வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறதா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை?

பட மூலாதாரம், IMD
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, நவம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவுக்குள் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் நவம்பர் 2-ஆம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 3-ஆம் தேதி காலை ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் - நரசாபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நவம்பர் 1-ஆம் தேதி அதிகாலை அறிக்கைப்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அக்டோபர் 31-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இது விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும் இருந்தது.
கடந்த ஆறு மணிநேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ள இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நவம்பர் 1-ஆம் தேதி நண்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நள்ளிரவுக்குள் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
புயல் உருவாகும்பட்சத்தில், இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் சூட்டப்படும். இருப்பினும், நவம்பர் 1-ஆம் தேதி அதிகாலை வெளியான அதிகாரபூர்வ அறிக்கையின்படி, இது இன்னும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே உள்ளது.

பட மூலாதாரம், IMD
ஆந்திராவில் எப்போது கரையைக் கடக்கும்?
நவம்பர் 2-ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெறும் இந்த அமைப்பு, நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலையில் தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்று காலைக்குள் நெல்லூர் - நரசாபுரம் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவம்பர் 1-ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 2-ஆம் தேதி சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 3-ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நவம்பர் 4-ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளில் நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கடலோர ஆந்திராவில் பலத்த காற்று, மரங்கள் முறிந்து விழுதல், மின்கம்பங்கள் சேதமடைதல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
தமிழ்நாட்டில் நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிட்ட மாவட்ட வாரியான முன்னறிவிப்பின்படி, நவம்பர் 2-ஆம் தேதி நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 3-ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நவம்பர் 1-ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
நவம்பர் 2-ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 3ஆம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. ஆகவும், இடையிடையே 75 கி.மீ. ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவம்பர் 2-ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 3-ஆம் தேதி முற்பகல் வரை கடல் மிகக் கடுமையான சீற்றத்துடன் காணப்படக்கூடும்.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும் அதை ஒட்டிய கடல் பகுதிகளிலும் நவம்பர் 1-ஆம் தேதி காலை முதல் நவம்பர் 4-ஆம் தேதி காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவம்பர் 2-ஆம் தேதி காலை முதல் நவம்பர் 4-ஆம் தேதி பிற்பகல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயலின் நகர்வு, தீவிரம் மற்றும் கரையைக் கடக்கும் நேரம் தொடர்பான முன்னறிவிப்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































