நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்க அடிகோலிய ராபர்ட் கிளைவ் மீது இங்கிலாந்தில் மக்களிடையே அதிருப்தி ஏன்?
- எழுதியவர், கா.அ. மணிக்குமார்
- பதவி, வரலாற்றுப் பேராசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
(இது ராபர்ட் கிளைவ் பற்றிய இரு பாக தொடரின் இரண்டாம் பாகம்)
ராபர்ட் கிளைவ் லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெற்று மூன்று பீரங்கிப் படைப் பிரிவுகள் மற்றும் 300 காலாட்படை வீரர்களுடன் புனித டேவிட் கோட்டைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த போது, கடல் கொள்ளையர் தலைவன் கனோஜி ஆங்ரேவை ஒடுக்குவதற்கான படையில் இணையுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
சிவாஜியால் ஒரு சிறிய தீவில் கட்டப்பட்ட கெரியா கோட்டையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆங்ரே, மலபார் கடற்கரையோர நகரங்களைக் கொள்ளையடித்தும், கப்பல்களைக் கைப்பற்றி பொருள்களை அபகரித்தும் பெரும் அட்டூழியங்களைச் செய்து வந்தார்.
அவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டியதன் அவசியத்தை மராத்தியர்களும் ஆங்கிலேயர்களும் உணர்ந்தனர். கிளைவின் படையும் மராத்தியர் படைகளும் பம்பாய் கம்பெனி அரசாங்கத்துடன் இணைந்து, இரண்டு நாட்களில் கெரியா கோட்டையை அழித்தன.
பிளாசி போருக்குக் காரணமான இருட்டறை சம்பவம்
வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயர்கள், ஜோஷியா சைல்டின் தூண்டுதலின் பேரில் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் ஒருமுறை தாக்குதல் நடத்தி (1686-1690) படுதோல்வியைச் சந்தித்தனர். அதன் பிறகு, மீண்டும் அத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு அவர்கள் நீண்ட காலம் தயக்கம் காட்டினர். இருப்பினும் தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு வணிகச் சலுகைகளை கிழக்கிந்திய நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதோடு அனுமதியின்றி தங்கள் குடியேற்றப் பகுதியின் கோட்டை அரண்களை வலுப்படுத்தியது.
இது வங்காள ஆளுநரின் இறையாண்மைக்கே விட்ட சவால் என ஆத்திரமடைந்த சிராஜ்-உத்-தௌலா முர்ஷிதாபாத்திலிருந்து ஒரு படையுடன் சென்று வில்லியம் கோட்டையைக் கைப்பற்றினார் (ஜூன் 20, 1756). அக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக நடைபெற்ற கடும் போரில், அங்கு அடைக்கலம் புகுந்திருந்த இந்தியர்கள், ஆர்மீனியர்கள் மட்டுமின்றி, பல பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய ஊழியர்களும் உயிரிழந்தனர். உயிருடன் தப்பியவர்களை ஹோல்வெல் விவரிப்பின்படி, 'நவாபின் உத்தரவின் பேரில் 18 அடி (5.5 மீட்டர்) நீளமும் 14 அடி (4 மீட்டர்) அகலமும் கொண்ட குடிநீர், காற்று வசதி ஏதும் இல்லாத ஒரு சிறிய சிறையில் அடைக்கப்பட்ட 146 ஐரோப்பியர்களில் 123 பேர் உயிரிழந்தனர்', என்பதாகும்.
ஆங்கிலேய அறிஞர்கள் இக்கூற்றை ஏற்றாலும், 'பிளாக் ஹோல்' சிறையில் அறுபது பேருக்கு மேல் அடைத்து வைக்கப்படவில்லை என்ற ஜாதுநாத் சர்க்காரின் கருத்தையே இந்திய வரலாற்றாசிரியர்கள் பொதுவாக ஏற்றனர். இருப்பினும், இந்நிகழ்வு பிளாசிப் போருக்கும் அப்போரில் கிளைவ் நவாபை தோற்கடித்ததன் மூலம் நிகழ்ந்த இந்தியாவின் மீதான ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.
வங்காளத்தில் கிளைவ்: பிளாசிப் போர் (1757)
கெரியாவிலிருந்து நேரடியாக சென்னை திரும்பிய கிளைவ், வில்லியம் கோட்டையைக் நவாப் கைப்பற்றியதைக் கேள்விப்பட்டு அவருக்குப் பாடம் கற்பிக்க முர்ஷிதாபாத்தை நோக்கி விரைந்தார். இதற்கிடையில் ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் போர் (ஏழாண்டுப் போர்) மூண்டிருக்கும் செய்தியைக் கேட்ட கிளைவ் பலத்த பாதுகாப்புடன் கூடிய பிரெஞ்சு கோட்டையான சந்தன் நகரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினார். அதன் பின் கிளைவ், வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டார். அதேவேளையில், அட்மிரல் சார்லஸ் வாட்சன் தலைமையிலான போர்க்கப்பல் படை அக்கோட்டையின் மீது குண்டுவீச்சுத் தாக்குதலையும் நடத்தியது. 1757ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அக்கோட்டை ஆங்கிலேயர் வசமானது;
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில், வெறும் 3,000 வீரர்களைக் கொண்ட படையுடன், பீரங்கிகள் மற்றும் போர் யானைகளைக் கொண்டிருந்த சுமார் 40,000 பேர் கொண்ட சிராஜின் படையை பிளாசிப் போர்க்களத்தில் கிளைவ் முறியடித்தார் (23 ஜூன் 1757). சிராஜ்-உத்-தௌலா போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார், ஆனால் அவரது படைத்தளபதி மீர் ஜாஃபருக்கு விசுவாசமான படைகளால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; இறுதியில் அவர் கொல்லப்பட்டார்.
ஆரம்பத்தில் அகமது ஷா அப்தலியின் தலைமையிலான ஆப்கானியத் தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக, சிராஜ் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு காண்பதையே விரும்பினார். ஆனால், கிளைவ் ஒரு சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடிவு செய்தார். 23 வயதுடைய இளம் நவாப் ஒருவரின் சுதந்திரமான செயல்பாடுகளால் தங்கள் நலன்களுக்கு ஆபத்து நேரிடும் என்று கருதிய வணிகர்கள், வங்கியாளர்கள், நிதியாளர்கள், ஜகத் சேத் சகோதரர்கள், ஸ்வரூப் சந்த், ராஜா துர்லப், மற்றும் ராஜா மாணிக் சந்த் ஆகியவர்கள் அடங்கிய அதிருப்திக் குழு ஒன்று ஏற்கனவே நவாபின் அரசவையில் இருந்தது. இந்த அதிருப்திக்குழுவை பயன்படுத்தி சிராஜைத் தனிமைப்படுத்த கிளைவ் திட்டமிட்டார்.
அமின்சந்த் மிரட்டல்
இறுதியில் சிராஜை அகற்றிவிட்டு, ஜகத் சேத் குடும்பத்தினரின் விருப்பத்திற்குரியவரான அவரது தலைமைத் தளபதி மிர் ஜாஃபரை அரியணையில் அமர்த்துவது என சதிகாரர்கள் முடிவு செய்தனர். சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிலேயே மிகவும் தந்திரசாலியான அமின்சந்த், சம்பந்தப்பட்ட தரப்பினரின் சார்பாக கிளைவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தனக்கு இருபது லட்சம் ரூபாய் பணம் கிடைக்காவிட்டால் சதிகாரர்களின் திட்டங்களை சிராஜ்-உத்-தௌலாவிடம் வெளிப்படுத்திவிடுவேன் என்று மிரட்டினார்; இது நடந்தால் சதிகாரர்கள் அனைவரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதோடு பலரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கிளைவ் அஞ்சினார்.
நிலைமையைச் சமாளிக்க, தயாரிக்கப்பட்ட இரண்டு ஆவணப் பிரதிகள் ஒன்றில் அமின்சந்தின் சந்தேகத்தைப் போக்குவதற்காக அவரது பெயர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தது. அந்தப் போலி ஆவணம் அவரிடம் காட்டப்பட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அட்மிரல் வாட்சனைத் தவிர, மற்ற அனைத்துத் தரப்பினரும் மற்றொரு பிரதியில் கையெழுத்திட்டனர். வாட்சனின் போலி கையெழுத்தைப் போட்டு கிளைவ் மோசடி செய்ததார். பின்னர் நாடாளுமன்றத்தில் கிளைவ் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் இதுவும் ஒன்றானது.
வங்காளம் சூறையாடப்படல்
போர் முடிந்த உடனேயே முர்ஷிதாபாத் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆங்கிலேய இராணுவமும் கடற்படையும் பெரும் தொகையைப் (தலா 2,75,000 பவுண்டுகள்) பெற்றன. இது தவிர, 1757 மற்றும் 1760-க்கு இடைப்பட்ட காலத்தில், கிழக்கிந்திய நிறுவனம் மீர் ஜாஃபரிடமிருந்து 22.5 மில்லியன் ரூபாயைப் பெற்றது;
அத்துடன் கிளைவ் தாமே 34,567 பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு தனிப்பட்ட ஜாகீர்- (கிளைவ் ஜாகிர் என அழைக்கப்பட்டது) 24 பர்கானாக்கள் (ஏறத்தாழ இரு மாவட்டங்கள்) வருவாய் உரிமையையும் பெற்றார்.
வங்காளத்தின் நவாபாக மீர் ஜாஃபர்
துரோகத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த மீர் ஜாஃபர் வங்காளத்தின் நவாபாக பெயரளவில் மட்டுமே ஆட்சியாளராக இருந்தார். வங்காளத்தின் பெரும்பகுதி மீதான கட்டுப்பாட்டை பல ஒப்பந்தங்கள் மூலம் அவர் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க நிர்பந்தப்படுத்தப்பட்டார். விரைவில் தனது நிலை குறித்து அதிருப்தி அடைந்த அவர், ஆங்கிலேயரைத் தாக்குமாறு டச்சுக்காரர்களைத் தூண்டினார்;
ஆனால் சின்சுரா போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் (1760). அவரது மருமகன் மீர் காசிமை நவாபாக கம்பெனி நிர்வாகம் பதவியில் அமர்த்தியது.
இரண்டாம் முறையாக கிளைவ் இங்கிலாந்து திரும்புதல்
பிளாசிப் போருக்குப் பின் கிளைவின் உடல்நிலையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது. அவர் வாத நோயால் பாதிக்கப்பட்டார்; இது அவரது தந்தையைத் தாக்கியிருந்த கீல்வாதத்தை ஒத்திருந்தது. எனவே அவர் உடனே இங்கிலாந்து திரும்ப விரும்பியபோதிலும், 1760ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் அவரால் அங்கு சென்று சேர முடிந்தது.
வங்காளத்தைச் சூறையாடிய கிளைவ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு 50,000 பவுண்டுகள் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார்; தனது தந்தைக்கும், தனது முன்னாள் தளபதி லாரன்ஸுக்கும் தலா 500 பவுண்டுகள் வருடாந்திரத் தொகையையும், தனது அத்தைகளுக்கு ஆண்டுதோறும் 150 பவுண்டுகளையும் வழங்க ஏற்பாடு செய்தார்.
'ஸ்டைச்' பகுதியில் இருந்த தனது பழைய வீட்டைப் புதுப்பித்ததோடு திருப்தியடையாத அவர், 92,000 பவுண்டுகள் விலைக்கு 'வால்காட் பார்க்' பகுதியை வாங்கி, அங்கு ஒரு புதிய வீட்டையும் கட்டினார். அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை ஈட்டன் பள்ளியில் தனது மகன் கல்வி கற்பதற்காக விட்டுச் சென்றதுடன், தனது மகள்களில் ஒருவரை வேல்ஸ் இளவரசருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ராபர்ட் கிளைவின் உயில் (1774ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்டது) வங்காளத்தின் செல்வம் எவ்வாறு இங்கிலாந்தில் திருமண வரதட்சணைகள், நிலபுலன்கள், நூலகங்கள் மற்றும் திருச்சபைக்கான அறக்கட்டளை நிதிகளாக மாற்றப்பட்டன என்பதை மிகத் துல்லியமாக விவரிக்கிறது.
இங்கிலாந்தில் கிளைவ் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. இருப்பினும், இயக்குநர்கள் குழுவில் இருந்த அவரது விரோதிகள் சிலர், மீர் ஜாஃபர் அவருக்கு வழங்கியிருந்த 'ஜாகீர்' (நில வருவாய் உரிமை) உரிமையை எதிர்த்தனர்.
ஏனெனில், டெல்லி பேரரசருக்குச் சேர வேண்டிய வாடகை வருவாயை மீர் ஜாஃபரால் வேறொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது. திவானி உரிமை மூலம் முகலாயப் பேரரசின் ' மான்சப்தார்' பதவியை கிளைவ் ஏற்றுக்கொண்டது அவர் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைக்கு முரணானதாக இருந்தது.
பக்சார் போர் (1764)
மீர் காசிம் தனது தலைநகரை மோங்கிருக்கு மாற்றியும், இராணுவத்தை நவீனமயமாக்க வெளிநாட்டு நிபுணர்களைப் பணியமர்த்தியும், தனது அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டிட முயன்றார். இந்திய மற்றும் ஆங்கிலேய வணிகர்களைச் சமமாக நடத்தி, அனைவருக்கும் பயன்படும் வகையில் அனைத்து உள்நாட்டு வர்த்தகத்தையும் முழுமையாக வரி இல்லாததாக மாற்றினார். உள்ளூர் வணிகர்களைவிடத் தங்களுக்குச் சிறப்பு வரி விலக்குச் சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று கோரி, இந்த முடிவை ஆங்கிலேயர் எதிர்த்தனர்.
சரக்குக் கட்டணங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் 1763இல் ஆயுத மோதல்களாக மாறின. ஆரம்பக்கட்டத் தோல்வியினால் மீர் காசிம் தப்பி ஓடி வங்காளத்திலிருந்து ஆங்கிலேயரை முழுமையாக வெளியேற்றும் நோக்கில், ஆவாத் தின் நவாப் ஷுஜா-உத்-தௌலா மற்றும் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் இணைந்து ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கினார். இந்த ஒருங்கிணைந்த உள்நாட்டுப் படைகள் பக்சார் என்னுமிடத்தில் மேஜர் ஹெக்டர் மன்ரோ தலைமையிலான ஆங்கிலேயர் படைகளுடனான போருக்கு (22 அக்டோபர் 1764) வழிவகுத்தது. இப்போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
வங்காளத்தின் முதல் ஆளுநராக கிளைவ்
இதற்கிடையில் வங்காளத்தில் மற்றொரு போர் குறித்த செய்தியைக் கேட்டதும், இயக்குநர்கள் குழு 1764ஆம் ஆண்டு மார்ச் 12அன்று ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில், வங்காளத்தின் ஆளுநர் பொறுப்பை மீண்டும் ஏற்குமாறு இங்கிலாந்திற்கு வந்திருந்த கிளைவிடம் வேண்டியது. சிறிது தயக்கத்திற்குப் பிறகு, இயக்குநர்கள் வேண்டுகோளை கிளைவ் ஏற்றார். பக்சார் போரில் மேஜர் ஹெக்டர் மன்ரோ பெற்ற வெற்றியை உறுதிப்படுத்த கிளைவ் 1765இல் கல்கத்தாவிற்கு ஆளுநராகத் திரும்பினார்.
வங்காளத்தில் கிளைவ் ஆவாத் நவாப் ஷுஜா-உத்-தௌலா மற்றும் முகலாயப் பேரரசின் வாரிசான ஷா ஆலம் ஆகிய இருவரையும் கையாள வேண்டியிருந்தது. முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமுடன் அலகாபாத் உடன்படிக்கையைச் (1765) கிளைவ் செய்துகொண்டார்; இதன் மூலம் வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் 'திவானி' (நில வருவாயையும் வசூலிக்கும் உரிமை) உரிமைகள் அதிகாரப்பூர்வமாக கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
ஆங்கிலேயர்கள் மூன்று மாகாணங்களின் உண்மையான ஆட்சியாளர்களாக மாற, நவாப் பெயரளவில் மட்டுமே அதிகாரத்தில் இருந்தார். நவாப் ஷுஜா-உத்-தௌலா ஆவாத்தைத் தொடர்ந்து நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஐம்பது லட்சம் ரூபாய் போர் நஷ்டஈடாக கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுக்க அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
வங்காளத்தில் இரட்டை ஆட்சி
ராபர்ட் கிளைவ் 1765-ல் வங்காளத்தின்ஆளுநர் என்ற முறையில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையின் கீழ், வருவாய் வசூல் மற்றும் உரிமையியல் நீதி ஆகியவற்றின் மீதான நேரடி அதிகாரத்தை கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. நிர்வாகம், காவல் மற்றும் இதர துறை அதிகாரங்கள் நவாபிடம் விடப்பட்டன. இதன் விளைவாக, அனைத்து நிதிசார் அனுகூலங்களையும் இராணுவ வலிமையையும் அனுபவித்த கம்பெனி அரசு பொது நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டது.
கல்கத்தா கம்பெனி நிர்வாகத்தை சீரமைப்பதில் கிளைவ் அடுத்த படியாக தனது கவனத்தை செலுத்தினார். அவருக்கு முந்தைய அதிகாரி ஹென்றி வான்சிட்டார்ட்டை எதிர்த்த கல்கத்தா சபையின் அதிகாரத்தை முற்றிலும் நீக்கினார். எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதோடு, சிலரை பணியிலிருந்தும் நீக்கியும் சென்னையிலிருந்து புதிய பணியாளர்களை வரவழைத்தும் மீண்டும் ஒழுங்கை நிலைநாட்டி சபையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.
கிழக்கிந்திய நிறுவனத்தின் அனைத்து சிவில் அதிகாரிகளும் ஆளுநரின் அனுமதியின்றி 1,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளைப் பெறவோ தனிப்பட்ட வணிகத்தை மேற்கொள்ளவோ கூடாது என தடைசெய்யும் ஊழல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தினார். இவை இரண்டும் சக அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கிளைவ் எடுத்த துணிச்சலான சில முடிவுகளாகும்.
உள்நாட்டு நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு அங்கமாக படைகளின் ஊதியம் மற்றும் படிகளை ஆய்வு செய்யுமாறு 'இயக்குநர்கள் குழு' கொடுத்திருந்த உத்தரவை ஊழியர்களின் ஊதியம் மிகக் குறைவாக இருந்ததால் கிளைவ் கவனத்தில் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் கிளைவ் ஒரு திட்டத்தை வகுத்தார்:
உப்பு மீதான ஏகபோக உரிமையை நிர்வகிக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தை உருவாக்கி எழுத்தர் நிலையிலுள்ள ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து ஊழியர்களும் தங்கள் பதவிக்கு ஏற்பப் பங்குகளைக் கொண்டிருக்கவும், அதே விகிதத்தில் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கிளைவ் வகை செய்தார். ஆனால், இத்திட்டத்திற்கான ஒப்புதல் லண்டனிலிருந்து கிடைக்காததால், கிளைவ் வங்காளத்தை விட்டுச் சென்ற பிறகு இதுவும் சர்ச்சைக்குரியதாகி செயல்படுத்தப்படவில்லை.
இரட்டைப் படி
மீர் ஜாஃபர் பதவியேற்றபோது தனது நன்றியுணர்வின் மிகுதியால், அதிகாரிகளுக்கு முழுமையான பட்டாவுக்கு இணையான கூடுதல் தொகையை வழங்கியிருந்தார்; இது 'இரட்டைப் படி ' (double batta) என்று அழைக்கப்பட்டது. மீர் காசிம் இத்தொகையைத் தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்ததோடு, அதற்காக மூன்று மாவட்டங்களின் வருவாயையும் ஒதுக்கியிருந்தார்;
படைக் களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த வரை, கல்கத்தா சபையின் அனுமதியுடன் அந்தப் படி தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னணியில் இருந்த காரணங்களைப் புரியாமல், இரட்டைப் படி வழங்குவதை நிறுத்துமாறு இயக்குநர்கள் உத்தரவிட்டனர். கல்கத்தா நிர்வாக சபை இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய போதிலும், இயக்குநர்கள் குழு அதை ஏற்க மறுத்துவிட்டது.
வெள்ளையர் கிளர்ச்சி
பக்ஸார் போர் தொடங்கியிருந்த சமயத்தில் இந்தச் செய்தி வந்ததால், அந்த முடிவு உடனடியாக அமல்படுத்தப்படவில்லை. ஆவாத் நவாபுடனான ஒப்பந்தம் செய்து முடிக்கப்பட்ட உடனேயே 1766-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, இரட்டைப் படி வழங்குவதை நிறுத்துமாறு கிளைவ் உத்தரவிட்டார். நீண்ட காலமாக இந்தச் சலுகையை அனுபவித்து வந்த அதிகாரிகள் மத்தியில் இந்த உத்தரவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்குள் தொடர்புகொண்டு, குழுக்களை அமைத்து, தங்கள் உரிமைகளைப் போராடிப் பெறத் தீர்மானித்தனர். சிவில் சர்வீஸ் (குடிமைப் பணி) அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவளித்தனர்.
கோட்டைகள், பீரங்கிகள் மற்றும் போருக்கான தளவாடங்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களே கிளைவின் எதிரிகளாக இருந்ததால், அவர் ஒரு பெரும் ஆபத்தை எதிர்கொண்டார். தவிர அலகாபாத் மற்றும் காரா பகுதிகளை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்ற ஒரு வலிமையான மராட்டியப் படை முன்னேறி வருவதாக எல்லைப் பகுதிகளிலிருந்து வதந்திகள் பரவின.
ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி பாட்னாவில் ராபர்ட் பார்க்கர் தலைமையில் இருந்த மூன்றாவது படைப்பிரிவு அதிகாரிகளிடமிருந்து ஒரு கண்டனக் கடிதம் கிளைவிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதுதான் கலகம் குறித்த முதல் அறிகுறி வெளிப்பட்டது. ஒன்பது கேப்டன்கள், பன்னிரண்டு லெப்டினன்ட்டுகள் மற்றும் இருபது கீழ் நிலை அதிகாரிகள் கையெழுத்திட்டிருந்த அந்தக் கடிதம் அப்படைப் பிரிவின் அதிகாரிகளால் அனுப்பப்பட்டிருந்தது. அது முறைப்படி உரிய வழியில் அனுப்பப்படவில்லை எனக்கூறி, கிளைவ் அதை பார்க்கருக்குத் திருப்பி அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 28 அன்று மோங்கிரில் முதல் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் பிளெட்சரிடமிருந்து, தனது படைப்பிரிவின் அதிகாரிகள் மட்டுமல்லாமல் முழு இராணுவத்தின் அதிகாரிகளும் பதவி விலக உத்தேசித்துள்ளதாக கிளைவ் ஒரு கடிதத்தைப் பெற்றபோதிலும், மராத்தியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு அந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
சர் ராபர்ட் பிளெட்சரின் படைப்பிரிவைச் சேர்ந்த நாற்பது அதிகாரிகள் பதவி விலக இருப்பதாக கிளைவ் மற்றொரு கடிதத்தை மே 4 அன்று பெற்றார். அடுத்த நாள், பாட்னா அதிகாரிகளும் பதவி விலகுவதாக பார்க்கரிடமிருந்தும் கடிதம் வந்தது. மராத்தியர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்திருந்த நிலையில் மராத்தியர் படை ஏற்கனவே முன்னேறி வருவதை அலகாபாத்தில் இருந்த கர்னல் ஸ்மித் மூலம் அறிந்த கிளைவ் மோங்கிருக்குச் நேரில் சென்றார்.
அங்கு இக்குழப்பத்தைத் தூண்டியவர் ஃபிளெட்சர் என்பது அவருக்குத் தெரியவந்தது. கூடுதல் படி ஏன் நிறுத்தப்பட்டது என்பதை விளக்கி கிளைவ் வீரர்களிடம் உரையாற்றினார். அங்கு நிலவிய அமைதியின்மை அடங்கியது. பின்னர் கட்டுப்படாத அதிகாரிகளை உடனடியாக கல்கத்தாவுக்குச் செல்லுமாறு உத்தரவிட்ட கிளைவ், பாட்னாவுக்குப் புறப்பட்டார். கிளைவ் அங்கு சென்றடைந்தபோது, பார்க்கர் ஏற்கனவே கிளர்ச்சி மனப்பான்மை கொண்டிருந்த அதிகாரிகளைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவிட்டிருந்தார். மற்றவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
கிளர்ச்சி ஒடுக்கப்படுத்தல்
படை முகாம்களைப் பாதுகாக்கவும், பீரங்கிகளைக் கைப்பற்றவும் அவர் உடனடியாக சென்னை மாகாணத்தைத் தொடர்புகொண்டு விசுவாசமான அதிகாரிகளை கேப்டன் ஸ்மித்தின் கீழ் அனுப்பினார். கிளர்ச்சியின் தலைவர்கள் (லெப்டினன்ட்-கர்னல் சர் ராபர்ட் ஃபிளெட்சர் உட்பட) அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தி பணியிலிருந்து நீக்கினார்.
1766ஆம் ஆண்டின் 'வெள்ளையர் கலகத்தை' ஒடுக்குவதில் கிளைவ் வெளிப்படுத்திய "அஞ்சா நெஞ்சுரம்" அனைவரது பாராட்டையும் பெற்றது. சிவில் நிர்வாகம் மற்றும் இராணுவம் ஆகிய இரண்டிலும் கடுமையான ஒழுங்குமுறையை நிலைநாட்டிய பிறகு, கிளைவ் 1767ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்கத்தாவிலிருந்து இங்கிலாந்திற்குப் புறப்பட்டார்.
ராபர்ட் கிளைவ் மீது இங்கிலாந்தில் அதிருப்தி ஏன்?
1767-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி லண்டனை வந்தடைந்த கிளைவ் மூன்று நாட்களுக்குப் பிறகு, மூன்றாம் ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, ஆற்காடு நவாப் முகமது அலி வழங்கிய பரிசுகளை அரசியிடம் அளித்தார். அவர் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களையும் அதன் தலைவரையும் சந்தித்தார். அவர்கள் கிளைவின் தாயக வருகைக்காக அவரை வாழ்த்தியதுடன், அவர் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.
வங்காளத்தில் கிளைவ் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டன. கிளைவிற்கு மீர் ஜாஃபர் வழங்கிய ஜாகீர் உரிமையும் அங்கீகரிக்கப்பட்டதோடு அதன் கால நீட்டிப்பும் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவரது இயக்குநர் குழுவில் இருந்த "எதிரிகள், பொறாமை கொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்" கிளைவுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யத் தொடங்கியிருந்தனர். இது அவருக்கு மனக்கவலையை உண்டாக்கி அவரது உடல் நிலையை வெகுவாக பாதிக்கச்செய்தது.
நண்பர்களின் ஆலோசனையின் படி தனது மனைவியுடன் பிரான்ஸ் சென்று வந்தார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இல்லாது இருந்தார். மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் ஆரம்ப ஆட்சி காலத்தில் நாட்டின் பிரதமராக இருந்த அவரது நெருங்கிய நண்பர் ஜார்ஜ் கிரென்வில் இறந்தது அவரை மேலும் அதிகமாக பாதித்தது. 1772ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி, இயக்குநர் குழு செயலரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கிளைவ் பதவியிலிருந்த காலத்தில் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டும் கடிதங்களின் நகல்கள் இணைக்கப்பட்டிருந்தன.
1769-1670இல் வங்காளத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் விளைவாக வங்காள மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தின் மோசமான நிர்வாகம், பேராசை, கடுமையான வரி விதிப்பு மற்றும் தானிய வர்த்தகத்தின் மீதான அதன் ஏகபோக உரிமை ஆகியவைதான் இந்தப் பஞ்சத்திற்கும் பெரும் உயிரிழப்பிற்கும் முக்கியக் காரணங்கள் என்பதை இங்கிலாந்து மக்கள் தெளிவாகப் புரிந்தனர்.
வங்காளத்தின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில், கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகள் மட்டும் பெரும் செல்வந்தர்களாகியிருந்தனர். அவர்கள் "நபோபுகள்" (nabobs) என்று அழைக்கப்பட்டு கேலிக்குள்ளாக்கப்பட்டனர். இங்கிலாந்தில் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்ததைத் தொடர்ந்து, வங்காளத்தில் கிளைவ் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் நிலைக்கு நாடாளுமன்றம் தள்ளப்பட்டது(1772).
ஜெனரல் ஜான் பர்கோய்ன் மற்றும் ஹொரேஸ் வால்போல் ஆகியோர் கிளைவின் நடத்தையைக் கடுமையாக விமர்சித்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முயன்றனர். விசாரணையை எதிர்த்த உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னர் வாரன் ஹேஸ்டிங்ஸின் பதவி நீக்கத்திற்கு கடுமையாக வாதாடிய எட்மண்ட் பர்க் ஆவார்.
எந்தவொரு தனிநபரிடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடமோ தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்படும்போது, அது எப்போதும் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதே அனுபவமாக இருந்துள்ளது என்று வாதிட்ட பர்க் இந்தியாவில் ஏற்பட்ட தோல்விக்கு அரசே பொறுப்பேற்க வேண்டுமென்றார். இறுதியில், பிரிட்டனுக்கு ஒரு பேரரசையே பெற்றுக் கொடுத்த நிறுவனத்திற்கு அவப்பெயர் தேடித்தராமல், எதிர்காலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்லதொரு நிர்வாகத்திற்கு உத்திரவாதம் வழங்குவதே போதுமானது என்று கூறி முடித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரியும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயும் இருந்த கர்னல் பர்கோயின் தலைமையிலான குழுவின் முன் கிளைவ் வரவழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கேட்பவர்கள் தன் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், எவ்வித வருத்தமுமின்றி, பணிய மறுக்கும் மனப்பான்மையையே கிளைவ் கொண்டிருந்ததாக சமகாலத்து ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
வங்காளத்தில் ராபர்ட் கிளைவ் மேற்கொண்ட நிர்வாகம் மற்றும் அவர் ஈட்டிய செல்வம் ஆகியவை தொடர்பாக1772 மற்றும் 1773-ஆம் ஆண்டுகளில் அவர் மீது நடத்தப்பட்ட நாடாளுமன்ற விசாரணை, அவையில் நடைபெற்ற முக்கிய விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புகளுடன் ராபர்ட் கிளைவ் "தம் நாட்டிற்குச் சிறந்த மற்றும் போற்றுதலுக்குரிய சேவைகளை ஆற்றியுள்ளார்" என்று கூறும் தீர்மானம் ஒன்றை மக்கள் அவை (House of Commons) இறுதியில் நிறைவேற்றியது.
தன் செயல்களை மக்கள் அவை எவ்வாறு நியாயப்படுத்தியது என்பது குறித்து கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸுக்கு எழுதிய கடிதத்தில் (அக்டோபர் 14, 1773) "பொறாமையும் விரோதமும் கொண்ட ஒரு சில தனிநபர்கள் என் செல்வத்தையும் நற்பெயரையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு என் மீது முழுத் தாக்குதலைத் தொடுத்தனர். ஆனால், மக்கள் அவையின் நீதியுணர்வு அவர்களின் நோக்கங்களை முறியடித்ததோடு, நான் இந்நாட்டிற்குச் சிறந்த, மிக முக்கியமான சேவைகளை ஆற்றியுள்ளேன் என்று பெருவாரியான வாக்குகள் மூலம் தீர்மானம் நிறைவேற்றச் செய்தது." என்று குறிப்பிட்டிருந்தார்.
புகழின் உச்சியிலிருந்து நாட்டு மக்களின் அவச்சொல்லுக்கு ஆளான கிளைவ் மனநலம் குன்றினார். உடல்நலன் கருதி அவர் தனது மனைவியுடன் ஓய்வெடுக்க இத்தாலிக்குச் சென்றார். அவர் எப்போது அங்கிருந்து திரும்பினார் என்பது தெரியவில்லை. இயல்பிலேயே மனச்சோர்வு கொண்டவராகவும், வேலையில்லாத நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடுபவராகவும் அவர் இருந்ததால் தொடர்ந்து அவதிப்பட்டு 1774 நவம்பர் 22 அன்று தன் கையாலேயே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ் அவரது வாரிசாக முக்கிய எஸ்டேட்களையும் செல்வத்தின் பெரும்பகுதியையும் பெற்றார். அதே வேளையில், அவரது மனைவி மார்கரெட் மற்றும் உயிருடன் இருந்த அவரது நான்கு குழந்தைகள் ஆகியோரிடையே ராபர்ட் கிளைவின் மீதமிருந்த சொத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து அவர் கொண்டு சென்ற சில முகலாயக் காலத்து கலைப்பொருட்கள் பின்னர் எட்வர்ட் வசித்து வந்த வேல்ஸில் உள்ள போவிஸ் கோட்டையில் வைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் கண்ணோட்டத்தில் 19ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற வரலாற்றறிஞர் தாமஸ் மெக்காலேவின் கிளைவ் பற்றிய மதிப்பீடு இது: "உணர்ச்சிபெருக்கோடும், கடும் சோதனைகளுக்குட்படும் சூழல்களுடனும் பிறந்த பெரும்பாலான மனிதர்களைப் போலவே, கிளைவும் பெரும் தவறுகளைச் செய்தார். ஆனால், அவரது ஒட்டுமொத்தப் பணிவாழ்வை நடுநிலையோடும் தெளிந்த பார்வையோடும் அணுகும் எவரும் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்: வீரர்களையும் அரசியல் மேதைகளையும் தாராளமாகத் தோற்றுவித்த நம் தீவு, போர்க்களத்திலோ அல்லது நிர்வாக ஆலோசனைகளிலோ அவரைப் போன்றதொரு உண்மையான மாமனிதரை அரிதாகவே உருவாக்கியுள்ளது."
ஆனால் இந்திய வரலாற்றறிஞர்களின் கண்ணோட்டத்தில், ராபர்ட் கிளைவ் பிளாசிப் போரில் வெற்றி பெற்றது முறையான ராணுவ வலிமையின் மூலமாக அல்ல; மாறாக, "துரோகத்தாலும் போலி ஆவண மோசடி மூலமுமே" அவர் அந்த வெற்றியைப் பெற்றார். நவாப் பதவியைக் கைப்பற்ற விரும்பிய மீர் ஜாஃபர் மற்றும் நவாபின் படையில் இருந்த பெரும் பகுதியினருக்கு லஞ்சம் கொடுத்து, அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையவோ அல்லது தங்கள் சொந்தப் படைகளுக்கு எதிராக திரும்பவோ வைக்கப்பட்டனர்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு