நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் - 2 நாட்களில் அனைவரும் பிடிபட்டது எப்படி?
தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற நிகழ்வு இந்தியா முழுவதும் பேசும்பொருளான நிலையில், அந்த '17 கைதிகளையும் இரண்டு நாட்களுக்குள் பிடித்துவிட்டதாக' தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன?
கைதிகள் தப்பித்தது எப்படி?
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறை 2019-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
இச்சிறைச்சாலையின் கைதிகள் தங்கும் கொள்ளளவு என்பது 200 ஆகும். ஆனால் இங்கு 334 பேர் அடைக்கப்பட்டிருந்ததாக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக 134 கைதிகள் என்பது அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட அதிகம்.
அக்டோபர் 26, திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் சிறைச்சாலையின் மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிடுகின்றனர்.
இதைக் கேட்டு மூன்றாவது பிளாக்கின் பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபு, கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் செல்கிறார்.
அந்தக் கைதிக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள அருகில் செல்லும்போது, அவரை சில கைதிகள் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டு சிறையில் இருந்து தப்பிக்க முயல்கின்றனர்.
"மூன்றாவது பிளாக்கில் இருந்து வெளியே வந்த அவர்களை பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கைதிகள் காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பிச் சென்றனர்" என சிறைத்துறை செய்திக் குறிப்பு கூறுகிறது.
'சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கைதிகள் நடத்திய தாக்குதல்களில் சிறைக் காவலர்கள், அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர் என்றும், குறிப்பாக தங்கபாண்டி என்ற இரண்டாம் நிலை சிறைக்காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
"கைதிகள் தப்பித்த சில நிமிடங்களில், வேறு ஒரு வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை சிறையில் அடைக்க, அப்போது சில காவலர்கள் மாவட்டச் சிறைக்கு வந்துள்ளனர். அவர்கள் உடனடியாக கைதிகள் தப்பித்த விஷயத்தை அறிந்து, உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டார்கள். எனவே சில மணிநேரங்களிலேயே முழு வீச்சிலான தேடுதல் பணிகள் தொடங்கின" என்கிறது காவல்துறை.
ஆனால், இந்தச் சம்பவம் நடந்த அன்று சிறையில் மொத்தம் எத்தனை காவலர்கள் பணியில் இருந்தார்கள் என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறை தெரிவிக்கவில்லை.
இருப்பினும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சிறைத்துறை செய்திக் குறிப்பு தெரிவித்தது.
சிறையில் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்ற கைதிகள் மீது கண்டமனூர் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் நேரில் (அக்டோபர் 27) ஆய்வு மேற்கொண்டார். கைதிகள் தப்பிச் சென்றதற்கு 'மனிதத் தவறே' காரணம் என அவர் தெரிவித்தார்.
'நள்ளிரவில் அமைக்கப்பட்ட 17 தனிப்படைகள்'
"கைதிகள் தப்பித்தது தொடர்பாக செய்தி கிடைத்ததும், உடனடியாக நள்ளிரவில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாவட்ட சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடிய போது, பிரவீன் குமார் என்ற கைதி அன்று இரவே பிடிபட்டார்" எனக் கூறுகிறார் தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி.
நள்ளிரவு இரண்டு மணிக்குள் தப்பித்துச் சென்ற கைதிகளின் புகைப்படங்களும் விவரங்களும் வெளியிடப்பட்டன.
பின்னர், அக்டோபர் 27 அதிகாலை 3 பேர் பிடிபட்டனர். அன்று பிற்பகல் மேலும் ஒருவர் பிடிபட்டார்.
அதிலும் பிற்பகலில் பிடிபட்ட ஐந்தாவது நபரான லிங்க பிரசாத் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.
'சிறையில் இருந்து திங்கள்கிழமை இரவு தப்பிய லிங்க பிரசாத், கண்டமனூர் செல்லும் சாலையில் தனது ஆட்டோவில் ஏறியதாக' சின்னக்காளை என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அதன் பின்னர், ஆட்டோவைச் சோதனை செய்வதற்காகக் காவலர் ஒருவர் வழிமறித்துள்ளார். ஆட்டோவில் இருந்தவர் தப்பியோடிய கைதி என்பது தெரியவந்ததும், அதே ஆட்டோவில் அவரைச் சிறைக்குக் காவலர் அழைத்துச் சென்றார். பின்னர், லிங்க பிரசாத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
"தேனி மாவட்ட சிறை என்பது சுற்றிலும் அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்டது. எனவே கைதிகள் தப்பித்த செய்தி கிடைத்ததும், சிறையிலிருந்து வெளியேறும் பாதைகளில் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அண்டை மாநிலமான கேரளாவின் எல்லைகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது" என்கிறார் விஜயேந்திர பிடாரி.
"வாகனத் தணிக்கைக்காக கேரள காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிலையங்கள், மதுரை விமான நிலையம், சுற்றியுள்ள பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு தொடர்ந்தது. அருகில் உள்ள கிராம மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது."
குறிப்பாக, "தப்பித்த கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளையும் காவல்துறையினர் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்தனர்" என்கிறார் அவர்.
வனப்பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள 5 அதிரடிப்படை குழுக்கள் வரவழைக்கப்பட்டன. தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4 பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டன.
"விடிந்ததும், தப்பியோடிய கைதிகளைக் கண்காணிக்க மூன்று அதிநவீன டிரோன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த டிரோன் காட்சிகள் மூலம் பரந்த பகுதிகளைக் கண்காணிக்கவும், கைதிகள் பதுங்கியிருந்த துல்லியமான இடத்தைக் கண்டறியவும் முடிந்தது. இது அவர்களைக் கைது செய்யக் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்கிறார் தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி.
அக்டோபர் 27 அன்று மாலையில், சிறையின் பின்புறம் உள்ள அமச்சியாபுரம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 கைதிகளை காவல்துறையினர் டிரோன் கண்காணிப்பு உதவியுடன் கண்டறிந்து பிடித்தனர்.
இதன் மூலம் இந்தச் சம்பவம் நடந்து 24 மணிநேரத்திற்குள் 13 கைதிகளை பிடித்ததாக தமிழக காவல்துறை தெரிவித்தது.
எஞ்சியிருக்கும் கேள்விகள்
"மீண்டும் பிடிக்கப்பட்ட கைதிகளில் இருவரை அழைத்து வந்து, எந்த வழியாகச் தப்பிச் சென்றார்கள், பதுங்கியிருந்த பகுதிகள் எவை என அடையாளம் காணப்பட்டது. இதனால் மீதமிருந்த நான்கு கைதிகள் எங்கிருப்பார்கள் என்பதை ஓரளவு கணிக்க முடிந்து, அப்பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டன" என்கிறது காவல்துறை தரப்பு.
அதன் பின்னர் இன்று (அக்டோபர் 28) காலை இரண்டு கைதிகளை பிடித்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
பிறகு, மாலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 'தேனி சிறையிலிருந்து அக்டோபர் 26 அன்று தப்பிச் சென்ற, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகளையும் இரண்டு நாட்களுக்குள் பிடித்துவிட்டதாகவும்' தமிழக காவல்துறை தெரிவித்தது.
இருப்பினும், 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பித்தது என்பது சிறைக்குள் நீண்ட காலமாக தீட்டப்பட்ட திட்டமா?
அவர்கள் தப்பித்துச் சென்று ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்களா?
சிறையில் இருந்து கைதிகள் தப்பித்த இரவில், சிறையில் எத்தனை காவலர்கள் பணியில் இருந்தனர்?
அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தனவா?
சிறைக்கு வெளியில் இருந்து கைதிகளுக்கு ஏதேனும் உதவிகள் கிடைத்ததா?
இவர்கள் எந்தெந்த வழக்குகளுக்காக சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள் போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.
"இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்" என நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், "ஊழியர்கள் கடமையில் அலட்சியமாக இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
"மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துச் சிறை வளாகங்களிலும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறியும் ஆய்வு நடைபெறுகிறது. சிறைகள் உயர் பாதுகாப்பு கொண்ட இடங்கள் என்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடற்ற வகையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித அலட்சியத்துக்கும் இடமளிக்கக் கூடாது" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு