டெல்லியில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் - தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் பொதுக்கூட்டம், நண்பகல் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்க உள்ளது. பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். காக்ரோச் ஜனதா கட்சியும் பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக 10 லட்சம் பேர் டெல்லிக்கு வருவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதையும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதையும் காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பொதுக்கூட்டம் பெரிய மாற்றத்துக்கான அறிகுறி என்று இந்தியா கூட்டணி கூறுகிறது.
ஆனால், "கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிடும்போது, இந்தியா கூட்டணி எங்கே இருக்கிறது?" என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ராம்லீலா மைதானத்தை நோக்கிப் பெருமளவில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என டெல்லி போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி முகமை பிடிஐ தகவலின்படி, மேற்கு டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அல்லது வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
ராகுல் காந்தியின் பேரணியை முன்னிட்டு, மிண்டோ சாலையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் ஷாத் மிதாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்களும் அங்கு திரண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
மாதிரி நாடாளுமன்றக் கூட்டம்
அக்டோபர் 31-ஆம் தேதி, பொதுக்கூட்டத்துக்கு முந்தைய நாளில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்கப்படுவதில்லை என்றும், அதனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒன்றுகூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































