'90% தள்ளுபடி': ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடியில் சிக்காமல் தவிர்ப்பது எப்படி?
"90% தள்ளுபடியில் சிவகாசி பட்டாசு… 10 ரூபாயிலிருந்து கிஃப்ட் பாக்ஸ்…"
சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் பணம் செலுத்தியும் பட்டாசு வரவில்லை, தரமற்ற பொருள் வந்திருக்கிறது என மறுபுறம் புகார்களும் பதிவாகியுள்ளன.
இந்த மோசடி எப்படி நடக்கிறது?
தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு இதை பல்வேறு விழிப்புணர்வு காணொளிகளில் விளக்கியுள்ளது. மக்கள் சமூக ஊடகத்தில் மலிவு விலை அல்லது 90% தள்ளுபடி போன்ற விளம்பரங்களை பார்த்து வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்கிறார்கள்.
அந்த ஆன்லைன் விற்பனையாளர்கள், முன்பணம் கேட்கிறார்கள். மக்கள் பணம் செலுத்திய பிறகு "பிராசசிங் கட்டணம்", "கூரியர் கட்டணம்" என மேலும் பணம் கேட்கிறார்கள்.
இறுதியில் பட்டாசு வருவதில்லை. விற்பனையாளரும் மறைந்து விடுகிறார்.
2024-இல் மட்டும் இதுபோன்ற 17 வழக்குகள் பதிவாயின. இந்த ஆண்டும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் புகார்கள் தொடர்கின்றன.
இதுதொடர்பாக சட்டம் என்ன சொல்கிறது?
2018-இல் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், "அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட எந்த இணைய தளமும் பட்டாசு ஆர்டர் பெறக்கூடாது. பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது" என அறிவுறுத்தியது. அதன்படி, "உரிமம் பெற்ற வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை விற்கலாம்."
ஆனால் போலி இணையதளங்களும், போலி பிராண்ட் பெயர்களும் தொடர்ந்து இயங்குகின்றன.
இதுபற்றி சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில் "எங்கள் பிராண்ட் பெயரிலேயே போலி தளங்கள் வருகின்றன. எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது." என்றனர்.
அதோடு "ஆன்லைன் விற்பனை காரணமாக நேரடி விற்பனையாளர்கள் 30% வரை விற்பனையில் சரிவைச் சந்திப்பதாக கூறுகிறார் சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயல் தலைவர் ஷேக் அப்துல்லா.
சரி இந்த மோசடியில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஆன்லைனில் பெறக்கூடிய தரமற்ற மலிவு விலை பட்டாசுகள் குழந்தைகளுக்கு ஆபத்தானவையாக மாறலாம் என்று எச்சரிக்கும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சில வழிகாட்டுதல்களை குறிப்பிடுகிறது
- 90% தள்ளுபடி என்றால் உடனே சந்தேகப்படுங்கள்
- வாட்ஸ்அப் மட்டும் போதாது – தொலைபேசியில் பேசுங்கள்
- உரிமம், ஜிஎஸ்டி எண் கேளுங்கள்
- கடை முகவரி உண்மையில் இருக்கிறதா என சரிபாருங்கள்
- அருகிலுள்ள உரிமம் பெற்ற கடையில் நேரில் வாங்குவதே பாதுகாப்பானது என அறிவுறுத்துகிறது.
ஆன்லைன் பட்டாசு மோசடியில் பணத்தை இழந்திருந்தால் உடனே 1930 என்ற எண்ணில் அல்லது இணைய வழியில் புகார் அளிக்கலாம் என்றும் ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை கவனமாக கையாள வேண்டும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



