அமெரிக்காவில் 'குழம்பு' வகை உணவுகளை அறிமுகப்படுத்திய இந்திய சமையல் கலைஞர் மாயமானது ஏன்?

    • எழுதியவர், தின்யார் படேல்
    • பதவி, வரலாற்றாசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1901-ஆம் ஆண்டு, அதாவது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் இந்திய சமையல்காரர் அமெரிக்காவில் முதல் இந்திய உணவகத்தைத் திறந்திருக்கக்கூடும்.

அமெரிக்காவின் உணவுக் கலாசாரத்தை வடிவமைத்த குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ரஞ்சி ஸ்மைலும் ஒருவர். பிரபலமானவராக இருந்தாலும், அவரது பின்னணி மர்மங்கள் நிறைந்ததாக இருந்தது.

1899-ஆம் ஆண்டின் கோடை காலத்தில், லண்டனிலிருந்து கப்பலில் நியூயார்க் நகருக்குப் பயணம் செய்தார் ஸ்மைல். அவரது பூர்வீகம், இளமைக்கால வாழ்க்கை, உண்மையான பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை.

அவர் பயன்படுத்திய 'ரஞ்சி' என்ற பெயர், அப்போது பிரிட்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த கே.எஸ். ரஞ்சித்சிங்ஜியின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். அதேபோல், 'ஸ்மைல்' என்பது 'இஸ்மாயில்' என்ற பெயரின் ஆங்கிலமயமாக்கப்பட்ட வடிவமாக இருக்கலாம்.

அவரது பூர்வீகம் எதுவாக இருந்தாலும், தனது அடையாளத்தைப் புதிதாக உருவாக்கிக்கொள்ளும் திறன் ஸ்மைலுக்கு இருந்தது. எல்லிஸ் தீவு வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததும், தனது பெயருடன் இன்னொரு பெயரையும் சேர்த்துக்கொண்டார். அமெரிக்கா அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் நாடு என்ற கருத்துக்கு ஏற்ற வகையில், அவர் தன்னை 'ஜோ' என்று அழைத்துக்கொண்டார்.

இவ்வாறு ஜோ ரஞ்சி ஸ்மைலாக மாறிய அவர், நியூயார்க்கின் ஐந்தாவது அவென்யூவில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த பிரபல உணவகமான ஷெர்ரிஸில் பணியாற்றுவதற்காக அங்கு வந்தார்.

லண்டனில் இருந்தபோது, செஸில் மற்றும் சவோய் ஹோட்டல்களில் அவர் குழம்பு சமைப்பவராகப் பணியாற்றியிருந்தார். 1899-ஆம் ஆண்டு ஹார்பர்ஸ் இதழில் வெளியான கட்டுரையின்படி, ஷெர்ரிஸ் உணவகத்தின் உரிமையாளர் லூயிஸ் ஷெர்ரி, ஸ்மைலின் சமையல் திறமையைக் கவனித்து, அவற்றை அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவுக்குக் கொண்டுவருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

விக்டோரியன் காலத்தின் பிற்பகுதியிலேயே லண்டனில் இந்திய உணவுக் கலாசாரம் வேரூன்றத் தொடங்கியிருந்தது. 1810-ஆம் ஆண்டிலேயே, பாட்னாவைச் சேர்ந்த சாகே டீன் முகமது, போர்ட்மேன் சதுக்கத்துக்கு அருகில் தனது 'ஹிந்துஸ்தானி காபி ஹவுஸ்' உணவகத்தைத் திறந்திருந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்குக் 'கறி' (குழம்பு வகை) உணவுகளுடன் ஹூக்காவும் வழங்கப்பட்டது.

'நியூயார்க் பெண்கள் அவரைக் கண்டு மயங்குகிறார்கள்'

மன்ஹாட்டன் மக்களுக்கு மசாலா உணவுகள் அதிகம் பரிச்சயமாக இருக்கவில்லை. இருப்பினும், இந்தியா மற்றும் அதன் கலாசாரம் மீதான ஆர்வம் அதிகரித்து வந்தது.

1890-களில் நியூயார்க் நகருக்கு வந்த சுவாமி விவேகானந்தர், தனது வசீகரமான பேச்சாலும் இந்துத் தத்துவம் குறித்த உரைகளாலும் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

அதே காலகட்டத்தில், இந்திய மாலுமிகள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் எனப் பலரும் படிப்படியாக நியூயார்க்கிற்கு வரத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான், தனது உணவகச் சமையல் குழுவில் குழம்பு சமைப்பவர் (இந்திய உணவு வகைகளைச் சமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற சமையல்காரர்) ஒருவரைச் சேர்க்க லூயிஸ் ஷெர்ரி முடிவு செய்தார்.

ஷெர்ரி உணவகத்தில் பணியாற்றத் தொடங்கியதன் மூலம், அமெரிக்காவின் பொற்காலத்தில் புகழ்பெற்ற உணவு நிறுவனங்களில் ஒன்றில் ஸ்மைல் இடம்பிடித்தார். நியூயார்க்கின் உயர்தர உணவகங்களில் ஒன்றான டெல்மோனிகோவுக்குப் போட்டியாக ஷெர்ரி விளங்கியது.

நகரின் பெரும் செல்வந்தர்களான ஆஸ்டர் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு விருந்தளித்ததுடன், ஆடம்பரமான உணவு அனுபவங்களுக்காகவும் புகழ்பெற்றிருந்தது. அங்கு நடைபெற்ற ஒரு விருந்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் குதிரைகளை நடன அரங்குக்குள் அழைத்து வந்து, அவற்றின் மீதே அமர்ந்து உணவருந்தியதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய ஆடம்பரமான சூழலில், நிகழ்ச்சியைச் சுவாரசியமாக நடத்தும் திறன் கொண்ட ஸ்மைல் தனித்துவமாக விளங்கினார்.

அவரது சமையலில் தயாரிக்கப்பட்ட 'பம்பாய் டக்' என்ற உணவு வாடிக்கையாளர்களை விரைவில் ஈர்த்தது.

'லெட்டூஸ் சிலோன்' போன்ற புதுமையான உணவு வகைகளைத் தயாரித்தார். அவற்றைச் சுவைப்பதற்காக உணவகத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர்.

ஸ்மைலின் சமையலறையில் உணவு தயாரிப்பதும், அதை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதும் ஒரு கலைநிகழ்ச்சியைப் போலவே இருந்தன. பட்டுத் துணியால் ஆன அங்கியும் நீல நிறத் தலைப்பாகையும் அணிந்திருந்த அவர், வாடிக்கையாளர்களுக்கு முன்னால் வணங்கிவிட்டு, "ஐயா, உங்களுக்கு குழம்பில் காரம் அதிகமாக இருக்க வேண்டுமா, அல்லது குறைவாகவா?" என்று கேட்பார்.

ஷெர்ரி உணவகத்தில் இந்திய உணவு வகைகளைச் சமைத்த ஸ்மைல், விரைவிலேயே பிரபலமானார். அவரது புகைப்படங்கள் செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளியாகின. அவரது செல்வாக்கைப் பறைசாற்றும் வகையில், ஒரு செய்தித்தாள் தலைப்பு, "நியூயார்க் பெண்கள் அவரைக் கண்டு மயங்குகிறார்கள்" என்று குறிப்பிட்டது.

புகழின் உச்சத்தை எட்டிய ஸ்மைல், 1901-ஆம் ஆண்டு ஷெர்ரி உணவகத்திலிருந்து விலகி, இந்திய உணவு வகைகளை மட்டுமே வழங்கும் சொந்த உணவகத்தைத் தொடங்க முடிவு செய்தார்.

இதற்கான நிதி ஆதரவைப் பெற, முக்கிய நிதியாளரும், மோட்டார் ஹோம்-இன் ஆரம்பகால வடிவத்தை உருவாக்கியவருமான ரோலண்ட் ஆர். கான்க்ளினை அவர் நாடினார்.

பிரச்னையில் முடிந்த கனவு

ஸ்மைல் தொடங்கிய இந்திய உணவகமான 'ஓமர் கயாம்', 1901-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நியூயார்க் நகரின் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றாக இருந்த ஐந்தாவது அவென்யூவில் 325-ஆம் முகவரியில் இருந்த கட்டடத்தில் திறக்கப்பட்டது. அசல் வால்டோர்ஃப்-ஆஸ்டோரியா ஹோட்டலிலிருந்து ஒரேயொரு தெரு தள்ளி இந்த உணவகம் அமைந்திருந்தது.

29 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஹோட்டல் இருந்த இடத்தில்தான் எம்பயர் ஸ்டேட் கட்டடம் கட்டப்பட்டது. இந்தியத் திரைச்சீலைகள், தொங்கும் விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டு ஸ்மைல் தனது உணவகத்தை அலங்கரித்தார்.

'நியூயார்க் ஹெரால்டு' பத்திரிகையின் குறிப்பின்படி, மிகப்பெரிய தலைப்பாகைகளை அணிந்த இந்தியப் பணியாளர்கள் குழுவும், இந்திய இசைக் கலைஞர்கள் குழுவும் அங்கு பணியாற்றின.

அமெரிக்காவில் குடியேறி, சொந்த முயற்சியால் வெற்றிபெற வேண்டும் என்ற கனவின் அடையாளமாக ஸ்மைல் திகழ்ந்தார். தனது புதிய உணவகத்துக்கு வாடிக்கையாளர்களும் ரசிகர்களும் பெருமளவில் வருவார்கள் என்று அவர் ஆவலுடன் எதிர்பார்த்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி வாடிக்கையாளர்கள் வரவில்லை. ஓராண்டுக்குள்ளாகவே 'ஓமர் கயாம்' மூடப்பட்டது. இந்திய உணவுகள் மீதான ஆர்வம் மக்களுக்குச் சலிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும், அது தற்காலிகமான மோகம் மட்டுமே என்றும் 'நியூயார்க் சன்' பத்திரிகை குறிப்பிட்டது.

ஒருகாலத்தில் நியூயார்க்கில் பிரபலமாக விளங்கிய ஸ்மைலின் புகழும் மங்கத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக, அவரது பகட்டான தோற்றமும் நாடகத்தனமான செயல்பாடுகளும் பின்னர் ஏமாற்று வேலைகளாகவும் குற்றச்செயல்களாகவும் மாறின.

தான் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்றும், பலுசிஸ்தான் அரசரின் மகன் என்றும் ஸ்மைல் கூறத் தொடங்கினார். ஆனால், அவர் குறிப்பிட்ட அந்தப் பட்டமே கற்பனையானதாக இருந்தது. 'ஓமர் கயாம்' உணவகத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் அன்றைய பம்பாய்க்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொண்டார்.

அப்போது, லண்டனில் நடைபெறவிருந்த ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவில் விருந்தினராகக் கலந்துகொள்ளப் போவதாகக் கூறினார்.

மேலும், தனக்குப் பணியாற்றுவதற்காகப் பணியாளர்கள் குழுவையும் அவர் திரட்டினார். அதில் தனிப்பட்ட உதவியாளர்கள், நடனப் பெண் ஒருவர், தனது யானைக் கூட்டத்தை ஓட்டுவதற்கான 'யானைப் பாகர்கள்' ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஸ்மைலின் இந்தச் செயல்கள் குறித்து 'தி டைம்ஸ்' உள்ளிட்ட நியூயார்க் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின்படி, உணவகத்தில் பணியமர்த்துவதற்காக அந்தப் பணியாளர்களை அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அழைத்து வந்திருந்தார்.

இவ்வாறு, இந்திய உணவுக் கலாச்சாரத்தின் முன்னோடி மையமாக உருவாகியிருக்கக்கூடிய 'ஓமர் கயாம்' உணவகம், இறுதியில் ஸ்மைலின் அமெரிக்க வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை ஏற்படுத்தியது. அவர் நாடு கடத்தப்படும் சூழல் உருவானது.

'இளவரசர்' ஜோ ரஞ்சி ஸ்மைல் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்தார். ஆனால், அவருடன் அமெரிக்காவுக்கு வந்த பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தான் அரசக் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தொடர்ந்து பெருமை பேசி வந்த அவர் பல அமெரிக்கப் பெண்களை திருமணம் செய்துகொண்டார்.

இந்திய உணவுகள் பெண்களின் அழகை மேம்படுத்தும் ரகசிய மருந்து என்றும் அவர் விளம்பரப்படுத்தினார். "அவற்றைச் சாப்பிட்டால் கண்கள் பிரகாசிக்கும், சருமம் மேலும் அழகாகும்" என்று உறுதியளித்த அவர், தனது மனைவிகளையே அதற்குச் சான்றாகக் காட்டினார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இந்திய உணவு வகைகளைச் சமைத்துக் காட்டும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் மூலம் தனது சமையல் திறமையை மேலும் வெளிப்படுத்தினார்.

வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பலவகையான உணவுகளை அவர் தயாரித்தார்.

அவற்றில் 'பங்களோ' என்ற வித்தியாசமான பெயரைக் கொண்ட இனிப்பு வகையும் ஒன்று. அந்த நிகழ்ச்சியில் ஒரு வித்தைக்காரரும் நடன மங்கையும் அவருக்கு விருந்தளித்தனர்.

ஒரு செய்தித்தாள், ஸ்மைல் தனது அடையாளத்தை மீண்டும் மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிட்டது. இதுவரை தன்னை ஓர் அரசரின் மகன் என்று கூறிவந்த அவர், இப்போது பலுசிஸ்தானின் 'மகா பெக்லர்பெர்க்' என்று அழைக்கப்படும் ஒருவரின் சகோதரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஸ்மைல் ஒரு மோசடிப் பேர்வழி என்றால், அவரை நம்பிய அமெரிக்கர்களும் அவரது கதைகளை எளிதில் நம்பும் அளவுக்கு அப்பாவிகளாக இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

ஸ்மைலின் நாடகத்தனமான செயல்பாடுகளும் சுவையான உணவுகளும் சில காலம் மக்களை மகிழ்வித்தன. ஆனால், அவர் புனைந்த கதைகளும் கூறிய பொய்களும் நாளடைவில் அவருக்கே சிக்கல்களை ஏற்படுத்தின.

சட்டச் சிக்கல்கள் அதிகரித்ததால், அவர் பொதுவெளியில் தோன்றுவதைக் குறைத்துக்கொண்டார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில், தனது நடன மங்கையரில் ஒருவரை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தது, மன்ஹாட்டனில் உள்ள இத்தாலிய உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்தது போன்றவையும் அடங்கும்.

1920-களில், சமையல் தொழிலைக் கைவிட்ட ஸ்மைல், தன்னை ஒரு வணிகராக அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.

1937-ஆம் ஆண்டில் ஸ்மைல் குறித்த கடைசித் தகவல் கிடைத்தது. அப்போது, அவரது நான்காவது அல்லது ஐந்தாவது அமெரிக்க மனைவி, திடீரெனக் காணாமல் போன தனது கணவருடனான திருமணத்தை ரத்து செய்யக் கோரி நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வாறு, தனது அடையாளத்தைப் பலமுறை மாற்றிக்கொண்ட ஸ்மைல், இறுதியில் யாருக்கும் தெரியாமல் மறைந்துபோனார்.

இத்தகைய அவப்பெயருடன் அவரது கதை முடிந்தபோதிலும், ஸ்மைலும் அவர் தொடங்கிய இந்திய உணவகமும் அமெரிக்காவில் இந்திய உணவு வகைகள் அறிமுகமாவதற்கும் பிரபலமடைவதற்கும் வழிவகுத்தன. அவரைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு வந்த பிற இந்தியக் குடியேறிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

1909-ஆம் ஆண்டு, பஞ்சாபைச் சேர்ந்த பயணக் கட்டுரையாளரான செயிண்ட் நிஹால் சிங், 'சிகாகோ டெய்லி ட்ரிப்யூன்' நாளிதழின் வாசகர்களுக்கு பஜ்ஜி, பூரி, அல்வா, 'இந்தியப் பாணியிலான வறுத்த கோழி' உள்ளிட்ட உணவு வகைகளின் செய்முறைகளை அறிமுகப்படுத்தினார்.

சிகாகோ மக்களுக்கு இந்திய உணவுப் பொருட்கள் பலவும் பரிச்சயமில்லாதவை என்பதை உணர்ந்த சிங், அவற்றை நகரிலிருந்த சீன மளிகைக் கடைகளில் தேடிப் பெறுமாறு வாசகர்களுக்கு அறிவுறுத்தினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், இன்றைய சமையல் கலைஞர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், இறைச்சி சேர்த்த புலாவ் தயாரிக்க ஹாம்பர்கர் இறைச்சியைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

குடியேறிகளைச் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அழைத்து வந்த குற்றச்சாட்டில் ரஞ்சி ஸ்மைல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சில காலத்திற்குப் பிறகு, இலங்கையைச் சேர்ந்த கே.ஒய். கிரா என்ற இளைஞர் எல்லிஸ் தீவை வந்தடைந்தார்.

ஸ்மைலைப் போலவே, கிராவுக்கும் தனது அடையாளத்தைப் புதிதாக உருவாக்கிக்கொள்ளும் திறன் இருந்தது. அமெரிக்காவின் 'பார்னம் அண்ட் பெய்லி', 'ரிங்லிங் பிரதர்ஸ்' உள்ளிட்ட சர்க்கஸ்களில் நடனமாடிய சிங்கள நடனக் குழுவில் அவர் இணைந்தார். பின்னர், 1913-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹார்லெம் பகுதியில் ஓர் இந்திய உணவகத்தைத் தொடங்கினார். பின்னாளில் அது 'சிலோன் இந்தியா இன்' என்று அழைக்கப்பட்டது.

'ஓமர் கயாம்' உணவகத்தைப் போலல்லாமல், 'சிலோன் இந்தியா இன்' பெரும் வெற்றியைப் பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் நியூயார்க்கில் இந்தியக் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது. அதேவேளையில், இந்தியக் கலாசாரம் மற்றும் உணவு வகைகள் மீது அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட ஆர்வமும் உணவகத்தின் வளர்ச்சிக்குக் கைகொடுத்தது.

1920-களில், டைம்ஸ் சதுக்கத்துக்கு அருகே அமைந்திருந்த கிரா-வின் உணவகத்திற்கு, பிராட்வே மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். 'சிலோன் இந்தியா இன்' 1980-களின் பிற்பகுதி வரை தொடர்ந்து செயல்பட்டது. அமெரிக்காவின் முதல் இந்திய உணவகம் என்றும் அது பெருமையாக கூறிவந்தது.

ஆனால், உண்மையில் அமெரிக்காவின் முதல் இந்திய உணவகம் அதுவல்ல. ரஞ்சி ஸ்மைலின் பெயர் காலப்போக்கில் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் தொடங்கிய 'ஓமர் கயாம்' உணவகத்துக்கு 125 ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்கா முழுவதும் செழித்து வளர்ந்துள்ள ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்களில் அவரது பங்களிப்பின் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

தின்யார் படேல், மும்பையில் உள்ள எஸ்.பி.ஜே.ஐ.எம்.ஆர். கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு