நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
தங்கம் விலையில் சரிவு ஏன்? தீபாவளி வரை இந்நிலை நீடிக்குமா?
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு ₹1,64,773 என்ற உச்ச அளவை எட்டியிருந்த தங்கம் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு தங்கம் நல்ல லாபத்தை ஈட்டித்தந்த நிலையில், இப்போது ஏன் விலை சரிகிறது? தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?
டிடி செக்யூரிட்டீஸின் மூத்த கமாடிட்டி வியூக நிபுணர் ரையன் மெக்கே , ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், எண்ணெய் விலை, வட்டி விகிதங்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு குறித்த கவலைகளால் தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து கூறிய அவர், "மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றங்களால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. மறுபுறம் முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திரங்களை நோக்கித் திரும்புகின்றனர். இதன் விளைவாகத் தங்கத்தின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
தங்கத்தின் விலை சரிந்தாலும், எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தங்கத்தின் அளவில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
ப்ளூம்பெர்க் கண்காணிக்கும் கோல்ட் இடிஎஃப்களில், கடந்த 14 வாரங்களாகத் தொடர்ந்து முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. தங்கத்தின் விலை சரிந்து வரும் சூழலுக்கு இது முற்றிலும் முரணான ஒரு போக்காகும்.
இது பற்றி கூறும் சாக்சோ பேங்க் நிறுவனத்தின் கமாடிட்டி வியூகத் தலைவர் ஓலே ஹேன்சன் , புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, நீண்டகால முதலீட்டாளர்கள் இடிஎஃப் மூலம் தொடர்ந்து தங்கத்தைச் சேமித்து வருகின்றனர் என்றார்.
அதேபோல, சில்வர் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளி விலை அதன் உச்ச அளவான கிலோவுக்கு ₹4,20,048-லிருந்து பாதிக்கும் மேலாகக் குறைந்துள்ளது.
இந்த சரிவு பற்றி கூறும் ஸே கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி நயீம் அஸ்லாம் , அமெரிக்க கருவூல பத்திரங்களின் யீல்டு அதிகரிப்பு, டாலர் வலுவடைதல் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலருக்கு மேல் உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள பணவீக்க அச்சங்கள் ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என கருதுகிறோம்" என்கிறார்.
அமெரிக்க பத்திரங்களின் மீதான யீல்டு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலர் வலுவடைவது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் தங்கம் விலை இன்று அதிகமாகவே இருப்பதாக இந்திய பொன் மற்றும் நகை வணிகர் சங்கத்தின் செயலாளர் குமார் ஜெயின்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "இது பண்டிகைக் காலம். தீபாவளி நெருங்கி வருவதால், மக்கள் அதிக அளவில் நகை வாங்குகின்றனர். பழைய தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவரும் போக்கும் கணிசமாக அதிகரித்துள்ளது" என்றார்.
தீபாவளி வரை தங்க விலையில் சரிவு தொடர வாய்ப்புள்ளதா?
மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் உள்ள வலுவான தேவை ஆகியவை தங்க விலையின் சரிவை கட்டுப்படுத்தி வைத்துள்ளன.
எக்ஸ் எஸ்.com சந்தை ஆய்வாளர் லின் டிரான் கூறும் போது, தங்கத்திற்கான வாங்கும் தேவையையும், உயர் வட்டி விகிதங்களால் ஏற்படும் அழுத்தத்தையும் சமநிலைப்படுத்த சந்தை முயற்சித்துக் கொண்டிருக்கிறது. விற்பனை அழுத்தம் சற்று குறைந்துள்ள போதிலும், தற்போதைய வாங்கும் தேவை விலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவாக இல்லை என்கிறார்.
பணவீக்கம் தங்கத்தின் மீது இருமுனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஃபோரெக்ஸ்.காம் சந்தை ஆய்வாளர் ஃபவாத் ரசாக்ஸாதா கூறுகிறார்.
கச்சா எண்ணெய் விலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மறைமுகமாக பாதிக்கிறது. இருப்பினும், எண்ணெய் விலை உயர்ந்தால் மதிப்பு மிக்க உலோகங்களின் விலை குறையும் என்று எந்த ஒரு நிலையான விதியும் இல்லை.
எண்ணெய் விலை உயரும்போது, எரிபொருள், போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கின்றன. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு அதிகமாக நீடிக்கக்கூடும் என்று சந்தைகள் கவலைப்படத் தொடங்குகின்றன.
மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்; இது கடன் பத்திரங்களின் மீதான yield-ஐ அதிகரிக்கிறது. தங்கம் எந்த வட்டியையும் ஈட்டித் தராததால், இத்தகைய சூழல் தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கக்கூடும்.
இதற்கு மாறான ஒரு சூழலும் உள்ளது: எண்ணெய் விலை உயரும்போது, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறித்த அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதி அதை நோக்கித் திரும்பலாம். அத்தகைய சூழலில், வட்டி விகித உயர்வுக்கான அழுத்தம் குறைவாக இருந்தால், தங்கத்தின் விலை உயரக்கூடும்.
வெள்ளியை பொருத்தவரை, தொழில்துறை பயன்பாட்டில் அது முக்கிய பங்கு வகிப்பதால் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்படும் மந்தநிலை அதன் விலையை பாதிக்கிறது என்றும், இதனால் வெள்ளி கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்றும் அஸ்லம் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு