நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஐஐடி-யில் சாதிப் பாகுபாடு மாணவர்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது? உதவி கிடைக்கிறதா?
எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை தொடர்பான விவரிப்புகள் உள்ளன.
'நண்பன்' திரைப்படத்தில், நடிகர் விஜய் வசந்த், தனது ப்ராஜெக்ட்-ஐ உரிய நேரத்தில் முடிக்கத் தவறிய மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் தோல்வியடைந்த நிலையில் பின்னர் தற்கொலை செய்துகொள்கிறார். 2009-ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் பொதுவெளியில் ஒரு கேள்வியை விவாதத்திற்குக் கொண்டு வந்தது. அதாவது, வெற்றி பெற வேண்டுமென்ற அழுத்தம் அளவுக்கு மீறிக் கூடும்போது, திறமையான இளைஞர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
அந்தத் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மாணவர்களின் தற்கொலைகள் குறித்த கேள்வி இன்னும் தொடர்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமித் குமார் மற்றும் பிறர் எதிர் இந்திய அரசு வழக்கில், நாட்டில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி, 2022-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 13,000-ஆக உயர்ந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
செப்டம்பர் 18-ஆம் தேதி, ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தனது அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, கல்வி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கோரி மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர் தலித் மாணவர் என்பதால் ஆசிரியர்களால் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கல்வி நிறுவனம் மறுத்துள்ளது. தேர்வில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலும் வெளியாகியுள்ளது.
காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால், மாணவரின் மரணம் தொடர்பாக இப்போதே எந்த முடிவுக்கும் வர இயலாது. ஆனால், இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது: நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் மனநிலையில் என்ன நடக்கிறது?
தற்கொலை என்பது தீவிரமான மனநல மற்றும் சமூகப் பிரச்னை. நீங்களும் மன அழுத்தத்தில் இருந்தால், இந்திய அரசின் ஜீவன் ஆஸ்தா உதவி எண்ணான 18002333330-ஐ தொடர்புகொண்டு உதவி பெறலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் மனம் விட்டுப் பேசலாம்.
மாணவர்களின் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தேசிய பணிக் குழுவின் இடைக்கால அறிக்கை, "மாணவர்களின் தற்கொலையை வெறும் உளவியல் பிரச்னையாக மட்டுமே புரிந்துகொள்ள முடியாது." எனக் கூறுகிறது.
மாணவரைச் சுற்றியுள்ள சூழல், கல்வி நிறுவனத்தின் அமைப்பு, சமூக-பொருளாதார அழுத்தங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டுமென அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதே அறிக்கையில், ஆய்வாளர் பிரபாகர் கிருஷ்ணமூர்த்தி 2025-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி கோரக்பூரில், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மாணவர்கள் படிப்பில் இருந்து இடைநிற்கும் விகிதம் பொதுப் பிரிவினரைவிட 318% அதிகமாக இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பை இடையில் கைவிடுவதில் 47.6% பேருக்கு பொருளாதாரச் சிரமம் ஒரு காரணியாக இருந்தது.
மாணவர்களுக்கான ஆதரவு அமைப்பு குறித்தும் பணிக் குழுவின் அறிக்கை கேள்வி எழுப்புகிறது. நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட பல்கலைக் கழக மானியக் குழுவின் (யுஜிசி) தரவுகள்படி, உயர்கல்வி நிறுவனங்களில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் 27,136 பேர் இருந்தனர். அதாவது, சராசரியாக 221 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதம்.
ஆனால், பணிக் குழு மதிப்பீடு செய்த 50 பேரில் 47 பேர் ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கல்வி ஆலோசகர்களாக இருந்தனர். அவர்கள் முறையான உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் அல்ல.
எழுபது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேர உளவியல் நிபுணர் இல்லை என அந்த அறிக்கை கூறுகிறது. தற்கொலை அபாயத்தை எதிர்கொள்வதற்குரிய சரியான நடைமுறை நான்கு சதவிகிதத்திற்கும் குறைவான நிறுவனங்களிலேயே இருந்தது. 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களில் மட்டுமே உளவியல் அவசர நிலைகளைக் கையாள்வதற்கான எழுத்துபூர்வ நடைமுறை இருந்தது.
இந்தத் தரவுகளையும் மாணவர்களின் அனுபவங்களையும் புரிந்து கொள்வதற்காக, கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் பிரிவு இயக்குநர் முகேஷ் சர்மா, பிபிசி ஹிந்தியின் சிறப்பு நிகழ்ச்சியான 'தி லென்ஸ்' நிகழ்ச்சியில் மூவருடன் பேசினார்.
அவர்களில், ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி மும்பையின் முன்னாள் மாணவர் முனைவர் பிரணவ் ஜீவன், ஐஐடி கோரக்பூர், ஐஐடி கான்பூர், பிட்ஸ் பிலானி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் கணினி அறிவியல் பேராசிரியர் ராஜீவ் குமார், மருத்துவ உளவியலாளர் அருணா புருட்டா ஆகியோர் இடம் பெற்றனர்.
ஐஐடி-யில் சாதிப் பாகுபாடு எப்படி இருக்கக் கூடும்?
மாணவர்கள் கடினமான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அப்படியிருக்க, சாதிப் பாகுபாடு அங்கு எவ்வாறு உருவாக முடியும்?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரணவ் ஜீவன், தனது அனுபவத்தில், பாகுபாடு என்பது வெளியிலிருந்து உடனடியாக அடையாளம் காண முடியாத வழிகளில் அடிக்கடி நிகழ்வதாகக் கூறினார். வெளிப்படையான பாகுபாடு நிகழும் சம்பவங்கள் இருப்பதாகவும், ஆனால் அவை அரிதானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவர், அதுவும் தனது குடும்பத்தில் முதல் முறையாக இத்தகைய கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவராக இருந்தால், புதிய சூழல் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடுமென பிரணவ் கூறினார். மேலும், "அத்தகைய நேரங்களில் அவர் ஆதரவை எதிர்பார்ப்பார். ஆனால், தனது துறையில் எஸ்சி, எஸ்டி அல்லது ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் யாரும் இல்லை என்பதைப் பார்க்கும்போது, தான் தனியாக இருப்பதாக உணரும் நிலை மேலும் அதிகரிக்கலாம்." என்றார்.
பிரணவ் கூற்றுப்படி, "இட ஒதுக்கீட்டின் மூலம் சேரும் மாணவர்கள் படிப்பில் சிறப்பாக இருக்க மாட்டார்கள், தோல்வியடைவார்கள் அல்லது எளிதில் வேலை வாங்கி விடுவார்கள் என்று சில மாணவர்கள் வகுப்பறையிலோ அல்லது சுற்றியுள்ள இடங்களிலோ கேலி செய்வதை அவர்கள் கேட்கிறார்கள். பிறருக்கு இவை வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைக் கேட்கும் மாணவர்களிடம் அவை பாதிப்பை ஏற்படுத்தும்."
கல்வியில் ஏற்படும் தோல்வி எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதிலும் வித்தியாசம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். "பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர் தோல்வியடைந்தால், அது அவரது தனிப்பட்ட தோல்வியாகக் கருதப்படுகிறது. ஆனால், இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர் தோல்வியடைந்தால், சிலர் அவரது ஒட்டுமொத்த சாதி அல்லது சமூகத்தையே மதிப்பிடத் தொடங்குகிறார்கள்."
இதனால், தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்ற அழுத்தம் மட்டுமின்றி, தங்களது தோல்வி ஒட்டுமொத்த சமூகத்துடனும் தொடர்புபடுத்தப்படும் என்ற கவலையும் மாணவர்களுக்கு ஏற்படலாம்.
எல்லா மாணவர்களும் ஒரே அளவிலான தயாரிப்புடனும் ஆதரவுடனும்தான் வருகிறார்களா?
ஐஐடி என்பது திறமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஒரு மாணவரின் தயார்நிலையைத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே உண்மையில் அளவிட முடியுமா?
இதற்கு பிரணவ், சில மாணவர்கள் உயர்கல்வி குறித்த அனுபவத்தை ஏற்கெனவே கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருவதாகக் கூறினார். குடும்பத்தினர், பயிற்சி வகுப்புகளுக்குச் சென்ற அறிமுகமானவர்கள் அல்லது நிறுவனத்தில் ஏற்கெனவே படிக்கும் மூத்த மாணவர்கள் மூலம் எந்தப் பாடங்களைப் படிக்க வேண்டும், பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், எந்த ஆசிரியர்களிடம் பேச வேண்டும் போன்ற ஆலோசனைகளை அவர்கள் பெறுகின்றனர்.
அனைத்து மாணவர்களுக்கும் இதுபோன்ற தொடர்பு வட்டம் இருப்பதில்லை என்றும் அவர் கூறினார். சில மாணவர்கள் ஐஐடிக்கு வந்த பிறகுதான், மற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த பல விஷயங்களை முதன்முறையாக எதிர்கொள்கிறார்கள். 2023-ஆம் ஆண்டு உயிரிழந்த ஐஐடி மும்பை மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணத்துக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் கூறியவற்றையும் பிரணவ் குறிப்பிட்டார்.
"தர்ஷன், கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு முன் கணினி பயன்படுத்திய அனுபவம் இல்லாதவர். இதற்காக பிற மாணவர்கள் அவரைக் கேலி செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்ததாக" அவர் கூறினார். முன்கூட்டியே கிடைத்த வாய்ப்புகளும் தகவல்களும் பெரும்பாலும் ஒருவரின் தனிப்பட்ட திறமையாகக் கருதப்படுகின்றன என்றும் பிரணவ் கூறினார்.
ஆசிரியர் பணியாளர் தேர்வு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எஸ்சி, எஸ்டி அல்லது ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் "தகுதியற்றவர்கள்" எனக் கூறி தேர்வு செய்யப்படாதபோது, பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் தேர்வு செயல்முறையில் எவ்வாறு உள்ளது, அதன் நியாயத்தன்மை எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதையும் கேள்வி எழுப்ப வேண்டும்" என்றார். இது ஆசிரியர் பணியாளர் தேர்வு நடைமுறை குறித்த அவரது கேள்வியும் கருத்துமாகும்.
பிரச்னை ஏற்படும்போது ஒரு மாணவர் யாரிடம் பேச வேண்டும்?
ஒரு மாணவர் பலவீனமானவர் அல்லது இந்தப் படிப்புக்குத் தகுதியற்றவர் என்று கருதப்படுவோமோ என்ற அச்சமின்றி உதவி கேட்க முடியுமா?
சில இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் தங்களது சமூகத்தைப் பற்றிக் கூறவதற்குக் கூட அஞ்சுவதாக பிரணவ் கூறினார். இந்த அடிப்படையில் மற்ற மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைப் பார்த்தால், தாங்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கோ, நண்பர்களிடம் உதவி கேட்பதற்கோ தயங்கலாம் என்றும், ஆலோசனை அமைப்பு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
ஐஐடி மும்பையில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவரின் சமூக ஊடகப் பதிவை மேற்கோள் காட்டிய அவர், "உதவி வழங்கும் நபரே, அந்த மாணவரின் சேர்க்கை, தகுதி குறித்து சந்தேகம் கொண்டிருப்பதாக ஒரு மாணவர் உணர்ந்தால், அவர் எப்படி அந்த நபரை அணுகுவார்?" என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கூற்று குறித்து 'லென்ஸ்' நிகழ்ச்சி தனியாக விசாரிக்கவில்லை.
எஸ்சி-எஸ்டி மாணவர்களின் புகார்களைக் கையாளும் நிறுவன அமைப்பு குறித்தும் பிரணவ் கேள்வி எழுப்பினார். சில வழக்குகளில் புகார் அளிக்கும் மாணவர்களிடம், இந்த விவகாரத்தை மேலும் தொடர வேண்டாமெனக் கூறப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஐஐடி கோரக்பூரில் ஒரு ஆசிரியர் தொடர்பான சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் கவனத்திற்கு வந்த ஒரு விவகாரத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மற்ற மாணவர்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் புகார் அளிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இவையனைத்தும் பிரணவின் குற்றச்சாட்டுகளும் அனுபவங்களுமாகும். அவரது பதில் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தரப்பு கருத்து நேர்காணலில் இடம்பெறவில்லை.
சேர்க்கைக்குப் பிறகு படிப்பின் அழுத்தம் மாறுவது ஏன்?
முன்னாள் பேராசிரியர் ராஜீவ் குமார், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புக்கும், ஐஐடியில் சேர்ந்த பிறகு மேற்கொள்ளும் படிப்புக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறினார்.
நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும்போது மாணவர்கள் கேள்விகளை விரைவாகத் தீர்ப்பதற்குப் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், ஐஐடியில் சேர்ந்த பிறகு வகுப்புகள், பணிகள், திட்டங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் மதிப்பீடுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தாங்கள் தேர்ந்தெடுத்த பாடத்தில் இரண்டாம் ஆண்டு முதல் முன்னேறும்போது இந்த மாற்றம் மேலும் அதிகமாகத் தெரியுமென்று அவர் விளக்கினார்.
"புதிய சூழலுக்கு ஏற்ப மாறவேண்டிய பொறுப்பு மாணவருக்கு மட்டும் இல்லை. குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் இதில் பங்கு உள்ளது. அதனால்தான் புதிய மாணவர்கள் நிறுவனத்தில் படிப்பது மற்றும் வாழ்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள ஐஐடிகளில் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன," என்றார் ராஜீவ் குமார்.
ஒரு மாணவர் வகுப்புகளைத் தவிர்த்தாலோ, அவரது கல்விச் செயல்பாட்டில் திடீர் சரிவு ஏற்பட்டாலோ, ஆசிரியர்கள் கவனிப்பார்களா?
இதற்குப் பதிலளித்த ராஜீவ் குமார், தனது அனுபவத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் விடுதிக் காப்பாளர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருப்பதாகக் கூறினார். ஒரு மாணவர் தொடர்ந்து வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்தாலோ அல்லது படிப்பில் சிரமப்படுவதாகத் தெரிந்தாலோ, அவரிடம் பேச முயல்வேன் என்றும், தேவைப்பட்டால் அந்த மாணவரின் ஆலோசகரையும் தொடர்பு கொள்வேன் என்றும் அவர் கூறினார்.
தேர்வில் முறைகேடு செய்வது தொடர்பாக, நிறுவனம் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், விதிமுறைகள் முன்கூட்டியே மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஐஐடி மும்பை மாணவரின் மரணம் தொடர்பாக, இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலமாகவே தனக்குத் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
ஒரு தேர்வில் ஏற்பட்ட மோசமான செயல்திறன் ஒரு மாணவரின் முழுக் கல்வியையும் தீர்மானித்துவிடாது என்றும், ஐஐடி-யில் மதிப்பெண்கள் பல தேர்வுகள், பணிகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் அமைவதாகக் கூறினார்.
'சாதிப் பாகுபாடு' குறித்து நிபுணர் என்ன கூறினார்?
சாதிப் பாகுபாடு குறித்த ராஜீவ் குமாரின் கருத்து பிரணவின் கருத்தில் இருந்து வேறுபட்டிருந்தது.
மாணவராகவும் ஆசிரியராகவும் ஐஐடியில் இருந்த தனது அனுபவத்தில், சாதி அடிப்படையில் பாகுபாடு இருப்பதைப் பார்த்ததில்லை என்று ராஜீவ் குமார் கூறினார். ஆனால், மாணவர்களிடையே வேறு வகை பாகுபாடுகள் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். உதாரணமாக, நுழைவுத் தேர்வில் பெற்ற தரவரிசை மற்றும் கணினி அறிவியல் போன்ற குறிப்பிட்ட பாடம் கிடைத்ததா இல்லையா என்பதன் அடிப்படையில் மாணவர்களிடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூறினார்.
தரவரிசையை வைத்து ஒரு மாணவரின் சமூகப் பின்னணியை மதிப்பிட முடியுமா என்று கேட்கப்பட்டபோது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் தரவரிசையைக் கேட்க வேண்டாமென நிறுவனம் அறிவுறுத்துவதாக அவர் கூறினார். ஆனால், அந்த அறிவுரை எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியராக இருந்தபோது எந்த மாணவரின் சாதி குறித்த தகவலும் தனக்குத் தெரிந்ததில்லை என்று ராஜீவ் குமார் கூறினார். மறுபுறம், சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் மூலமாக மாணவர்கள் பாகுபாட்டை உணர முடியுமெனக் கூறினார் பிரணவ்.
இருவரது அனுபவங்களுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு இதுதான். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்தும் இருவரும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
எண்ணிக்கை குறைவாக இருப்பதை ராஜீவ் குமார் ஒப்புக்கொண்டாலும், ஐஐடி ஆசிரியர் பணியாளர் தேர்வு நடைமுறை மிகவும் கடுமையானது என்பதை வலியுறுத்தினார். தகுதி நிர்ணய நடைமுறையை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், விண்ணப்பதாரர்கள் தங்கள் இலக்கை அடைய எத்தகைய ஆதரவைப் பெற்றனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டுமென்று பிரணவ் கேள்வி எழுப்பினார்.
புகார் அளிக்கும் நடைமுறை குறித்து, ஆசிரியர், ஆலோசகர் அல்லது விடுதிக் காப்பாளரிடம் மாணவர்கள் பேசலாம் என்று ராஜீவ் குமார் கூறினார். முறையான புகார் நடைமுறை பயனுள்ளதாக இருப்பதாகத் தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு நல்ல ஆசிரியர் இருந்தால்தான் ஒரு மாணவர் பயனடைய முடியும் என்றால், அத்தகைய ஆசிரியர் கிடைக்காத மாணவர்களின் நிலை என்னவெனக் கேட்கப்பட்டபோது, நிறுவனத்திற்குள் மாணவர்கள் தங்கள் கவலைகளை எழுப்பப் பல்வேறு வழிகள் உள்ளதாக ராஜீவ் குமார் கூறினார்.
'எல்லா இடங்களிலும் முதல் முறையாக வருபவர்கள் இருக்கிறார்கள்'
மருத்துவ உளவியலாளர் அருணா புருட்டாவின் கூற்றுப்படி, மற்றவர்களைவிட முன்னிலையில் இருக்க வேண்டுமென்ற அழுத்தம், கல்லூரியில் சேர்வதற்கு வெகுகாலம் முன்பே தொடங்கிவிடலாம். குழந்தைப் பருவத்தில் இருந்தே நல்ல மதிப்பெண்களுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுத்து, குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக குழந்தையைக் கேலி செய்தால், சிறு வயதிலிருந்தே அந்தக் குழந்தைக்கு அழுத்தம் உருவாகத் தொடங்கும் என்றார் அவர்.
பள்ளியில் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த ஒரு மாணவியின் நிலையை புருட்டா குறிப்பிட்டார். ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்கு வந்த பிறகு, தன்னைவிட முன்னாலும் பின்னாலும் தன்னைச் சுற்றிலும் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த மாணவர்கள் இருப்பதை அந்த மாணவி உணர்ந்தார். அனைவரையும்விடத் தாம் எப்படி தொடர்ந்து முன்னிலையில் இருக்க முடியும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"இத்தகைய சூழலில், எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டுமென்ற விருப்பம் ஆரம்பத்தில் தன்னுடையதா அல்லது குடும்பத்தின் எதிர்பார்ப்புகளால் அந்த விருப்பம் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டு, பின்னர் அதையே தனது விருப்பமாக அவர் கருதத் தொடங்கிவிட்டாரா என்பதையும் ஒரு மாணவர் மறந்துவிடக்கூடும்" என்றார் புருட்டா.
படிப்பில் சிரமப்படும் ஒரு மாணவர் ஏன் உதவி கேட்கத் தயங்குகிறார் என்று கேட்கப்பட்டபோது, பெற்றோரும் ஆசிரியர்களும் முதலில் மாணவர் எப்படி உணர்கிறார் என்பதையும், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று புருட்டா கூறினார். ஒவ்வொரு பிரச்னையையும் குடும்பத்தினரால் மட்டுமே தீர்க்க முடியாது என்றும், தேவைப்பட்டால் உளவியலாளர் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாகுபாடு மாணவர்களிடம் பாதுகாப்பின்மை, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், பாகுபாடு என்பது நுட்பமான அல்லது மறைமுகமான வடிவங்களில் மட்டுமே இருக்குமென வரையறுப்பது சரியல்ல; சில நேரங்களில் அது வெளிப்படையாகவும் இருக்கலாம் என்றார்.
மாணவர்களிடம் தங்களது நடத்தையின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்குத் தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என்று புருட்டா பரிந்துரைத்தார். அதோடு, மாணவர்களும் தொடர்ந்து உளவியல் நிபுணரிடம் பேசுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டுமென அவர் கருத்து தெரிவித்தார்.
வெறுமனே ஆலோசகர் ஒருவர் இடம்பெற ஏதுவாகப் பணியிடத்தை உருவாக்குவது மட்டும் போதாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஒரு மாணவரின் தேவைகளைப் புரிந்துகொள்ள அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை உரையாட வேண்டியிருக்கலாம் என்றும், பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து அவரைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். எனவே, கல்வி நிறுவனங்களில் போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.
இறுதியில் உதவிக்கான பொறுப்பு யாரிடம் உள்ளது?
'தி லென்ஸ்' நிகழ்ச்சியில் நடந்த உரையாடலில், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு எந்த அளவுக்கு உள்ளது அல்லது புகார் அளிப்பது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மூவரும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஒரு மாணவர் தனது சக மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது ஆலோசகர்களிடம் இருந்து நம்பிக்கையைப் பெற முடியாவிட்டால், தனது பிரச்னைகளை யாரிடம் பகிர்ந்துகொள்வார் என்ற கேள்வியை பிரணவ் எழுப்பினார்.
ஆசிரியர் ஆலோசகர்கள், விடுதிக் காப்பாளர்கள் மற்றும் ஆலோசனை சேவைகள் கல்வி நிறுவனங்களில் உள்ளதாகவும், மாணவர்களும் முன்வந்து பேச வேண்டும் என்றும் பேராசிரியர் ராஜீவ் குமார் கூறினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பிரச்னைகளைக் கேட்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் புருட்டா வலியுறுத்தினார்.
இந்த வெவ்வேறு கருத்துகளுக்கு இடையிலும், உரையாடலைத் தொடங்கிய அதே கேள்வி இன்னும் தொடர்கிறது.
ஒரு மாணவர் கல்வி, எதிர்பார்ப்புகள், பொருளாதாரச் சிரமங்கள் அல்லது பாகுபாடு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, அந்த நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்பே அச்சமின்றித் தனது பிரச்னையை பகிர்ந்துகொண்டு, அதை யாராவது உண்மையாகக் கேட்பதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறதா?
முக்கியக் குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு