பட்டாசு வெடிக்கும் போது பிரகாசமான ஒளியும், சத்தமும் வெளிப்படுவது எப்படி?

பட மூலாதாரம், Archived photo
- எழுதியவர், அம்ரிதா துர்வே
- பதவி, பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
காகிதத்தில் சுற்றப்பட்ட இவ்வளவு சிறிய ஒரு பொருள் எப்படி இவ்வளவு பெரிய வெடிப்பையும் ஒளியையும் ஏற்படுத்த முடியும்? அதுவும் சில நொடிகளில். மாசுபாட்டை ஏற்படுத்தி, உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தச் சிறிய பட்டாசில் அப்படி என்ன இருக்கிறது?
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பட்டாசு என்பது ஒரு சிறிய வெடிமருந்துத் தொழில்நுட்பக் கருவி.
சில குறிப்பிட்ட வேதிப்பொருட்களைக் கொண்ட இந்தப் பொருள், தீ பற்றவைக்கப்படும்போது ஒளி, ஒலி, புகை, வெப்பம், தீப்பொறிகள் அல்லது இயக்கம் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது.
பட்டாசுக்குள் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
பட்டாசின் காகித உறையைப் பிரித்துப் பார்த்தால், கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் ஒரு பொடி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன?
எரிபொருள் : நிலக்கரி மற்றும் கந்தகம் போன்றவை எரிபொருளாகச் செயல்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றி: எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் பொருள் இது. பொதுவாக நெருப்பு எரிவதற்கு வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் உதவுகிறது. ஆனால் பட்டாசில் ஆக்ஸிஜன் ஏற்கெனவே இருக்கிறது. இது பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது. இதனால்தான் இறுக்கமாக மூடப்பட்ட உறைக்குள் இருந்தாலும் பட்டாசு விரைவாக எரிகிறது.
உறை: இறுக்கமாகச் சுருட்டப்பட்ட காகிதம் அல்லது சில நேரங்களில் அட்டைப் பெட்டி போன்ற பொருட்களால் இது தயாரிக்கப்படுகிறது. இந்த உறை உள்ளே அழுத்தம் உருவாக உதவுகிறது.
பட்டாசு வெடிக்கும் போது நிகழும் வேதியியல் மாற்றம்
பட்டாசு திரியில் தீ பற்றவைக்கும்போது, அதிலிருந்து உருவாகும் தீப்பொறி முக்கிய வேதிப்பொருட்களைச் சென்றடைகிறது.
பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கந்தகத்துடன் வினைபுரியும் போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது. இதனால் வேதியியல் வினை நிகழ்ந்து அதிக அளவு வெப்பமும் சூடான வாயுக்களும் உருவாகின்றன. இதுவே எரிதல் எனப்படுகிறது.
ஆனால் இவை அனைத்தும் இறுக்கமாக மூடப்பட்ட உறைக்குள் நடைபெறுகின்றன. உள்ளே உருவாகும் சூடான வாயுக்கள் மிகக் குறுகிய நேரத்தில் அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
அழுத்தம் அதிகரிக்கும் போது பட்டாசின் வெளிப்புற உறை வெடித்துச் சிதறுகிறது. அப்போது வாயுக்கள் திடீரென வெளியேறி, தீவிரமான அழுத்த அலைகளை உருவாக்குகின்றன.
இதன் விளைவாகவே வெடிச்சத்தம் கேட்கிறது. எரியும் துகள்கள் மற்றும் வாயுக்களிலிருந்து பிரகாசமான ஒளியும் வெளிப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பட்டாசு வெடிக்கும் போது வெவ்வேறு நிறங்கள் தோன்றுவது எப்படி?
பட்டாசுகளில் வெவ்வேறு உலோகச் சேர்மங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெவ்வேறு நிறங்கள் உருவாக்கப்படுகின்றன.
- அலுமினியம் – வெள்ளை நிறம்
- வெள்ளி – வெள்ளி நிறம்
- தாமிரச் சேர்மம் – நீல நிறம்
- கால்சியம் சேர்மம் – ஆரஞ்சு நிறம்
- பேரியம் சேர்மம் – பச்சை நிறம்
- ஸ்ட்ரான்ஷியம் சேர்மம் – சிவப்பு நிறம்
போன்ற பல்வேறு சேர்மங்கள் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
பட்டாசு ஏன் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது?
பட்டாசுகளுக்கு அதிக சத்தத்தையும் பல்வேறு நிறங்களையும் ஒளியையும் கொடுக்கும் அதே வேதியியல் செயல்முறைகள்தான் ஒலி, காற்று, மண் மற்றும் நீர் மாசுபாட்டுக்கும் காரணமாகின்றன.
பட்டாசு வெடிக்கும்போது மிக நுண்ணிய மற்றும் பெரிய அளவிலான துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவற்றில் PM2.5, PM10 போன்ற நுண்துகள்களும் அடங்கும்.
பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களிலிருந்து ஈயம், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் உள்ளிட்ட வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. உலோகங்கள் கலந்த புகையும் தூசும் வெளியேறுகின்றன.
இதனால்தான் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட உடனேயே காற்றின் தரம் மோசமடைகிறது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளிலும் காற்றோட்டம் இல்லாத இடங்களிலும் இந்த மாசு தேங்கிவிடுகிறது.
இந்த நச்சுத் துகள்கள் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் சென்றால் நுரையீரலைச் சென்றடையலாம். பட்டாசுப் புகை கண்கள், மூக்கு, வாய் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பட்டாசுகள் வெடித்த பிறகு அவற்றின் எஞ்சிய பொருட்கள் தரையில் கிடக்கின்றன. அவை மண்ணுடன் கலக்கின்றன. ஆறுகள், ஏரிகள் அல்லது கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடித்தால், இந்த வேதிப்பொருட்கள் நீரிலும் கலக்கின்றன.
அதுமட்டுமின்றி, பட்டாசுகளை வெடிக்கும்போது காதுகளைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமான சத்தமும் உருவாகிறது.
ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்காகப் பணியாற்றும் ஆர்வலர் சுமைரா அப்துலாலி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகப் பட்டாசுகளின் ஒலி அளவு 125 டெசிபல் என்ற வரம்புக்குள் இருந்தாலும், அவற்றில் உள்ள நச்சுக் கூறுகள் மற்றும் நச்சு வாயுக்களின் வெளியேற்றம் குறையவில்லை என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பட்டாசுகளுக்கு நீதிமன்ற கட்டுப்பாடுகள்
பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தாமாக முன்வந்து விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், மகாராஷ்டிர மாநிலத்தில் பொது இடங்கள், நடைபாதைகள், சாலைகள் மற்றும் தெருக்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் கருத்துத் தெரிவித்துள்ளது.
பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை என்றாலும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு நீதிமன்றத்தைத் தள்ள வேண்டாம் என்று நிர்வாக அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டாசுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பட்டாசுகள் இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விராட் கோலி போன்ற பிரபலங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஒரு பட்டாசு வெடித்த சில நொடிகளிலேயே அதன் தாக்கம் முடிந்துவிடுவதில்லை. அதன் பாதிப்புகள் நீண்ட காலம் நீடிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































