ஆந்திராவில் கரையை கடந்த 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கக்கடலில் உருவான தீவிரப் புயலான 'முரசு', இன்று அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லூருக்கும் நரசாபுரத்துக்கும் இடையே, ஓங்கோல் அருகே முரசு புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரித்தது.

இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நண்பகலுக்குள் இது புயலாக வலுவிழக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை இருக்கும்; அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

இன்று நள்ளிரவுக்குள் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வரை இருக்கும். அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

முரசு புயல் ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்தபோது தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னையின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் கடல் சீற்றம் மற்றும் வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

புதுச்சேரியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 6.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் இன்று (நவம்பர் 3) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (நவம்பர் 03) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (நவம்பர் 04) உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் (நவம்பர் 05) தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதர தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பிற பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஓங்கோலில் பலத்த காற்றுடன் கனமழை

முரசு புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடந்துள்ளது. ஓங்கோல் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசுகிறது. புயல் கரையை நெருங்கியபோது, கடலோரப் பகுதிகள் முழுவதும் பலத்த காற்று வீசியது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ஆந்திராவில் அதிக மழை பதிவான பகுதிகள்.

  • நாகுலுப்பலபாடு (பிரகாசம்) – 198.01 மி.மீ.
  • கொத்தப்பட்டினம் (பிரகாசம்) – 182.25 மி.மீ.
  • பாபட்லா – 128.53 மி.மீ.
  • சிராலா – 124.10 மி.மீ.
  • குடூர் – 116.93 மி.மீ.
  • ஓங்கோல் நகர்ப்பகுதி – 106.97 மி.மீ.
  • சிலகபாடு (பிரகாசம்) – 104.50 மி.மீ.
  • சந்தனுதலபாடு – 98.7 மி.மீ.
  • மோகல்தூர் (மேற்கு கோதாவரி) – 96 மி.மீ.
  • மாலிகிபுரம் (கோனசீமா) – 93.7 மி.மீ.

கனமழை: ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானாவுக்கும் எச்சரிக்கை

புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவிலும் நவம்பர் 3-ஆம் தேதி சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

புயல் கரையைக் கடக்கும் முன்பே ஆந்திரப் பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.

கடலோரத்தின் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசித்த சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், தேவையெனில் சுமார் 30,000 பேரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பிடிஐ செய்தி அடிப்படையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டிருந்தார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேவையான பணியாளர்கள், வாகனங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

விமானம், ரயில் சேவைகளில் பாதிப்பு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விமானம் மற்றும் ரயில் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

திங்களன்று குறைந்தது 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக செய்தி முகமைகள் தெரிவித்தன.

ஒடிசாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஒடிசா மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன.

ஒடிசாவின் ஐந்து பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களில் இருந்து திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 1.6 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு