பேய்கள் அல்லது அருகில் யாரோ இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவது ஏன்?

பழைய காலத்துத் தோற்றம் கொண்ட, மூடுபனி சூழ்ந்த காடு ஒன்றின் புகைப்படம்; அதன் தரைப்பகுதி முழுவதும் சிவப்பு நிற இலைகள் படர்ந்திருக்கின்றன. அந்தப் புகைப்படத்தின் மையப்பகுதியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி, ஒரு மர்மமான, அரை-வெளிப்படையான தோற்றம் கொண்ட பெண் நிற்கிறாள். அவளுக்கு நீண்ட கருமையான கூந்தல் உள்ளது, மேலும் அவள் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கிறாள்.
    • எழுதியவர், டெய்சி ஸ்டீஃபன்ஸ்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாகக் கூறும் பண்டைய மெசபடோமியக் கதைகள் முதல் சார்லஸ் டிக்கன்ஸின் 'எ கிறிஸ்துமஸ் கரோல்' கதை வரை, பேய்கள் குறித்த கதைகளைச் சொல்வதில் மனிதர்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு.

ஆனால், பேய்கள் மீதான நமது ஆர்வம் இன்றும் ஏன் தொடர்ந்து நீடிக்கிறது?

அமெரிக்காவின் வெஸ்ட் ஜார்ஜியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் கிறிஸ்டின் சிம்மண்ட்ஸ்-மூர் கூறுகையில், இயற்கைக்கு அப்பாற்பட்டவை என்று தாங்கள் நம்பும் அனுபவங்களைப் பலரும் உண்மையாகவே எதிர்கொள்கின்றனர்.

பொதுவாக, தற்போதைய அறிவியலால் விளக்க முடியாத நிகழ்வுகளைக் குறிப்பிடவே 'இயற்கைக்கு அப்பாற்பட்டவை' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

"அந்த அனுபவங்கள் அவர்களைப் பொறுத்தவரை உண்மையானவை. அவை அவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்" என்கிறார் அவர்.

ஆனால், அதற்காக அந்த அனுபவங்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

'மாற்றமடைந்த உணர்வு நிலை'

ஒருவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை எதிர்கொள்ளும்போது, அவருடைய மூளையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார் சிம்மண்ட்ஸ்-மூர்.

இதற்கான ஒரு சாத்தியமான விளக்கம், 'ஹிப்னகோகிக் நிலை' என்று அழைக்கப்படும் தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையாகும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இதுபோன்ற பல அனுபவங்கள், ஒருவரின் உணர்வு நிலை லேசாக மாற்றமடையும் நேரத்தில் நிகழ்கின்றன" என்கிறார் சிம்மண்ட்ஸ்-மூர்.

இந்த நிலையில், மனதுக்குள் உருவாகும் கற்பனைகளுக்கும் வெளியில் நிகழ்வதை உணரும் புலனுணர்வுக்கும் இடையிலான வேறுபாடு மங்கிவிடலாம். இதனால், இவை இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகிறது.

இந்த நிலையில்தான் தூக்க முடக்கமும் ஏற்படலாம்.

2011-ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வுத் தொகுப்பின்படி, உலகளாவிய பொதுமக்களில் 7.6 சதவிகிதம் பேர் இதை அனுபவித்துள்ளனர்.

'ஸ்லீப் மெடிசின் ரிவியூஸ்' இதழில் வெளியான இந்த ஆய்வில், மாணவர்களும் மனநல பிரச்னைகள் உள்ளவர்களும் சேர்க்கப்படவில்லை.

லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஃபிரெஞ்ச் இதை விளக்குகையில், "உங்கள் உடல் விழித்துக்கொண்டாலும், மூளை விழித்துக்கொள்ளாத நிலைதான் இது" என்கிறார்.

இயற்கைக்கு அப்பாற்பட்டவை என்று தோன்றும் அனுபவங்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை ஆராயும் 'அனோமலிஸ்டிக் சைக்காலஜி ரிசர்ச் யூனிட்' என்ற ஆய்வுப் பிரிவை இவர் நிறுவியவர்.

தூக்க முடக்கத்தின்போது, அறையில் நம்முடன் வேறொருவர் இருப்பதைப் போன்ற வலுவான உணர்வு உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்படலாம்.

"அறையில் வேறு எதையும் உங்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாமல் இருக்கலாம். ஆனாலும், அங்கே ஏதோ ஒன்று இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்" என்கிறார் ஃபிரெஞ்ச்.

நேர் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்; இதில் நீல நிற பைஜாமா மேல் சட்டை அணிந்த ஒருவர், வெள்ளை நிற விரிப்புகள் கொண்ட இரட்டைப் படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் தலையை ஒரு பக்கமாகத் திருப்பியபடி, நேராக உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அறை இருட்டாக உள்ளது; படுக்கைக்கு அருகில் தரையில் ஒரு ஜோடி செருப்புகள் காணப்படுகின்றன.
படக்குறிப்பு, பேராசிரியர் கிறிஸ் ஃபிரெஞ்ச் கூற்றுப்படி, தூக்க முடக்கத்தின்போது ஏற்படும் மாயத்தோற்றங்கள் "முற்றிலும் திகிலூட்டுபவை" ஆனால் அவை உண்மையானவை அல்ல.

தூக்க முடக்கத்தின்போது, உடல் ரீதியான உணர்வுகள் உட்பட முழுமையான மாயத்தோற்றங்களும் ஏற்படலாம்.

"இது முற்றிலும் அச்சமூட்டக்கூடிய அனுபவமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மாயத்தோற்றம்தான். உண்மையான நிகழ்வு அல்ல" என்கிறார் ஃபிரெஞ்ச்.

'பேரிடோலியா' எனப்படும், தொடர்பில்லாத அல்லது சீரற்ற வடிவங்களில் பழக்கமான உருவங்களையும் வடிவமைப்புகளையும் காணும் மனப்போக்கும், இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நமது பார்வை அமைப்பு செயல்படும் விதத்தால், கண்ணின் ஓரத்தில் ஏதோ ஒன்றைப் பார்த்துவிட்டு, அது உண்மையில் முகமாக இல்லாவிட்டாலும் முகம் போன்ற ஒன்றாகத் தவறாகப் புரிந்துகொள்வது மிகவும் எளிது" என்கிறார் கனடாவின் எட்மண்டனில் உள்ள மேக்ஈவன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராட்னி ஷ்மால்ட்ஸ்.

மன அழுத்தத்தில் இருக்கும்போது இதுபோன்ற வடிவங்களைக் கண்டறியும் மனப்போக்கு இன்னும் அதிகரிக்கிறது என்கிறார் சிம்மண்ட்ஸ்-மூர்.

இரண்டு உலோகத் தூண்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் ஒரு கான்கிரீட் கட்டை. அந்தக் கட்டையில் இரண்டு வட்ட வடிவத் துளைகளும், ஒரு பெரிய சதுர வடிவத் துளையும் உள்ளன; எனவே, இது வாய் திறந்திருக்கும் ஒரு முகத்தைப் போலத் தோன்றுகிறது.
படக்குறிப்பு, மனிதர்கள் தற்செயலான அமைப்புகளில் முகங்களைக் கண்டறியும் வகையில் உள்ளனர்.

தனியாக இருக்கும்போது நம்முடன் வேறொருவர் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதற்கு 'டிசோசியேஷன்' (Dissociation) எனப்படும் உளவியல் நிகழ்வும் காரணமாக இருக்கலாம் என்று சில உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஒருவரின் சுய உணர்வின் வெவ்வேறு அம்சங்கள் தனித்தனியாக இருப்பதைப் போல அனுபவிப்பதே டிசோசியேஷன் என்கிறார் சிம்மண்ட்ஸ்-மூர்.

இதன் ஒரு முனையில், விபத்து போன்ற மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சம்பவங்களின்போது இது நிகழலாம். அப்போது ஒருவர் தன்னிடமிருந்தே பிரிந்து செல்வதைப் போன்ற உணர்வைப் பெறலாம்.

அதேநேரத்தில், வீட்டுக்குத் திரும்பும்போது வாகனம் ஓட்டுவது போன்ற நன்கு பழக்கமான செயல்களைச் செய்யும்போது, முழுக் கவனமின்றித் தானாகவே செயல்படுவதுபோல இருப்பதும் இதன் ஓர் எளிய வடிவமாகும்.

ஒருவருக்கு அருகில் யாரோ இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்போது, அவருடைய சுயத்தின் ஏதோ ஒரு பகுதியை அவர் மற்றொரு உயிரினமாக அல்லது நபராக உணரக்கூடும் என்கிறார் சிம்மண்ட்ஸ்-மூர்.

பின்னணியில் வானவில் நிற மேகங்களைக் கொண்ட ஒரு கலைநயமிக்க படம்; அதில் பல முகங்களின் பக்கவாட்டுத் தோற்றங்கள் வரையப்பட்டுள்ளன. மேகங்களும் முகங்களும் படத்தின் மையப்பகுதியில் சுழல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, ட்ரான்ஸ்லிமினாலிட்டி (transliminality) அளவீடுகளில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், அமானுஷ்ய நிகழ்வுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை ஏற்படும் காலங்களில் இதுபோன்ற டிசோசியேஷன் நிலைகள் அதிகம் நிகழ வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

சில ஆய்வுகள், இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் குறித்த தகவல்களுக்கும் 'டிரான்ஸ்லிமினாலிட்டி' எனப்படும் ஓர் உளவியல் பண்புக்கும் இடையே தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளன.

சிம்மண்ட்ஸ்-மூர் கூறுகையில், இந்தப் பண்பை ஒரு கேள்வித்தாள் மூலம் மதிப்பிடலாம். இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் பொதுவாக அதிகக் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் கலை அல்லது இசையால் ஆழமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், தங்களது கனவுகளை நினைவில் வைத்துக்கொண்டு அவற்றுக்கு அர்த்தம் கற்பிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் அவர்.

தங்களுடன் யாரும் இல்லாதபோதும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் இருப்பை உணரும் அனுபவமும் இவர்களுக்கு அதிகம் ஏற்படலாம்.

இவர்களில் சிலருக்கு 'சினெஸ்தீசியா' எனப்படும் புலனுணர்வுத் தொடர்பு நிலையும் இருக்கலாம். அதாவது, ஒரு புலன் வழியாகப் பெறப்படும் தகவல் மற்றொரு புலனையும் தூண்டுவதாகும்.

உதாரணமாக, சினெஸ்தீசியா உள்ள ஒருவர் இளஞ்சிவப்பு நிறத்தைப் பார்க்கும்போது, அந்த நிறம் ரோஜாவின் நிறம் என்ற தொடர்பு அவருக்குள் தானாகவே உருவாகலாம். இதன் விளைவாக, அவரால் ரோஜாவின் வாசனையையும் உணர முடியும் என்கிறார் சிம்மண்ட்ஸ்-மூர்.

சிலருக்கு இதுபோன்ற ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் தொடர்புடைய அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்டவை என்று அவர்கள் கருதும் சில நிகழ்வுகளை விளக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், உளவியல் நிகழ்வுகள் மட்டுமே இதற்கான சாத்தியமான விளக்கங்கள் அல்ல.

சுற்றுச்சூழலின் பங்கு

சில இடங்கள் மற்ற இடங்களைவிட இயல்பாகவே அதிக அச்சமூட்டக்கூடியவையாக இருக்கின்றன என்கிறார் ஃபிரெஞ்ச்.

"அதிக வெளிச்சம் உள்ள இடத்திலிருந்து குறைந்த வெளிச்சம் உள்ள இடத்துக்குச் செல்லும்போது, நமக்கு ஒருவித அச்சம் ஏற்படலாம். அதேபோல், மிக உயரமான மேற்கூரைகளைக் கொண்ட இடங்களுக்குச் செல்லும்போதும் மக்கள் சற்று அதிகப் பதற்றத்தையும் அசௌகரியத்தையும் உணர்கின்றனர்" என்கிறார் அவர்.

ஆனால், சுற்றுச்சூழலின் மற்ற காரணிகள் சற்று சிக்கலானவை. இதற்கு ஓர் உதாரணம் 'இன்ஃப்ராசவுண்ட்' எனப்படும் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள்.

20 ஹெர்ட்ஸ் அளவுக்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகளே இன்ஃப்ராசவுண்ட் எனப்படுகின்றன. இயந்திரங்கள், போக்குவரத்து, குறிப்பாகப் பழைய கட்டடங்களில் உள்ள குழாய் மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகள் உள்ளிட்ட பலவற்றிலிருந்து இந்த ஒலிகள் உருவாகின்றன.

இன்ஃப்ராசவுண்ட் ஒலிகளை நம்மால் உணர்வுபூர்வமாகக் கேட்க முடியாது. ஆனால், அதனால் நம் மீது எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அர்த்தமல்ல என்கிறார் ஷ்மால்ட்ஸ்.

அவர் நடத்திய ஓர் ஆய்வில், இன்ஃப்ராசவுண்ட் இருப்பதால் பங்கேற்பாளர்களின் உமிழ்நீரில் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவு சற்றே அதிகரித்தது கண்டறியப்பட்டது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்துடன் தொடர்புடையது. மேலும், இன்ஃப்ராசவுண்ட் ஒலிகள் அதிக எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரியவந்தது.

அடர் நீல நிறப் பின்னணியில், படத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குச் செல்லும் ஒரு வெண்மையான ஒலி அலை.
படக்குறிப்பு, நிபுணர்களின் கூற்றுப்படி, நம்மால் கேட்க முடியாத மீக்குறை அதிர்வெண் ஒலிகள் (infrasound) நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இன்ஃப்ராசவுண்டுக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இன்னும் விவாதங்கள் உள்ளன. ஃபிரெஞ்ச் நடத்திய ஓர் ஆய்வில்கூட இவ்விரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இன்ஃப்ராசவுண்ட் இருப்பது மட்டுமே இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை ஏற்படுத்தப் போதுமானதல்ல என்பதை ஷ்மால்ட்ஸும் ஒப்புக்கொள்கிறார்.

இருப்பினும், பதற்றத்தால் அதிகரிக்கக்கூடிய பேரிடோலியா போன்ற உளவியல் நிகழ்வுகளுடன் சேர்ந்து பார்க்கும்போது, இன்ஃப்ராசவுண்ட் இந்தப் புதிரின் ஒரு சிறிய பகுதியாக இருக்கலாம் என்கிறார் அவர்.

பதற்றத்தை உணர்வதும், ஏதோ ஒன்று இருப்பதாக நினைப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அந்த அனுபவத்தை நாம் ஏன் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கருதுகிறோம்?

உண்மை vs உயிர்வாழ்தல்

இதற்கான பதில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

"நாம் உண்மையைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல; உயிர்வாழ்வதற்காக உருவானவர்கள்" என்கிறார் இயற்கைக்கு அப்பாற்பட்டவை மீதான நம்பிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் டெபோரா ஹைட்.

"நமது அறிவாற்றல் அமைப்புகளும் புலனுணர்வு அமைப்புகளும் ஒரு நிகழ்வின் உண்மையான தன்மையைக் கண்டறிவதைவிட, நமது உயிரைப் பாதுகாப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன."

கடந்த காலங்களில், ஒரு நிகழ்வை மிக மோசமான சாத்தியத்தின் அடிப்படையில் உடனடியாகப் புரிந்துகொள்வது பரிணாம வளர்ச்சியில் நமக்குச் சாதகமாக இருந்திருக்கலாம்.

உதாரணமாக, ஓர் இருளான நிழலைப் பார்த்ததும் அது வேட்டையாட வரும் விலங்காக இருக்கலாம் என்றும், விளக்க முடியாத ஓர் ஒலியைக் கேட்டதும் அது ஆபத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதுவது நம்மைப் பாதுகாத்திருக்கலாம்.

இதனுடன், 'ஏஜென்சி டிடெக்ஷன்' எனப்படும் ஓர் அறிவாற்றல் சார்ந்த மனப்போக்கும் மனிதர்களிடம் உள்ளது என்கிறார் ஹைட்.

அதாவது, வித்தியாசமான அல்லது விளக்க முடியாத ஒன்றை நாம் எதிர்கொள்ளும்போது, அதை யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஓர் உயிருள்ள சக்தி குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்திருக்க வேண்டும் என்று இயல்பாகவே கருதுகிறோம் என்கிறார் ஃபிரெஞ்ச்.

"இதிலிருந்து, நம்மை அச்சுறுத்தக்கூடிய சில சக்திகள் வெளியே இருக்கலாம் என்றும், அவை சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களாக இருக்கலாம் என்றும் நினைப்பதற்கு அதிகத் தூரம் செல்ல வேண்டியதில்லை" என்கிறார் அவர்.

டர்க்கைஸ் நிறப் பின்னணியில், மருத்துவமனை உடையில் இருக்கும் ஒருவர், நோயாளி படுத்திருக்கும் ஸ்ட்ரெட்சர் பிரகாசமான ஒளியை நோக்கித் தள்ளிச் செல்வதைக் காட்டும் ஒரு கலைநயமிக்க படம்.
படக்குறிப்பு, மறுவாழ்வு (மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை) இருப்பதற்கான ஆதாரமாக அமையலாம் என்பதற்காக நாம் பேய்களை நம்ப விரும்பலாம்.

வழக்கத்துக்கு மாறான அனுபவங்களை மக்கள் ஏன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை விளக்குவதற்கு 'உறுதிப்படுத்தல் சார்பு' என்ற மனப்போக்கும் உதவக்கூடும்.

பல்வேறு கலாசாரங்களில் நம்பிக்கைகள் மாறுபட்டாலும், மத நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் மனிதர்களின் இயல்பான சிந்தனை அமைப்பிலேயே ஓர் அங்கமாக இருப்பதாகத் தோன்றுகிறது என்கிறார் ஹைட்.

"பேய்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்று ஒருவர் ஏற்கெனவே நம்பினால், 'அதுதான் இதற்கான விளக்கம்' என்று அவர் கருதுவதில் எந்தவிதமான பகுத்தறிவின்மையும் இல்லை" என்கிறார் ஃபிரெஞ்ச்.

மேலும், மனிதர்கள் பேய்கள் இருப்பதை நம்ப விரும்புவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

"ஏற்கெனவே நாம் உண்மை என்று நம்பும் அல்லது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்துக்கு ஆதரவாக இருக்கும் ஆதாரங்களின் மீது அதிகக் கவனம் செலுத்துகிறோம்" என்கிறார் ஃபிரெஞ்ச்.

"இறப்புக்குப் பிறகும் வாழ்க்கை தொடர்கிறது என்பதற்கான ஒரு வகையான ஆதாரமாகப் பேய்கள் கருதப்படுகின்றன. எனவே, இறப்புக்குப் பிறகும் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், பேய்கள் உண்மையிலேயே இருக்கக்கூடும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் அதிகம் தயாராக இருப்போம்" என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு