வங்கக்கடலில் உருவாகும் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை?

வங்கக்கடலில் உருவாகும் புயல்: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று அக்டோபர் 26-ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும், அக்டோபர் 28-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக ஆந்திர பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் (அக்டோபர் 25) கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் புயல் எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்?

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை (அக்டோபர் 24) மாலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 820 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த அமைப்பு, அடுத்த ஆறு மணிநேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் தென்கிழக்கு திசையில் நகர்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல்: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 860 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து 950 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்தில் இருந்து 1,060 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இன்று (அக்டோபர் 25) இந்த அமைப்பு தெற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் படிப்படியாக மேற்கு-வடமேற்கு திசையில் திரும்பும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தொடர்ந்து அக்டோபர் 26-ஆம் தேதி காலையில் புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி காலையில் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக் கூடும்.

அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 28ஆம் தேதி காலையில் மிகத் தீவிரப் புயலாக ஆந்திர பிரதேச கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில், பாபட்லாவுக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிஷா கடலோரப் பகுதிகளுக்குப் புயல் உருவாவதற்கு முந்தைய மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தற்போதைய கணிப்பின்படி புயல் தமிழகக் கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. எனினும், புயலின் நகர்வையும் தீவிரத்தையும் பொறுத்து அடுத்தடுத்த அறிவிப்புகள் மாறக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 25) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மழையின்போது சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

சென்னையில் இன்று மழை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும்.

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய அண்டை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நிலவரம் என்ன?

அக்டோபர் 26-ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 27-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 28-ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பிற பகுதிகளில் மழையின் தீவிரம் குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்பதால் கடல் பகுதிகளுக்குக் காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் 90 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

அக்டோபர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் வடதமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு