17 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு: சிறையில் இருந்து தப்பினால் என்ன தண்டனை? 'ஆட்டோ' சங்கர் வழக்கு சொல்லும் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற வழக்கில் சிறைப் பணியாளர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சிறைத்துறை தெரிவித்துள்ளது.
காவலர்களைத் தாக்கிவிட்டுச் சென்ற கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் கண்டமனூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? சிறை வாழ்வில் இவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? என்பதைப் பார்க்கலாம்.
தேனி சிறையில் நடந்தது என்ன?
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்தச் சிறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு 334 பேர் அடைக்கப்பட்டிருந்ததாக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சில கைதிகள் கூச்சல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு பாரா காவலராகப் பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபு, கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றுள்ளார். அப்போது, அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டு சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றனர். பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களைத் தாக்கி சாவிகளைப் பறித்து நுழைவாயிலைத் திறந்துகொண்டு தப்பிச் சென்றுள்ளனர்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
17 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

பட மூலாதாரம், Handout
சிறையில் காவல் பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறையில் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்ற கைதிகள் மீது கண்டமனூர் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான புகழேந்தி, "சட்டப்பூர்வ காவலில் இருந்து தப்பிச் செல்லும் கைதிகள் மீது பிஎன்எஸ் 262 என்ற பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது" என்கிறார்.
தேனி சம்பவத்தில் பணியில் இருந்த அதிகாரியைத் தாக்கியது, பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அவர் மேற்கோள்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேனி சிறையில் இருந்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதிகள் பின்னர் தண்டனைக் கைதியாக மாறும் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிட்டார்.
ஆட்டோ சங்கரும் சென்னை மத்திய சிறையும்

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளில் மனிதாபிமான அடிப்படையில் நீண்டகாலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்யும் வழக்கம் தமிழ்நாடு அரசால் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் புகழேந்தி, "சிறைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற கைதியாக இருந்தால் அவருக்கு முன்விடுதலை பெறுவதில் சிக்கல் ஏற்படும். நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முயற்சித்தாலும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை" என்கிறார்.
சிறையில் இருந்து தப்பிச் சென்ற காரணத்துக்காக முப்பது ஆண்டுகளைக் கடந்தும் சென்னை புழல் சிறையில் சில கைதிகள் தண்டனையை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதில் 'ஆட்டோ' சங்கர் வழக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றாக 'ஆட்டோ' சங்கர் வழக்கு பேசப்பட்டது. சென்னை திருவான்மியூரில் ஆட்டோ சங்கர் என்ற கௌரிசங்கருக்கு ஆறு கொலைகளில் தொடர்பு இருப்பதாக அரசுத் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவில் ஆட்டோ சங்கரும் அவரது தம்பி ஆட்டோ மோகனும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் கணக்காளராக பணிபுரிந்து வந்த செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
1987-88 காலகட்டத்தில் கோவிந்தராஜ், லலிதா, சுடலை, ரவி, சம்பத் மற்றும் மோகன் ஆகிய ஆறு பேரைக் கொலை செய்ததாக இவர்கள் மீது அரசுத் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆட்டோ சங்கர் மற்றும் அவருடன் தொடர்புடைய ஒன்பது பேர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்டோ சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆட்டோ மோகன், செல்வராஜ் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேர் மத்திய சிறையில் இருந்து தப்பிச் சென்றனர்.
'ஒடிஷா பெண்ணுடன் நட்பு.. தூக்கு தண்டனை'
மத்திய சிறையின் கடும் பாதுகாப்பை மீறி கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சில வாரங்களுக்குப் பிறகு ஒடிஷா மாநிலம் ரூர்கேலா அருகே ஆட்டோ சங்கரை காவல்துறை கைது செய்தது. அவரை விமானம் மூலம் அழைத்து வந்த போலீஸார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கியது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி, ஆட்டோ சங்கருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்திலும் மரண தண்டனை உறுதி செய்யப்படவே, 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார்.
ஆட்டோ சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பின.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் ஆணையம், சிறைத்துறை நிர்வாகத்தில் இருந்த குறைபாடுகளை ஆய்வு செய்து சென்னை மத்திய சிறையை நகருக்கு வெளியே மாற்றம் செய்யலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சிறைவாழ்வு

பட மூலாதாரம், Handout
ஆட்டோ சங்கர் கைதான பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புனேவில் ஆட்டோ மோகனும் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் செல்வராஜும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து தப்பிச் சென்றதால் அவர்கள் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்டோ மோகனும் செல்வராஜும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சொக்கலிங்கம், வேணுகோபால் அமர்வு, இருவருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஏற்படுத்திய பாதிப்பை கருத்தில் கொண்டு இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆட்டோ மோகனை முன்விடுதலை செய்யுமாறு கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மனைவி துளசிமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
நன்னடத்தை, முதுமை மற்றும் உடல்நல பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முன்விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். இடைக்காலமாக மூன்று மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இதற்கு அரசு கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஒரு மாதம் ஆட்டோ மோகனுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆட்டோ மோகன் முன்விடுதலை செய்யப்பட்டார்.
'விடுதலை ஆனாலும் 3 ஆண்டுகள் கண்காணிப்பு'
நீதிமன்றக் காவலில் இருந்து தப்பிச் சென்றதால் பல்வேறு சிக்கல்களை ஆட்டோ மோகன் எதிர்கொண்டதாகக் கூறுகிறார், வழக்கறிஞர் புகழேந்தி. "இவர்களுடன் கைதான பிற ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆட்டோ மோகனுக்கு முன்விடுதலை கிடைத்தது" என்கிறார்.
ஆட்டோ மோகனுக்கு முன்விடுதலை கிடைத்தது குறித்து அவருக்கு ஆஜரான வழக்கறிஞர் எஸ்.மனோகரனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"நீண்டநாள் சிறைவாசியை விடுதலை செய்வதில் உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் கைதியின் நன்னடத்தை எவ்வாறு இருந்தது? மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதா? குடும்ப பின்னணி போன்றவற்றை ஆராய்ந்து விடுதலை செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது" என்கிறார்.
அந்த அடிப்படையில் ஆட்டோ மோகன் முன்விடுதலை செய்யப்பட்டதாகக் கூறிய அவர், "சிறையில் இருந்து முன்விடுதலை செய்யப்பட்டாலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காவல்துறையின் கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்படுவார்கள்" எனக் கூறுகிறார்.
"மீண்டும் ஏதேனும் ஒரு குற்ற வழக்கில் அவர் பிடிபட்டுவிட்டால் முன்விடுதலையை ரத்து செய்துவிடுவார்கள். அதேபோல், வழக்கில் தண்டனை பெற்ற பிறகு சிறையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டால் ஐந்தாண்டுகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் எஸ்.மனோகரன்.
இதே கருத்தை முன்வைக்கும் வழக்கறிஞர் புகழேந்தி, "சிறையில் இருந்து தப்பிச் செல்வது, பரோல் விடுப்பு காலம் முடிந்தும் சிறை திரும்பாமல் இருப்பது போன்றவை கைதியின் நன்னடத்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்கிறார்.
"தப்பிச் சென்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாலும் எளிதில் பரோல் கிடைப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் எஸ்கார்டு பாதுகாப்பில் தான் கிடைக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.
23 நாள் தொடர்பு... 30 ஆண்டு சிறைவாசம்

அதேநேரம், செல்வராஜ் இன்னமும் சிறையில் உள்ளதாகக் கூறிய புகழேந்தி, " சிறைக் குற்றத்தில் ஈடுபட்டார் என்பதால் முன்விடுதலை செய்ய முடியாது என அரசுத் தரப்பு தெரிவித்தது. விசாரணைக் கைதியாக இருந்தபோது இவர் தப்பிச் சென்றார். இதனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார்" என்கிறார்.
சிறையில் இருந்து தப்பிச் சென்றால் பி.என்.எஸ் சட்டம் பிரிவு 262ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. "இந்தப் பிரிவின்கீழ் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியின் தண்டனையில் 2 ஆண்டுகள் சேர்க்கப்பட்டுவிடும்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் எஸ்.மனோகரன்.
பரோல் விடுப்பில் சென்று திரும்பி வராமல் இருப்பது போன்றவை முன்விடுதலையில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனக் கூறும் அவர், "சிறையில் இருந்து தப்பிச் செல்வது கைதிகளின் முன்விடுதலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































