நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
அமெரிக்க இடைக்கால தேர்தல்: குடியரசுக் கட்சி பின்னடைவு - டிரம்பை குற்றம் சாட்டும் குடியரசுக் கட்சியினர்
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியதால், டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நாடாளுமன்றத்தில் அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் செயல்படவுள்ளது.
அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைத் தோற்கடித்து, ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவார்கள் என்று சிபிஎஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது.
ஏற்கெனவே, பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையைக் கைப்பற்றுவார்கள் என்று சிபிஎஸ் கணித்திருந்தது. இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைப் பெறுவார்கள் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியினரின் கைகளில் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் குறைந்தது 229 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் குறைந்தது 161 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ், கன்சாஸ், ஓஹியோ உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் வலுவான செல்வாக்குள்ள மாகாணங்களில் எதிர்பாராத தொடர் வெற்றிகளை ஜனநாயகக் கட்சியினர் பெற்றுள்ளனர். பென்சில்வேனியாவில் ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையின் இரண்டு புதிய இடங்களைக் கைப்பற்றினர். 8-வது தொகுதியில் பேஜ் கோக்னெட்டியும், 10வது தொகுதியில் ஜானெல் ஸ்டெல்சனும் வெற்றி பெற்றனர். டெக்சாஸ் மாகாணத்தின் 34வது தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வின்சென்டே கோன்சாலஸ் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ஓஹியோ மாகாணத்தின் 1வது தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெக் லேண்ட்ஸ்மேனும் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
ஒஹையோ ஆளுநர் தேர்தல்: விவேக் ராமசாமி அதிர்ச்சி தோல்வி – ஏமி ஆக்டன் வரலாற்று வெற்றி
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒஹையோ மாகாண ஆளுநர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், ஒஹையோ மாகாணத்தின் முன்னாள் சுகாதார இயக்குநருமான ஏமி ஆக்டன் 51.95% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விவேக் ராமசாமி 44.73% வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
தோல்விக்குப் பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய விவேக் ராமசாமி, சில நிகழ்வுகள் குறிப்பிட்ட காரணத்திற்காகவே நடப்பதாகத் தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் ஆளுநராகிறார் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ்
அட்லாண்டா நகரின் முன்னாள் மேயரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், ஜார்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த மாகாணத்தின் முதல் கறுப்பின ஆளுநராகவும், ஆளுநர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண்ணாகவும் அவர் வரவுள்ளார்.
ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி உறுதியானதாகக் கணிக்கப்பட்டபோது, அங்கு ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியதாக பிபிசியின் கார்ல் நாஸ்மன் விவரித்தார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான ரிக் ஜாக்சனை பாட்டம்ஸ் தோற்கடித்தார். கோடீஸ்வரத் தொழிலதிபரும் சுகாதாரத் துறை நிர்வாகியுமான ஜாக்சனுக்கு, பதவிக்காலம் முடிவடையும் ஆளுநர் பிரையன் கெம்ப் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்தத் தேர்தலுக்காக டிரம்ப் தனது சொந்தப் பணத்தில் 20 கோடி டாலர்களைச் செலவிட்டிருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராகப் பதவி வகித்ததில்லை.
ஒபாமா: அமெரிக்க மக்கள் 'தெளிவான செய்தியை' அளித்துள்ளனர்
அமெரிக்கர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு ஜனநாயகக் கட்சியினர் பெற்றுள்ள அமோக வெற்றி சான்றாக இருப்பதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இன்றிரவு அமெரிக்க மக்கள் ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளனர். மக்களைப் பிளவுபடுத்துவதற்குப் பதிலாக ஒன்றிணைக்கும் அரசியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தெளிவான தீர்வுகளை முன்வைக்கும் தலைவர்களையும் அவர்கள் விரும்புகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மிச்சிகன், ஜார்ஜியா உள்ளிட்ட தேர்தல் முடிவுகள் ஊசலாட்டத்தில் இருந்த மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் பலருக்கு ஆதரவாக ஒபாமா பிரசாரம் செய்திருந்தார்.
மேலும் அவர், "இப்போது நமது பணி, முழு முனைப்புடன் செயல்படுவது; நமக்கு அதிகாரம் உள்ள இடங்களில் மாற்றங்களைச் செய்வது; மேலும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பது; எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைப்பது" என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மீது குற்றம் சாட்டும் குடியரசுக் கட்சியினர்
தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி (Republican Party) தனது தோல்வியின் தீவிரத்தன்மையை உணரத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைவர்கள் ஆரம்பத்தில் பிரதிநிதிகள் சபையில் தங்கள் பெரும்பான்மையை இழக்கக்கூடும் என்று அஞ்சியிருந்தனர். ஆனால் செனட் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இன்னும் இருக்கலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது.
ஆனால் இப்போது தேர்தல் தோல்வியின் தீவிரம் தெளிவாகத் தெரிந்து வருவதால், இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் இழந்ததற்காக பல குடியரசுக் கட்சியினர் அதிபர் டொனால்ட் டிரம்பை குற்றம் சாட்டுகின்றனர்.
"பொறுப்பு அவர்களுக்கே உரியது. வேறு யாருக்கும் அல்ல. இது அதிபர் டிரம்பை மக்கள் முழுமையாக நிராகரித்ததன் விளைவு," என்று டெக்சாஸை சேர்ந்த மூத்த குடியரசுக் கட்சி அரசியல் ஆலோசகர் பில் மில்லர் கூறினார். பல ஆண்டுகளாகவும், சில இடங்களில் பல தசாப்தங்களாகவும் வெற்றி பெறாத பல மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி செனட் இடங்களை வென்றது.
அந்தப் பட்டியலில் டெக்சாஸ் மற்றும் தென் கரோலினா முதலிடத்தில் உள்ளன. மேலும், டிரம்ப் ஆட்சிக் காலத்தில் குடியரசுக் கட்சியின் பக்கம் திரும்பியிருந்த ஐயோவா, ஓஹையோ போன்ற மாகாணங்களிலும் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது.
டிரம்பின் குறைந்த மக்களாதரவு மதிப்பீடுகள், பிரபலமற்ற கொள்கைகள் மற்றும் பணவீக்கம் குறித்து வாக்காளர்கள் தெரிவித்த கவலைகளை அவர் தொடர்ச்சியாக புறக்கணித்தது ஆகியவை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குடியரசுக் கட்சி கூறுகிறது.
"தவறுக்கு மேல் தவறு நடந்தது. பல்வேறு மாகாணங்களில் மக்கள் ஜனாதிபதியின் கொள்கைகளை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது," என்று மின்னசோட்டாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி அரசியல் வியூக நிபுணர் கிரெக் பிப்பன் கூறினார்.
இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்குத் தனது கட்சியினரையும் ஃபாக்ஸ் நியூஸையும் குற்றம் சாட்டும் டிரம்ப்
தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்துகளை டிரம்ப் தற்போது தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெற்றார்கள், ஏன் தோல்வியடைந்தார்கள் என்பது குறித்து, சாதகமான மற்றும் பாதகமான கருத்துகளைத் தெரிவிக்கும் அரசியல் விமர்சகராக நான் மாறப் போகிறேன்! டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட், தனது அரசியல் வாழ்க்கையின் கடந்த ஆறு மாதங்களில் பெயரளவுக்கு மட்டுமே குடியரசுக் கட்சியினராக (RINO) இல்லாமல் இருந்திருந்தால், அவர் தோல்வியடைந்திருக்க மாட்டார்" என்று டிரம்ப் கூறியுள்ளார். RINO என்பது Republican in Name Only என்பதைக் குறிப்பதன் சுருக்கம்.
மேலும், 'வீட்டோ' என்ற வார்த்தை இடம்பெற்ற சிவப்பு நிறத் தொப்பியின் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற உள்ள நிலையில், அவர்கள் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் தனது அதிகாரத்தை இது குறிப்பதாகத் தெரிகிறது.
ஃபாக்ஸ் நியூஸ் மீதும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரின் முன்னாள் ஜனநாயகக் கட்சி மேயர் பில் டி பிளாசியோவை, தனது அரசியல் விவாதக் குழுவில் அந்தத் தொலைக்காட்சி ஏன் இடம்பெறச் செய்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தொடர்ந்து எதிர்தரப்பான ஜனநாயகக் கட்சியினரையும், அவர்களைவிட மோசமானவர்களையும் விவாத நிகழ்ச்சிகளில் இடம்பெறச் செய்ததன் மூலம், இந்தத் தேர்தல் தோல்விகளுக்கு ஃபாக்ஸ் நியூஸும் பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, இரவு அவர் வெளியிட்ட பதிவில், "நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஒருவேளை போட்டியிட்டிருந்தால், நாம் அமோக வெற்றி பெற்றிருப்போம்! இந்த விஷயத்தில் நீங்கள் கவனிப்பதற்கு நன்றி" என்று எழுதியிருந்தார்.
ஜனநாயகக் கட்சியினர் 'சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்' என்று பாராட்டிய டிரம்ப்
குடியரசுக் கட்சியினருக்கு எதிரான இடைக்காலத் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் பெற்ற வெற்றி குறித்து தனது கருத்துகளை ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது, ஜனநாயகக் கட்சியினர் "சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரெட் பேயரிடம் பேசிய டிரம்ப், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட மனநிலை நிலவியதாகக் கூறியதுடன், இந்த முடிவு தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
"நாங்கள் மிகப் பெரிய அளவில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தினோம். இந்த முடிவு எனக்கு ஓரளவு ஆச்சரியமளிக்கிறது" என்று டிரம்ப் கூறினார்.
சமரச அணுகுமுறையுடன் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படக்கூடிய "பல விஷயங்கள்" இருப்பதாகவும் தெரிவித்தார்.
இடைக்காலத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனது அமைச்சரவையில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
வாக்குகள் எண்ணப்படுவது எப்படி?
அமெரிக்காவில் தேர்தல்களை நடத்துவதற்கான பொறுப்பு ஒவ்வொரு மாகாணத்துக்கும் உள்ளது. வாக்குகளை எண்ணுவதற்கும், பதிவு செய்வதற்கும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன.
ஃபுளோரிடா போன்ற சில மாகாணங்களில், தேர்தல் நாளுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கப்பட்ட வாக்குகளையும், அஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகளையும் பரிசீலிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதேநேரம், வேறு சில மாகாணங்களில் நவம்பர் 3ஆம் தேதி முதல்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு வாக்கையும் ஆய்வு செய்து, செயலாக்கி, எண்ணுகின்றனர். இந்த நடைமுறை 'கேன்வாசிங்' (Canvassing) என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான மாகாணங்களில், தேர்தலுக்குப் பிறகு தணிக்கை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், இயந்திரங்கள் மூலம் கணக்கிடப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, வாக்குச்சீட்டுகளை நேரடியாக எண்ணிப் பெறப்படும் எண்ணிக்கையுடன் ஒப்பிடப்படுகிறது.
இருப்பினும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் விதிமுறைகள் மாறுபடுகின்றன. பொதுவாக, மறுவாக்கு எண்ணிக்கை அவசியமாகும் சூழலைத் தவிர, வாக்கு எண்ணிக்கை முழுவதும் கையால் நடத்தப்படுகிறது.
வாக்குகளைச் சரிபார்த்து எண்ணும் நடைமுறையில் யார் பங்கேற்கலாம், எந்த வரிசையில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும், இந்த நடைமுறையின் எந்தெந்தப் பகுதிகள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு மாகாணமும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளும் தங்களுக்கென தனித்தனி விதிமுறைகளைக் கொண்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு கண்காணிக்கலாம், சில மாகாணங்களில் அவர்கள் எவ்வாறு முறையான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம் என்பதும் இந்த விதிமுறைகளில் அடங்கும்.
முடிவுகள் தாமதமாவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?
கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியாக அதிக நேரம் ஆகும். இந்தத் தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கையும், சட்டரீதியான சவால்களும் எழக்கூடும்.
அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஏனெனில், தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சீட்டுகள் அனுப்பப்பட்ட உறைகளைச் சரிபார்த்து, அவற்றில் உள்ள கையொப்பங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்குச்சீட்டுகளைச் செயலாக்க அனுமதி உள்ளது. ஆனால், சில மாகாணங்களில் இந்த நடைமுறை இல்லை.
கலிஃபோர்னியாவில், அனைத்து வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நாளுக்கு முன்பாகவோ அல்லது தேர்தல் அன்றோ அஞ்சலில் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், தேர்தல் முடிந்த ஏழு நாட்களுக்குள் கிடைக்கும் வாக்குச்சீட்டுகளும் எண்ணப்படும்.
அலாஸ்காவில் தரவரிசை அடிப்படையிலான வாக்களிப்பு முறை (Ranked-choice voting) நடைமுறையில் இருப்பதால், நாடு முழுவதும் உள்ள மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது அங்கு வாக்கு எண்ணிக்கை கணிசமாக அதிக நேரம் எடுக்கக்கூடும்.
வாக்குச்சீட்டுகள் மீதான சர்ச்சைகள் சட்டரீதியான சவால்களுக்கும் வழிவகுத்து, இந்தச் செயல்முறையை மேலும் சிக்கலாக்கக்கூடும்.
தேர்தல் முடிவுகளுக்கு சவால் விடுக்கப்பட்டால் என்ன நடக்கும்?
இறுதி முடிவுகளில் அனைத்து வாக்குகளும் சேர்க்கப்பட்டு, மறுவாக்கு எண்ணிக்கை போன்ற நடைமுறைகளும் நிறைவடைந்த பிறகு, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படுகின்றன.
இந்த நடைமுறை முதலில் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறுகிறது. பின்னர் மாகாணம் முழுவதற்குமான அளவில் நிறைவடைகிறது.
அதன்பிறகு, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சான்றிதழ்களில் மாகாண ஆளுநர் வழக்கமாகக் கையொப்பமிடுவார். இந்தச் சான்றிதழ்கள் காங்கிரஸுக்கு அனுப்பப்படும்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்துச் சவால் விடுக்க முடியும். கடுமையான போட்டி நிலவிய தொகுதிகளில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் மறுவாக்கு எண்ணிக்கையைக் கோரலாம்.
சில மாகாணங்களில், வெற்றி வித்தியாசம் குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தால் தானாகவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி வேட்பாளர்கள் சட்டரீதியான சவால்களையும் முன்வைக்கலாம்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் காங்கிரஸிடமே உள்ளது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகளை எதிர்த்துச் சவால் விடுக்கலாம். இருப்பினும், இரு அவைகளிலும் இதற்கான நடைமுறைகள் சற்று மாறுபடும்.
கொள்கை அடிப்படையில், இரு அவைகளும் ஒருவரை உறுப்பினராக ஏற்க மறுக்கலாம் அல்லது விசாரணைக்கு உத்தரவிடலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு