நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
பெரும் கவனத்தை ஈர்த்த கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து விலகிய சீனா: இலங்கை பொருளாதாரத்திற்குப் பின்னடைவா?
- எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சீன அரசு நிறுவனமான 'சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்' (china merchants port holdings), 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொழும்புத் துறைமுகத் தளவாட மையக் கூட்டுத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த 50 ஆண்டுக்கால "கட்டியெழுப்புதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல்" ஒப்பந்தம் கலைக்கப்பட்டிருப்பது, பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இலங்கையின் நிதியியல் மீட்புப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, 2022-ஆம் ஆண்டு நிலவிய கடுமையான கடன் செலுத்தா நிலைக்குப் (Debt Default) பிறகு இலங்கைக்குக் கிடைத்த முதன்மையான அந்நிய நேரடி முதலீடாகக் கருதப்பட்ட இத்திட்டம் முடங்கியிருப்பது, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது.
தனது நிதி நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்ப முயன்று வரும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு, பல கோடி டொலர் மதிப்பிலான ஒரு முதன்மைத் திட்டம் ரத்தாவது உளவியல் ரீதியான பின்னடைவாகக் கருதப்படுகிறது. பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட தாமதங்கள், அதிகாரத்துவத் தடைகள் மற்றும் ஒழுங்குமுறை உராய்வுகளுக்கு இன்னும் ஆளாகக்கூடிய அபாயத்தில் உள்ளன என்பதையே இந்த வெளியேற்றம் வெளிப்படுத்துகிறது.
நிதித் தீர்வு மற்றும் பங்கு பிரிப்புத் தரவுகள்
ஒப்பந்த முடிவுக்கு அமைவாக, திட்ட நிறுவனமான கொழும்புத் துறைமுகத் தளவாட மையக் கூட்டுத் திட்டத்தில் இருந்து இலங்கைத் துறைமுக அதிகாரசபை 21.905 மில்லியன் அமெரிக்க டொலரை திரும்பச் செலுத்துகிறது. 26 மில்லியன் டொலர் தீர்வுக் கணக்கீட்டில் இருந்து 3.9 மில்லியன் டொலர் பெறுமதிசேர் வரி மற்றும் 1.95 லட்சம் டொலர் தாமதக் கட்டணம் கழிக்கப்பட்டு இத்தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
இத்தொகையுடன் நிறுவனத்தின் மீதமுள்ள 7.85 மில்லியன் டொலர் இருப்பும் சேர்த்து பங்குதாரர்களிடையே அவர்களின் பங்களிப்பு விகிதத்தின்படி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இதன்படி, 70% பங்குகளை வைத்துள்ள சைனா மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஃபார்ச்சூன் சென்டர் குரூப்' மற்றும் முறையே 15% பங்குகளை வைத்துள்ள அக்சஸ் இன்ஜினியரிங், இலங்கைத் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றுக்கு உரிய தொகைகள் பிரித்தளிக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கடும் நிதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கும் அரசு நிறுவனங்களுக்கு, ரத்து செய்யப்படும் திட்டங்களுக்காக எதிர்பாராமல் மூலதனம் வெளியேறுவது குறுகிய காலத்தில் நிர்வாக ரீதியான சவாலாக அமையும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிதி மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள்
இத்திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தற்போதைய சந்தை வணிக நிலைமைகள் மற்றும் வெளிப்புறக் காரணிகளைக் கருத்தில் கொண்டே பிரதான முதலீட்டு நிறுவனம் விலகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒப்பந்த முடிவுக்கு அமைவாக, திட்ட நிறுவனமான தெற்காசிய வணிக மற்றும் தளவாட முனையதிற்கு இலங்கைத் துறைமுக அதிகாரசபை 21.905 மில்லியன் டொலரை திரும்பச் செலுத்துகிறது.
இத்தொகையுடன் நிறுவனத்தின் மீதமுள்ள 7.85 மில்லியன் டொலர் இருப்பும் சேர்த்து பங்குதாரர்களிடையே அவர்களின் பங்களிப்பு விகிதத்தின்படி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இதன்படி, பிரதான முதலீட்டாளரான சைனா மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.08 கோடி டொலரும், இலங்கையின் அக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் இலங்கைத் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றுக்குத் தலா 44.6 லட்சம் டொலரும் கிடைக்கும் என தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கடும் நிதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கும் அரசு நிறுவனங்களுக்கு, ரத்து செய்யப்படும் திட்டங்களுக்காக எதிர்பாராமல் மூலதனம் வெளியேறுவது குறுகிய காலத்தில் நிர்வாக ரீதியான சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
திட்டம் முடங்கியது ஏன்? - சலுகைகளும் தாமதங்களும்
2023-ஆம் ஆண்டு டிசம்பரில், இலங்கை அரசு இந்தத் தளவாட மையத்தை ஒரு மூலோபாய அபிவிருத்தித் திட்டமாக வர்த்தமானியில் அறிவித்து, 15 ஆண்டுகளுக்குக் கூட்டுத்தாபன வருமான வரி மற்றும் பங்கிலாப வரியிலிருந்து விலக்கு அளித்திருந்தது. எனினும், திட்டம் எதிர்பார்த்தபடி முன்நகரவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்கீழ் அளித்த கடப்பாடுகளுக்கு அமைய, இத்தகைய சிறப்பு வரிச் சலுகைகளை இலங்கை திரும்பப் பெற்றதே திட்டம் முடங்கியதற்கு முதன்மைக் காரணம் என, அப்போதைய துறைமுக அதிகாரசபைத் தலைவர் சிறிமேவன் ரணசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இத்திட்டம் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த பல்வேறு தடைகளைச் சந்தித்ததாகக் கப்பல் துறைசார் இதழான 'லாயிட்ஸ் லிஸ்ட்' செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த மே மாதத்திலேயே முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், இத்திட்டம் தொடராது என்றும், அக்காணிக்கு புதிய முன்மொழிவுகள் கோரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
துறைமுக அதிகாரசபையின் புதிய திட்டம்
கொழும்புத் துறைமுகத்தில் புதிய ஒருங்கிணைந்த தளவாட மையத்தைப் பொது–தனியார் கூட்டாண்மை மூலம் திறந்த போட்டி ஏலச் செயல்முறை வாயிலாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிகாரசபை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தை வெறும் கொள்கலன் இடைமாற்று மையமாக மட்டும் வைத்திருக்காமல், மதிப்புக்கூட்டப்பட்ட சர்வதேச கடல்சார் தளவாட மையமாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
வெளிப்படையான சர்வதேச ஏலச் செயல்முறை மூலம் புதிய தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதோடு, அரசுக்குத் தொடர்ச்சியான நீண்டகால வருவாயை ஈட்டவும் இந்த பொது–தனியார் கூட்டாண்மை மாதிரி உதவும் என இலங்கைத் துறைமுக அதிகாரசபை நம்புகிறது.
புவிசார் அரசியலும் வல்லரசுகளின் போட்டியும் - கொழும்பில் தொடரும் இழுபறியும்
சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்-இன் இந்த வெளியேற்றம், இலங்கை கடக்க வேண்டிய நுட்பமான புவிசார் அரசியல் கயிற்றுப் பாதையையும் வெளிச்சமிடுகிறது.
சீனா விலகிய அடுத்த நாளே கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்கா 17 மில்லியன் டொலர் உதவி அறிவித்தது இந்த ஊகங்களை அதிகரித்துள்ளது.
இருப்பினும், சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் இலங்கையை முற்றாகக் கைவிடவில்லை. கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவற்றில் அந்நிறுவனம் தொடர்ந்து பெருமளவு முதலீடு செய்து இயங்கி வருகிறது.
அரசியல் எதிர்வினைகள் மற்றும் குற்றச்சாட்டுகள்
சீன நிறுவனத்தின் இந்த விலகல் குறித்து அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கையில், "பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் வேளையில், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. முதலீடுகளைத் தக்கவைக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசின் பலவீனமான நகர்வுகளையே இது காட்டுகிறது." என்றார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில், "மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்தின் அனுமதி கிடைக்காதது, நிலத்தைக் கையகப்படுத்தத் தவறியது மற்றும் முதலீட்டு சபை வாக்குறுதியளித்த வரிச் சலுகைகளை ரத்து செய்தது ஆகிய இலங்கைத் தரப்பின் தவறுகளினாலேயே சீன நிறுவனம் வெளியேறியுள்ளது. இலங்கை மீது தவறு இல்லை என்றால் துறைமுக அதிகாரசபை பணம் திரும்பச் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை." எனக் குறிப்பிட்டார்.
நிபுணர்களின் கருத்து: முன்னோக்கி நகர்வது எப்படி?
பிபிசி தமிழுக்குக் கருத்து தெரிவித்த சர்வதேச உறவுகள் மூத்த விரிவுரையாளரும் உலக அரசியல் பகுப்பாய்வாளருமான குலானி விஜயபாகு, "இலங்கை புவிசார் அரசியல் ஊகங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தனது 'சிறிய நாட்டு முகமை' ஆற்றலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
இலங்கை ஒரே நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல் பல்வேறு நாடுகளிடமிருந்து போட்டித்தன்மை கொண்ட முன்மொழிவுகளை அழைத்து முதலீட்டாளர்களைப் பல்வகைப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வெறுமனே டொலர் மதிப்பை மட்டும் பார்க்காமல் உள்ளூர் வேலைவாய்ப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் அரசு வருவாய்க்கான செயல்திறனில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
திட்டத் தாமதங்களை ஏற்படுத்தும் உள்நாட்டு அதிகாரத்துவத் தடைகளையும் அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புப் பிரச்னைகளையும் களைவதற்கான நிர்வாகச் சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடியும் சர்வதேச நேரடி முதலீட்டு இலக்குகளும் இலங்கையின் தற்போதைய நிலையும்
வாக்குறுதியளிக்கப்பட்ட 392 மில்லியன் டொலர் முதலீட்டில் இதுவரை 37.1 மில்லியன் டொலர் (சுமார் 10%) மட்டுமே இலங்கைக்கு வந்துள்ளது. இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் எஞ்சிய பெருந்தொகை முதலீடு ரத்தாகியுள்ளதுடன், உள்ளூர் பங்காளிகளான அக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு புதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிய வேண்டிய சுமை உருவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் வரி திருத்த சட்டம் 6 முறைக்கும் மேலாகத் திருத்தப்பட்டமை போன்ற கொள்கை நிலையற்ற தன்மைகளே சர்வதேச முதலீட்டாளர்கள் தயங்குவதற்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நிர்ணயித்த இலக்குகளை அடைவதில் சவால்களைச் சந்தித்து வருகிறது.
முதலீட்டுச் சபையின் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதல் ஆறு மாதங்களில், ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு அண்ணளவாக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது என முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. எஞ்சிய முதலீடுகளை ஈர்க்க ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகத்தை இருமடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது.
தளவாட மையத் திட்டத்திலிருந்து சைனா மெர்ச்சன்ட்ஸ் வெளியேறுவது இலங்கைக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆயினும், வெளிப்படையான பொது–தனியார் கூட்டாண்மை கட்டமைப்பின் மூலம் புதிய, பல்வகைப்பட்ட சர்வதேச மூலதனத்தை ஈர்க்க இந்த வாய்ப்பை இலங்கை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்டால், அது சந்தைக்கேற்ப மாறும் நாட்டின் நிறுவனரீதியான முதிர்ச்சியையே வெளிப்படுத்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு