'அணையாத தீப்பிழம்பு': அஜர்பைஜானில் உள்ள இந்த கோயிலுக்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அடேஷ்கா அக்னி கோயிலுக்கு எஸ். ஜெய்சங்கர் சென்றார்.

இந்தப் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், "பாகுவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அடேஷ்கா அக்னி கோயிலுக்குச் சென்றேன். இது நமது இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகளின் அடையாளமாக விளங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய நாடான அஜர்பைஜானின் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாடு முன்பு சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இங்குள்ள, சுரகானி அருகே அமைந்துள்ள அடேஷ்கா அக்னி கோயிலில் தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீ கணேஷாய நமஹ" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தின் அக்னி கடவுளான ஜ்வாலா ஜி உள்ளிட்ட பிற தெய்வங்களைப் போற்றும் வகையில் தேவநாகரி எழுத்துகளில் மேலும் ஐந்து வரிகள் இடம்பெற்றுள்ளன.

பாகுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தகவலின்படி, அடேஷ்கா கோயிலில் தேவநாகரி எழுத்துகளில் 18 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விநாயகரை போற்றும் வாசகங்களுடன் தொடங்குகின்றன. ஜ்வாலா ஜி பற்றிய குறிப்புகள் பத்துக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலான கல்வெட்டுகள் 'ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ' என்ற வாசகத்துடன் தொடங்குகின்றன.

ஜ்வாலா தேவி பத்துக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்து மதத்தின் புனிதமான ஸ்வஸ்திக் சின்னம் ஆறு கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

அக்னி வழிபாட்டுக்கான பீடத்துக்கும் இந்தியக் கல்வெட்டுகளுக்கும் புகழ்பெற்ற இந்தக் கோயில், அப்ஷெரோன் தீபகற்பத்தின் அக்னி வழிபாட்டு மரபுகளுக்கும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்த யாத்ரீகர்கள் மற்றும் வணிகர்களுக்கும் இடையிலான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.

யுனெஸ்கோ தகவலின்படி, இங்குள்ள கட்டடங்கள் 17 முதல் 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.

கோயிலின் வரலாறு

யுனெஸ்கோ அறிக்கையின்படி, இந்தக் கோயில் அமைந்துள்ள நிலவியல் சூழல் அதன் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அப்ஷெரோன் தீபகற்பத்தில், நிலத்தடியில் இருந்து இயற்கை எரிவாயு வெளியேறியதால் தீப்பிழம்புகள் உருவாயின. இதனால் இந்த இடம் மத முக்கியத்துவம் பெற்றது.

இந்த இடத்தின் தொடக்ககால வரலாறு ஜொராஸ்ட்ரிய மதத்துடன் தொடர்புடையது. இருப்பினும், தற்போது காணப்படும் கோயில் வளாகத்தின் பெரும்பாலான கட்டடங்கள் அதைவிடப் பிற்காலத்தைச் சேர்ந்தவை.

இந்த இடத்துடன் தொடர்புடைய பழங்கால மத நம்பிக்கைகளையும், இங்கு தற்போது காணப்படும் கட்டடங்களின் உண்மையான காலத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம்.

17-ஆம் நூற்றாண்டில் மீண்டும் யாத்திரைகள் அதிகரிக்கத் தொடங்கின.

அதிகாரப்பூர்வப் பதிவுகளின்படி, 1683-ஆம் ஆண்டு இந்த இடத்துக்கு வந்த ஜெர்மானியப் பயணி எங்கல்பர்ட் கேம்ப்ஃபர், அந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாத்ரீகர்கள் கோயிலைப் புனரமைக்கத் தொடங்கியதாகப் பதிவு செய்துள்ளார்.

கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தக் கோயில் வளாகம் தற்போதுள்ள வடிவத்தைப் பெற்றிருந்தது.

அடேஷ்கா கோயிலின் இந்தியத் தொடர்பு அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோவிடம் அஜர்பைஜான் சமர்ப்பித்துள்ள ஆவணத்தில், முல்தானிலிருந்து வந்த யாத்ரீகர்களுக்கான யாத்திரைத் தலமாகவும் தத்துவ மையமாகவும் இந்த இடம் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்ரீகர்கள் காஸ்பியன் பிராந்தியத்துடன் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.

தற்போது முல்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இருப்பினும், அது பரந்த இந்தியத் துணைக்கண்டத்தின் வர்த்தக மற்றும் மதத் தொடர்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

இந்திய வணிகர்களும் யாத்ரீகர்களும் இந்தக் கோயில் வளாகத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்குப் பண உதவி அளித்ததுடன், அதைப் பயன்படுத்தியும் வந்தனர்.

சில்க் ரூட் மற்றும் இந்தியப் பயணிகளுக்கான ஒரு சுற்றுலாத் தலம்

இங்குள்ள கல்வெட்டுகளில் இந்து மற்றும் சீக்கிய மரபுகள் தொடர்பான சமஸ்கிருதம் மற்றும் பஞ்சாபி மொழி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்து மதப் பிரார்த்தனைகளில் விநாயகர், சிவன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேவேளையில், புனித நெருப்பை வழிபடும் மரபு ஜ்வாலா ஜியுடன் தொடர்புடையதாக இருந்தது.

'தி ஷ்ரின் ஆஃப் டெத்' (The Shrine of Death) நூலின் ஆசிரியர் திவ்யா குமார், இந்தக் கோயில் குறித்து 2018-ஆம் ஆண்டு முன்னணி ஆங்கில நாளிதழான தி இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

"16-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றைக் கொண்ட அடேஷ்கா, இந்தியத் துணைக்கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வரலாறு, உலகமயமாக்கல் மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை எடுத்துக்காட்டும் சுவாரஸ்யமான வரலாற்றுச் சின்னமாகும்"என்றும்,

"ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்த பட்டுப்பாதையின் ஒரு பகுதியாக அஜர்பைஜான் இருந்தது.

அப்ஷெரோன் தீபகற்பத்தின் 'எரியும் நிலம்', 'அணையாத தீப்பிழம்புகள்' பற்றிய கதைகளை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்த வணிகர்கள் அறிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது" என்றும் திவ்யா குமார் எழுதியிருந்தார்.

"இந்தத் தீபகற்பம் இயற்கையாக உருவான தீப்பிழம்புகளுக்குப் புகழ்பெற்றது. உண்மையில், அஜர்பைஜான் பெரும்பாலும் 'நெருப்பின் நிலம்' என்று அழைக்கப்படுகிறது."

இதையடுத்து, 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியப் பயணிகளும் யாத்ரீகர்களும் அங்கு வந்தனர்.

"அவர்கள் அடேஷ்கா கோயிலுக்கு தற்போதைய வடிவத்தைக் கொடுத்தனர். இங்கு புனித நெருப்பை வழிபட்டதுடன், விநாயகருடன் சிவன் உள்ளிட்ட தங்கள் தெய்வங்களையும் வழிபட்டனர்."

திவ்யா குமார் கூறுகையில், "நாங்கள் கோயிலுக்குச் சென்ற நாளில் காற்று மிகவும் பலமாக வீசியது. எங்கும் தூசி பறந்துகொண்டிருந்தது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து 20 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில்தான் நாங்கள் இருந்தோம். உள்ளூர் அசெரி மொழியில் பாகு முறைசாரா வகையில் 'காற்றின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கோயில் வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ள உயரமான பிரதான நெருப்புப் பீடத்தில் இருந்த புனிதத் தீப்பிழம்பு, பலத்த காற்றையும் மீறித் தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது." என்றார்.

"மையத்தில் உள்ள இந்தத் தீப்பிழம்புக்கும், அதன் பக்கவாட்டில் அமைந்துள்ள இரண்டு வட்ட வடிவ மேடைகளில் எரியும் திறந்த நெருப்புகளுக்கும் தற்போது பாகுவின் பிரதான எரிவாயுக் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. ஆனால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக்கூட, இந்தத் தீப்பிழம்புகள் இயற்கையாகவே எரிந்துகொண்டிருந்தன.

"அந்நாட்டின் பரந்த இயற்கை எரிவாயு இருப்புகளிலிருந்து வெளியேறும் வாயு, பாறைகளின் மேற்பரப்பில் உள்ள துளைகள் வழியாக வெளியேறி, காற்றுடன் தொடர்பு கொண்டதும் தீப்பற்றிக் கொள்ளும்."

ஜொராஸ்ட்ரியனிசத்துடன் தொடர்புடைய தோற்றங்கள்

"அஜர்பைஜானின் வரலாறு முழுவதும், நெருப்பை வழிபடுபவர்கள் இந்த 'அணையாத தீப்பிழம்புகளை' வழிபட்டு வந்துள்ளனர்.

ஏழாம் நூற்றாண்டு முதலே இந்தப் பகுதியைக் கடந்து சென்ற பயணிகளின் குறிப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன"என்றும் திவ்யா குமார் எழுதியுள்ளார்.

"இந்தியப் பயணிகள் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஜொராஸ்ட்ரியர்கள் இந்தத் அக்னி கோயிலின் முந்தைய வடிவத்தைக் கட்டியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

"1969-ஆம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டபோது, தற்போதைய கட்டடத்தின் அடியில் பழைய கட்டடத்தின் சில பகுதிகள் கண்டறியப்பட்டன.

'அடேஷ்கா' என்ற பெயர் பாரசீக மொழியிலிருந்து வந்தது. இதற்கு 'நெருப்பு வீடு' என்று பொருள்.

"தற்போதைய கோயில் வளாகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் பழைய கோயில் விரிந்திருந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.

இருப்பினும், 19-ஆம் நூற்றாண்டு முதல் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, எஞ்சியிருந்த அதன் பகுதிகள் அழிக்கப்பட்டிருக்கலாம்.

யுனெஸ்கோவிடம் அஜர்பைஜான் சமர்ப்பித்துள்ள ஆவணத்தின்படி, சுரகானி பகுதியில் பெட்ரோலியம் தொடர்பான தொழில் நிறுவனங்கள் விரிவடைந்ததைத் தொடர்ந்து, 1883-ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு, இந்த இடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. தற்போது இது வரலாற்று மற்றும் கட்டடக்கலைச் சிறப்புமிக்க பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

"அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் இன்றும் நிலைத்து நிற்கிறது. அதன் பன்முகக் கலாசாரப் பின்னணிக்கான அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கோயிலின் மையத்தில் உள்ள நெருப்புப் பீடம் முழுமையாக இந்து மதக் கட்டடக்கலை பாணியில் அமைந்திருக்கவில்லை. பாரம்பரிய ஜொராஸ்ட்ரிய நெருப்புப் பீடங்களுடனும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் பாரசீக மொழியில் அமைந்துள்ளது." என்று திவ்யாகுமார் கூறுகிறார்.

"அஜர்பைஜானில் ஜொராஸ்ட்ரிய மதத்தின் தாக்கம் பழமையானது மட்டுமல்ல; ஆழமாக வேரூன்றியதுமாகும். இஸ்லாம் வருவதற்கு முன்பு, பாரசீக வம்சத்தினர் இந்தப் பகுதியை ஆட்சி செய்த காலத்தின் மரபாக இது உள்ளது. இன்றும் கூட, பார்சி புத்தாண்டைக் கொண்டாடும் நவ்ரூஸ் பண்டிகை, அந்நாட்டின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.

வரலாற்றுப் பதிவுகளின்படி, 19-ஆம் நூற்றாண்டில் மும்பையைச் சேர்ந்த பார்சிகளுக்கான யாத்திரைத் தலமாகவும் அடேஷ்கா மாறியது. ஒரு காலத்தில் ஜொராஸ்ட்ரியர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த இந்த இந்தியக் கோயிலுக்கு அவர்கள் வருகை தந்தனர்."

1969-ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட பிறகு, 1975-ஆம் ஆண்டு இந்தக் கோயில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

1998-ஆம் ஆண்டு, இது அதிகாரப்பூர்வமாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு