வங்கக்கடலில் புயல் உருவாகிறது - எங்கே, எப்போது கரையை கடக்கும்?

பட மூலாதாரம், IMD website
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (அக்டோபர் 24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதி காலை அது புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ஆம் தேதி அதிகாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால், அந்தமான் தீவுகளில் அக்டோபர் 23 முதல் 25-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளான வடக்கு ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 26-ஆம் தேதி முதல் மழை தொடங்கும் என்றும், 27-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 27-ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த வானிலை அமைப்பின் காரணமாக கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வங்கக்கடலின் மத்திய மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. அக்டோபர் 24-ஆம் தேதி மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
அக்டோபர் 25-ஆம் தேதி முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து, மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வங்கக்கடலில் கடல் சீற்றம் படிப்படியாக அதிகரித்து, அக்டோபர் 24-ஆம் தேதி முதல் கடல் கொந்தளிப்பாகவும், 26-ஆம் தேதி முதல் மிகக் கடுமையான கடல் சீற்றம் நிலவவும் வாய்ப்புள்ளது.
இதனால், அக்டோபர் 25-ஆம் தேதி வரை மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், அக்டோபர் 26 முதல் 29-ஆம் தேதி வரை மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு, தென்மேற்கு வங்கக்கடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று (அக்டோபர் 23) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "இன்று காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், இடி, மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது."
அதேபோல், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அங்கும் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாகச் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கவும், சாலைகள் வழுக்கலாக மாறவும் வாய்ப்புள்ளது. இதனால் போக்குவரத்தும் சில இடங்களில் பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மழையின்போது சாலைகளில் தேங்கும் நீர் மற்றும் இடி, மின்னல் தொடர்பான ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், R. Satish BABU / AFP via Getty Images
சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் செல்ல தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பத்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுமலையில் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி முத்துச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது தாய் சோலையம்மாள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூரில் தொடர் மழையால் சாய்ந்த மரங்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு, 1-வது வார்டு பகுதியில் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகளின் மீதும், சாலைகளின் மீதும் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர்: அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த வெள்ள நீர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடும் மழைப்பொழிவு காரணமாக திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பஞ்சலிங்க அருவியை கடந்து அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை தொடருமா?

பட மூலாதாரம், AFP via Getty Images
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இன்று மற்றும் அக்டோபர் 24ஆம் தேதி மிதமான மழையும், அக்டோபர் 25ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதலே பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் உட்பட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடிய சூழல் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































