நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
'ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடு வேண்டாமே' : ஃபேஸ்புக் மூத்த அதிகாரி
பெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க பணி இடங்களில் வலிமையான கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில், ''இதற்கு முதல்படி பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்குவதுதான்'' என்று தெரிவித்தார்.
"நாம் சிறு வயது பெண்களிடம், இளம் வயதில் பொறுப்பேற்க வேண்டாம் என்றும், ஆண்களை, இளம் வயதில் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறுவதே தவறு." என்கிறார் அவர்.
"தலைமை பொறுப்பை ஏற்பதற்கு ஒவ்வொருக்கும் திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் யார் என்பதை பொறுத்தும் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை பொறுத்தும் அதை அவர்கள் தீர்மானிப்பார்கள்; பாலினத்தை வைத்து நாம் தீர்மானிக்க கூடாது."
உணர்ச்சிகரமான அந்த நேர்காணலில், 2015-ஆம் ஆண்டில் தனது கணவர் திடீரென மரணம் அடைந்தது குறித்தும், அதனால் தனது இரண்டு பிள்ளைகளிடம் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்:
2013ம் ஆண்டு பணிபுரியும் இடங்களில் பெண்கள் முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய "லீன் ன்(lean in)" புத்தகத்தால் அவர் பெரும் புகழ்பெற்றார்.
அந்த புத்தகம் உலகளவில் நன்றாக விற்பனையானது; ஆனால் உயர்பதவியிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனவும், அவரை போன்ற உயர் பதவியில் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு அது இயல்பிற்கு மாறாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
`கொள்கை தேவை`
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் ஊதிய வித்தியாசத்தை சரி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்வேடில் தன்னை குறித்து தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும், மேலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமான அளவில், முன்னேறி செல்லமுடியாமல் அல்லது ஊதிய உயர்வு கோர முடியாத அளவு, தங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
"பெண்களுக்கு நல்லமுறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பொது மற்றும் காப்ரேட் கொள்கைகள் அவ்வாறு அமைய வேண்டும் என்றும் தெரிவித்த அவர்,
"ஆண்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பெண்களும் பணிக்கு விண்ணபிக்கின்றனர், ஆண்கள் வேலை செய்யும் அதே நேரம் பெண்களும் வேலை செய்கின்றனர் அதுவே இதற்கு பதிலாக அமைந்துள்ளது." என்றும் தெரி்வித்தார்.
`நான் வருத்தமாக இருந்தேன்`
தனது கணவர் டேவ் கோல்ட்பர்க் திடீரென மரணமடைந்ததையடுத்து, தனக்குள் மாற்றம் வந்ததாக அவர் தெரிவித்தார்.
வார இறுதியில் வெளியில் சென்றிருந்த போது, உடற்பயிற்சி கூடத்தில் தீடிரெனெ மாரடைப்பு வந்து, தலையில் காயங்களுடன் அவர் தரையில் கிடப்பதை சாண்ட்பர்க் பார்த்தார்.
நேர்காணலில், சில சமயங்கள் கண்ணில் நீருடன் பேசிய அவர், "நான் வருத்தமாக இருந்தேன். யாரேனும் இந்தளவு அழ முடியுமா என எனக்கு தெரியவில்லை. எனது சகோதரி மருத்துவரை அவரிடம் இதைப் பற்றி கேட்ட போது உனது உடல் பெரும்பாலும் நீராலானது என கிண்டல் செய்தார்" என்கிறார் சாண்ட்பர்க்.
அவரின் கணவர் இணைய இசைதலமான லான்ச் மீடியாவின் நிறுவனர் ஆவார்.
'பணிதான் எனக்கு ஒரு ஆறுதல்'
தனது கணவரின் இறப்பிற்கு பிறகு பிறரை பற்றி தான் அதிகமாக புரிந்துக் கொண்டதாக தெரிவித்த சாண்ட்பர்க், ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஊழியர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மரணமடைந்தால் அதிகப்படியாக 20 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என மாற்றியுள்ளார்.
"அதே சமயத்தில் அவர்கள் பணிக்கு வர விரும்பினால் அவர்களுக்கு நாம் ஆதரவளித்து அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்."
"நான் அவர்களுக்கு விடுப்பு அளிக்கிறேன், ஆனால் அவர்கள் பணிபுரிய விழைந்தால் அதை செய்யலாம்."
"டேவின் நினைவு எங்கும் உள்ளது; ஆனால் நான் வீட்டில் இருக்கும்போது அது அதிகமாக இருக்கும்; எனவே வீட்டை விட்டு வெளியே வந்து வேறு பணியில் ஈடுபடுவது எனக்கு பெரிய ஆறுதல் அளிக்கும்."
இதை தங்கள் துணை அல்லது குழந்தைகளை இழந்த பலர் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன் என சாண்ட்பர்க் தெரிவித்தார்.
`சிக்கலான உரையாடல்கள்`
பயங்கரவாதத்தை தடுக்க ஃபேஸ்புக் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலர் ஆம்பர் ரட்டுடனான சந்திப்பு குறித்து கேட்ட போது, நிறுவன கொள்கையில் அதுவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக சாண்ட்பர்க் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்சப் அப் செய்திகள் குறித்தும் "சிக்கலான பேச்சு வார்த்தைகள்" நடப்பதாக அவர் தெரிவித்தார்.
மார்ச் 22ம் தேதி லண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களின் வாட்சப் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என போலிஸார் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்