நேபாளம்: எவரெஸ்ட் அருகே இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பலி

காணொளிக் குறிப்பு, நேபாளத்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி
நேபாளம்: எவரெஸ்ட் அருகே இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பலி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தின் சோலுகும்பு பகுதியில் உள்ள எவரெஸ்ட் அடிவார முகாம் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தை நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல், பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பயணி என சோலுகும்புவின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி பூபேந்திர தாபா தெரிவித்துள்ளார். அவரது பெயர் வசந்தகுமார் பலராமடு என இந்திய அரசு ஊடகமான தூர்தர்ஷன் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்து காலை சுமார் 8.15 மணியளவில் நிகழ்ந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, லுக்லாவில் இருந்து வந்த ஒரு ஹெலிகாப்டரும், கோரக்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டரும் எவரெஸ்ட் அடிவார முகாம் அருகே ஒரே பகுதியில் தரையிறங்க முயன்றுள்ளன.

அப்போது இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என ஞானேந்திர புல் தெரிவித்துள்ளார்.

பனியால் மூடப்பட்டிருந்ததால், ஹெலிகாப்டர்கள் வழக்கமாகத் தரையிறங்கும் இடத்திற்குப் பதிலாக வேறொரு ஹெலிபேடில் தரையிறங்க முயன்றிருக்கலாம் என ஆரம்பகட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் ஃபிஷ்டெயில் ஏர் மற்றும் ஏர் டைனஸ்டி நிறுவனங்களைச் சேர்ந்தவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது விபத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு