சௌதியில் மரண தண்டனை: இரு வங்கதேசத்தினரின் உடல்கள் நாடு திரும்புவதில் என்ன சிக்கல்?

    • எழுதியவர், தாரேகுஸ்ஸமான் ஷிமுல்
    • பதவி, பிபிசி வங்க சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பதை தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், உயிரிழந்த இருவரின் உடல்களையும் சௌதி அரசு வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் வசிக்கும் செளதியில் மரண தண்டனை நிறைவேற்ற பெண்ணின் தாய், வெளிநாட்டில் தனது மகள் திடீரென உயிரிழந்த செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போயுள்ளார்.

பல நாட்களாக கிட்டத்தட்ட உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதையே நிறுத்திவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

"இந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து அம்மா தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அவருக்கு வயதாகிவிட்டது. ஏற்கெனவே உடல்நலக் குறைவும் உள்ளது. இந்நிலையில், உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்ளாததால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருகிறது," என்று அந்த தாயின் மற்றொரு மகள் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.

தனது சகோதரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள், குடும்பத்தினர் அவரைப் பற்றிப் பேசியதாகவும் அவர் கூறினார். இருப்பினும், அடுத்த நாளே தங்கள் சகோதரியின் மரணச் செய்தியைக் கேட்க நேரிடும் என்று கற்பனைகூடச் செய்யவில்லை என்று தெரிவித்தார்

"இதுகுறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. என் சகோதரியும் எதையும் சொல்லவில்லை. அவர் செளதி சிறையில் இருக்கிறார் என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். பின்னர், திடீரென நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகக் கூறினார்," என்று செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் பெண்ணின் மூத்த சகோதரி தெரிவித்தார்.

தற்போது அவரது குடும்பத்தினருக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது. செளதி அரேபியாவில் இருந்து அந்தப் பெண்ணின் உடலை வங்கதேசத்துக்குக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அது.

"அரசாங்கம் என் சகோதரியைத் திரும்பக் கொண்டுவர வேண்டும். நான் அவரை இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும்."

செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மற்றொரு வங்கதேச நாட்டவரின் குடும்பத்தினரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

"மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்களாக என் மகனின் முகத்தைப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் கடைசியாக ஒருமுறையாவது அவனைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இளைஞரின் தந்தை பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரு வங்கதேச நாட்டவர்களின் உடல்களையும் தாயகம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக வங்கதேச அரசு உறுதியளித்துள்ளது.

இருப்பினும், அந்த முயற்சி இறுதியில் வெற்றிபெறுமா என்பதில் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

"இதில் சந்தேகப்படுவதற்கு இடமுள்ளது. ஏனெனில், இதுபோன்ற மரண தண்டனையில் உயிரிழக்கும் வெளிநாட்டவர்களின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாத வரலாறு செளதி அரேபியாவுக்கு உள்ளது. இதற்கு முன்பு வங்கதேச நாட்டவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது," என்று பிராக் என்ற அரசு சாரா அமைப்பின் இணை இயக்குநரும், அந்த அமைப்பின் இடம்பெயர்வு தொடர்பான திட்டத்தின் தலைவருமான ஷரிஃபுல் ஹசன் தெரிவித்தார்.

செளதி அரேபியாவின் அரசு செய்தி நிறுவனமான செளதி பிரஸ் ஏஜென்சி, அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தது.

மெக்கா நகரில் உள்ள ஒரு மசூதியில் "தகாத செயல்களில் ஈடுபட்டதாகக்" கூறி, அந்நாட்டு நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து செளதி அரேபிய அதிகாரிகள் அங்குள்ள வங்கதேசத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று வங்கதேச அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், வியன்னா உடன்படிக்கையின்படி, ஒரு நாட்டைச் சேர்ந்த குடிமகன் மற்றொரு நாட்டில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ, அவர் சார்ந்த நாட்டின் அரசு அல்லது தூதரக அதிகாரிகளுக்கு அதுகுறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஆனால், அவ்வாறு தகவல் தெரிவிக்கத் தவறியதன் மூலம் செளதி அரேபியா வியன்னா உடன்படிக்கையை மீறியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வங்கதேச மக்கள் விவாதித்து வருகின்றனர். சிலர் தங்களது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முந்தைய சம்பவங்கள் உணர்த்துவது என்ன?

மனித உரிமை அமைப்புகளின் தகவல்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்றாக உள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2014 ஜனவரி முதல் 2025 ஜூன் வரை சௌதி அரேபியாவில் குறைந்தது 1,816 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களில், 2024-ஆம் ஆண்டில் மட்டும் 345 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

2025-ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் தரநிலைகளின்படி, இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.

சௌதி அரேபியாவில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கவலை தெரிவித்துள்ளது. அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கும் மரண தண்டனை உள்ளிட்ட "கொடூரமான தண்டனைகள்" விதிக்கப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ததில், அவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள் என்பது தெரியவந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மட்டுமின்றி, திருட்டு, கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட பிற குற்றங்களுக்காகவும் வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவல்களின்படி, பல்வேறு காலகட்டங்களில் செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் அந்நாட்டு அரசு ஒப்படைக்காமல் இருந்துள்ளது.

சில சம்பவங்களில், தங்கள் உறவினர்களின் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது என்பதுகூடத் தெரிவிக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோருக்கு செளதி அரேபிய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளன.

இதில் அதிகம் பேசப்பட்ட சம்பவம் 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது, ரியாத்தில் பணிபுரிந்த எட்டு வங்கதேசத் தொழிலாளர்களுக்கு எகிப்து நாட்டவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

"ஆனால், அவர்களில் யாருடைய உடலும் வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. இம்முறையும் அதே நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்று பிராக் அமைப்பின் இடம்பெயர்வு திட்டத் தலைவர் ஷரிஃபுல் ஹசன் தெரிவித்தார்.

ஆனால், வெளிநாட்டவர்களின் உடல்களைத் திருப்பி அனுப்புவதில் செளதி ஏன் தயக்கம் காட்டுகிறது?

"விபத்துகளில் உயிரிழக்கும் வெளிநாட்டவர்களின் உடல்களைத் திருப்பி அனுப்புவதில் செளதி அரசுக்கு ஆட்சேபனை இருப்பதில்லை. சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழும் வழக்குகளில்தான் இத்தகைய தயக்கம் இருக்கக்கூடும். சர்ச்சைக்குரிய ஒரு வழக்கில் உயிரிழந்தவரின் உடலைத் திருப்பி அனுப்பினால், பின்னர் அது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படலாம் அல்லது கேள்விகள் எழுப்பப்படலாம் என்று செளதி அரசு அஞ்சக்கூடும்," என்று ஷரிஃபுல் ஹசன் மேலும் தெரிவித்தார்.

வங்கதேச அரசு என்ன சொல்கிறது?

வங்கதேச அரசு உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டால், உயிரிழந்தவர்களின் உடல்களைத் திரும்பப் பெறுவது கடினமாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"பெரும்பாலும், பாதிக்கப்பட்ட நாட்டின் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளன என்பதையும், அந்த நாட்டின் குடிமக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதையும் பொறுத்தே இது அமைகிறது," என்று ஷரிஃபுல் ஹசன் தெரிவித்தார்.

சௌதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை நாட்டவர் ஒருவருக்கு, முகமது நபி குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக மதநிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் அந்த இலங்கை நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒரு கட்டத்தில், இலங்கை அரசு மேற்கொண்ட தூதரக முயற்சிகளின் விளைவாக மரண தண்டனையை செளதி ரத்து செய்தது.

"நமது அரசு தூதரக நடவடிக்கைகள் மூலம் சௌதி அரசுக்கு திறம்பட அழுத்தம் கொடுத்தால், உயிரிழந்த இருவரின் உடல்களையும் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு ஏற்படும். இல்லையெனில், உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் செய்யக்கூடும்," என்று பிராக் அமைப்பின் ஷரிஃபுல் ஹசன் தெரிவித்தார்.

வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தச் சம்பவம் குறித்து விரிவான தகவல்களைக் கோரி சௌதி அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பின் நகலையும் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகத் திரும்பப் பெற்று, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நிச்சயமாக முயற்சி செய்வோம்," என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு