அமெரிக்காவில் பெடரல் தேர்தல்கள் செவ்வாய்க்கிழமை நடப்பது ஏன்?
அமெரிக்காவில் கூட்டாட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமையில் நடைபெறுகின்றன. இதற்குப் பின்னால் குதிரைகள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது.
1800-களில் அமெரிக்கர்கள் பலர் பண்ணைகளில் வசித்து வந்தனர். அங்கேயே வேலை செய்தும் வந்தனர். வாக்களிப்பதற்காக அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
அந்தக் காலத்தில் கார்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ரயில் பாதைகளும் அதிகம் இல்லை.
எனவே, பயணம் செய்ய வேண்டுமென்றால் குதிரை பூட்டிய வண்டிகளையே பெரும்பாலும் பயன்படுத்த வேண்டியிருந்தது.
1845-ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேர்தல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாளை நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை என அமெரிக்க நாடாளுமன்றம் நிர்ணயித்தது.
இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருந்தன.
ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வார்கள். எனவே, ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு பயணிக்க ஒரு நாள் அவகாசம் கிடைக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை தேர்தல் நாளாகத் தேர்வு செய்யப்பட்டது.
இதனால், வாக்களித்துவிட்டு புதன்கிழமைக்குள் வீடு திரும்ப முடியும். புதன்கிழமை பொதுவாகச் சந்தை நடைபெறும் நாளாகவும் இருந்தது. [சரிபார்க்க வேண்டும்]
நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த மாதத்துக்குள் அறுவடைப் பணிகள் முடிந்திருக்கும். அதேநேரத்தில், குளிர்காலமும் தொடங்கியிருக்காது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்வது எளிதாக இருக்கும்.
ஆனால், நவம்பர் மாதத்தின் முதல் தேதியையே ஏன் தேர்தல் நாளாகத் தேர்வு செய்யவில்லை?
நவம்பர் 1-ஆம் தேதி கிறிஸ்தவர்களின் புனித நாளான அனைத்து புனிதர்கள் தினம். மேலும், மாதத்தின் முதல் நாளில் வணிகர்கள் முந்தைய மாதக் கணக்குகளை முடிப்பது வழக்கமாக இருந்தது. [சரிபார்க்க வேண்டும்]
இதனால், நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 200 ஆண்டுகளில் உலகம் பெரிதும் மாறிவிட்டது. ஆனால், தேர்தல் நடத்தப்படும் இந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.
அமெரிக்காவில் கூட்டாட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமையில் நடைபெறுகின்றன. இதற்குப் பின்னால் குதிரைகள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது. அது என்ன?
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



