அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் . அதேநேரத்தில், வேறு சில காரணங்களுக்காகவும் இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் பெறக்கூடும்.
மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்த எல்-சயீத், பயங்கரவாதத்துடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது உள்ளிட்ட கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவருடனான வெளிப்படையான மோதலையும் அவர் சந்தித்தார். இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லிம் செனட்டராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்ற ரோஜர்ஸ், எல்-சயீதை ஒரு கம்யூனிஸ்ட் என்று சித்தரித்தார். இஸ்ரேல் தொடர்பான அவரது நிலைப்பாட்டையும், அவரது முஸ்லிம் நம்பிக்கையையும் விமர்சித்தார்.
நாடு முழுவதும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெறுவதை நீண்ட நேரம் காத்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எல்-சயீதின் ஆதரவாளர்கள், அவர் தனது வெற்றியைக் கொண்டாட மேடைக்கு வந்தபோது உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்பு தேர்தலில் வென்று எந்தப் பொதுப் பதவியையும் வகித்திராத மருத்துவரான எல்-சயீத், கடும் போட்டியும் சர்ச்சைகளும் நிறைந்த தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தார்.
கட்சியின் வேட்பாளர் தேர்வில் அவரிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஜனநாயகக் கட்சியின் சக வேட்பாளர் ஹேலி ஸ்டீவன்ஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாட்களில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய எல்-சயீத், "ஒரு கோடி மக்கள் வாழும் இந்த மாகாணம், அரசிடமிருந்து இதைவிடச் சிறந்த செயல்பாட்டை எதிர்பார்க்கிறது. நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த இரண்டு பேரைத் தவிர, மற்ற 99,99,998 பேர் மீதுதான் எனது கவனம் அதிகமாக இருக்கிறது" என்றார்.
வெற்றி பெற்ற பிறகு எல்-சயீத், ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
"நீண்ட காலத்துக்குப் பிறகு நாம் பார்த்த மிக மோசமான பிரசாரங்களில் ஒன்றை அவர்கள் முழு வீச்சில் முன்னெடுத்தனர்... எனது பெயரையும் எனது நம்பிக்கையையும் காரணமாகக் கொண்டு இதைச் செய்தனர். நம்மில் சிலருக்கு இடமில்லாத அளவுக்குச் சிறிய அமெரிக்காவை அவர்கள் விரும்பினர். ஆனால், நம் அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்குப் பரந்த நாடு அமெரிக்கா என்பதை நாம் அறிவோம்" என்றார்.
மேலும், "வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று கருதப்பட்ட ஒரு வேட்பாளருக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்கள்... மிச்சிகன் மக்களே, உங்களுக்காகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பின்னணி என்ன?
1984-ஆம் ஆண்டு, டெட்ராய்ட்டின் புறநகர்ப் பகுதியான ரோசெஸ்டர் ஹில்ஸில் பிறந்த எல்-சயீத், தனது மூன்று வயதில் பெற்றோர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, தந்தை மற்றும் மாற்றாந்தாய் ஜாக்குலின் ஜான்சனின் பராமரிப்பில் வளர்ந்தார்.
மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற அவர், பின்னர் தொற்றுநோயியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.
2015-ஆம் ஆண்டு, டெட்ராய்ட் சுகாதாரத் துறையின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டது தேசிய அளவில் கவனம் பெற்றது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மிச்சிகன் மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அவர், 20 சதவீதப் புள்ளிகளுக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கிரெட்சன் விட்மரிடம் தோல்வியடைந்தார். பின்னர் விட்மர் இரண்டு முறை மாகாண ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
2026-ஆம் ஆண்டு செனட் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் கிரெட்சன் விட்மர், ஹேலி ஸ்டீவன்ஸுக்கு ஆதரவளித்தார். ஆனால், கட்சியின் வேட்பாளராக எல்-சயீத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவரது தேர்தல் பிரசாரத்துக்கு விட்மர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.
செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற முற்போக்குச் சிந்தனையுள்ள தலைவர்கள் எல்-சயீதுக்கு ஆதரவளித்தனர்.
அதேநேரத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட மிதவாத ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் அவரது பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியின் திட்டத்துக்கு மிச்சிகன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாக இருந்தது.
இடதுசாரிக் கொள்கைகளை முன்வைத்து எல்-சயீத் தேர்தல் பிரசாரம் செய்தார். அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காகக் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை இனப்படுகொலை என்றும் எல்-சயீத் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் வலுவாக மறுக்கிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிராந்தியத்தில் இஸ்ரேல் இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
விமர்சனங்கள் என்ன?
இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் அமெரிக்கா ராணுவ உதவி வழங்குவதை எல்-சயீத் எதிர்த்தார். 42 வயதான அவர், அமெரிக்கர்கள் செலுத்தும் வரிப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்று குண்டுகளை வீசுவதற்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, "பள்ளிகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கூறி வந்தார்.
"பொதுவாக, வெளிநாட்டு ராணுவங்களுக்கு நாம் நிதியுதவி அளிக்கக் கூடாது என்பதே என் கருத்து. அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, எகிப்து, செளதி அரேபியா, கத்தார் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸாக இருந்தாலும் சரி" என்று அக்டோபர் 28-ஆம் தேதி எல்-சயீத் கூறினார்.
இருப்பினும், எகிப்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த எல்-சயீத், "பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பவர்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்
அக்டோபர் 15-ஆம் தேதி ரோஜர்ஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "தனக்கு எல்லா வாய்ப்புகளையும் வழங்கிய நாட்டுக்கு நன்றியுடன் இருக்காமல், அதைப் பற்றி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியவர் எல்-சயீத். அவரைவிடச் சிறந்த ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கத் தகுதியானவர்கள்" என்று கூறினார்.
டிரம்பின் கருத்துகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்ட ரோஜர்ஸ், அதேவேளையில், தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நன்கொடையாளர்களிடமிருந்து எல்-சயீத்தின் தேர்தல் பிரசாரத்துக்கு நிதியுதவி கிடைத்ததாகக் குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
2011-ஆம் ஆண்டு அரபு வசந்தப் புரட்சிக்குப் பிறகு எகிப்தில் சிறிது காலம் ஆட்சியில் இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் எல்-சயீதுக்குத் தொடர்பு இருப்பதாகக் குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
எகிப்தின் மிகப் பெரியதும் பழமையானதுமான இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று எல்-சயீத் மறுத்தார்.
எனினும், 2012-ஆம் ஆண்டு அப்போதைய எகிப்திய அதிபர் முகமது மோர்சிக்கு அவர் எழுதிய திறந்த கடிதத்தை அரசியல் எதிரிகள் இதற்குச் சான்றாகச் சுட்டிக்காட்டினர்.
அந்தக் கடிதத்தில், "ஊடகங்களையும் காவல்துறையையும் கூடிய விரைவில் தூய்மைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் 9/11 தாக்குதல்களுக்கு அந்த நாடே "தகுதியானது" என்று கூறிய இடதுசாரி அரசியல் வர்ணனையாளர் ஹசன் பைக்கருடன் எல்-சயீதுக்கு இருந்த தொடர்புகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் டெட்ராய்ட்டில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் அரபு அமெரிக்கர் ஒருவர் நடத்திய வன்முறைத் தாக்குதலின் பின்னணி குறித்த தனது கருத்துகளுக்காக, மிச்சிகனின் யூத சமூகத்தினரிடம் எல்-சயீத் மன்னிப்புக் கேட்டார்.
வரலாற்று ரீதியாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளித்து வரும் மிச்சிகனில், எல்-சயீத் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது யூத வாக்காளர்களிடையே பிளவை ஏற்படுத்தியதாக 'தி ஜூயிஷ் இன்சைடர்' செய்தி இணையதளம் மதிப்பிட்டது.
சமூகத் தலைவர்களை மேற்கோள் காட்டிய அந்த இணையதளம், இதனால் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவான வாக்குகள் அதிகரிக்கக்கூடும் என்றும் கணித்தது.
இருப்பினும், தேர்தல் பிரசாரத்தின்போது, தனது விசுவாசம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே உள்ளது என்று எல்-சயீத் தெரிவித்தார்.
மேலும், தனது பின்னணியைப் பார்க்காமல், தான் முன்வைக்கும் கொள்கைகளின் அடிப்படையில் தன்னை மதிப்பிடுமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
"சராசரி அமெரிக்கர் பிரார்த்தனை செய்வதைவிட நான் சற்றே மாறுபட்ட முறையில் பிரார்தனை செய்யலாம். ஆனால், நாங்கள் அனைவரும் வேண்டிக்கொள்வது ஒரே விஷயங்களுக்காகத்தான்" என்று தேர்தல் பிரசாரத்தின்போது எல்-சயீத் கூறினார்.
"மக்களால் எரிபொருள், மளிகைப் பொருட்கள் வாங்க முடியாமல் போவதற்கும், மருத்துவச் சேவைகளைப் பெற முடியாமல் தவிப்பதற்கும், தாங்கள் சுவாசிக்கும் காற்று மற்றும் குடிக்கும் நீரின் தரம் குறித்து கவலைப்படுவதற்கும் எனது பெயரோ, மத நம்பிக்கையோ காரணமல்ல" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































