'21 லட்சம் ஃபாலோயர்ஸ், 33 வாக்குகள்' - தேர்தலில் போட்டியிட்ட ராஜஸ்தான் இன்ஃப்ளுயன்சர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஓசியான் பகுதியில் நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில், கிராமத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஓம்பிரகாஷ் பிஷ்னோய் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் இவருக்கு 21 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருந்தும், தேர்தலில் இவ்வளவு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது பஞ்சாயத்தில் மொத்தம் 1,600 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இவருக்கு 33 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவர் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
ஓம்பிரகாஷ் பிஷ்னோயிக்கு இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் ஃபாலோயர்ஸ்களும், யூடியூபில் சுமார் 5.5 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், ஃபேஸ்புக்கில் சுமார் 2.25 லட்சம் ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர்.
ஜோத்பூர் மாவட்டத்தின் ஓசியான் தாலுகாவில் அமைந்துள்ள 'இந்தோ கி தானி' கிராமப் பஞ்சாயத்தில் கிராம தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இவருக்கான தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
மேலும் ஓம்பிரகாஷ் பிஷ்னோய் ஜோதிடராகவும் உள்ளார். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை வைத்திருப்பது , தேர்தலில் வாக்குகளாக மாறிவிடாது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



