திருப்பூர்: ஆகாயத் தாமரையால் அழியவிருந்த பறவைகள் சரணாலயம் மீட்கப்பட்டது எப்படி? பிபிசி கள ஆய்வு

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

''காலையிலும், மாலையிலும் இந்தப் பகுதியில் பறவைகளின் சத்தம் இடைவிடாமல் கேட்கும். அதைக் கேட்கும்போது எங்களுக்குப் பெரும் சந்தோஷமாயிருக்கும். ஆனால் சில ஆண்டுகளாக பறவைகளின் சத்தம் குறைந்து கொண்டேயிருந்தது. அதற்குக் காரணம், நஞ்சராயன் குளத்தில் தண்ணீரையே பார்க்க முடியாத அளவுக்கு ஆகாயத் தாமரை மூடிவிட்டது. அதனால் குளத்தில் பறவைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.''

திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கோமதியின் கூற்று இது.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்த குளத்துக்கு சீசன் காலங்களில் 25 ஆயிரம் பறவைகள் வந்த நிலை மாறி, 2022க்கு பிறகு எடுத்த கணக்கெடுப்பில் அது 2500, 1800 என்று படிப்படியாகக் குறைந்து விட்டதாகக் கூறுகிறார் திருப்பூர் இயற்கைக் கழகத்தின் தலைவர் ரவீந்திரன்.

நஞ்சராயன் குளத்தை ஆக்கிரமித்து, பறவைகளின் வாழ்விடத்தைச் சுருக்கிய ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தற்போது பெருமளவில் முடிவடைந்து, குளத்தின் பெரும் பகுதி நீர்ப்பரப்பாக மாறியுள்ளது.

ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் திருப்பூர் வெற்றி அமைப்புடன், சென்னை எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் உள்ளிட்ட வேறு சில அமைப்புகளும் கைகோர்த்துள்ளன. பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில், இந்தக் குளம் முற்றிலும் அழியும் நிலையில் இருந்து மீட்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது. குளத்தைச் சுற்றிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், பிற மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென கோவை மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் உறுதியளித்துள்ளார்.

ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்ட நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்

திருப்பூர் நகரிலிருந்து 10 கி.மீ. தூரத்திற்குள் ஊத்துக்குளிக்கு அருகில் அமைந்திருக்கிறது நஞ்சராயன் பறவைகள் சரணாலயம். கடந்த 2022ஆம் ஆண்டில், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக இதை அறிவித்து, தமிழக வனத்துறை அரசாணை வெளியிட்டது. மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத் துறையால் 2024 ஆகஸ்ட் 14 அன்று ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய இணையதளத்தின் தகவல்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியை ஆட்சி செய்த நஞ்சராயன் என்ற மன்னர், இந்த ஏரியைச் சீரமைத்து மீட்டெடுத்ததால் இதற்கு 'நஞ்சராயன் குளம்' என்று பெயர் வந்துள்ளது. மத்திய ஆசிய பறவைகள் வலசைப் பாதையில் இந்தக் குளம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது அந்த இணையதளம்.

மொத்தம் 311 ஏக்கர் (125.86 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளதாக ஈரநில ஆணைய குறிப்புகள் கூறினாலும், குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதி, நீர் நிற்கும் பரப்பு என மொத்தப் பரப்பு 380 ஏக்கர் இருப்பதாக நீர்வளத் துறை, வனத்துறை அதிகாரிகள் தகவல் பகிர்கின்றனர். இதனால் 108 ஏக்கர் நிலம் மட்டுமே பாசனம் பெறுவதாக நீர்வளத் துறை புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் குளம் பெரும் பங்காற்றுகிறது.

அன்னூர் மற்றும் அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உருவாகும் நல்லாறு ஆற்றில் இருந்தும், வடகிழக்குப் பருவமழையில் இருந்தும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்த குளத்தைக் கடந்து செல்லும் நல்லாறு, காவிரியின் கிளை ஆறான நொய்யல் ஆற்றில் கலக்கிறது. குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உயிர்ச்சூழல் காரணமாக, இந்த குளத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வருவதாகக் கூறுகின்றனர், திருப்பூரைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள். திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் குளத்தில் மாதாந்திர பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவதாகக் கூறுகின்றனர்.

பிபிசியிடம் பேசிய திருப்பூர் இயற்கைக் கழகத்தின் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ''கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இந்த குளத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பல்வேறு பறவைகள் சரணாலயங்களையும் பார்த்துள்ள எங்களுக்கு இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையைப் பார்த்த பிறகே, இதையும் சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்காக பறவைகள் வருகையைக் கணக்கெடுத்து ஆவணப்படுத்தி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம்'' என்றார்.

இதன் காரணமாக, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே, 2022ஆம் ஆண்டில் இந்தக் குளத்தை நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக தமிழக வனத்துறை அறிவித்ததாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால் பத்து ஆண்டுக்கு முன்பு வரை இங்கு வந்த பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதையும் இந்த அமைப்பினர் தங்கள் கணக்கெடுப்பில் கண்டறிந்துள்ளனர்.

''கடந்த 2017க்கு முன்பாக, சீசன் காலங்களில் நாங்கள் எடுத்த கணக்கெடுப்பில் 192 வகையான பறவைகள் 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் வந்ததைப் பதிவு செய்தோம். ஆனால் அடுத்தடுத்து இந்த எண்ணிக்கை குறைந்து, கடந்த சில ஆண்டுகளாக 2500, 1800, 1700 எனக் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் பறவையினங்கள் எண்ணிக்கை குறையவில்லை. குளத்தின் நீர்ப்பரப்பு குறைந்ததே பறவை எண்ணிக்கை குறையக் காரணம் என்பதை உணர்ந்து, அதை அகற்ற வேண்டுமென்று 'வனத்துக்குள் திருப்பூர்' கூட்டத்தில் வலியுறுத்தினோம். அதற்குப் பிறகே ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது'' என்றார் ரவீந்திரன் காமாட்சி.

திருப்பூரிலுள்ள தொழில்முனைவோரை உள்ளடக்கியுள்ள வெற்றி என்ற அரசு சாரா அமைப்பு, 2004ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. அதன் சார்பில், ''வனத்துக்குள் திருப்பூர்'' என்ற திட்டம் துவக்கப்பட்டு, 2015 முதல் 2023ஆம் ஆண்டு வரை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 85 ஆயிரம் மரங்களை நட்டுள்ளதாக இந்த அமைப்பின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 லட்சம் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. மரம் வளர்த்த இடங்களின் ஜிபிஎஸ் ஆதாரத்துடன் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்திடமும், வனத்துறையிடமும் தரவுகளைச் சமர்ப்பித்து வருகிறது. சாலிம் அலி பறவைகள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம், இந்தத் தரவுகளைக் கள ஆய்வு செய்து அறிக்கையும் அளித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

தற்போது இதே வெற்றி அமைப்பு, நஞ்சராயன் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் மழைநீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நல்லாறு ஆற்றில், அன்னூர், அவிநாசி ஆகிய ஊர்கள் நகரமான பின், அங்கிருந்து வரும் சாக்கடையும் அதிகமாகக் கலந்ததே தற்போது குளத்தில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிக்கக் காரணம் என்கிறார் வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம்.

பிபிசியிடம் பேசிய சிவராம், ''கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக குளத்தை ஆக்கிரமித்து வந்த ஆகாயத் தாமரை, கடந்த ஜூன், ஜூலையில் ஏறத்தாழ 70% குளத்தை மூடிவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே பறவைகள் சரணாலயம் என்பதால், இந்த குளமும் அழிந்துவிட்டால் இங்கே வலசை வரும் பல ஆயிரம் பறவைகள் வராமல் போகுமென்ற அச்சத்தில்தான் இந்த பணியைத் துவக்கினோம். இப்போது வரை 75% ஆகாயத் தாமரைகளை அகற்றியுள்ளோம். இப்போது 80% குளம் பறவைகளுக்கான வாழ்விடமாக மாறியுள்ளது. காலையில் பார்க்கும்போது பல ஆயிரம் பறவைகள் வருகின்றன. இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அகற்றிவிடுவோம்'' என்றார்.

25 ஆயிரம் வலசைப் பறவைகள் 2 ஆயிரமாக குறைந்ததற்கான காரணமென்ன?

குளத்தில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பதால், பறவைகளின் வாழ்விடம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் வெற்றி அமைப்பின் தலைமை செயல் அலுவலர் நடராஜ். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நஞ்சராயன் குளத்தில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் நடராஜ், "இந்தப் பணியை இப்போது மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் நஞ்சராயன் குளம் முற்றிலுமாகக் களையால் மூடப்பட்டு, பறவைகள் வருகை குறைந்து சரணாலயமே அழிந்திருக்க வாய்ப்புள்ளது" என்கிறார்.

பிபிசியிடம் பேசிய நடராஜ், ''களைச்செடியான ஆகாயத் தாமரை, நீரில் இருக்கும் நச்சுத்தன்மையை உறிஞ்சி உயிர் வாழும் வகையில் நல்ல தாவரம்தான். ஆனால் குளத்தில் நான்கில் 3 பங்கு இவை ஆக்கிரமித்துவிட்டன. இரண்டு அடி வரை மேலே வளரும் ஆகாயத் தாமரையைத் தாண்டி, சூரிய ஒளி தண்ணீருக்குள் செல்லாது. இதனால் நீருக்குள் இருக்கும் தாவரங்கள் வளராது. அதன் தொடர்ச்சியாக மீன்களுக்கு உணவு கிடைக்காது. மீன்கள் இல்லாவிட்டால் வாத்து, நீர்க் காகம், கொக்கு போன்ற பறவைகளுக்கு இரை கிடைக்காது" என்றார்.

''அது மட்டுமின்றி, கூழைக்கிடா போன்ற பறவைகள், விமானம் போலத் தரையிறங்குபவை. அதற்கு நீர்ப்பரப்பு அதிகம் தேவை. இவையனைத்தும் ஆகாயத் தாமரைகளால் பாதிக்கப்படும்போது, உயிர்ச்சூழல் இல்லையென்று பறவைகள் வராமல் போய்விடும். இதற்கான சூழல்தான் இங்கே இருந்தது. அதனால் பறவைகள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருந்தது'' என்றார் நடராஜ்.

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி, நஞ்சராயன் குளத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு செய்தது. குளத்தின் பெரும் பகுதிகளில் முன்பு ஆகாயத் தாமரை இருந்த காணொளிகளையும், அவை அகற்றப்பட்ட பின்பு அங்கு நீர்ப்பரப்பு தெரியும் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெற்றி அமைப்பினர் பிபிசியிடம் பகிர்ந்தனர். தற்போது மீதமுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் பலவிதமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிக்காகவே பிரத்யேகமாக சென்னை எக்ஸ்னோரா அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள படகு போன்ற ஓர் இயந்திரம், இதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த இயந்திரம், ஆகாயத் தாமரைகள் நிறைந்துள்ள பகுதிகளில் நீருக்குள் ஊருவிச் சென்று, அந்தத் தாவரங்களுக்கு இடையில் இருக்கும் வேர் மற்றும் தண்டுகள் போன்ற சங்கிலித் தொடர் அமைப்புகளைத் துண்டிக்கிறது. அதன் பின்பு அவற்றைக் கரையோரமாக ஆழம் குறைந்த பகுதிகளுக்குத் தள்ளிவிடுகிறது.

காற்றினாலும், இயந்திரம் தள்ளி விடுவதாலும் கரைப்பகுதியில் ஒதுங்கும் ஆகாயத் தாமரைகளை, மண் அள்ளும் இயந்திரம் வாரியெடுத்து, கரையோரம் நீர்ப்பரப்பில் நிற்கும் டிராக்டர்களில் கொட்டுகிறது. இவற்றை அள்ளிப்போடும்போது, ஆகாயத் தாமரையுடன் தண்ணீரும் வராமலிருக்க அந்த இயந்திரத்தின் பக்கெட் சல்லடை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரைகளை டிராக்டர்கள் மாறி மாறி எடுத்துச் சென்று கரையோரம் கொட்டுவதால் ஒரு மலைத்தொடர் போல கரையோரத்தில் அவை குவிக்கப்பட்டுள்ளன. அவை காய்ந்து அளவு சுருங்கி சிறியதான பின்பு அங்கிருந்து அகற்றப்படுகின்றன.

''ஆகாயத் தாமரை வளரும்போது, பக்கவாட்டில் பரவும் தண்டு, வேராக மாறி மற்றொரு செடியாக முளைக்க வைக்கும், இப்படியே ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும். வளர்ந்த ஆகாயத் தாமரை எட்டே நாளில் சுற்றிலும் கிளைகளைப் பரப்பிவிடும். அவற்றை அப்படியே வளரவிட்டால் மொத்த குளத்தையும் ஆக்கிரமித்து, பறவைகளின் வாழ்விடத்தை மொத்தமாக அழித்துவிடும்'' என்றார் நடராஜ்.

இந்தக் குளத்தின் நடுவில் திட்டுத் திட்டாக தீவுகள் போன்ற சிறிய நிலப்பரப்புகள், பாறைகள் உள்ளன. அவற்றில்தான் பறவைகள் ஓய்வெடுக்கின்றன. பிபிசி அங்கு சென்றபோது, ஏராளமான பறவைகள் அங்கிருப்பதைக் காண முடிந்தது. இந்தத் திட்டுக்களின் மீதும், கரையோரப் பகுதிகளிலும் ஆகாயத் தாமரைகள் பரவியதால், அங்குள்ள தாவரங்களும், அவற்றை வாழ்விடமாகப் பயன்படுத்தும் பறவைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக விளக்குகின்றனர் திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இந்த அமைப்பினர், பூமியின் உயிர்ச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தில் பறவைகள் எப்படிப் பங்களிப்பது குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் எடுப்பதோடு, அவற்றை விவரிக்க இந்த பறவைகள் சரணாலயத்துக்கு அவர்களை அழைத்து வருகின்றனர்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளாக ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பால் குளம் சுருங்கி, பறவைகள் குறைந்து வந்ததால் இதற்கான வாய்ப்பு குறைந்து வந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நஞ்சராயன் குளத்தில் ஆகாயத் தாமரைகள் பெருமளவில் மூடியிருந்ததால், பறவைகள் வருகை குறைந்துவிட்டதாக அந்த குளத்தை ஒட்டியுள்ள நஞ்சராயன் நகரில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பிபிசியிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த கோமதி, ''நான் இங்கு 18 ஆண்டுகளாக குடியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காலையிலும், மாலையிலும் பல ஆயிரம் பறவைகள் வரும். இடைவிடாமல் பறவைகள் சத்தம் கேட்கும். அந்தச் சத்தம்தான் எங்களுக்கு சந்தோஷம் தரும். ஆனால் குளம் முழுவதும் ஆகாயத் தாமரை பரவிய பிறகு, பறவைகளின் சத்தம் குறைந்துவிட்டது'' என்றார்.

''இப்போது குளத்தின் பெரும் பகுதியில் இவற்றை அகற்றிவிட்டதால் பல ஆண்டுகளுக்குப் பின்பு, இப்போதுதான் தண்ணீர் தெரிகிறது. முன்பெல்லாம் இந்த பறவைகளைப் படமெடுப்பதற்கு, நிறைய பேர் வருவார்கள். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறையத் துவங்கிய பின், அவர்களையும் பார்க்க முடிவதில்லை. குளத்தை இப்படியே சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது'' என்றார் கோமதி.

அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், ''நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது, குளத்தின் தண்ணீர் சுத்தமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடை கலந்த பின்பே ஆகாயத் தாமரைகள் அதிகரித்தது. கடந்த ஆண்டில்தான் குளத்தை முற்றிலுமாக மூடுமளவுக்கு அவை பரவியிருந்தன. அதனால் குளத்தை இனிமேல் மீட்கவே முடியாது என்று நினைத்த நிலையில்தான், இந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதில் இப்பகுதி மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி. இனி பறவைகள் அதிகம் வருமெனக் கருதுகிறோம்'' என்றார்.

ஆகாயத் தாமரைகள் மீண்டும் இங்கு பரவாமல் தடுப்பதற்கான வழிமுறை என்ன?

ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டாலும், இந்தக் குளத்தில் மீண்டும் சாக்கடை கலக்கும்பட்சத்தில் அவை மீண்டும் வளர்ந்து பரவ வாய்ப்புள்ளதால், அதைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் இப்பகுதி மக்களும், சூழல் ஆர்வலர்களும் முன்வைக்கின்றனர். இந்த குளத்திற்கு நல்லாறு தண்ணீர் வரும் நுழைவுப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அது செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சாக்கடை நீர் நேரடியாக குளத்தில் கலக்கிறது. குளத்தில் பெரிய பெரிய மீன்கள் செத்து மிதப்பதையும் பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது.

நஞ்சராயன் குளத்தில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியை ஒட்டி, கடந்த அக்டோபர் 17ஆம் தேதியன்று, சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே, ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேஷ், திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், குளத்தில் நடக்கும் பணிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள், இதில் மீண்டும் சாக்கடை கலக்காமல் தடுக்கவும், பிற மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் உறுதி கூறியுள்ளனர்.

கடந்த 2022 செப்டெம்பர் 12 அன்று, நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் குறித்த அறிவிப்பாணையில், இதை மேம்படுத்த ரூ.7.5 கோடி நிதியை ஒதுக்குவதாகவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் நிலத்தின் உரிமை நீர்வளத் துறையிடமே இருப்பினும், உள் கட்டமைப்பு மேம்பாடுகளால் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றப்படுமென்று கூறப்பட்டிருந்தது.

இதற்காக விரிவான திட்ட அறிக்கையில் ஒரு மைய வளாக 'பாதுகாப்பு மையம்' (Conservation Centre), விளக்க மையம் (Interpretation Centre), சிறிய திரையரங்கம் உள்ளிட்ட ஆவண மையம், இயற்கை பூங்காக்கள் (மூங்கில் தோட்டம், தாவரவியல் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, மருத்துவ மரங்கள் பூங்கா போன்றவை) உருவாக்கம், நிலத்தோற்ற வடிவமைப்பு (landscaping) மற்றும் தோட்டக் கலைப் பணிகள், வாகன நிறுத்துமிடம், ஏரியைச் சுற்றி பறவைகள் குறித்த தகவல்கள், படங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகளை அமைத்தல், இயற்கை நடைபாதை அமைத்தல், கண்காணிப்பு கோபுரம் கட்டுதல், பறவை சிலைகளை உருவாக்குதல், இருக்கை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேகப் பகுதியை உருவாக்குதல் ஆகியவை முன்மொழியப்பட்டிருந்தன.

பிபிசியிடம் பேசிய வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், ''குளத்திற்கு நீர் வரும் பாதையில் (Inlet) சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து இயங்கவில்லை. அதை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதைச் செய்தால் மட்டுமே இந்தக் குளத்தின் உயிர்ச்சூழலை தொடர்ந்து பாதுகாக்க முடியும். அதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்'' என்றார்.

இங்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை விரைவாக மேற்கொள்வதுடன், அதற்கு முன்பாக விரிவான ஆவணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் திருப்பூர் இயற்கைக் கழகத்தின் தலைவர் ரவீந்திரன் காமாட்சி. மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் 'சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்' (Eco-Sensitive Zone) தொடர்பான வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்வது அவசியம் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

தற்போது குளத்திற்குள் இருக்கும் ஆகாயத் தாமரைகள் பெருமளவில் அகற்றப்பட்டு விட்ட நிலையில், குளத்தைச் சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்து இருப்பதையும் பிபிசி கள ஆய்வில் கண்டறிந்தது. அவற்றையும் படிப்படியாக அகற்றி, பறவைகளுக்கேற்ற ஈரநிலத் தாவரங்களை வளர்த்து, அதன் உயிர்ச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் பலரும் முன் வைக்கின்றனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநரும், கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ், ''குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள வெற்றி அமைப்பு முன் வந்ததால், அதற்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் அனுமதி பெற்றுக் கொடுத்தோம். அடுத்தகட்டமாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை வனத்துறை மேற்கொள்ளும். அதே போன்று நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை மேலும் மேம்படுத்துவதற்கு வேறு சில மேம்பாட்டுப் பணிகளையும் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு