற்றவற்றை விட மிகவும் துல்லியமானதாகவும் (மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகவும்) உள்ளன. 1920-களில், வட அமெரிக்காவின் மிக வேகமாக ஓடக்கூடிய நிலவாழ் விலங்கான பிராங்ஹார்ன் மான்களுடன் ஓர் இயற்கை ஆய்வாளர் காரை ஓட்டிச் சென்றார். அவை தொடர்ந்து ஓடுவதற்காக வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். 1980-களில், எலிகள் போன்ற சிறிய விலங்குகளை நடை இயந்திரங்களில் ஓடவைத்து அவற்றின் வேகத்தை அளவிட முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இன்றைய காலத்தில், ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள் இந்தப் பணியை எளிதாக்கியுள்ளன.
குறிப்பாக, விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் உண்மையில் ஓடும் வேகத்தைப் பதிவு செய்ய இவை உதவுகின்றன.
சமீபத்தில் காடுகளில் சிறுத்தைகளைக் கண்காணித்த ஓர் ஆய்வில், அவை மணிக்கு 93 கி.மீ. (58 மைல்) வேகத்தை எட்டக்கூடும் என்று தெரியவந்தது. இதற்கு முந்தைய அளவீடுகள் திரைப்படப் பதிவுகளின் அடிப்படையிலோ, அல்லது செயற்கையாகச் சிறுத்தையைத் துரத்தத் தூண்டியோ மேற்கொள்ளப்பட்டன.
அத்தகைய ஒரு சோதனையில், நான்கு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இறைச்சித் துண்டைக் கையில் பிடித்தபடி, கையில் கடிகாரத்துடன் சிறுத்தையைத் துரத்தத் தூண்டினார்.
சில நேரங்களில், எளிய முறைகளும் பயனளித்துள்ளன. சமீபத்திய மற்றோர் ஆய்வில், உலகின் மிக வேகமான சிலந்தியாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பழுப்பு நிற வேட்டைச் சிலந்தியின் வேகத்தை ஆய்வாளர்கள் அளவிட்டனர்.
அதற்காக, அதை மெதுவாகத் தட்டி நகரச் செய்து, அருகில் ஒரு அளவுகோலை வைத்துப் படம் பிடித்தனர். அதன் சராசரி வேகம் மணிக்கு சுமார் 7 கி.மீ. (4.3 மைல்). ஆனால், குறுகிய நேரத்துக்கான அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 13 கி.மீ. (8 மைல்). இது அச்சமூட்டும் வேகம்தான்.
காலப்போக்கில், வெவ்வேறு ஆய்வுகளில் கிடைத்த இத்தகைய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பெரிய தரவுத்தளங்களாகத் தொகுத்துள்ளனர். அவற்றில் ஒன்று, தற்போது ஜெர்மனியின் லீப்சிக் நகரில் உள்ள ஒருங்கிணைந்த பல்லுயிர்ப் பெருக்க ஆய்வு மையத்தில் பணியாற்றும் உயிரியல் ஆய்வாளர் மிரியம் ஹிர்ட் உருவாக்கிய தரவுத்தளம். அதில் சுமார் 350 நிலவாழ் விலங்குகளின் ஓட்ட வேகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
2017-ஆம் ஆண்டு, விலங்குகளின் உடல் எடை அவற்றின் வேகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்ற கேள்வியை ஹிர்ட்டும் அவருடைய சக ஆய்வாளர்களும் ஆராய்ந்தனர்.
கொள்கையளவில், அதிக தசை நிறை கொண்ட பெரிய விலங்குகளால் மிக வேகமாக ஓட முடியும் என்று தோன்றலாம்.
ஆனால், "முதலில் யோசிக்கும்போது அது சரியாகத்தான் தோன்றும். எனினும், தரவுகள் அப்படியில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. மிகப் பெரிய விலங்கினங்கள் மிக வேகமானவை அல்ல. அதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை" என்கிறார் ஹிர்ட்.
மிகப் பெரிய விலங்குகள் தங்களுடைய உடல் எடையின் காரணமாக, கோட்பாட்டளவில் எட்டக்கூடிய அதிகபட்ச வேகத்தை அடைய முடியாமல் போகிறது என்று அவரும் அவரது குழுவினரும் முடிவுசெய்தனர்.
"ஒரு சிறிய உடலை அதே வேகத்தில் நகர்த்துவதைவிட, பெரிய உடலை நகர்த்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. பெரிய விமானங்கள் புறப்படுவதற்கு நீளமான ஓடுபாதை தேவைப்படுவதைப் போன்றது இது" என்று அவர் விளக்குகிறார்.
இந்த மெதுவான தொடக்கத்தின் காரணமாக, பெரிய விலங்குகள் தங்களுடைய அதிகபட்ச வேகத்தை அடைவதற்கு முன்பே சோர்வடையத் தொடங்குகின்றன. "வேகமெடுப்பதற்குத் தேவையான ஆற்றல் குறைவாகவே கிடைக்கிறது. ஒரு கட்டத்தில், தசைகளில் ஆற்றல் தீர்ந்துவிடுவதால், தொடர்ந்து இயங்க முடியாமல் போய்விடும்" என்கிறார் ஹிர்ட்.
பெரிய விலங்குகள் மெதுவாக வேகமெடுப்பதால், குறிப்பாகக் குறைந்த தூரப் பந்தயங்களில் அவற்றை மனிதர்களால் வெல்லவும் முடியும். உதாரணமாக, ஆப்பிரிக்கக் காட்டுயானையால் மணிக்கு 35 கி.மீ. (21.7 மைல்) வேகத்தில் ஓட முடியும். ஆனால், ஓட்டப்பந்தயம் தொடங்கியவுடன் வேகமெடுப்பதில் அது மனிதர்களைவிட மெதுவாகவே இருக்கும்.
மிருகங்களின் வேகத்தைப் பற்றிய மற்றொரு தரவுத்தளம் 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதில் அவை வேகமெடுக்கும் திறன் தொடர்பான புள்ளிவிவரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. அதன்படி, ஆப்பிரிக்கக் காட்டு யானை தனது அதிகபட்ச வேகத்தை அடைய சுமார் 7.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் அடிப்படையில் தோராயமாகக் கணக்கிட்டால், 100 மீட்டர் (328 அடி) தூரத்தை அது சுமார் 14 விநாடிகளில் கடக்கும். என்னால் அந்த நேரத்தை எட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், நன்கு பயிற்சி பெற்ற சில வயதுவந்தவர்களால் அதை முந்திவிட முடியும் என்று 'மாரத்தான் ஹேண்ட்புக்' என்ற ஓட்டப்பந்தய இணையதளம் கூறுகிறது.
ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டால் ஆப்பிரிக்கக் காட்டுயானையை எளிதில் முந்திவிட முடியும். ஆனால், வேறு பல விலங்குகள் அவரையும் முந்திவிடும். உடல் எடை மற்றும் வேகமெடுக்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், அதிகபட்ச ஓட்ட வேகத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால், உலகச் சாதனை படைத்த ஓட்டத்தில் போல்ட்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 44 கி.மீ. (27-28 மைல்). இது வெள்ளைக் காண்டாமிருகத்தின் அதிகபட்ச வேகமான மணிக்கு 40 கி.மீ. (24.8 மைல்) வேகத்தைவிட அதிகம். ஆனால், கிரிஸ்லி கரடி அல்லது துருவக் கரடியின் மணிக்கு 48-50 கி.மீ. (30-31 மைல்) வேகத்தைவிடக் குறைவு. இன்னும் பல விலங்குகள் இதைவிட அதிக வேகத்தில் ஓடக்கூடியவை.
அதிவேகமாக ஓடும் விலங்குகள் என்றால், முதலில் நினைவுக்கு வருவது சிறுத்தை (மணிக்கு 93 கி.மீ. அல்லது 58 மைல்) அல்லது நெருப்புக்கோழி (மணிக்கு 82.8 கி.மீ. அல்லது 51.4 மைல்) ஆகியவைதான்.
ஆனால், அதிகம் அறியப்படாத வேகமான விலங்குகளும் உள்ளன. ஒல்லியான, உயரமான ஓட்ட வீரராக இருப்பதால், ஒட்டகச்சிவிங்கி எனக்கு நெருக்கமான போட்டியாளராக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனால், அவற்றால் மணிக்கு சுமார் 57 முதல் 60 கி.மீ. (35-37 மைல்) வேகத்தில் ஓட முடியும் என்பதை அறிந்து வியந்தேன்.
எனவே, ஓட்டப்பந்தயத்தில் அவை என்னை மட்டுமல்ல போல்ட்டையும் எளிதில் தோற்கடித்துவிடும். மூஸ் எனப்படும் பெரிய மான் வகையும் மணிக்கு 55.4 கி.மீ. (34.4 மைல்) வேகத்தில் ஓடக்கூடியது. வரிக்குதிரையால் மணிக்கு 70.6 கி.மீ. (43.8 மைல்) வேகத்தையும், கலைமானால் மணிக்கு 80 கி.மீ. (49.7 மைல்) வேகத்தையும் எட்ட முடியும். சாண்டா கிளாஸுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கும் என்று நினைக்கிறேன்.
வேகமெடுப்பதா, நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதா?
நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் என்ன நடக்கும்? வேகமாக ஓடுவது என்பது காற்றில்லா ஆற்றல் முறையைச் சார்ந்தது. அதற்கு விரைவாகச் சுருங்கும் தசை நார்கள் தேவை என்கிறார் முன்னாள் ஒலிம்பிக் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய வீரரும், ஓட்டப்பயிற்சி ஆலோசனைகளை வழங்கும் 'தி ரன்னிங் சேனல்' நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஆண்டி பேட்லி.
"விரைவாகச் சுருங்கும் தசை நார்கள் அதிக வெடிப்புத் திறன் கொண்டவை. ஆனால், அவை மிக விரைவாகச் சோர்வடைந்துவிடும். பளு தூக்குதல், வேக ஓட்டம் போன்றவற்றுக்கு இவை அதிகம் பயன்படுகின்றன. மெதுவாகச் சுருங்கும் தசை நார்கள் வேகமாகச் செயல்படத் தொடங்காது. அவற்றின் வெடிப்புத் திறனும் குறைவு. ஆனால், நீண்ட நேரம் சோர்வடையாமல் தொடர்ந்து இயங்கக்கூடியவை" என்கிறார் அவர்.
இதன் பொருள், வேக ஓட்ட வீரரால் விரைவாக வேகமெடுத்து அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும். ஆனால், வெடிப்புத் திறனுக்காகப் பயிற்சி பெற்ற அவருடைய தசைகள், நீண்ட தூரம் ஓடும்போது விரைவில் சோர்வடைந்துவிடும். தன்னுடைய ஓட்டத் திறனை எடுத்துக்காட்டாகக் கொண்டு இந்த வேறுபாட்டை பேட்லி விளக்குகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் நடுத்தரத் தூர ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற காலத்தில், தன்னால் 100 மீட்டர் தூரத்தைச் சுமார் 11.7 விநாடிகளில் கடக்க முடிந்ததாக அவர் கணிக்கிறார். (இது கொரில்லாவுடன் நெருக்கமான போட்டியாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) என்றாலும், அந்த நேரம் உயர்தர வேக ஓட்ட வீரர்களைவிட மெதுவானது.
ஆனால், 500 மீட்டர் தூரத்தில் உயர்தர வேக ஓட்ட வீரருக்கு அவர் கடும் போட்டியைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறார். 1,500 மீட்டர் என்ற தனக்குப் பழக்கமான தூரத்தில், உலகின் தற்போதைய அதிவேக ஓட்ட வீரரைக்கூட நிச்சயம் வென்றுவிட முடியும் என்கிறார். ஏனெனில், நீண்ட நேரம் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அவருடைய உடலுக்கு உள்ளது.
விலங்குகளுக்கும் இதே நிலைதான். உதாரணமாக, ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்திச் சிறுத்தைகளைக் கண்காணித்த ஆய்வில், அவை பொதுவாகத் தங்களுடைய அதிகபட்ச வேகத்தைச் சில விநாடிகள் மட்டுமே தக்கவைத்துக்கொள்வது தெரியவந்தது. வேட்டையாடும்போது அவை ஓடும் தூரம் பொதுவாக 200 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். அவை வேக ஓட்டத்துக்குப் பழகியவை; நீண்ட தூர ஓட்ட வீரர்கள் அல்ல. குறைந்த தூரத்துக்கு மேல் ஓடுவதற்கான தேவையோ விருப்பமோ அவற்றுக்கு இல்லாமல் இருக்கலாம்.
இதற்கு மாறாக, இரையாக வேட்டையாடப்படும் பிராங்ஹார்ன் மான்கள் 10 நிமிடங்களில் 11 கி.மீ. தூரம் ஓடியுள்ளதாக அளவிடப்பட்டுள்ளது. அப்போது அவற்றின் சராசரி வேகம் மணிக்கு 65 கி.மீ. (40 மைல்).
"ஒரு வேட்டையாடும் விலங்குக்கு இரை என்பது உணவு. ஆனால், இரையாகும் விலங்குக்கு அது உயிர் பிழைப்பதற்கான போராட்டம். எனவே, வேகமாக ஓட வேண்டிய அழுத்தம் இரையாகும் விலங்குகளுக்கு அதிகம்" என்று பழமொழி ஒன்றை நினைவுகூர்ந்து கூறுகிறார் ஹிர்ட்.
மனிதர்களின் உடலமைப்பு, உடலில் அதிக முடி இல்லாத தன்மை, வியர்வை சுரக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக, வேக ஓட்டத்தைவிட நீண்ட தூரம் தொடர்ந்து ஓடுவதற்கே நாம் சிறப்பாகத் தகவமைந்துள்ளோம். பல கிலோமீட்டர் தூரம் இரையைத் துரத்தி, அதைச் சோர்வடையச் செய்து பிடிப்பதற்கு உதவும் வகையில் இந்தத் தகவமைப்புகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கலாம் என்று சில பரிணாம உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்படியானால், நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் மற்ற விலங்குகளைவிட மனிதர்களால் தங்கப் பதக்கம் வெல்ல முடியுமா? அதற்கான பதில் - அது சூழலைப் பொறுத்தது.
முதலில், இதுகுறித்து போதுமான அறிவியல் தரவுகள் இல்லை. மனிதர்களைப் போலவே தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்வதற்காக, விலங்குகள் மாரத்தான் தூரமான 42.2 கி.மீ. (26.2 மைல்) ஓடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆய்வகத்தில் அவற்றை அவ்வாறு ஓட வைப்பது நெறிமுறை அடிப்படையில் தவறாக இருக்கலாம். இயற்கையான சூழலில், பல விலங்குகள் இலக்குக் கோட்டை அடைவதற்கு முன்பே ஓடுவதை நிறுத்திவிடும் அல்லது வேகத்தைக் குறைத்துவிடும்.
இதற்கான சில தடயங்களை, விலங்குகளின் 'பயண வேகம்' குறித்த அறிவியல் தரவுத்தளங்கள் மூலம் அறியலாம். நீண்ட தூரம் செல்லும்போது விலங்குகள் சிரமமின்றித் தொடர்ந்து பராமரிக்கும் வேகமே பயண வேகம் எனப்படுகிறது.
உதாரணமாக, கருங்கரடியின் அதிகபட்ச வேகம் மனிதர்களைவிட அதிகம். ஆனால், அதன் பயண வேகம் மணிக்கு 2.6 கி.மீ. (1.6 மைல்) மட்டுமே. புலியின் பயண வேகம் மணிக்கு 3.5 கி.மீ. (2.1 மைல்); ஒற்றைத்திமில் ஒட்டகத்தின் வேகம் மணிக்கு 6.3 கி.மீ. (3.9 மைல்); சாம்பல் நிற ஓநாயின் வேகம் மணிக்கு 7.9 கி.மீ. (4.9 மைல்).
லண்டன் மாரத்தானில் பங்கேற்கும் அனைத்து ஓட்ட வீரர்களின் சராசரி வேகமான மணிக்கு 9 கி.மீ. (6 மைல்) வேகத்தைவிட இவை குறைவு. இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 விநாடிகள் என்ற உலகச் சாதனை நேரத்தில் ஓடியவரின் சராசரி வேகமான மணிக்கு 21 கி.மீ. (13 மைல்) வேகத்தைவிடவும் இவை மிகவும் குறைவு. ஆனால், பயண வேகம் என்பது விலங்குகளால் நீண்ட தூரம் ஓடக்கூடிய அதிகபட்ச வேகம் என்று பொருளல்ல. இது மனிதர்கள் நடக்கும் வேகத்துக்கு நெருக்கமானது. ஒரு கரடியால் நீண்ட தூரத்தை அதன் வழக்கமான பயண வேகத்தைவிட விரைவாகக் கடக்க முடியும். ஆனால், மனிதர்கள் ஓடும் அதே வேகத்தில் மாரத்தான் தூரத்தை ஓடினால், அது அதிக வெப்பமடைந்து சோர்வடைந்துவிடுமா என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவது கடினம்.
இருப்பினும், விலங்குகளின் ஓட்ட வேகம் குறித்த தரவுகளில் பல இடைவெளிகள் இருந்தாலும், நீண்ட தூர ஓட்டத்தில் மனிதர்களே விலங்கினங்களில் மிகச் சிறந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது. நீண்ட நேரம் ஓடுவதற்கான உடலமைப்பும், மன உறுதியும் நமக்கு இருந்தாலும், சில விலங்குகள் நம்மைவிடச் சிறப்பாக ஓடக்கூடும்.
உதாரணமாக, ஹஸ்கி நாய்கள் மிக நீண்ட தூரத்தை வேகமாகக் கடக்கக்கூடியவை. மாரத்தான் தூரத்துக்கு இணையான தூரம் கொண்ட நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிப் பந்தயங்களில் அவை பதிவு செய்துள்ள நேரங்களின் அடிப்படையில் பார்த்தால், மனிதர்களின் உலகச் சாதனையை அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அவற்றால் முறியடிக்க முடியும். சுமைகளைச் சுமக்க வேண்டிய நிலை இல்லாவிட்டால், அவை இன்னும் வேகமாக ஓடக்கூடும்.
நீண்ட தூர ஓட்டத்துக்குப் பயிற்சி பெற்ற குதிரையாலும், சமதளமான பாதையில் பெரும்பாலான மனிதர்களை வெல்ல முடியும். எனினும், அது ஓடும் நிலப்பரப்பைப் பொறுத்தது.வேல்ஸில் ஒவ்வோர் ஆண்டும் மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் இடையே சுமார் 22 மைல் (35 கி.மீ.) தூரம் கொண்ட மலைப்பாதையில் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. பொதுவாகக் குதிரைகளே வெற்றி பெறுகின்றன. ஆனால், சில நேரங்களில் மனிதர்களும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அல்ட்ரா மாரத்தான் போன்ற மிக நீண்ட தூர ஓட்டங்களில் மனிதர்கள் விலங்குகளுடன் ஒப்பிடும்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கணிப்பது இன்னும் கடினம்.
மீண்டும் ஹஸ்கி நாய்களே மனிதர்களை வெல்லக்கூடும். அலாஸ்காவில் நடைபெறும் இடிடரோட் டிரெயில் நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிப் பந்தயம் 1,600 கி.மீ. (1,000 மைல்) தூரம் கொண்டது. இது குழுவாகப் பங்கேற்கும் போட்டி என்றாலும், சில நாய்கள் முழுத் தூரத்தையும் ஓடுகின்றன. இந்தப் போட்டியின் சாதனை நேரம் ஏழு நாட்கள் 14 மணி நேரம்.
இதனுடன் ஒப்பிடும்போது, அலாஸ்காவின் அதேபோன்ற தட்பவெப்பச் சூழலில் மனிதர்கள் நடந்தே பங்கேற்கும், ஏறத்தாழ அதே தூரம் கொண்ட இடிடரோட் டிரெயில் இன்விடேஷனல் போட்டியின் சாதனை நேரம் 19 நாட்கள், 9 மணி நேரம், 38 நிமிடங்கள்.
இருப்பினும், அல்ட்ரா மாரத்தான் போன்ற மிக நீண்ட தூரப் பந்தயங்களில் ஓடக்கூடிய அல்லது ஓட விரும்பக்கூடிய விலங்குகள் அதிகம் இருக்காது. நீண்ட தூரம் ஓடுவதற்கான உடலியல் திறனைத் தவிர, மனித மூளையும் இத்தகைய பந்தயங்களில் நமக்குப் பெரும் பலமாக அமைகிறது. நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் ஒரே தெருவைச் சுற்றி நடைபெறும் 3,100 மைல் (4,989 கி.மீ.) நீளமுள்ள 'செல்ஃப் டிரான்செண்டன்ஸ்' ஓட்டப்பந்தயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் போட்டியின் தற்போதைய சாதனையாளர், இரவில் ஆறு மணி நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, 40 நாட்களுக்கும் மேலாக ஓடி இலக்கை அடைந்தார். ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் அவருடைய சராசரி வேகம் மணிக்கு சுமார் 6.9 கி.மீ. (4.3 மைல்).
"இறுதியில், நீண்ட தூர ஓட்டம் என்பது அசௌகரியமான சூழலில் உங்களால் தொடர்ந்து இருக்க முடியுமா, வலியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதுதான். நீண்ட தூரம் ஓடிய பிறகும், இறுதியில் மற்றொரு ஆற்றல் முறையைப் பயன்படுத்தி வேகமெடுக்கும் திறன் மனிதர்களுக்கு இருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொண்டு, இலக்குக் கோடு கண்ணில் தெரிந்ததும் மீண்டும் வேகமாக ஓட முடிகிறது. விலங்குகளிடமும் இதுபோன்ற திறனைப் பார்க்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை" என்கிறார் பேட்லி.
ஆனால், இத்தகைய திறன் இருந்தாலும், ஓட்டப் பயிற்சிக்குச் செல்லும்போது கோபமான சாம்பல் நிற அணிலையோ, பேட்ஜரையோ எதிர்கொண்டால் அது எனக்கு உதவாது. அவை என்னைத் துரத்தினால், என்னால் அவற்றைவிட வேகமாக ஓடித் தப்பிக்க முடியுமா? பெரும்பாலும் முடியாது. யானைகள் போன்ற பெரிய விலங்குகளைப் போலல்லாமல், அணிலும் பேட்ஜரும் ஒன்று அல்லது இரண்டு எட்டுகளிலேயே தங்களுடைய அதிகபட்ச வேகத்தை எட்டிவிடும் அளவுக்குச் சிறியவை. அவற்றின் வேகம் மணிக்கு சுமார் 30 கி.மீ. (18.6 மைல்). இது நான் வேகமாக ஓடக்கூடிய வேகத்தைவிட அதிகம். எனவே, எனது ஓட்டப் பயிற்சியை இன்னும் கொஞ்சம் தீவிரப்படுத்த வேண்டியிருக்கலாம்.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விலங்குகளின் வேகத் தரவுகள் பெரும்பாலும், 'மிகப் பெரிய விலங்குகள் ஏன் மிக வேகமானவை அல்ல என்பதை விளக்கும் பொதுவான அளவீட்டு விதி' (ஹிர்ட் மற்றும் பலர், 2017), 'உயிரினங்களின் நகர்வு வேகத்தில் உடல் அளவு மற்றும் வெப்பநிலையின் தாக்கம்' (க்ளாய்ட் மற்றும் டெல், 2020) ஆகிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு