பிரேசிலில் 4-வது முறையாக அதிபராகும் லுலா: அமெரிக்காவுக்கு ஏமாற்றமா?

    • எழுதியவர், மெரினா ரோஸ்ஸி, லியாண்ட்ரோ ப்ரேஸெரஸ், வனேசா புஷ்ஷ்ளூட்டர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரேசிலின் மூத்த இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடுமையான போட்டி நிலவிய தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வலதுசாரி போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அதிபர் தேர்தலில் லுலா வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு, 2003 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரை இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்த அவர், மீண்டும் 2023 ஜனவரியில் அதிபரானார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவரது பயணம் எளிதாக இருக்கவில்லை.

அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் போல்சனாரோ, லுலாவைத் தோற்கடித்திருந்தார். வெறும் மூன்று வாரங்களில் தேர்தல் முடிவை லுலாவால் மாற்ற முடியும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.

லத்தீன் அமெரிக்காவில் நிலவி வரும் பரந்த அரசியல் போக்கிலிருந்தும் லுலாவின் வெற்றி மாறுபட்டுள்ளது. அப்பகுதியில் வாக்காளர்கள் ஆளும் தலைவர்களுக்கு எதிராக வாக்களித்து, வலதுசாரித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா போன்ற பெரிய நாடுகளில்கூட தற்போது பழமைவாதத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஏமாற்றமா?

முதல் சுற்றுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, லுலாவின் தேர்தல் பிரசாரம் மீண்டும் சூடுபிடித்தது. இதற்குப் பொதுமக்களின் வீதிப் போராட்டங்களும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிரசாரமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

முன்னாள் உலோகத் தொழிலாளரான லுலா, 1989-ஆம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டது முதல் பிரேசிலின் இடதுசாரி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இருப்பினும், 2003-ஆம் ஆண்டு முதன்முறையாக அதிபராகப் பதவியேற்ற காலத்திலிருந்து இப்போது அவர் எதிர்கொள்ளும் அரசியல் சூழல் மிகவும் சவாலானதாக உள்ளது.

2027 ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கவுள்ள அவரது புதிய பதவிக்காலம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அமையவுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பகைமையும் அவற்றில் ஒன்றாகும்.

லுலாவின் போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவுக்கு டிரம்ப் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கொலம்பியா மற்றும் ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல்களில் வெற்றி பெற்ற வலதுசாரி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். 21.3 கோடி மக்கள் வசிக்கும் பிரேசிலில் பழமைவாதத் தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வருவதையே டிரம்ப் நிர்வாகம் விரும்பியிருக்கும் என்பதில் பெரிய சந்தேகம் இல்லை.

லத்தீன் அமெரிக்காவை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக வெள்ளை மாளிகை கருதுகிறது. பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவின் கொள்கைகளை ஆதரிக்கும் தலைவர்கள் ஆட்சியில் இருப்பதை டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.

மேற்கு அரைக்கோளத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதிலும் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

எண்ணெய் வளம் நிறைந்த பிரேசில், உலகின் இரண்டாவது பெரிய அரிய மண் தாதுக்களின் இருப்பைக் கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் வலதுசாரித் தலைவர் ஆட்சி செய்யாத ஒரே பெரிய நாடாகவும் பிரேசில் உள்ளது. லுலா சீனாவுக்கு நெருக்கமானவராகப் பெரும்பாலும் கருதப்படுகிறார்.

அமெரிக்காவுடன் பிரேசில் இன்னும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் என்று ஃபிளாவியோ போல்சனாரோ வாக்குறுதி அளித்திருந்தார். அதேவேளையில், தேர்தலில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று லுலா எச்சரித்திருந்தார். மேலும், பிரேசில் ஒருபோதும் யாருடைய 'பின்வாசலாகவும்' இருக்காது என்றும் அவர் கூறினார்.

லுலாவின் வெற்றி வெள்ளை மாளிகைக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால், இந்த வெற்றியைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பார்கள். போல்சனாரோ வெற்றி பெற்றிருந்தால், பிரேசிலின் செல்வாக்குமிக்க வேளாண் வணிகம் மற்றும் சுரங்கத் தொழில் துறைகளின் அதிகாரம் மேலும் அதிகரித்திருக்கும் என்று அவர்கள் அஞ்சினர்.

ஃபிளாவியோவின் தந்தையான ஜெய்ர் போல்சனாரோ அதிபராக இருந்தபோது அமேசான் காடுகளில் காடழிப்பும் காட்டுத் தீ சாதனை அளவுகளை எட்டியதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அவரது மகன் ஆட்சிக்கு வந்திருந்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் தளர்த்தப்பட்டு, உலகின் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான அமேசான் மேலும் அழிவைச் சந்தித்திருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

லுலாவின் வாக்குறுதி என்ன?

லுலாவின் வெற்றியைக் கொண்டாடி அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் பிரேசில் ஆழமாகப் பிளவுபட்டிருப்பதைக் காட்டுகின்றன. 48 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் போல்சனாரோவுக்கு வாக்களித்துள்ளனர்.

அரசியல் ரீதியாகத் தீவிரமாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைப்பது மட்டுமின்றி, பிரேசிலின் ஜனநாயக வரலாற்றில் மிகவும் வலதுசாரிப் போக்கைக் கொண்ட நாடாளுமன்றத்துடன் இணைந்து லுலா ஆட்சி நடத்த வேண்டியிருக்கும்.

போல்சோனாரோவின் லிபரல் கட்சி இந்தத் தேர்தலில் அதிக முன்னேற்றம் கண்ட கட்சியாக இருந்தது.

இருப்பினும், இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு முன்பாக லுலாவின் தொழிலாளர் கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அந்தக் கட்சிக்கு அடிமட்ட அளவில் வலுவான ஆதரவு இருப்பதை இது காட்டியது.

தேர்தலுக்கு முன்பு, இந்தத் தேர்தலை "பிரேசிலுக்கு ஒரு திருப்புமுனை" என்று லுலா வர்ணித்திருந்தார்.

"புதிய ஆட்சி முறையின்" மூலம் பிரேசிலின் எதிரெதிர் அரசியல் தரப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதாக அவர் உறுதியளித்தார். தேர்தலுக்கு முன்பு வாட்ஸ்அப் நேரலை நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த நாடு இனி ஒருபோதும் முன்புபோல் இருக்காது" என்றும் கூறினார்.

இந்தப் புதிய ஆட்சி முறை எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை. இருப்பினும், "அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகள் செயல்படுத்தப்படும், மேலும் நியாயமான நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நான் உறுதியாக இருப்பேன்" என்று அவர் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு