பார்வை நன்றாக இருந்தால் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமா? அறிகுறி இல்லாமலேயே உருவாகும் கண் பாதிப்புகள்: 8 கேள்வி - பதில்கள்

    • எழுதியவர், ஓங்கார் கரம்பேள்கர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சாலையில் நடந்து செல்லும்போது, பக்கவாட்டில் வரும் ஒருவர் திடீரென பார்வையில் தெரியாமல் போகிறார். இரவில் வாகனம் ஓட்டும்போது, எதிரில் இருப்பவற்றைப் பார்ப்பது முன்பைவிடக் கடினமாகிறது. படிக்கும்போது எழுத்துகள் மங்கலாகின்றன அல்லது நேரான கோடுகள் சற்றே வளைந்து தெரிகின்றன. பல நேரங்களில், இந்த மாற்றங்கள் நடந்தால் சோர்வு, வயது அதிகரிப்பு அல்லது கண்ணாடியின் பவர் மாறியதால் என்று நினைத்து நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம்.

ஆனால், பார்வைத்திறன் குறையத் தொடங்கினால், அது எப்போதும் திடீரென பார்வை குறைந்து முழுமையான இருள் சூழ்வதுபோல இருக்காது.

சில தீவிரமான நோய்கள் மிக மெதுவாகவும், எந்தவிதமான வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமலும் அதிகரிக்கக்கூடும். உதாரணமாக, கிளாக்கோமா எனப்படும் கண் நோயின் ஆரம்பக் கட்டத்தில் பல நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது. நீரிழிவு விழித்திரை பாதிப்பிலும் ஆரம்பத்தில் எந்தப் பிரச்னையும் தெரியாமல் இருக்கலாம்.

அதனால்தான், "எனக்கு நன்றாக பார்வை தெரிகிறது; எனவே என் கண்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன" என்ற எண்ணம் சில நேரங்களில் ஆபத்தானதாக மாறக்கூடும்.

அப்படியானால், பார்வைத்திறன் குறையத் தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன? நமது பக்கவாட்டுப் பார்வை குறைந்துவிட்டதை எப்படிக் கண்டறிவது? எந்தெந்த நோய்கள் எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் பார்வையைப் பாதிக்கக்கூடும்? கண்களைத் தவறாமல் பரிசோதனை செய்துகொள்வது எந்த அளவுக்கு முக்கியமானது? இவற்றைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

பார்வை மங்குவதற்கு முன்பே கண் பாதிப்பு தொடங்குமா?

சில மாற்றங்கள் உடனடியாகக் கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகளாக இருக்கலாம். கண்களுக்கு முன்னால் திடீரெனப் பல புதிய புள்ளிகள் அல்லது நூல்போன்ற உருவங்கள் மிதப்பது, ஒளிக்கீற்றுகள் மின்னுவதுபோல் தெரிவது, பக்கவாட்டுப் பார்வையில் நிழல் தோன்றுவது அல்லது பார்வைக்கு முன்னால் சாம்பல் நிறத் திரை விழுந்ததுபோல் உணர்வது ஆகியவை விழித்திரை நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுகுமாறு அமெரிக்கக் கண் மருத்துவக் கழகம் அறிவுறுத்துகிறது.

எனவே, தெளிவாகப் பார்க்க முடிகிறது என்பதற்காகக் கண்கள் முழுமையாக ஆரோக்கியமாக இருக்கின்றன என்று கருத முடியாது. கண்களில் பிரச்னை ஏற்படும் வரை காத்திருக்காமல், தவறாமல் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.

கிளாக்கோமா நோயில் ஆரம்பக் கட்டத்தில் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளோ எச்சரிக்கை அறிகுறிகளோ இருக்காது. நீரிழிவு விழித்திரை பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திலும் எந்த அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம்.

வயது தொடர்பான மாகுலர் சிதைவு நோயில் மையப் பார்வை பாதிக்கப்படலாம். குறிப்பாக, 'வெட் ஏஎம்டி' எனப்படும் வகையில் நேரான கோடுகள் வளைந்து தெரிவது ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

பார்வைத்திறன் படிப்படியாகக் குறைந்துகொண்டிருந்தால், அந்த நபருக்கு அது தெரியுமா என்பது முக்கியமான கேள்வி. இதுகுறித்து டாக்டர் ஸ்வாதி ஹிரேவிடம் கேட்டோம். இவர் மகாராஷ்டிராவின் டோம்பிவலியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

அவர் கூறியதாவது, "பார்வை குறைவதை ஒருவர் உணரக்கூடும். பார்வைத்திறன் படிப்படியாகக் குறையும்போது, மூளையும் அந்த நபரும் அறியாமலேயே அந்த மாற்றத்துக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஒருவருக்குத் தொலைவில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றால், அவர் அவற்றை அருகில் சென்று பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இதனால், தனது பார்வை குறைந்துவருவது அவருக்கு உடனடியாகத் தெரியாமல் போகலாம். குறிப்பாக, இரண்டு கண்களிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டால், பிரச்னையைத் தாமதமாகவே அவர் உணரக்கூடும்."

"ஒரு கண்ணின் பார்வைத்திறன் குறைந்தால், மற்றொரு கண் ஓரளவுக்குச் சமநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், இரண்டு கண்களையும் பயன்படுத்திப் பார்க்கும்போது பார்வை வழக்கம்போல இருப்பதாக அந்த நபருக்குத் தோன்றலாம். குறிப்பாக, கிளாக்கோமா போன்ற சில நோய்களில் பக்கவாட்டுப் பார்வை படிப்படியாகக் குறைவதால், ஆரம்பத்தில் இந்த மாற்றம் கவனத்துக்கு வருவதில்லை.'' என டாக்டர் ஹிரே கூறுகிறார்.

"இருப்பினும், இத்தகைய மாற்றங்களால் அன்றாடச் செயல்பாடுகளில் சில நுட்பமான சிரமங்கள் ஏற்படலாம். உதாரணமாக, இரவில் வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்படுவது, படிக்கட்டுகளில் கால் வைக்கும்போது கணிப்பு தவறி நிலைதடுமாறுவது, நடக்கும்போது அருகில் உள்ளவர்கள் அல்லது பொருள்கள் மீது மோதுவது, படிக்கும்போது அடிக்கடி வரி தவறுவது அல்லது எதிரில் இருப்பவரின் முகத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை நிகழலாம். எனவே, பார்வையில் மிகச் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும்கூட அவற்றைப் புறக்கணிக்காமல் கண்களைப் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்."

பக்கவாட்டுப் பார்வை குறைவது என்றால் என்ன?

பக்கவாட்டுப் பார்வை என்பது நாம் நேராகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்க்க உதவும் பார்வைத்திறனாகும்.

இந்தப் பார்வை குறையும்போது, ஒருவர் அடிக்கடி பொருள்கள் மீது மோதுவது, கூட்டத்தில் நடக்கச் சிரமப்படுவது, படிப்பதில் சிரமம் ஏற்படுவது அல்லது இரவில் சரியாகப் பார்க்க முடியாமல் போவது போன்ற அனுபவங்களை எதிர்கொள்ளலாம். வாகனம் ஓட்டும்போதோ சாலையில் நடக்கும்போதோ விபத்துகள் ஏற்படலாம் அல்லது விபத்துகள் நூலிழையில் தவிர்க்கப்படலாம்.

கிளாக்கோமா நோயில் இந்த மாற்றம் மிக மெதுவாக ஏற்படக்கூடும். மையப் பார்வை நீண்ட காலத்துக்கு நன்றாக இருப்பதால், நோய் தீவிரமடையும் வரை பக்கவாட்டுப் பார்வை குறைந்திருப்பதை ஒருவர் உணராமல் இருக்கலாம்.

இரவில் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவதும், அதன்பிறகு பக்கவாட்டுப் பார்வை படிப்படியாகக் குறைவதும், ஒப்பீட்டளவில் அரிதான மரபுவழி நோயான ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா என்பதுடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.

படிக்கும்போது அதிக வெளிச்சம் தேவைப்படுவது, இரவில் பார்வை குறைவது, மங்கலாகத் தெரிவது, கண்களுக்கு முன்னால் புள்ளிகள் தெரிவது அல்லது ஒளி மின்னுவதுபோல் உணர்வது, நிறங்களை அடையாளம் காண்பதில் மாற்றங்கள் ஏற்படுவது ஆகியவற்றைச் சிலர் வயதின் விளைவாகக் கருதுகிறார்கள். ஆனால், இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டாலோ அவற்றில் மாற்றம் ஏற்பட்டாலோ கண்களைப் பரிசோதனை செய்வது அவசியம்.

கண்ணாடி அணிந்த பிறகு பார்வை தெளிவாக இருப்பதற்கும் கண்கள் முழுமையாக ஆரோக்கியமாக இருப்பதற்கும் என்ன வேறுபாடு என்று டாக்டர் ஸ்வாதி ஹிரேவிடம் கேட்டோம்.

அதற்கு அவர் கூறியதாவது, "கண்ணாடியின் பவரைச் சரிசெய்வதன் மூலம் பார்வையைத் தெளிவாக்க முடியும். ஆனால், அதனால் கண்களில் எந்த நோயும் இல்லை என்று அர்த்தமல்ல. கிளாக்கோமா, விழித்திரை அல்லது கண்ணின் பின்பகுதியுடன் தொடர்புடைய சில நோய்கள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போதுகூட கண்ணாடி அணிந்தால் பார்வை தெளிவாக இருக்கலாம். எனவே, கண்ணாடியின் பவரை மட்டும் பரிசோதிப்பதும், கண்களை முழுமையாகப் பரிசோதிப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.

கண்ணாடியின் பவரைப் பரிசோதிக்கும்போது, பார்வை எந்த அளவுக்குத் தெளிவாக இருக்கிறது, சரியான பவர் என்ன என்பவை முக்கியமாகக் கணக்கிடப்படுகின்றன. ஆனால், கண்களை முழுமையாகப் பரிசோதிக்கும்போது, கண்ணின் உள் அழுத்தம், விழித்திரை, பார்வை நரம்பு - அதாவது கண்ணிலிருந்து மூளைக்குக் காட்சித் தகவல்களைக் கொண்டு செல்லும் நரம்பு மற்றும் கண்ணின் உட்புறத்தில் உள்ள பிற பகுதிகளையும் பரிசோதிக்க முடியும்." என்றார்.

''எனவே, கண்ணாடி அணிபவர்கள் அதன் பவர் அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்பது போதாது. குறிப்பாக, வயது அதிகரிக்கும்போது, குடும்பத்தில் கிளாக்கோமா பாதிப்பு இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் அல்லது பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் கண்களை முழுமையாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.''

பார்வைத்திறன் குறையத் தொடங்குவது எப்படி?

பார்வைத்திறன் குறையத் தொடங்குவது பல நேரங்களில், மிகச் சிறிய மாற்றங்களுடன்தான் தொடங்குகிறது. நடக்கும்போது அடிக்கடி பொருள்கள் மீது மோதுவது, பக்கவாட்டில் வரும் கார் அல்லது ஸ்கூட்டர் கண்ணுக்குத் தெரியாமல் போவது, ஜன்னல் கம்பிகள் அல்லது கதவு நிலைகள் வளைந்துபோல் தெரிவது, குறைந்த வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது அல்லது ஒரு கண்ணில் திடீரெனப் பார்வை மங்குவது போன்றவை பார்வை தொடர்பான தீவிரப் பிரச்னைகளின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

குறிப்பாக, கிளாக்கோமா அல்லது நீரிழிவு விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்னைகள் எவ்வாறு தொடங்குகின்றன என்று மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள ஏஎஸ்ஜி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றும் டாக்டர் சுவீரா ஜெயினிடம் கேட்டோம்.

"கண்ணின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு தொடங்கும் என்பது அமையும். கிளாக்கோமாவின் மிகவும் பொதுவான வகையில் ஆரம்பத்தில் வலி இருக்காது. முதலில் சுற்றுப்புறப் பார்வை, அதாவது பக்கவாட்டுப் பார்வை குறையக்கூடும். இதனால், நோய் வெகுவாக முன்னேறும் வரை பலருக்குப் பிரச்சினை இருப்பது தெரியாது.

வயது தொடர்பான மாகுலர் சிதைவு நோயில் மையப் பார்வை படிப்படியாகக் குறையலாம். நேரான கோடுகள் வளைந்தோ அலைகளைப் போன்றோ தெரியலாம். பார்வையின் மையப்பகுதியில் சாம்பல் நிறமான அல்லது வெற்றிடத்தைப் போன்ற பகுதியும் தெரியக்கூடும். விழித்திரைப் பிரிதல் ஏற்பட்டால், பார்வை குறைவதுடன் திடீரெனக் கண்களுக்கு முன்னால் கரும்புள்ளிகள் அல்லது மிதக்கும் உருவங்கள் தோன்றுவது, ஒளி மின்னுவதுபோல் தெரிவது அல்லது பக்கவாட்டுப் பார்வை குறைவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.'' என்றார்

"நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பாதிப்புகளில் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். நோய் முன்னேறும்போது பார்வை மங்குவது, கண்களுக்கு முன்னால் புள்ளிகள் அல்லது உருவங்கள் மிதப்பது, இரவில் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது அல்லது மையப் பார்வையில் விசித்திரமான மாற்றங்கள் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் தோன்றலாம்.

குழந்தைகளிடம் ஏற்படும் மையோப்பியா எனப்படும் கிட்டப்பார்வைப் பிரச்னையும் அதிகரித்து வரும் கவலைக்குரிய விஷயமாகும். இதில் அருகில் உள்ள பொருள்கள் தெளிவாகவும் தொலைவில் உள்ள பொருள்கள் மங்கலாகவும் தெரியும். ஓர் ஆய்வின் மதிப்பீட்டின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புற இந்தியக் குழந்தைகளிடையே மையோப்பியாவின் பாதிப்பு 48 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்'' என்று தெரிவித்தார்.

சிறிய அறிகுறிகளைப் புறக்கணிக்கலாமா?

  • நடக்கும்போது கதவு நிலைகள் அல்லது பொருள்கள் மீது மோதுவது.
  • பக்கவாட்டில் வரும் ஸ்கூட்டர் அல்லது வாகனம் உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாமல் போவது.
  • ஜன்னல் கம்பிகள் அல்லது கதவு நிலைகள் போன்ற நேரான கோடுகள் வளைந்துபோல் தெரிவது.
  • பார்வையின் மையப்பகுதியில் சாம்பல் நிறமான அல்லது வெற்றிடத்தைப் போன்ற பகுதி தெரிவது.
  • குறைந்த வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.
  • திடீரெனப் பல மிதக்கும் புள்ளிகள் அல்லது உருவங்கள் (Floaters) தெரிவது.
  • கண்களுக்கு முன்னால் ஒளி மின்னுவதுபோல் தோன்றுவது.
  • ஒரு கண்ணில் மட்டும் பார்வை மங்குவது.

எந்த அறிகுறிகளும் இல்லாமல்கூட கண் பார்வை பாதிக்குமா?

''ஆம். எந்த அறிகுறிகளும் இல்லாமல்கூட கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்'' என்று டாக்டர் ஜெயின் கூறினார்.

டாக்டர் ஜெயின் அளித்த தகவலின்படி, இந்தியாவில் கிளாக்கோமா பாதிப்பு ஏற்பட்டுள்ள பலருக்கு அந்த நோய் கண்டறியப்படுவதில்லை.

சில நோய்களால் ஏற்பட்ட பார்வை இழப்பை மீண்டும் சரிசெய்வது சாத்தியமில்லாமல் போகலாம்.

  • கிளாக்கோமா: கிளாக்கோமாவால் ஏற்கெனவே இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது. இருப்பினும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைத் தொடங்கினால், தொடர்ந்து ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவோ தடுக்கவோ முடியும்.
  • நீரிழிவு விழித்திரை பாதிப்பு: ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நோய் முன்னேறினால் பார்வைக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படலாம். சில நேரங்களில் இந்தப் பாதிப்பு நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.
  • வயது தொடர்பான மாகுலர் சிதைவு: இந்த நோய் விழித்திரையில் உள்ள மாகுலா என்ற பகுதியைப் பாதிக்கிறது. படிப்பது, முகங்களை அடையாளம் காண்பது போன்ற செயல்களுக்கு அவசியமான தெளிவான மையப் பார்வையை வழங்குவதில் மாகுலா முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • AMD நோயின் உலர் வகை (Dry AMD), சில நோயாளிகளிடம் ஈர வகையாக (Wet AMD) மாறக்கூடும். எனவே, உரிய நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது பார்வை சற்றே மங்குவது, நிறங்கள் வெளிறியதாகத் தெரிவது, ஒளி மற்றும் இருளுக்கு இடையிலான வேறுபாட்டை உணரும் திறன் குறைவது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். இந்த நோய் வலியற்றது என்பதால், பலருக்கும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் தோன்றுவதில்லை. நேரான கோடுகள் வளைந்து தெரிவது அல்லது பார்வையின் மையப்பகுதியில் புள்ளி தெரிவது போன்ற அறிகுறிகள் ஏற்படும் வரை, சிலர் கண்ணாடியின் பவர் மாறியிருக்கலாம் என்றே நினைக்கக்கூடும்.

சிலர் கண்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஏன்?

  • நீரிழிவு நோய் உள்ளவர்கள்: நீரிழிவு நோய் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்பதுடன் கண் பாதிப்புகளுக்கான அபாயமும் அதிகரிக்கக்கூடும்.
  • உயர் ரத்த அழுத்தம் அல்லது குடும்பத்தில் கிளாக்கோமா பாதிப்பு உள்ளவர்கள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவை கிளாக்கோமா அபாயத்தை மதிப்பிடும்போது கவனத்தில் கொள்ளப்படும் முக்கியக் காரணிகளாகும்.
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வயது அதிகரிக்கும்போது பல்வேறு பார்வை தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
  • மையோப்பியா உள்ளவர்கள்: கிட்டப்பார்வை என்பது கிளாக்கோமா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாகும்.
  • நீண்டகாலமாக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள்: நீண்டகால ஸ்டீராய்டு பயன்பாடு கிளாக்கோமா அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி ஸ்டீராய்டு கலந்த கண் சொட்டு மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முக்கியம்.

ஆபத்தான அறிகுறிகள் என்ன?

திடீரெனப் பல மிதக்கும் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கு முன்னால் ஒளி மின்னுவது, பார்வைக்கு முன்னால் திரை அல்லது நிழல் விழுந்ததுபோல் தெரிவது அல்லது திடீரெனப் பார்வை இழப்பு ஏற்படுவது ஆகியவை விழித்திரைப் பிரிதலின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.

பட்டாசுகள் அல்லது வேறு காரணங்களால் கண்ணில் காயம் ஏற்பட்டால் கண்ணைத் தேய்க்கக் கூடாது. காயம் சிறியதாகத் தோன்றினாலும் மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

அதேபோல், காற்று மாசு அதிகமாக இருக்கும் நாட்களில் கண்களில் எரிச்சல் அல்லது நீர் வடிதல் மட்டுமின்றி வலி அல்லது பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டால் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது.

கண்களை எத்தனை கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும்?

இதுகுறித்து வெவ்வேறு மருத்துவ வழிகாட்டுதல்களில் பரிசோதனை செய்ய வேண்டிய கால இடைவெளியில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

டாக்டர் ஜெயின் அளித்த ஆலோசனையின்படி, எந்த அறிகுறிகளும் இல்லாத 40 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிக அபாயம் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, கண் சொட்டு மருந்துகள் மூலம் கண் பாவையை விரிவடையச் செய்து மேற்கொள்ளப்படும் விரிவான விழித்திரைப் பரிசோதனை குறிப்பாக முக்கியமானது.

அமெரிக்கக் கண் மருத்துவக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, 40 வயதில் அடிப்படை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் 54 வயது வரை இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 55 முதல் 64 வயது வரை ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பரிசோதனை செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசோதனை அட்டவணை பொருந்தாது. வயது, நீரிழிவு நோய், குடும்ப மருத்துவ வரலாறு, ஏற்கெனவே உள்ள கண் நோய்கள் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, எவ்வளவு கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை கண் மருத்துவர் தீர்மானிக்கலாம்.

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

டாக்டர் ஜெயின் கருத்துப்படி, சில நடவடிக்கைகள் குறிப்பாக முக்கியமானவை.

''கண்களை முழுமையாகத் தவறாமல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, வயது 40-ஐத் தாண்டியிருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் அல்லது குடும்பத்தில் கிளாக்கோமா பாதிப்பு இருந்தால் இந்தப் பரிசோதனை அவசியம்.

நீரிழிவு நோயையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். சரியான உணவு, உடற்பயிற்சி, தேவையான மருந்துகள் மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகள் முக்கியமானவை.குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்குவியுங்கள்.'' என்றார்

டாக்டர் ஜெயின் குறிப்பிட்ட டெல்லியில் 10,000 பள்ளிக் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக வெளியில் செலவிடுவது மையோப்பியா அதிகரிப்பைக் குறைப்பதுடன் தொடர்புடையதாக இருந்தது.

அத்துடன் டாக்டர் ஜெயின் மேலும் சில முக்கிய விஷயங்களை பட்டியலிட்டார்.

புகைபிடிப்பதைத் தவிருங்கள். புகைபிடிப்பதற்கும் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதற்கும் தொடர்பு உள்ளது.

புற ஊதாக் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்குங்கள். வெளியில் செல்லும்போது புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் திறன் கொண்ட சன்கிளாஸ்களைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

கண்களில் காயம் ஏற்படாமல் கவனமாக இருங்கள். கண்ணில் காயம் ஏற்பட்டால் தேய்க்க வேண்டாம்; மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

மிக முக்கியமாக, மருத்துவரின் ஆலோசனையின்றி கண் சொட்டு மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக, ஸ்டீராய்டு கலந்த கண் சொட்டு மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கண்களில் காயம் ஏற்படும் அபாயமுள்ள பணிகளைச் செய்யும்போதும் கண்களைப் பாதுகாக்கும் உபகரணங்களைப் பயன்படுத்துங்கள்.

திடீரெனப் பார்வை குறைவது, ஒளி மின்னுவது, பல புள்ளிகள் அல்லது கோடுகள் தெரிவது, கண்களுக்கு முன்னால் திரை விழுந்ததுபோல் தோன்றுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

வாழ்க்கைமுறையில் முக்கியமான மாற்றங்களைச் செய்ய விரும்பினாலும், உணவில் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பினாலும், மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அல்லது உடற்பயிற்சியைத் தொடங்க விரும்பினாலும் மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்றுநர்களின் உதவியைப் பெறுவது அவசியம். மருத்துவரை அணுகாமல் சுயமாகச் சிகிச்சை செய்துகொள்வது ஆபத்தானதாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு