வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவானது - எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

பட மூலாதாரம், RMC, Chennai
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு முரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.
ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆறு மணி நேரத்தில் மணிக்கு 23 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இன்று காலை 11:30 மணி வாக்கில் முரசு புயலாக மாறியது என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சென்னையின் கிழக்கு-தென்கிழக்கு கரையில் இருந்து 560 கிமீ தொலைவிலும் ஆந்திராவின் விசாகபட்டினத்தில் இருந்து 660 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் தீவிர சூறாவளி புயலாக மேலும் வலுவடையக்கூடும்.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 2, 2026 அன்று நள்ளிரவு 11:30 மணி தொடங்கி நவம்பர் 3, 2026 அதிகாலை 4:00 மணி வரையிலான நேரத்தில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது இது தீவிர சூறாவளி புயலாக இருக்கும் என்றும் இதில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரையும், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கையின்படி, இன்று (நவம்பர் 1) திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவம்பர் 2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் (நவம்பர் 3) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில், அவ்வப்போது 75 கி.மீ வேகத்தை எட்டக்கூடிய பலத்த காற்று வீசக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































