நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
'ஒரு சிறு எபிக் பியூரி தாக்குதல்' - டிரம்ப் பேச்சுக்கு இரான் பதில் என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை புளோரிடாவில் பேசிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், இரான் மீது ஒரு சிறிய 'எபிக் பியூரி' (Epic Fury) தாக்குதலை நடத்த உள்ளதாக எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா இரானுக்கு எதிரான தனது முந்தைய ராணுவ நடவடிக்கைக்கும் 'எபிக் பியூரி' என்ற பெயரையே சூட்டியிருந்தது.
ஆனால் இப்போது இரானும் டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு கடுமையான பதில் கொடுத்துள்ளது.
பிபிசி பெர்சியன் சேவையின்படி, இரானிய ராணுவத்தின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி, அமெரிக்க கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் மீண்டும் நுழைய அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளார். அப்துல்லாஹி கூறுகையில், "அமெரிக்க அதிபர் இந்த கனவை நிச்சயமாகக் காண வேண்டும், அதாவது அவரது ராணுவம் பாரசீக வளைகுடாவில் மீண்டும் ஒருமுறை நுழைவதை பார்க்க வேண்டும், ஆனால் அவர்கள் இந்த கனவை எக்காலத்திற்கும் தம்மோடு கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்" என்றார்.
மேலும் அவர், "அமெரிக்க ராணுவக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் நுழைவதை நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக ஹோர்மூஸ் நீரிணையில் வெடிப்புகள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் குறித்த போலியான செய்திகளை இரான் பரப்புகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நேரத்தில் இந்த அறிக்கைகள் வந்துள்ளன.
ஹோர்மூஸ் வழியாக போருக்கு முந்தைய காலகட்டத்தை விட இப்போது அதிக எண்ணெய் கடந்து செல்வதாக டிரம்ப் கூறுகிறார், அதனால்தான் இரான் எண்ணெய் விலையை உயர்த்த முயற்சிக்கிறது.
இதற்கிடையில், பாரசீக வளைகுடாவில் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கம்யூனிகேஷன் கேபிள்களை குறிவைக்க இரான் திட்டமிட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவில் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கம்யூனிகேஷன் கேபிள்களை குறிவைக்க தங்கள் நாடு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளதாக இரானின் இரண்டு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்கினால், இதனை நடைமுறைப்படுத்தலாம் என்று இரான் கூறுகிறது. இரானைத் தாக்குவது மீண்டும் நடந்தால் எந்த எல்லையையும் தாண்டலாம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி எச்சரித்தார்.
இவற்றுள் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்ட கேபிள்கள் முதல் இகசிய தளங்கள் உள்ளிட்ட ராணுவத் தளங்கள் வரை குறிவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையில், இரானின் மத்திய வங்கியின் (CBI) ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மதி தனது டெலிகிராம் சேனலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களின்போது ப்ளூம்பெர்க் செய்திக்கு பேட்டி அளித்ததாக அவர் கூறினார்.
தெகரன் டைம்ஸ் செய்தியின் கூற்றுப்படி, அமெரிக்கா இரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தவும் அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் முயன்றது, மேலும் இரண்டு வாரங்களுக்குள் ஈரானின் பொருளாதாரம் சிதறிவிடும் என்று அமெரிக்கா மதிப்பிட்டது என்றார்.
ஆனால் இரானின் மக்கள் மீது கடுமையான பொருளாதார அழுத்தம் இருந்தபோதிலும், அமெரிக்கா தனது முக்கிய நோக்கத்தை அடைவதில் தோல்வியடைந்தது. இது ஒரு பிரமையாகும்.
வெளிநாட்டு நாணயத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் குறித்து அவர் கூறுகையில், இரானுக்கு தற்போதும் எண்ணெய் ஏற்றுமதி மூலம் வருமானம் வந்து கொண்டிருக்கிறது, மேலும் எதிர்காலத்திலும் அதன் விநியோகத்தைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய இருப்பு குறித்து கேட்டபோது, ஹெம்மதி அதன் நிலை நன்றாக உள்ளது என்றார்; டிரம்பின் ஜனாதிபதி பதவிக்காலம் முடியும் வரை மற்றும் அதற்குப் பிறகும் இறக்குமதிக்கு நிதியுதவி செய்ய இந்த இருப்பு போதுமானதாக இருக்கும் என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு