நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
சமூக வலைத் தளங்களுக்கும், பெண்களின் தாழ்வு மனப்பான்மைக்கும் என்ன தொடர்பு?
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அழகானவர்களின் புகைப்படங்களை, காணொளிகளை பார்க்கும்போது அல்லது நட்சத்திரங்களின் மிகைப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது உங்களுக்குள் நீங்கள் அழகற்றவர் என்பது போன்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதா? இதுகுறித்து ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
காலம் காலமாக பள்ளியில், கல்லூரியில், அலுவலகங்களில், வெளியிடங்களில் பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் வெளித்தோற்றத்தை மட்டம்தட்டி செய்யப்படும் கேலி, கிண்டல்கள் விரட்டிவருகின்றன. தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும், பயனர்களுக்கு அவர்களது தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இடமாக மாறி வருகின்றன.
அதாவது, சமூக இணையதளங்களின் தொடக்க காலத்தில் அவை மக்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக விளங்கியது. ஆனால், காலம் செல்ல செல்ல தொலைக்காட்சி, ஊடகம் போன்றவற்றை போன்று சமூக வலைத்தளங்களிலும் பிரபலங்களின், குறிப்பாக திரை நட்சத்திரங்களின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கியது.
எனவே, இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் முகம் தெரியாதவர்களுடனான உறவுக்கான அடித்தளமாக விளங்குவதுடன், பலரது தோன்றத்தையும், செயல்பாட்டை பார்த்து தங்களது தோற்றம் குறித்தும், வாழ்கை குறித்தும் தாழ்வு மனப்பான்மையையும், ஒருவித மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளில், ஒருவர் தனது உடல் தோற்றம் குறித்து கவலையுறுவதற்குரிய காரணங்களுள் ஒன்றாக சமூக ஊடகங்கள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
"இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரது புகைப்படங்களை பார்ப்பவர்கள் அவர்களுடன் தங்களது தோற்றத்தை ஒப்பிடுகின்றனர்" என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவின் மாக்கியூரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஜாஸ்மின் பர்டௌலி.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 227 பல்கலைக்கழக மாணவிகளிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சமூக ஊடகங்களில் பெண்கள் தங்களது தோற்றத்தை சினிமா நட்சத்திரங்களுடனும், பிரபலங்களுடன் அதிகளவில் ஒப்பிடுவதும், தங்களது குடும்பத்தினருடன் பொருத்தி பார்ப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களை பொறுத்தவரை பெண்கள், தங்களை பற்றிய நேர்மறையான தகவல்களை மட்டும்தான் பதிவு செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை குறித்த மற்றொரு பகுதியை அறியாதவர்கள், தங்களது வாழ்க்கையின் மோசமான நினைவுகளுடன் ஒப்பிடுகின்றனர். இதுவே பிரச்சனையின் தொடக்கமாக அமைகிறது என்று கூறுகிறார் ஜாஸ்மின்.
பிரிட்டனின் வெஸ்ட் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியரான ஏமி ஸ்லேட்டர், 2017ஆம் ஆண்டு பதிப்பித்த ஆய்வு கட்டுரைக்காக இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் 160 மாணவிகளை சந்தித்தார். அதில், உடற்பயிற்சி சார்ந்த காணொளிகளை மட்டும் பார்க்கும் மாணவிகள், தங்களது உடல்நலம் குறித்து மிகவும் தாழ்வாக உணர்ந்ததாகவும், சுய முன்னேற்றம் குறித்த வாசகங்களை படிப்பவர்கள் உற்சாகமாக காணப்பட்டதாகவும், காணொளி, சுய முன்னேற்றம் ஆகிய இரண்டையுமே பார்த்தவர்களுக்கு வாழ்க்கைப்போக்கில் நல்ல பலன்களை அளித்ததை உணர்ந்ததாகவும் ஏமி கூறுகிறார்.
இதேபோன்று கனடாவின் டொரொன்டோவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் இருவேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் ஐபாட் மூலம் செல்பி எடுத்து அதை ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவும், மற்றொரு குழுவினர் திறன்பேசியிலுள்ள புகைப்படத்தை மெருகூட்டும் செயலியில் செல்பி எடுத்து அதேபோன்று பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆச்சர்யமளிக்கும் வகையில் இரு குழுக்களை சேர்ந்த மாணவிகளுமே தங்களது செல்பி குறித்த நேர்மறையான எண்ணங்களை விட எதிர்மறையான எண்ணங்களையே கொண்டிருந்தனர். அதாவது, செல்பியில் தான் வேறுவகையில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றும், தன்னுடைய படத்திற்கு எத்தனை லைக்குகள் கிடைத்திருக்கும் என்பதை பார்ப்பதற்கும் அவர்கள் ஆவலோடு காத்திருந்ததாகவும் அந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகள்
நீங்கள் உங்களை யாருடன் ஒப்பிட வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு திறன்பேசியே முக்கிய காரணமென்று நீங்கள் நினைத்தால், சிறிது காலம் மின்னணு உலகத்திலிருந்து ஒதுங்கியிருங்கள்.
சமூக வலைதளங்களில் நீங்கள் எதுபோன்ற பதிவுகளை பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதற்கேற்றாற்போல் தகவமைப்பு செய்யுங்கள்.
சமூக வலைதளங்களில் உங்களுக்கு நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெரிவுகளை மாற்றி அமையுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்