நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஜியோ பங்குச்சந்தை அறிமுகம் குறைந்த கட்டண இணைய சேவைக்கு முடிவு கட்டுமா?
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி, மும்பை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், புதன்கிழமை பங்குச்சந்தையில் அறிமுகமாகிறது.
இந்தியப் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும், ஜியோ நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 320 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (IPO) பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடு இதுவாகும்.
உலகின் முன்னணி முதலீட்டு நிதி மேலாளர்கள், இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் இதில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
அக்டோபர் 21ஆம் தேதி பங்குகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, விற்பனைக்கு வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையைவிட அதிகமான பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனங்களில் ஒன்றாகும். குறைந்த கட்டணத்தில் மொபைல் இணையச் சேவையை வழங்கும் இந்த நிறுவனத்திற்கு 50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோவின் அபரிமிதமான வளர்ச்சி பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் இந்தியாவின் தொலைத்தொடர்புச் சந்தையில் ஜியோ அறிமுகமானது. அப்போது மிகக் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவையை வழங்கியதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களை இணையத்தைப் பயன்படுத்தச் செய்தது.
ஆனால், ஜியோவின் வருகை தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் 17 நிறுவனங்கள் செயல்பட்டு வந்த சந்தை, வெறும் மூன்று நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையாகச் சுருங்கியது.
அதிக நிதி ஆதாரங்களைக் கொண்ட ஜியோ நிறுவனம், கட்டணப் போட்டியை உருவாக்கி மற்ற நிறுவனங்களைத் தொழிலில் இருந்து வெளியேற்றியதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.
சமீபத்தில், ஈலோன் மஸ்க் முகேஷ் அம்பானியை விமர்சித்ததுடன், அவரை இந்தியாவில் உண்மையான அதிகாரம் படைத்தவர் என்றும் குறிப்பிட்டார். தனது ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியச் சந்தையில் நுழைவதை ஜியோ தடுக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஈலோன் மஸ்க்கின் நிறுவனத்துடனான போட்டியை வரவேற்பதாகத் தெரிவித்தது.
கடந்த பத்தாண்டுகளாக ஜியோ பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும், அந்நிறுவனத்தின் குறைந்த கட்டண இணையத் திட்டங்கள் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவில், மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகவும், இணையவழிப் பணப் பரிவர்த்தனைகள், உணவு விநியோகம் மற்றும் இணையவழி வர்த்தகம் போன்ற சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையவும் இது உதவியுள்ளது.
ஜியோ அறிமுகமான மூன்றே ஆண்டுகளில், வாடிக்கையாளர்களின் இணையத் தரவுப் பயன்பாடு 50 மடங்கு அதிகரித்தது. அதேநேரத்தில், இணையச் சேவைக்கான கட்டணங்கள் கணிசமாக குறைந்தன.
குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கிய இந்த உத்தியால், 2026ஆம் ஆண்டுக்குள் ஜியோ நிறுவனம் சுமார் 55.3 கோடி மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்றது.
வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் 50 சதவீதப் பங்கையும், பிராட்பேண்ட் சந்தையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும் கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை அந்நிறுவனம் வலுப்படுத்தியது.
இந்தியாவின் வயர்லெஸ் இணையத் தரவுப் போக்குவரத்தில் 60 சதவீதத்தை ஜியோ கையாள்கிறது. சீனாவுக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகவும் இது திகழ்கிறது.
இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ள பங்குத் தரகு நிறுவனமான எம்கே குளோபல், ஜியோவை 'இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை இயக்கும் சக்தி' என்று வர்ணித்துள்ளது.
ஜியோ நிறுவனம் பங்குச்சந்தையில் அறிமுகமாவது ஜியோவின் கட்டண நிர்ணய உத்தியில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் மிகக் குறைந்த கட்டணச் சேவைகள் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
"சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கான ஆயுதமாகக் குறைந்த கட்டணங்களை ஜியோ பயன்படுத்தி வந்த காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது," என்று காமயாக்யா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் நித்யா ஷா கூறினார்.
"பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறிய பிறகு, ஜியோ தனது சிறுபான்மை பங்குதாரர்களுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும். இதனால், கட்டணங்களைக் குறைவாகவே வைத்திருக்க வேண்டிய ஊக்கம் இயல்பாகவே குறையும்," என்றும் அவர் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில், குறைந்த கட்டணத் திட்டங்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது மட்டுமே ஜியோவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இருக்காது.
மாறாக, ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் அதிக வருவாய் ஈட்டுவதையே அதன் வளர்ச்சி சார்ந்திருக்கும் என்று பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
"வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்றுவது, அடுத்தடுத்து கட்டணங்களை உயர்த்துவது, ஃபைபர் இணைய இணைப்பு சென்றடையாத வீடுகளுக்கும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் அதிக வருவாய் ஈட்டுவதையே ஜியோவின் எதிர்கால வளர்ச்சி சார்ந்திருக்கும்," என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது, அதன் போட்டி நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்துவதற்கு வழிவகுக்கலாம்.
ஏனெனில், தங்களைவிடக் குறைந்த கட்டணத்தில் ஜியோ சேவை வழங்கும் என்ற அச்சம் போட்டி நிறுவனங்களிடையே குறையத் தொடங்கலாம்.
"இந்த மாற்றத்தால் அதிகப் பலனடையக்கூடிய நிறுவனம் வோடஃபோன் ஐடியாவாக இருக்கலாம்," என்று நித்யா ஷா கூறுகிறார்.
"தொலைத்தொடர்புத் துறையில் மிகவும் பலவீனமான நிதிநிலையைக் கொண்டுள்ள நிறுவனத்திற்கு, இந்த மாற்றம் மிகப்பெரிய சாதகமான சூழலை உருவாக்கும் தருணமாக அமையலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைத்தொடர்புத் துறை முழுவதும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு கட்டண உயர்வை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், குறைந்த கட்டணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வாடிக்கையாளர்கள், மலிவான திட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு மாறக்கூடும். இதனால், தொலைத்தொடர்புச் சந்தையில் மீண்டும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களை மாற்றும் போக்கு அதிகரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொபைல் இணையச் சேவைக்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றாலும், ஜியோவின் பொதுப் பங்கு வெளியீடு முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் இணையத் தரவுப் பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு, கிளவுட் கம்ப்யூட்டிங், இணையவழி விளையாட்டுகள், நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் ஜியோ உருவாக்கி வரும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
குறைந்த இணையக் கட்டணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, உலகிலேயே அதிக மொபைல் இணையத் தரவைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் மாதந்தோறும் பயன்படுத்தும் இணையத் தரவின் அளவு, 2024ஆம் ஆண்டில் 28.7 ஜிபியாக இருந்தது. இது 2026ஆம் ஆண்டில் 42.3 ஜிபியாக உயர்ந்துள்ளது.
அதாவது, இரண்டு ஆண்டுகளில் இணையத் தரவுப் பயன்பாடு 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
மக்களின் செலவழிக்கக்கூடிய வருமானம் அதிகரித்து வருவதால், இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள் மாதாந்திர இணையத் தரவுப் பயன்பாடு 65 ஜிபியாக உயரும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றங்கள் அனைத்தும், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் ஜியோ ஈட்டும் சராசரி வருவாயை நீண்டகால அடிப்படையில் அதிகரிக்க உதவும்.
"சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பெரும்பாலான டிஜிட்டல் சேவைகளின் பயன்பாடு இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, இந்தத் துறையில் வளர்ச்சிக்குப் பெரும் வாய்ப்பு உள்ளது," என்று எம்கே குளோபல் தெரிவித்துள்ளது.
ஜியோ பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது, நிறுவனத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், அதன் சந்தை மதிப்பை முதலீட்டாளர்கள் தெளிவாக அறிந்துகொள்ளவும் உதவும் என்று கடன்தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
தற்போது ஜியோ, எண்ணெய் சுத்திகரிப்பு முதல் சில்லறை வர்த்தகம் வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் ஜியோ வகிக்கும் முக்கியப் பங்கும், தொடர்ந்து அதிகரித்து வரும் அதன் செல்வாக்கும் முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேநேரத்தில், ஜியோவின் பொதுப் பங்கு வெளியீடு குறித்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து நடைபெறும் முதல் பங்கு வெளியீடு இதுவாகும்.
1958ஆம் ஆண்டில் மசாலாப் பொருட்கள் மற்றும் பாலியெஸ்டர் நூல் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிறிய நிறுவனமாக ரிலையன்ஸ் தொடங்கப்பட்டது.
பின்னர் ஜவுளி, பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய துறைகளுக்கு விரிவடைந்தது. தொடர்ந்து சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகளிலும் கால் பதித்தது.
நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குச் செல்வத்தை உருவாக்கிக் கொடுத்த வரலாற்றைக் கொண்ட ரிலையன்ஸ், சிறு முதலீட்டாளர்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவிய திருபாய் அம்பானி, 1980 மற்றும் 1990களில் பங்குகளில் முதலீடு செய்யும் பழக்கத்தைப் பரவலாக்குவதில் அடிப்படைப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
அதுவரை பங்கு வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்த பங்குச்சந்தை முதலீட்டை, மற்ற தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றதில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகக் கருதப்படுகிறது.
தொடக்கக் காலங்களில், ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டங்களை மிகப்பெரிய நிகழ்வுகளாக நடத்தியது.
அந்தக் கூட்டங்களில் முக்கிய அறிவிப்புகள், பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் பங்குதாரர்களாக இருப்பதைக் கொண்டாடும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் மூலம் தனிநபர் பங்குதாரர்களின் மிகப்பெரிய ஆதரவை ரிலையன்ஸ் பெற்றது.
காலப்போக்கில், நிறுவனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள் உருவாகினர். அவர்களில் பலர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஆழமான உணர்வுபூர்வமான பிணைப்பையும் வளர்த்துக்கொண்டனர்.
கடந்த ஓராண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிந்திருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அந்நிறுவனம் அளித்துள்ள வருவாய் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையளிக்கிறது.
"கடந்த 30 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 30 சதவீத வருவாயைத் தொடர்ந்து வழங்கியுள்ளது," என்று மும்பையைச் சேர்ந்த வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கிராந்தி பதினி பிபிசியிடம் தெரிவித்தார்.
"அதனால்தான் ஜியோவின் பொதுப் பங்கு வெளியீட்டிலும் அதே சாதனையை மீண்டும் நிகழ்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது," என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு