நெதன்யாகுவுக்கு நெருக்கடி: இஸ்ரேல் தேர்தல் முடிவில் தீர்மானிக்கும் சக்தியாக அரபுக் கட்சிகள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகும், அதைத் தொடர்ந்து காஸா, லெபனான், இரான் பகுதிகளில் நடந்த பிற போர்களுக்குப் பிறகும் இஸ்ரேலில் முதல் முறையாகப் பொதுத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் குறித்த வாக்கெடுப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் யாருக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. நெதன்யாகுவின் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரத்தில், அரபுக் கட்சிகளின் கூட்டணி எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டணிக்கு 19 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டின் கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் எந்தக் கூட்டணிக்கும் கிடைக்கவில்லை. இதனால், அரபு வம்சாவளியினரின் கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளன. நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக எந்த அளவுக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அவை தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் இஸ்ரேலின் உள்நாட்டு அரசியலுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. பாலத்தீன மக்களின் வாழ்க்கையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும், காஸா தொடர்பான ஐசன்கோட்டின் நிலைப்பாடும் நெதன்யாகுவிடமிருந்து பெரிதாக வேறுபடவில்லை. 18 மாதங்களுக்குள் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தத் தேர்தல் இந்தியாவுக்கும் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நெருக்கமான தூதரக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன. எனவே, இஸ்ரேலுடனான தனது ராஜதந்திர உறவுகளைத் தொடர்ந்து பேணுவதுடன், பாலத்தீனப் பிரச்னையும், பிராந்திய நிலைத்தன்மையும் குறித்த தனது தூதரக அணுகுமுறைகளை இந்தியா மறுசீரமைக்க வேண்டியிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் எந்த அளவுக்கு மாறியுள்ளது? இந்தத் தேர்தல் முடிவுகள் ஏன் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்? அரபுக் கட்சிகளுடன் உடன்பாடு காண்பதற்கு இஸ்ரேலின் அரசியல் கட்சிகள் தயாராக இருக்குமா?

இந்தக் கேள்விகள் குறித்து, ஜெருசலேமில் உள்ள செய்தியாளர் ஹரிந்தர் மிஸ்ரா, டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் நியூ ஏஜ் வார்ஃபேர் ஸ்டடீஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளர் டாக்டர் திவ்யா மல்ஹோத்ரா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்துக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் நவ்தீப் சிங் சூரி ஆகியோருடன் கலெக்டிவ் நியூஸ்ரூமின் செய்திப் பிரிவு இயக்குநர் முகேஷ் சர்மா கலந்துரையாடினார்.

நெதன்யாகுவின் ஆட்சிக்கு எதிரான வாக்கெடுப்பா?

இந்தத் தேர்தலை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பாகப் பார்க்கலாமா? அல்லது முக்கியமான ஒரு தேர்தலை இவ்வாறு பார்ப்பது மிகைப்படுத்தலாக இருக்குமா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த ஹரிந்தர் மிஸ்ரா, இந்தத் தேர்தல் நெதன்யாகுவுக்கு எதிரான வாக்கெடுப்பாகவே இருந்தது என்றும், இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்பட்டன என்றும் கூறுகிறார்.

"இங்குள்ள மக்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளனர். ஒரு அணி நெதன்யாகுவை ஆதரிக்கிறது. மற்றொரு அணி அவரை எதிர்க்கிறது. நெதன்யாகுவை எதிர்க்கும் அணியில் உள்ளவர்கள், இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் அவருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்" என்கிறார் அவர்.

நெதன்யாகு தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்து வந்தாலும், உண்மையில் அவரது கூட்டணி 15 இடங்களை இழந்துள்ளது. கடந்த தேர்தலில் 68 இடங்களைப் பெற்றிருந்த அவரது கூட்டணி, இந்த முறை 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் தாங்களே வெற்றி பெற்றதாகக் கூறுகின்றனர். நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், அவருக்கு எதிரான அணிகளுக்கு 67 இடங்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து இல்லாவிட்டாலும், இந்தத் தேர்தல் நெதன்யாகுவுக்கு எதிரான வாக்கெடுப்பாக அமைந்துள்ளது என்றும், அந்த வகையில் எதிர்க்கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன என்றும் சில தலைவர்கள் கூறுகின்றனர்.

நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் அரபுக் கட்சிகள்

இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணிக்கோ, யூத எதிர்க்கட்சிகளுக்கோ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரபுக் கட்சிகளுக்கு 19 இடங்கள் கிடைத்திருப்பது எத்தகைய மாற்றத்தைக் குறிக்கிறது?. அரபு வாக்காளர்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.

பொதுவாக, அரபுக் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடும்போது அரபு சமூகத்தினரிடையே வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை இஸ்ரேல் முழுவதும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த முறை அரபுக் கட்சிகள், நாட்டின் அரசியல் நடைமுறையில் பங்கேற்க விரும்புவதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்தன. இதுவரை அரபுக் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் பெற்றிருந்தாலும், அரசியல் நடைமுறையில் அவர்களுக்கு உண்மையான பங்கு கிடைக்கவில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருந்தனர். அரபு மக்களின் பிரச்னைகள் குறித்தும் அதிகம் பேசப்படவில்லை.

மன்சூர் அப்பாஸின் ராஅம் கட்சி, இதற்கு முன்பு நஃப்தாலி பென்னட்டின் அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவளித்திருந்தது. அந்த அரசாங்கம் சுமார் 13 மாதங்கள் நீடித்தது. அப்போது அரபு மக்களின் பிரச்னைகளை அக்கட்சி எழுப்பியதுடன், அரபு சமூகத்தினருக்கு உரிய நிதியுதவி கிடைப்பதை உறுதிப்படுத்தவும் முயன்றது. மீண்டும் அதற்குத் தயாராக இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த முறை அந்தக் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் ஒன்று, அதன் இரண்டாவது முக்கிய உறுப்பினர் யூதர் என்பதாகும். இதன் மூலம், இரு சமூகங்களையும் இணைத்து அரசியல் நடத்த விரும்புவதாக அந்தக் கட்சி செய்தி தெரிவிக்க முயல்கிறது.

இதற்கிடையில், டெமோக்ரட்ஸ் கட்சியின் தலைவர் யாயிர் கோலன், அரபு மக்களைப் பற்றிய அச்சத்திலிருந்து வெளியேறி, அவர்களையும் அரசியலில் இணைத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரபுக் கட்சிகளான ஜாயின்ட் லிஸ்ட் மற்றும் ராஅம் ஆகிய இரண்டும் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக எந்த அளவுக்கும் செல்லத் தயாராக இருப்பதாகவும், காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. ஆனால், காடி ஐசன்கோட்டோ அல்லது நெதன்யாகுவை எதிர்க்கும் அணியின் மற்ற தலைவர்களோ இதற்குத் தயாராக இல்லை என்கிறார் ஹரிந்தர் மிஸ்ரா.

உள்நாட்டு அரசியல் எந்த அளவுக்கு முக்கியமானது?

இஸ்ரேலுக்கு வெளியே இருந்து, உலகளாவிய கண்ணோட்டத்தில் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, நெதன்யாகுவின் கொள்கைகளுக்கு எதிரான நிராகரிப்பாக இதைக் கருதலாமா? அல்லது உள்நாட்டு அரசியலே முக்கியப் பிரச்சினையாக இருந்ததா? என்று கேள்வியெழுப்பினோம். இதற்குப் பதிலளித்த நவ்தீப் சிங் சூரி, சர்வதேச அளவில் பார்க்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில், குறிப்பாக 2023 அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் பின்பற்றிய கொள்கைகள் அதன் சர்வதேச நற்பெயருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்கிறார்.

"சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலின் கொள்கைகளை எவ்வாறு கண்டித்தார்கள் என்பதைப் பார்த்தோம். இந்தக் கொள்கைகள் நேரடியாக நெதன்யாகு அரசாங்கத்துடன் தொடர்புடையவை" என்கிறார் அவர்.

நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக நீடித்தால், தற்போது மிகவும் மோசமாகியுள்ள இஸ்ரேலின் சர்வதேச நற்பெயர் அப்படியே தொடரும் என்றும், அது மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், ஐசன்கோட் பிரதமராகப் பொறுப்பேற்றாலோ அல்லது நெதன்யாகு பிரதமராக இல்லாத வேறு கூட்டணி அரசு அமைந்தாலோ, சர்வதேச அளவில் அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் நவ்தீப் சிங் சூரி. டாக்டர் திவ்யா மல்ஹோத்ரா கூறுகையில், இஸ்ரேலின் உள்நாட்டுப் பொருளாதாரமும் இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருந்தது.

"கடந்த சில ஆண்டுகளைப் பார்த்தால், குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்குப் பிறகும், உண்மையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது 2023க்குப் பிறகும், இஸ்ரேல் அரசாங்கம் தனது பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தியுள்ளது, என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்துள்ளது" என்கிறார் அவர். அதேநேரத்தில், அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது, குறிப்பாக இரானில் என்ன நிலைமை உள்ளது என்பன போன்ற பிரச்னைகளை இஸ்ரேல் தேர்தலின்போது ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

நெதன்யாகுவின் ஆட்சிக்காலத்தில் ஆபிரகாம் ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய வெற்றியாக இருந்ததாகவும் டாக்டர் மல்ஹோத்ரா கூறுகிறார். சில நாடுகள் இந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதுடன், பல நாடுகளின் அரசாங்கங்களுடன் இஸ்ரேலின் உறவுகளும் இயல்புநிலைக்குத் திரும்பின. மறுபுறம், கத்தார், இரான், பஹ்ரைன் உள்ளிட்ட சில நாடுகள் நெதன்யாகு ஆட்சியிலிருந்து வெளியேறினால், புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதுகின்றன. பல நாடுகளுடன் இஸ்ரேலின் உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளதால், நெதன்யாகுவின் தலைமையில் அந்த நாடுகளுடன் தொடர்ந்து செயல்படுவது கடினமாக இருக்கும். புதிய அரசாங்கம் அமைந்தால், அமெரிக்காவும் அதனுடன் புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும்.

இந்த முக்கோண உறவுச் சமன்பாட்டில், உறவுகள் மோசமடைந்துள்ள அல்லது சில பிரச்னைகளில் சமரசம் காண முடியாத நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்கிறார் டாக்டர் மல்ஹோத்ரா.

ஆட்சி மாறினால் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமா?

காடி ஐசன்கோட் பெரும்பான்மையைப் பெற்றால், இஸ்ரேலின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்படுமா? என்று கேட்டதற்கு, டாக்டர் திவ்யா மல்ஹோத்ரா கூறுகையில், ஐசன்கோட் தலைமையில் அரசாங்கம் அமைந்தாலும், இரான் மற்றும் காஸா போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையுடன் இஸ்ரேலின் ஒத்துழைப்பு தொடரும். எனவே, பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்கிறார்.

காடி ஐசன்கோட் பெரும்பான்மையைப் பெற்றாலும், அவரது அரசாங்கத்தில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன, எத்தகைய ஆதரவுடன் அவர் பெரும்பான்மையைப் பெறுகிறார் என்பதன் அடிப்படையிலேயே கொள்கைகள் அமையும் என்கிறார் ஹரிந்தர் மிஸ்ரா. நெதன்யாகுவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள யுனைடெட் தோரா யூதாயிசம் கட்சியின் தலைவர்களும் ஐசன்கோட்டுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், இஸ்ரேலில் தீவிர பழமைவாத யூத சமூகத்தினருக்கு ராணுவத்தில் கட்டாயப் பணியிலிருந்து வழங்கப்பட்டுள்ள விலக்கு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது அவர்களது நிபந்தனையாக உள்ளது. அரபுக் கட்சிகளையும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது எளிதான வழியாகத் தோன்றினாலும், அது அனைத்து தரப்பினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

தற்போதைய சூழலில், அத்தகைய கூட்டணி அரசாங்கம் அமையும் வாய்ப்பும் தென்படவில்லை என்கிறார் ஹரிந்தர் மிஸ்ரா.

இந்தியாவுக்கு என்ன சவால்கள்?

சமீபகாலமாக இந்தியா இஸ்ரேலுடனான உறவுகளை மிகவும் வலுப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், அரபு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு சவாலாக அமையுமா? என கேட்டோம். நவ்தீப் சிங் சூரி இதற்கு இரண்டு அம்சங்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

முதலாவது, தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகள். "பிரதமர் நெதன்யாகுவுக்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையே சிறப்பான உறவு உள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சிக்கும் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும் இடையே சில அரசியல் மற்றும் கருத்தியல் ஒற்றுமைகளும் உள்ளன. பல பிரச்னைகளில் இரு கட்சிகளின் சிந்தனைகளும் ஒத்துப்போகின்றன" என்கிறார் அவர். ஆனால், இறுதியில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் தொடர்வதே இரு நாடுகளின் நலனுக்கும் ஏற்றது. எனவே, சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், காடி ஐசன்கோட் பிரதமரானாலும் அல்லது வேறு யாராவது ஆட்சிக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, ராணுவம் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என்கிறார் நவ்தீப் சிங் சூரி.

ஹரிந்தர் மிஸ்ரா இதுகுறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.

"இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் நெதன்யாகுவுக்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான தனிப்பட்ட உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்ற கருத்து உருவாகியுள்ளது. உண்மையில் அப்படியல்ல" என்கிறார் அவர்.

இந்த உறவுகள் இரு நட்பு நாடுகளுக்கு இடையிலானவை என்றும், இரு நாடுகளின் நலன்களும் பெருமளவில் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. நெதன்யாகு 13 மாதங்கள் ஆட்சியில் இல்லாதபோது, நஃப்தாலி பென்னட் மற்றும் அதற்குப் பிறகு யாயிர் லாபிட் தலைமையில் அரசாங்கங்கள் அமைந்தன. அந்தக் காலகட்டத்தில், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் குறித்த இதேபோன்ற கருத்துகள் இஸ்ரேலிய மக்கள் மற்றும் தலைவர்களிடையே இருந்தன. ஆனால், அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார். பிரதமர் நரேந்திர மோதியின் சார்பில், நஃப்தாலி பென்னட்டை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். இது இஸ்ரேலில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தியப் பயணத்துக்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டதால், அந்த உறவின் தொடர்ச்சி குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இறுதியில், பென்னட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இப்போது இஸ்ரேலில் உள்ள மக்களுக்கு அந்த வகையான தவறான புரிதல் இல்லை. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் இரு நாடுகளுக்கு இடையிலானவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். எனவே, இஸ்ரேலில் யார் பிரதமராகப் பொறுப்பேற்றாலும், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் முன்பைப் போலவே தொடரும் என்கிறார் ஹரிந்தர் மிஸ்ரா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு