இந்தியாவில் தங்கம் கிடைக்கும் ஆறு எங்கே உள்ளது? இவர்கள் தினசரி எவ்வளவு சம்பாதிக்கின்றனர்?

காணொளிக் குறிப்பு, ஸ்வர்ணரேகா ஆற்றில் தங்கம் கிடைக்குமா? தேடுதல்வேட்டையில் மக்கள்
இந்தியாவில் தங்கம் கிடைக்கும் ஆறு எங்கே உள்ளது? இவர்கள் தினசரி எவ்வளவு சம்பாதிக்கின்றனர்?
பிரசுரிக்கப்பட்டது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தின் நாக்ரி கிராமத்தில் உள்ள 'ராணி சுவான்' என்ற இடத்தில் உற்பத்தியாகி, வங்காள விரிகுடாவில் கலக்கும் ஸ்வர்ணரேகா நதியின் ஒரு பகுதியில் தங்கத் துகள்கள் கிடைப்பதாக அறியப்படுகிறது.

இந்த நதியின் கரையோரத்தில் பல இடங்களில், ஆற்றில் அடித்துவரப்பட்ட மணல் மற்றும் சேற்றிலிருந்து தங்கத் துகள்களைப் பிரித்தெடுத்து, கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.

ஸ்வர்ணரேகா ஆற்றங்கரையில் தங்கத் துகள்களை தேடும் தாங்கி சர்தார் என்ற முதிய பெண்மணி, மண்ணை நோண்டி முறத்தில் போட்டுச் சிறிது அசைக்கும்போது, ​​ஒன்று அல்லது இரண்டு தங்கத் துகள்கள் கிடைப்பதாக கூறுகிறார்.

பல தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஆற்றங்கரையில் மணல் மற்றும் மண்ணிலிருந்து தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்தத் தங்கத் தேடல் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

"என் கால்கள், முதுகு மற்றும் கைகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. மருந்து உட்கொண்டால் மட்டுமே சற்று நிம்மதி கிடைக்கிறது. மாலை வீடு திரும்பும்போது, ​​வலி ​​மிக அதிகமாக இருக்கும்." என்கிறார் தாங்கி சர்தார்.

தங்கம் எடுக்கும் வேலையில் தாங்கி சர்தார் மட்டும் கஷ்டப்படவில்லை. முதியவர் போகா கும்ஹாரும் தங்கம் எடுப்பதற்காக தான் மேற்கொள்ளும் நீண்ட, கடினமான போராட்டத்தை பகிர்ந்து கொள்கிறார். மிகுந்த முயற்சி செய்தாலும் சில சமயங்களில் எதுவுமே கிடைப்பதில்லை என்கிறார்.

பிபிசியிடம் பேசிய போகா கும்ஹார், சில நேரங்களில் தங்கம் கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைப்பதில்லை. கண்டெடுப்பதை அங்கேயே கழுவிச் சுத்தம் செய்வோம்; ஏதேனும் கிடைத்தால், அதை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொள்வோம். நாள் முழுவதும் நாங்கள் செய்யும் கடின உழைப்பு இதுதான்." என்றார்.

தங்கம் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்த மில்கத் சிங் தனது அன்றாட வருமானம் குறித்து பகிர்ந்து கொண்டார். "நாங்கள் சுமார் 15, 16 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஆற்றங்கரைக்கு வந்து சிறிய குழிகளைத் தோண்டுகிறோம்; சில சமயங்களில் அந்த குழிகளில் இருந்து மிகச்சிறிய தங்கத் துகள்கள் கிடைக்கின்றன. தினமும் கிடைப்பதில்லை. சில நாட்கள் கிடைக்கும். சில நாட்களில் எங்களால் சுமார் 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது." என்று அவர் கூறினார்.

இந்த ஆற்றங்கரையில் கிடைக்கும் தங்கம், உள்ளூர் மக்களுக்கு வெறும் நூறு, இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் வருமானத்தையே தருகிறது. இருப்பினும், ஆற்றின் இருபுறமும் சுமார் இருபது கிலோமீட்டர் நீளத்திற்கு பரவியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான குருபடோ சிங், தங்கம் எடுக்கும் முறையை பற்றி விளக்கினார்.

"இங்கே கற்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அகற்றிவிட்டு, இரும்புக்கம்பியைப் பயன்படுத்தி ஆழமாக தோண்டுவோம். தோண்டும்போது மண் தென்பட்டால், அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்குவோம். மேல் அடுக்கில் உள்ள மணல் கலந்த மண்ணை அகற்றிவிட்டு, தங்கம் இருக்கும் மண்ணை மட்டும் சேகரிப்போம். பிறகு, அந்த மண்ணை ஒரு தட்டில் போட்டு, தண்ணீரில் கழுவி தங்கத் துகள்களைப் பிரித்தெடுப்போம். இப்படி சிறு சிறு துகள்களாகச் சேகரிப்போம்.

சில சமயம் இரண்டு அல்லது மூன்று துகள்கள் கிடைக்கும், சில சமயம் நானூறு துகள்கள் வரை கூட கிடைக்கலாம். தொடர்ந்து சேகரித்து, வெயிலில் உலர வைப்போம். அதன் பிறகு, கடைக்குக் கொண்டு சென்று விற்போம். இந்த சிறிய துகள்களை 'பாயிண்ட்' கணக்கில் விற்பனை செய்வோம். ஒரு பாயிண்டிற்கு 120 ரூபாய் கிடைக்கும். நாங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது, மொத்தம் எத்தனை பாயிண்டுகள் கிடைத்துள்ளன என்பதைப் பொறுத்தே அமையும்." என்று குருபடோ சிங் தெரிவித்தார்.

தங்கத்தை பிரித்தெடுப்பது மிக கடினமான காரியம். நாள் முழுவதும் பலமுறை முயற்சி செய்தும், சில சமயங்களில் இந்த மக்கள் வெறும் கையுடன் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பிபிசியிடம் பேசிய ரோஹின் சிங் சர்தார், "சில நேரங்களில் தங்கம் கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைப்பதில்லை. இந்த முறை கிடைக்கவில்லை என்றால், அடுத்த முறையாவது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். மாலை 4 மணி வாக்கில், அன்று கண்டெடுத்தவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறோம்." என்றார்.

ஏன் இவ்வளவு கடினமான வேலையைச் செய்கிறீர்கள் என கேட்ட போது, "இந்த வேலைக்குத் தேவையான திறன் என்னிடம் இருக்கும்போது, ​​நான் ஏன் வீட்டிலேயே சும்மா இருக்க வேண்டும்? இந்த வேலையை செய்வதன் மூலம் எனக்கு 200 முதல் 300 ரூபாய் வரை கிடைக்கிறது. சரியான நேரத்தில் என்னால் வீடு திரும்ப முடிகிறது. இந்த வருமானத்தைக் கொண்டு, மளிகை பொருட்கள் போன்ற வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடிகிறது. எனக்கு இப்போது 60 வயது ஆகிறது; என்னால் இனி எந்த ஒப்பந்ததாரரின் கீழும் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது." என்று ரோஹின் சிங் பதிலளித்தார்.

வேறு வருமான வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், முதியவர்கள் தங்கம் எடுக்கும் இந்த கடினமான வேலையில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் உள்ளூரில் வேலையில்லா இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இது ஒரு எளிதான வழியாக அமைகிறது.

"என்ன சொல்வது? வீட்டிலேயே சும்மா இருந்தால் பணம் கிடைக்காதல்லவா? ஏதோ ஒரு உழைப்பைச் செய்தே ஆக வேண்டும். அதனால், சுட்டெரிக்கும் இந்த வெயிலிலும் நாங்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்." என்கிறார் குருபடோ சிங்.

சுட்டெரிக்கும் வெயிலில் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மக்கள் ஏன் தங்க துகள்களைத் தேடும் வேலையைச் செய்கிறார்கள்? வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும்தானா? இதுகுறித்து சமூக பணியாளர் துகு மஹாலியிடம் பேசிய போது, "எங்கள் ஊரில் முதியவர்கள் முதுமை அடைந்த பிறகு, தங்களால் என்ன வேலை செய்ய முடியும் என்று அடிக்கடி யோசிப்பார்கள். உடல் உழைப்பு தேவைப்படும் கடினமான வேலைகளைச் செய்யும் திறன் அவர்களுக்கு இல்லாததால், தங்களால் முடிந்த சிறிய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வளர்த்து, அவற்றை ஆற்றங்கரையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு இருக்கும்போது, ​​ஆற்றிலிருந்து தங்கம் எடுக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள். இதன் மூலம் கிடைக்கும் 100 முதல் 200 ரூபாயைக் கொண்டு, தங்கள் சொந்தச் செலவுகளைச் சமாளித்துக்கொள்கிறார்கள். எங்கள் பகுதி முற்றிலும் கிராமப்புறம், இங்கு முறையான கல்வி வசதி இல்லை, யாருக்கும் நிலையான வேலையும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் சிறிய குடும்பங்கள் இருந்தாலும், அந்த அனைத்துக் குடும்பங்களும் வறுமையிலேயே உள்ளன." என்று அவர் கூறினார்.

தங்கம் எடுக்கும் இந்த கிராம மக்களை தடுக்கவோ அல்லது அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பவோ அரசு எப்போதாவது முயன்றிருக்கிறதா? என்ற கேள்விக்கு, "அரசு ஏன் இதை தடுக்க வேண்டும்? இங்கே பெரிய அளவில் தங்கம் கிடைப்பதில்லை; சுமார் 100 முதல் 150 ரூபாய் மதிப்பிலான தங்கத் துகள்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து வெளியேற முடியாதவர்கள்; வேறு இடத்திற்குச் செல்ல வழியே இல்லாதவர்களும் இதில் உள்ளனர்." என்று துகு மஹாலி பதில் தந்தார்.

இப்பகுதியில் தங்கம் மிக குறைந்த அளவிலேயே கிடைப்பதால் சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்தப் பிரச்னையையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என உள்ளூர் நிர்வாகமும் தெரிவிக்கிறது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு