வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளால் நிரம்பிய இந்த மாளிகை 'திகிலூட்டும் வீடு' ஆனது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெங்சென் ஜாங்
- பதவி, பிபிசி உலக சேவையின் உலகளாவிய சீனப் பிரிவு
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
2025 ஆம் ஆண்டு மே மாதம், கலிபோர்னியாவின் வசதி படைத்த ஆர்கேடியா புறநகர்ப் பகுதியில், வால்டர் என்ற இரண்டு மாதக் குழந்தை தலையில் காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.
காவல்துறை அறிக்கையின்படி, குழந்தையின் தாய் என்று கூறிக்கொண்ட ஒரு பெண், படுக்கையிலிருந்து தவறுதலாகக் குழந்தை கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், மருத்துவருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
வால்டரின் உடல்நிலை, கார் விபத்தில் சிக்கியவர்கள் அல்லது உலுக்கப்பட்டதால் காயமடைந்தவர்களின் நிலையைப் போல இருப்பதாக அவர் கூறினார்.
குழந்தை துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் வால்டர் வசித்து வந்த பிரமாண்டமான மாளிகையில் சோதனை நடத்தினர்.
அவரது பெற்றோரான 66 வயது குவோஜுன் சுவான் மற்றும் 39 வயது சில்வியா ஜாங் ஆகியோரைச் சிறிது நேரம் காவலில் வைத்தனர். அங்கு கண்டறிந்தவற்றை, "திகிலூட்டும் வீடு என்றுதான் விவரிக்க முடியும்" என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அந்த மாளிகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த சிக்கலான பாதைகள் நிறைந்த கட்டமைப்பில், ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான 14 வாடகைத் தாய்மார்களின் குழந்தைகள் இருந்ததாகவும், அவர்கள் தினமும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.
பின்னர், அந்த மாளிகையின் முகவரி, அந்தத் தம்பதியினர் நடத்திவந்த வாடகைத் தாய் நிறுவனத்தின் முகவரியாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும், பல வாடகைத் தாய்மார்களைத் தேர்வு செய்வதற்கும் அந்த நிறுவனத்தைத் தம்பதியினர் பயன்படுத்தியுள்ளனர் என்பதும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இந்த ஆண்டு அக்டோபரில், அந்தத் தம்பதியினர் மீண்டும் கைது செய்யப்பட்டு, குழந்தைகளைத் துன்புறுத்துவதற்குச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
அந்தத் தம்பதியினர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் தொடர்ந்து காவலில் உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் 2 கோடி டாலர் பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், சுவானுக்கு 17 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஜாங்குக்கு 11 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தத் தம்பதியினர் 2021 ஏப்ரலில் ஆர்கேடியாவில் உள்ள அந்த மாளிகைக்குக் குடிபெயர்ந்தனர்.
இணையதளங்களில் வெளியிடப்பட்ட விற்பனைப் பதிவுகளின்படி, 10,000 சதுர அடி (929 சதுர மீட்டர்) பரப்பளவு கொண்ட அந்த மாளிகை அதே ஆண்டில் 3.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதில் ஒன்பது படுக்கையறைகள், 11 குளியலறைகள் மற்றும் வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம் ஆகியவை உள்ளன.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வசதி படைத்த புறநகர்ப் பகுதியை உள்ளூர் ஊடகங்கள் "சீனாவின் பெவர்லி ஹில்ஸ்" என்று அழைக்கின்றன.
அமெரிக்காவின் சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இப்பகுதி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் ஆசியர்கள்; அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள்.
அங்குள்ள குடும்பங்களின் வருமானம், பெரும்பாலான அமெரிக்க குடும்பங்களின் வருமானத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"வாடகைத் தாய் முறையின் மூலம் இந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மிக இளம் குழந்தைகளுக்கு, இந்த வீட்டை 'திகிலூட்டும் வீடு' என்றுதான் விவரிக்க முடியும்" என்று அக்டோபரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் நாதன் ஹோச்மேன் தெரிவித்தார்.
புகாரின் படி, அந்த மாளிகையில் 32 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிறு குழந்தைகள் பல மணி நேரம் மேசைகளுக்கு அருகில் அமர்ந்திருப்பதைப் பதிவான காட்சிகள் காட்டின.
ஓர் அறையில் மட்டும் கேமரா இல்லை. ஆனால், மற்ற கேமராக்களில் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை அந்த அறைக்குள் தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது. அதன்பிறகு, அந்த அறைக்குள்ளிருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது.
குழந்தை வால்டருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு பராமரிப்பாளர்களில் ஒருவரான சுன்மெய் லி காரணம் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
கடுமையான உடற்காயம் அல்லது மரணம் ஏற்படக்கூடிய சூழலில் குழந்தையைத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுன்மெய் லி தலைமறைவாக உள்ளார்; அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தம்பதியினரின் வழக்கறிஞர் மிட்செல் கிரெம்ஸ், தாம் ஆய்வு செய்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு "தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியதாக, அமெரிக்காவில் பிபிசியின் செய்திக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
தனது கட்சிக்காரரான சுவான் நிரபராதி என்று கிரெம்ஸ் கூறினார்.
"ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்டிருப்பதற்கான தனது அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்தியதற்காக அவர் குறிவைக்கப்படுகிறார்" என்று அந்த வழக்கறிஞர் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களுக்கு இத்தனை குழந்தைகள் எப்படி கிடைத்தனர்?
வாடகைத் தாய் முறையில், ஒரு பெண் மற்றொருவரின் குழந்தையைத் சுமந்து பிரசவிப்பார். இந்த முறையைப் பயன்படுத்துவதற்கான உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் வாடகைத் தாய் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்த 2024-ம் ஆண்டு ஆய்வின்படி, 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் அமெரிக்காவுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.
வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ள சீனா, வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களில் சுமார் 42 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
சீனாவில் உள்ள பலரால் தங்கள் நாட்டில் எளிதில் அணுக முடியாத, இனப்பெருக்கத் தொழில்நுட்பச் சேவைகளை அமெரிக்கா வழங்குகிறது.
தனியாக வாழும் பெண்களும் எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் செயற்கைக் கருத்தரிப்பு (IVF), கருமுட்டைகளை உறையவைத்துப் பாதுகாத்தல் போன்ற சேவைகளைப் பெறுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.
சீனாவில் பல ஆண்டு காலங்களாக நடைமுறையில் இருந்த, ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கையால் கட்டுப்படுத்தப்பட்ட சில தம்பதியினர், 2016-ல் அந்தக் கொள்கை முடிவுக்கு வந்தபோது தாங்களாகவே குழந்தையைச் சுமந்து பெற்றெடுப்பதில் உடல்ரீதியான சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனால், அவர்களில் சிலர் வெளிநாடுகளில் வாடகைத் தாய் முறையை நாடினர்.
சுவானுக்கும் ஜாங்குக்கும் குழந்தைகளைச் சுமந்த வாடகைத் தாய்மார்களைப் பொறுத்தவரை, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்தத் தம்பதியினரின் கோரிக்கை ஆரம்பத்தில் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பல வாடகைத் தாய்மார்கள் "மார்க் சரோகஸி" என்ற நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.
பொதுவாக, வாடகைத் தாய் நிறுவனம் என்பது சுயாதீனமான மூன்றாம் தரப்பாகக் கருதப்படும். ஆனால், மார்க் சரோகஸி நிறுவனத்தை அந்தத் தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர்.
இந்த உண்மை ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என்று அந்தத் தம்பதியினருக்கு எதிராக அவர்களது வாடகைத் தாய்மார்களில் சிலர் தாக்கல் செய்த இரண்டு வழக்குகள் தெரிவிக்கின்றன.
ஒரு நிறுவனப் பதிவேட்டில், மார்க் சரோகஸி நிறுவனத்தின் மேலாளராக சில்வியா ஜாங் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அதே ஆவணத்தில், ஆர்கேடியாவில் உள்ள அந்தத் தம்பதியினரின் மாளிகையே நிறுவனத்தின் முகவரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சுவானும் ஜாங்கும் தங்களது வீட்டிலிருந்து நடத்தி வந்த வாடகைத் தாய் நிறுவனம் மூலம் வேறு எந்தக் குழந்தை பெற விரும்பிய தம்பதியினரும் வாடகைத் தாயுடன் இணைக்கப்படவில்லை என்று துணை மாவட்ட அரசு வழக்கறிஞர் மெக்கென்சி கேமரூன் டெய்மூரியும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
வாடகைத் தாய்மார்களில் ஒருவரான ட்ரோண்டெரிகா ஜேம்ஸ், மோசடி மற்றும் வேண்டுமென்றே தவறான தகவல்களை வழங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக இழப்பீடு கோரி, 2025-ம் ஆண்டு அந்தத் தம்பதியினருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
ஆரம்பக் கட்டத்தில் மார்க் சரோகஸி நிறுவனத்துடனான தனது தொடர்பை ஜாங் வெளிப்படுத்தவில்லை என்றும், அந்த ஏற்பாட்டின் உண்மையான தன்மை தனக்குத் தெரிந்திருந்தால் அதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க மாட்டேன் என்றும் ஜேம்ஸ் குற்றம் சாட்டினார்.
பிபிசி நேர்காணலுக்காக விடுத்த கோரிக்கைக்கு ஜேம்ஸ் பதிலளிக்கவில்லை.
பின்னர், வழக்குத் தொடர அந்தப் பெண்ணிடம் போதுமான அடிப்படை இல்லை என்று வாதிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி எதிர்தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஸ்டேசி ரேலின் கிங், ஈவ்லின் செனோலோஸ் அரேஜா, கேலா எலியட், ஹாலி ஹெர்னாண்டஸ் மற்றும் வேனிட்டி மெக்கோவரன் ஆகிய மேலும் ஐந்து பெண்களும் இதேபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டதாகக் குற்றம் சாட்டினர்.
அவர்கள், குவோஜுன் சுவான் மற்றும் சில்வியா ஜாங் ஆகியோருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
ஜாங்கும் சுவானும் அந்த நிறுவனத்துடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கையையும் ஜாங் வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
"ஒவ்வொரு மனுதாரரும், அந்தத் தம்பதியினருக்காகக் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரே பெண் தான்தான் என்றும், அந்தக் குடும்பம் விரும்பும் ஒரே ஒரு அன்பான குழந்தையைப் பெற்றுக்கொள்ள உதவுகிறோம் என்றும் நம்ப வைக்கப்பட்டனர்" என்று அவர்களது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத் தம்பதியினர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 'பேபிட்ரீ சரோகஸி' என்ற மற்றொரு வெளிப்புற வாடகைத் தாய் நிறுவனத்தையும் பயன்படுத்தியிருந்தனர்.
2018-ம் ஆண்டு சுவான் தங்களைத் தொடர்புகொண்டதாக பேபிட்ரீ நிறுவனத்தின் நிறுவனர் பேட்ரிக் யூ பிபிசியிடம் தெரிவித்தார்.
சுவான் ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க விரும்புவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக யூ பிபிசியிடம் கூறினார்.
குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த பல பெண்களுடன் சுவானுக்குப் பொருத்தம் ஏற்படுத்திக் கொடுக்க அவர்கள் உதவினர்.
"அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியானபோதுதான், அவருக்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை முதன்முதலில் உணர்ந்தேன். உடனடியாக அவருடன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்திவிட்டோம்" என்று யூ கூறினார்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் யூ உதவியுடன் வாடகைத் தாயாகத் தேர்வு செய்யப்பட்ட பெண்களில் ஒருவர், கடந்த ஆண்டு மே மாதம் வால்டரின் காயங்கள் குறித்த செய்திகள் வெளியானபோது ஏற்கெனவே கர்ப்பமாக இருந்தார்.
குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்தத் தம்பதியினரின் 21 குழந்தைகளும் அதிகாரிகளால் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அந்தத் தம்பதியினருக்கும் அப்போது புதிதாகக் கர்ப்பமாகியிருந்த வாடகைத் தாய்க்கும் இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக யூ பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்தத் தம்பதியினர் மிகவும் நம்பிக்கையுடன் பேசியதாகவும், குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகக் கூறி வாடகைத் தாய்க்கு உறுதியளித்ததாகவும் அவர் விவரித்தார்.
அந்தப் பெண் தொடர்ந்து வாடகைத் தாய் முறையில் ஈடுபட முடிவு செய்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர் எத்தனை முறை வாடகைத் தாய் முறையைப் பயன்படுத்தலாம் என்பதற்கு சட்டரீதியான வரம்பு எதுவும் இல்லை.
அதேபோல், இதுபோன்ற தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று அமெரிக்க இனப்பெருக்க மருத்துவச் சங்கத்தின் சீன சிறப்பு ஆர்வலர் குழுவின் துணைத் தலைவரும், ஓல்ட் டொமினியன் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவ அறிவியல் திட்ட இயக்குநருமான மருத்துவர் லியாங் யூ தெரிவித்தார்.
சில கருமுட்டை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் தங்களுக்கெனச் சொந்த விதிமுறைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், சட்டப்படி அத்தகைய விதிமுறைகள் கட்டாயமில்லை என்று லியாங் கூறினார்.
ஒரு தம்பதியினர் ஒவ்வொரு முகமைக்கும் தங்களின் அனைத்துத் தகவல்களையும் முழுமையாக வெளியிடாமல், ஒரே நேரத்தில் வெவ்வேறு முகமைகளுடன் பணியாற்றவும் கூடும்.
"இது சட்டத்திலும், இத்துறைக்கான ஒழுங்குமுறைகளிலும் ஒரு தெளிவற்ற நிலையை உருவாக்குகிறது."
இந்தத் தெளிவற்ற சட்டச் சூழலில், சீனர்களை மட்டுமின்றி, வசதி படைத்த வாடிக்கையாளர்கள் தொடர்பான பல உதாரணங்களைத் தாம் பார்த்துள்ளதாக லியாங் மேலும் தெரிவித்தார்.
ஆனால், மருத்துவர்கள் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுடன் அவர்கள் கையெழுத்திட்ட ரகசியத்தன்மை ஒப்பந்தங்கள் மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பு காரணமாக, இதுபோன்ற பெரும்பாலான விவகாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியவருவதில்லை.
"வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சுவான் போன்ற இந்த வகையான நடத்தையை இதற்கு முன்பு நடந்ததே இல்லை என்று கூற முடியாது."
சுவான் மற்றும் ஜாங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களிடம் பிபிசி கருத்துக் கேட்டது.
இருவரின் சார்பாகவும் வாதிடும் மிட்செல் கிரெம்ஸ் பதிலளிக்கவில்லை. ஜாங்கின் சார்பாக வாதிடும் மாட் கூஹானிம், இந்த வழக்கு உரிய சட்ட வழிமுறைகள் மூலம் கையாளப்படும் என்று கூறினார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரின் பின்னணி
அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 2025 ஆம் ஆண்டில் அந்தத் தம்பதியினரின் நிகர சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலரை தாண்டியிருந்ததாக டெய்மூரி நீதிபதியிடம் தெரிவித்தார்.
சுவானுக்குச் சொந்தமான மூன்று கடவுச்சீட்டுகள் கண்டறியப்பட்டதாகவும் டெய்மூரி கூறினார். அவை மெக்சிகோ, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள்.
சீனாவின் உள்ளூர் ஊடகங்களின்படி, சுவான் 1959-ம் ஆண்டு கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் பிறந்தார்.
தனது 18-வது வயதில், உரும்சியில் உள்ள அரசுக்குச் சொந்தமான மளிகைப் பொருள் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியைத் தொடங்கினார்.
1997-ம் ஆண்டு உரும்சி மக்கள் காங்கிரஸின் பிரதிநிதியானார். பின்னர், 2008-ம் ஆண்டு சின்ஜியாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநில சட்டமன்ற உறுப்பினருக்கு இணையான பதவி இது.
அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பிறகும் பொதுவாழ்வில் அவர் ஈடுபடுவது தொடர்ந்தது.
'அமெரிக்க சின்ஜியாங் வர்த்தகக் கூட்டமைப்பின்' தலைவராகவும், "சீனா அமெரிக்கக் கூட்டமைப்பின்" துணைத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார்.
2019-ம் ஆண்டு முதலே அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
பிபிசி பார்த்த ஒரு புகைப்படத்தில், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்கேடியாவின் முன்னாள் மேயர் எய்லீன் வாங்குடன் சுவான் கைகோர்த்திருந்தார்.
அந்த ஆண்டு வாங்கின் மேயர் தேர்தல் பிரசாரத்தின்போது, சுவான் தனது பெயரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் 4,900 டாலர்களை நன்கொடையாக வழங்கினார்.
சீனாவின் சட்டவிரோத முகவராகச் செயல்பட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாதம் ஆர்கேடியா மேயர் பதவியிலிருந்து வாங்க் விலகினார். அவர் தன் மீதான கடுமையான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
ரியல் எஸ்டேட் முகவராகப் பணியாற்றிய ஜாங் குறித்து குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.
சுவானும் ஜாங்கும் திருமணம் செய்துகொண்டதில்லை. நீதிமன்ற ஆவணங்களின்படி, ஜாங் மற்றொரு ஆணைத் திருமணம் செய்திருந்தார். 2022-ம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார்.
குழந்தைகளின் நிலை என்ன?
இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இந்தக் குடும்பத்துடன் தொடர்புடைய 26 குழந்தைகள் இருப்பதாக டெய்மூரி நீதிபதியிடம் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, மொத்தம் 21 குழந்தைகள் குறித்த விவரங்களை ஜாங் ஒரு பதிவு செய்து வைத்திருந்ததாகக் குற்றப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தைகள் அரசின் பாதுகாப்புக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு மேலும் ஐந்து குழந்தைகள் பிறந்ததாக, பிபிசியின் அமெரிக்கச் செய்திக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், 2026 ஜனவரியில் செய்தி வெளியிட்டது.
வாடகைத் தாய் மூலம் பிறந்த ஒரு குழந்தை, இன்னும் வர்ஜீனியாவில் உள்ள தனது வாடகைத் தாயுடன் வசித்து வருகிறது.
அந்தத் தம்பதியினரால் வாடகைத் தாயாகப் பணியமர்த்தப்பட்ட மெலிசா எப்ஸ், கடந்த ஆண்டு இந்த விசாரணை குறித்துத் தெரிந்துகொண்டபோது கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, குழந்தையைத் தானே வளர்க்க முடிவு செய்தார்.
வாடகைத் தாய் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, எப்ஸுக்கு எதிராக அந்தத் தம்பதியினர் வழக்குத் தொடர்ந்தனர்.
பெண் குழந்தையைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கு மேலாக எப்ஸ் ஒரு மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
ஆரம்பத்தில் எப்ஸுக்கு வழக்கறிஞர்கள் யாரும் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் அவரே தனது தரப்பில் வாதாட வேண்டியிருந்தது.
பின்னர், வர்ஜீனியா சட்ட உதவிச் சங்கத்தின் வழக்கறிஞர் பமீலா டிகேம்ப் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டார்.
எப்ஸ் பிபிசி-க்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.
பிபிசியிடம் அளித்த அறிக்கையில், அவரது வழக்கறிஞர் டிகேம்ப், "சிறு குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய முயற்சி மேற்கொண்ட லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா மாவட்ட அரசு வழக்கறிஞரின் முயற்சிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
அவர்களது வழக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும். அந்தப் பெண் குழந்தை சமூக சேவைகள் துறையின் பாதுகாப்புக் காவலில் இருந்தாலும், தற்போது எப்ஸுடன் வசித்து வருகிறது.
சமீபத்தில் அந்தக் குழந்தை தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது.
"அந்தக் குழந்தை வர்ஜீனியாவில் தொடர்ந்து பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று டிகேம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































